Friday, October 29, 2010
"நான்" தேடல்....!
மனசாட்சி : வணக்கம் தமிழ்க் காதலன். "நான்" யாரென்று புரிகிறதா?
தமிழ்க்காதலன் : எனக்குள் அரவம் போல் படமெடுத்தாடும் உன்னைப் புரியாமலா..? "நான்" பற்றிய தேடல் எனக்கு வாழ்க்கையாகிறது. நான் என்பது நீயா? நீயாக இருக்க முடியாது என்பது என் எண்ணம்.
மனசாட்சி : என்னை யாராக நீ அடையாளம் காண்கிறாய்?
தமிழ். கா : என் நிகழ்வுக்கும், நிசத்துக்கும் எதிரான இன்னொரு "துருவம்" நீ. என் தடுமாற்றங்களின் "தகப்பன்" நீ. என் "தவறு"களை தவறாமல் சுட்ட .... என் "சரி"களின் மீது சவாரி செய்யும் வழித்துணை நீ. என் முன்னோர் வாய்மொழியில் .... "மனசாட்சி".
மனசாட்சி : நானும் நீயும் வேறென்றா நினைக்கிறாய்..?
தமிழ். கா : நிச்சயமாக.., நீ நானாக இருக்க முடியாது. "நான்" என்கிற நானும் நீயாக இருக்க முடியாது.
மனசாட்சி : எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய்..?
தமிழ். கா : நீ என்னைக் கவனிப்பது போல்.. நானும் உன்னை கவனித்திருக்கிறேன். உன்செயல்பாடுகள் உன்னை வேறாகத்தான் காட்டுகின்றன.
மனசாட்சி : எப்படி..?
தமிழ். கா : என் சுயங்களில் நீ பங்கு கொள்வதில்லை. அதாவது என் சிந்தனை, சொல், கற்பனை, செயல், இப்படியான என் இயக்க மூலங்களில் நீ இருப்பதில்லை. என் எண்ணங்களில் இல்லாத நீ என் எண்ணங்களுக்கெதிரான விளைவுகள் பிரதிபலிக்கும் கண்ணாடியாக என் முன் நிற்கிறாய். நான் வேறு. நீ வேறு.
மனசாட்சி : என்னால் உன்னை பிரதிபலிக்க முடியும்.
தமிழ். கா : ஆயினும் நானல்லவே நீ. பிரதிபலிக்கப் படுவது பிம்பம் ஆகும். நான் என்பது பிம்பம் அல்ல. பிம்பம் வேறு. பிம்பம் நிசமாக முடியாது. அதாவது மூலமாக முடியாது. நான் இருக்கிற போதுதான் நீ. நீ பிரதிபலிக்க நான் வேண்டும். புரிகிறதா?.
மனசாட்சி : ம்ம்ம்ம் ஆனால்.., நான் இல்லாத நீ எப்படி முழுமை அடைவாய்...?
தமிழ். கா : நீ முழுமை என குறிப்பிடுவது எதை? முழுமை என்பது என்ன? எப்படி இருந்தால் முழுமை? இவ்வளவு காலம் என்னோடு நீ இருந்திருக்கிறாய். உன் கூற்றுப் படி....., இப்போது நான் முழுமையானவனா?
மனசாட்சி : இல்லை. நீ முழுமை இல்லை. முழுமை நோக்கி நகரும்... அரைகுறை. முழுமை என்பது பூரணம். நிறைவு. மேலும் நிரம்ப முடியாதது. இனி எதுவும் தேவைப் படாத நிலை. முற்றல். எந்த நிலையில் இருந்தாலும் அது பரிபூரணம் என்றால் அதுதான் முழுமை.
தமிழ். கா : அப்படியென்றால் நீ முழுமையா? நீ கூறுகிற முழுமை இங்கே எங்கே ... எதில் இருக்கிறது?
மனசாட்சி : நீ சொன்னது போல் நானும் நீயும் வெவ்வேறான துருவங்கள் எனக் கொள். உன்னை முழுமையாக்க நான் காலியாக வேண்டும். அதாவது ஒரு காலிக்குடத்தை நிரப்பும் இன்னொரு முழுக்குடம் தானே காலியாவது போல். உன்னை முழுமையாக்க.... என்னை காலி செய்ய வேண்டும்.
தமிழ். கா : அதை யார் செய்வார்?
மனசாட்சி : சில நேரம் நீ. பல நேரம் நான்.
தமிழ். கா : அப்படியானால் ... நீ நண்பனா? எதிரியா?
