Tuesday, August 30, 2011

"நவரசம்...!!"




(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி)


இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம்
இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்
மலரும் மலர் காணும் "உவகை"
மழலை முகம் பார்க்க..!


தனித்த தொருவிடத்தே தவம் கிடந்து
இளைத்த மேனி இன்னும் உருக
மனம் நிறைந்தவன் வருகைக்கு உருகும்
கன்னியின் கன்னக்குழி "நகை..!"


அகம் புறமதில் அகத்தில் ஆழ்ந்தாரோடு
புறவியல் மெச்சுதலில் அளக்கப் பெரும்
அகடு முகட்டில் வந்து விழும்
உலகின் "இளிவரல்" உண்மையாய்..!


உற்றவனைத் தொட்டுவிடத் துடிக்கும் உள்ளம்
உரிய வேளைக்கு முன்னிகழும் சந்திப்பில்
உள்ளே உதறும் உணர்வுகளில் ஒட்டிக்கிடக்கும்
ஊருக்கு முன்னான "அச்சம்...!"


சாதுக்களில் சாந்தம் குடியேற சாற்றும்
சாதுவின் சாது சோதிக்க உள்ளில்
சங்கடமாக விளைந்த உணர்வில்,- நாடும்
காடும் "மருட்கை" கொள்ளும்..!


ஆழியின் வாழ்வில் ஊழ்வினையின் வெகுளி
உள்ளத்துள் புகவும் அகம் அழுக்காம்
ஆயினும் வலியது விதி கொடியது
அதனினும் கொடிது "வெகுளி...!"


கருச்சுமந்த உருச்சுமந்த உயிர் ஒருநாள்
மதிச்சுமந்த மன்னர்முன் தன்னொளி வீச
ஆன்றோர் அகம் குளிர சான்றோனாக்க
பெற்றவளின் உள்ளத்தில் "பெருமிதம்...!"


ஆன்மாவின் ஆழத்தில் விழுந்தக் காயங்களில்
ஆறெனப் பெருக்கும் நீரென கண்ணீர்
ஆழியில் உருகும் பனிநீரென கலக்கும்
ஆழ்துயர் வருத்த "அழுகை..!"


வாழுங்கால் வகைத் தொகை அறிந்து
வழுவாமல் நின்ற பேர்க்கு நிலைக்கும்
மண்ணுலகும் விண்ணுலகும் இன்பமும் வீடும்
வென்ற மேன்மையான "அமைதி...!"
*************************************************


தனிப்பாடல்:


நகைக்கும் உளம் கருவுற உற்றபின்
வலிவந்து துடிக்க பீறிடும் அழுகை
இளிவரல் பேசும் மனம் மரண 
அச்சத்தில் மருட்கையோடு தாதியை 
வெகுளித் தாமதம் தவிர்க்க,-பிறந்தது
"பிள்ளைக்"கேட்க பெருமிதம் சொல்ல
உவகை கொள்ளும் உறவில் அமைதி.

Monday, August 29, 2011

”வன்வியல்...!!”




வலியன வாழ எளியன பலியாகும்
வாழ்வியல் தர்மம் வலுவான உலகில்
வாழும் முறை தவறென்பது உணரா
வன்மனம் கொல்லும் மென்மனம் தினம்


மென்மைகள் வாழ மேன்மைகள் செய்யா
வன்மைகள் வாழும் வழி அறியுமோ..??
உண்மைகள் உறங்கும் உலகம் இது.
ஊமைகளின் மௌனப் பொருள் யாரறிவார்..??




வல்லூறுகளின் நகங்களில் சிக்கித் தவிக்கும்
கோழிக்குஞ்சுகளின் வாழ்க்கை இரத்த வாடையாய்..!!
முட்செடிகளின் பிடியில் முல்லைக் கொடிகளின்
மலர்களின் இதழ்க் கிழிக்கும் முட்கள்..!!


அரவத்தின் வாயில் தேரைகள் பிரசவிக்கும்
வாழ்வியல் வலிகள் கலங்கிய கர்ப்பமாய்...!!
பாதியில் செய்தப் பிழைக்கு ஆதியின்
பெயரில் பழிச்சுமத்தி பாவத்தில் பசியாறல்...!!


கரும்பாறை உடைக்கும் வேர்களின் துணிவில்
காலம் வாழ்வியல் சூட்சுமம் வைத்திருக்கிறது
பூச்சிகள் தின்னும் பூக்களின் இதழ்களில்
மென்மைகளின் வன்மைகள் புலப்படும் புரிவோம்


நிம்மதிக் குலைக்கும் கனவுகள் கூட
வன்மைகள் புகுத்தும் வழிதான் காணுங்கள்
உண்மைக்குள் ஒளிந்த பொய்யுக்குள் புகுந்த
உண்மை பாறைக்குள் ஒளிந்த தேரை.




பட்டுப் பூச்சியின் எச்சில் உடலறுக்கும்
தொட்டுப் பார்க்க மென்மையாய் பட்டு
சிலந்தியின் வலையில் சிக்கும் உயிர்கள்
விதியின் கையில் விழுந்த வாழ்க்கை.


நிலம் நோக்கித் தவழும் நதிதான்
நிலத்துகள் நகர்த்தி நிலம் தீர்மானிக்கிறது.
களம் அமைத்து காலன் கலன்
உடைக்க வலிமிகு வளி வெளியாகும்.
**************************************

Monday, August 22, 2011

”கண்ணனுக்கு காதலனின்...!”



கண்ணா..! துவாரகை மன்னா..!!
கனியும் இதயங்களில் காதலாய்
கனியும் கருணைக் காதலனே..!!
கருவிழியால் உலகம் உருட்டும்
கைப்பிள்ளை உன் கடைவாயில்
கைப்பந்தாய் உலகம் சுழலக் காட்டி
மாயா மயக்கம் அறுத்த மாதவா..!!
கடிக்க இனிக்கும் கரும்பே..!
மனம் நினைக்க இனிக்கும் கண்ணா..!!
வெண்ணெயில் உள்ளம் வைத்து
இளகும் உள்ளத்தில் இருப்பதைக் காட்டி
உருகும் உண்மைக்கு வாழ்வளிப்பவனே..!!
வெண்ணை திருடிநீ சொன்ன தத்துவம்
வெள்ளை மனம் இறைவன் ஆலயம்
தூயமனதை இறைவன் தேடுகிறான்
தூய்மைக்கு ஆண்டவனும் அடிமையே..!!
வெண்மையாய் இரு...
வெண்ணெய்யாய் உருகு... அன்பில்
வெண்ணெய் போல் ஒழுகு...
கடவுள் உன் காலடியில்.
அறிந்தேன் அருட்பெருங் கடலே..!!
யாதவக் கன்னிகளின் காதலே..!!
உன் உன்னதத் தத்துவம் உணர்ந்தேன்.
மயில்தோகை காட்டி மயக்கும்
மாயா மயக்கம் தவிர்க்க மறை போதித்தவனே..!
உலக மயக்கம் உணர்ந்து...
உன்னதம் நோக்கி நகர
காலை உயர்த்திக் காட்டியவனே..!
வெற்றிலையில் வீழ்ந்துக் கிடந்து
வெற்றியின் பாதைக் காட்டிய கருணையே..!!
மண்ணை தின்ற மண்ணின் மன்னன்
மாயக் கண்ணன் நீ.
ஆண் பெண்ணாய் அவதறித்து
ஆன்மாவை கரையேற்றும் காந்தம் நீ.
விதிகளை விதித்து விதிகளின் விதியை
விதிகளாள் அறுத்து விதிக