மனசாட்சி : உனக்கெதிரான நண்பன் நான்.
தமிழ். கா : நான் எப்போது முழுமையாவேன்?.
மனசாட்சி : என்னைக் காலி செய்கிற போது? அல்லது நான் காலியாகிற போது.
தமிழ். கா : நீ எப்போது காலியாவாய்...?
மனசாட்சி : நீ முழுமை அடைகிறபோது...!
தமிழ். கா : ம்ம்ம்ம் முரண்பாடாய் தெரிகிறதே...?
மனசாட்சி : வாழ்க்கை.
தமிழ். கா : நீ எனது குறையா? நிறையா?.
மனசாட்சி : ஹ..ஹ..ஹ... அது என்னைப் பொருத்ததல்ல. உன்னைப் பொருத்தது. நீ குறையாய் இருந்தால் நான் நிறை. நீ நிறையானால் நான் குறை.
தமிழ். கா : சுருங்க சொன்னால் என் எதிரி.
மனசாட்சி : அப்படியில்லை. உடன் பிறப்பு. உன் மீது எனக்கு தார்மீக பொறுப்புகள் உண்டு.
தமிழ். கா : எனக்கு எதேனும் உன்மீது பொறுப்புகள் உண்டா?
மனசாட்சி : இல்லை.
தமிழ். கா : நீ எதற்காக என்னுடனேயே இருக்கிறாய்..?
மனசாட்சி : நான் இல்லாத நீ ... இருக்க முடியாது. அதனால்தான்..
தமிழ். கா : எப்படி சொல்கிறாய்?
மனசாட்சி : உனது இன்னொரு பாகம் நான். உன் அறிவின் தெளிவு நான். உன் குழப்பத்தின் முடிவு நான். உன் செயலின் சிந்தனை நான். நீ தடுமாறுகிறபோது உன்னை வழி நடத்துபவன் நான். மொத்தத்தில் உன் பின் புலம்.
தமிழ். கா : அப்படியானால் எனது செயல்களின் விளைவுகளில் நீ பொறுப்பேற்பாயா?
மனசாட்சி : மாட்டேன். உன் பாவங்களில் எனக்கு பங்கில்லை.
தமிழ். கா : புண்ணியங்களில் உண்டோ..?
மனசாட்சி : நான் உன் பாவமோ.. புண்ணியமோ அல்ல.
தமிழ். கா : எதிலும் பங்கெடுக்காத நீ எதற்காக என்னோடு இருக்கிறாய்?
மனசாட்சி : வழிநடத்த...!
தமிழ். கா : எனக்கு வழி தெரியாதா?
மனசாட்சி : உன் வழிகளின் விளைவுகள் தெரியாது.
தமிழ். கா : என்னால் யோசிக்க முடியும்.
மனசாட்சி : எவ்விதமாய் யோசிக்க முடியும்...?.
தமிழ். கா : என் வாழ்க்கை, என் பாதை, என் பயணம் பற்றி, எனது தேவைகளுக்கான தேடல் பற்றி, என் செயல்களின் விளைவுகள் பற்றி.... யோசிக்க முடியும்.
மனசாட்சி : தெளிவாக யோசிக்க முடியுமா?
தமிழ். கா : ( முறைத்து விட்டு ) தெளிவாகத்தான் தற்குறியே..!
மனசாட்சி : சரி. கோபப்படாமல் என் கேள்விக்கு பதில் சொல்....
தமிழ். கா : கேள்.
மனசாட்சி : உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
தமிழ். கா : உண்டு.
மனசாட்சி : பிரார்த்தனை செய்வாயா?
தமிழ். கா : செய்வேன்.
மனசாட்சி : எப்படி..?
தமிழ். கா : இறைவா..! எனக்கு நல்ல புத்தியை கொடு. நல்ல உடல், மன நலம் கொடு. நல்ல நண்பர்கள் கொடு. என் வாழ்வை வளமாக்கு. நான் பெரிய மனிதனாக வளர எனக்கு ஆசி வழங்கு..... இப்படியாக நீளும்...
மனசாட்சி : அதாவது எல்லாமே உன்னை முன்னிலைப் படுத்தி.
தமிழ். கா : ஆமாம்.
மனசாட்சி : சுய நலம்.
தமிழ். கா : இல்லை. இல்லை... பொதுநலத்துக்காக பிரார்த்திப்பதும் உண்டு.
மனசாட்சி : இறை மீதான உன் நம்பிக்கைகள் எப்போதும் நிலையானதா?
தமிழ். கா : ஆமாம். ஆனால், சில நேரம் சூழல்கள் பொருத்து இறை உண்டா? இல்லையா? என சந்தேகிக்கத் தோன்றும்.
மனசாட்சி : நம்பிக்கையற்றவன்.
தமிழ். கா : நம்பிக்கை உண்டு. சூழல்களின் மாற்றம் ஏற்படுத்தும் தடுமாற்றம். நம்பிக்கைகள் தகர்த்தெறியப்படும் வினாடிகளில் ..... உடைந்துப் போகிறேன். பிறகு என்னை உறுதிப் படுத்திக் கொள்ள மீண்டும் இறை நாடுகிறேன்.
மனசாட்சி : சுயநலம். சுயநலம் சார்ந்த சிந்தனை.... நம்பிக்கை. நம்பிக்கை உடைக்கப்படுகிற போது சுயநலம் உடைக்கப் படும் பயம். கடவுள் மீதான அவநம்பிக்கை. நிரந்தரமான சுயநலத்தில் நிலையற்ற நம்பிக்கைகள். தெளிவில்லாத அறிவு. குழப்பமான மனநிலை.
தமிழ். கா : இங்கு சமூகம் மொத்தமும் இப்படித்தானே பழகி இருக்கிறது.
மனசாட்சி : தமிழ்க் காதலா... உண்மைப் புரிகிற போது உன்னை மாற்றிக் கொள்ள என்னத் தயக்கம்?
தமிழ். கா : சுயநலமில்லாமல் வாழத்தான் ஆசை. ஆனால் எப்படி?
மனசாட்சி : உனக்கு சுயநலம் எங்கிருந்து வருகிறது?
தமிழ். கா : வாழ்வியல் மீதான பற்றுதல்களிலிருந்து......, அனுபவிக்கும் ஆசைகளிலிருந்து..., தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலிருந்து...,
மனசாட்சி : இவைகள் நிறுத்தி விட்டால்...? அல்லது நிறுத்தப் பட்டால்...?
தமிழ். கா : உலக இயக்கம் நின்றுப் போகும்.
மனசாட்சி : உன் இயக்கம்...?
தமிழ். கா : என் இயக்கமும் நின்றுப் போகும்.
மனசாட்சி : தவறான கருத்து.
தமிழ். கா : என்ன சொல்கிறாய்..?
மனசாட்சி : உன் சுயநலம் அற்றுப் போகும். அவ்வளவே. உன் பற்றுகளில் நீ விடுபட உனது ஆட்டங்கள் குறையும். முற்றிலும் விடுபட உனக்குள் ஆட்டம் இருக்காது. ஆனால் இயக்கம் இருக்கும். கவனி. ஒரு பம்பரத்தை சுற்றுகிற போது என்ன நிகழ்கிறது என்பதை கவனி. முதலில் பம்பரம் தரையில் எகிறி குதித்து ஓடி தலையாட்டி சுற்றும். பின் தன் அச்சில் நேராக சீராக சுழலும் போது சிறு அசைவு தெரியும். பின்பு பம்பரம் சுற்றுகிறதா....! நிற்கிறதா....! எனப் புரியாத நிலையில் ஒரு இயக்கத்துக்கு வரும். அந்த இயக்கத்தின் வேகம் குறைகிற போது மீண்டும் தடுமாறி.... கீழே விழும். இதில் சுற்றுவது தெரியாமல் சுற்றுகிறதே .... அதுதான் நான் சொல்வது. அதாவது இந்த பூமி சுற்றினாலும் உனக்கு அது தெரிவதில்லையே. அது போல் இயக்கத்திலிரு. இயக்கம் நிற்காமல் பார்த்துக் கொள். ஆனால் ஆட்டம் போடாதே.
தமிழ். கா : இப்படி இருக்க என்ன செய்ய வேண்டும்?
மனசாட்சி : உன் வரையில் சரியாய், சாதாரணமாய் இரு. பிறருடைய வாழ்வில் தலையிடாதே. ஆசைகள் குறை.
தமிழ். கா : இந்த உலகில் இது சாத்தியமா?
மனசாட்சி : சாத்தியமே. முயற்சி செய்.
தமிழ். கா : உலகம் என்னை "பைத்தியம்" எனப் பேசும்.
மனசாட்சி : "ஆடும் பம்பரங்கள்".
தமிழ். கா : பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்?
மனசாட்சி : அற்புதமாய் இருக்கும். புரிந்து கொள். தேடல் நிறுத்து. ஆடல் நிறுத்து. தேடுவதும் ... ஆடுவதும் அல்ல வாழ்க்கை. வாழ்க்கை என்பது தெளிவு. தெளிவுக்கு பின்னான அமைதி. அமைதிக்குப் பின்னான அன்பு. அன்புக்கு
பின்னான காதல். காதலுக்குப் பின்னான கடவுள். புரிந்து கொள்.
தமிழ். கா : ( அமைதியாய்........ )
*********************************************************
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்?
மனசாட்சி : அற்புதமாய் இருக்கும். புரிந்து கொள். தேடல் நிறுத்து. ஆடல் நிறுத்து. தேடுவதும் ... ஆடுவதும் அல்ல வாழ்க்கை. வாழ்க்கை என்பது தெளிவு. தெளிவுக்கு பின்னான அமைதி. அமைதிக்குப் பின்னான அன்பு. அன்புக்கு
பின்னான காதல். காதலுக்குப் பின்னான கடவுள். புரிந்து கொள்.
...... Simply Superb!!!!
வாசிக்க வாசிக்க, எனக்கும் என் மனசாட்சிக்கும் நடக்கும் வாதம் போல தோன்ற ஆரம்பித்துவிட்டது....
.....தெளிவாக - ஒரு முதிர்ச்சியான மனப்பக்குவத்துடன் எழுதப்பட்டு உள்ளது. பாராட்டுக்கள்!!!
தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வதே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நாடு நிலையை வெளியிடும் வரை ஆதரவு தாரீர் …அந்நியன்
அருமையான இடுகை.
kalakkal nanbare... (Tamizh officela illa inga ippo)
மனட்சாட்சியின் குரலாய் முதிர்ந்த மனநிலையில் அழகாய் எழுதியிருக்கிறீர்கள் தமிழ்.
உடல் நலம் விசாரித்ததற்கு நன்றி. வலி குறைந்திருந்தாலும் இன்னும் நார்மலாகவில்லை.
காதலுக்குப் பின்னான கடவுள்....ஆம்
அருமையான மனச்சொற்றாடல் .
வழக்கம் போல் தன் முத்திரையை முதலில் பதித்த சித்ராக்காவுக்கு வணக்கங்களுடன் நன்றிகளை தெரிவிக்கிறேன். உங்கள் நண்பர்களோடு எமது பதிவை பகிர வேண்டுகிறேன்.
முதல் வருகை தந்திருக்கும் அந்நியன் வாங்க.., உங்கள் வரவுக்கு நன்றி.
எனது வலைப்பூவுக்கு முதல் வருகை தந்து கருத்துரையும் தந்த ராமலக்ஷ்மி .. வாங்க. உங்களின் அதரவு தொடருங்கள். மிக்க நன்றி.
இனிக்க நினைக்கும் தோழா, வணக்கம். உங்கள் வருகைக்கும் மதிப்புரைக்கும் நன்றி.
வாங்க குமார், உங்கள் பேராதரவு பெருகட்டும். உங்களைப் போன்ற ஊக்கம் அளிப்பவர்கள்தான் நல்ல எழுத்தாளனை உருவாக்கும் சிற்பிகள். மிக்க நன்றி
வாங்க பத்மா.. வணக்கம். நலமா? உங்கள் வருகை இனிதாயிருக்கிறது. தொடருங்கள் உங்கள் ஆதரவை. மிக்க நன்றி.
Nice
ulaviyalai ptam pidiththu kattu kintrer nalla akkam
parattugal.
polurdhayanithi
வாங்க சசிக்குமார்.. உங்க அன்புக்கும் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
எமது வலைப்பூவுக்கு வசந்தம் சேர்க்க முதல் வருகைத் தரும் திரு,போளூர்தயாநிதி வாங்க., உங்கள் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறென். கருத்துகளுக்கு மிக்க நன்றி.
//வாழ்க்கை என்பது தெளிவு. தெளிவுக்கு பின்னான அமைதி. அமைதிக்குப் பின்னான அன்பு. அன்புக்கு
பின்னான காதல். காதலுக்குப் பின்னான கடவுள். புரிந்து கொள்.// அருமை தோழரே..இன்று பல பேர் மனசாட்சி என்று ஒன்று இருப்பதையே மறந்து வரும் நிலையில் மனசாட்சியுடன் கலந்துரையாடல் அற்புதம்...அருமையான பதிவு..
Post a Comment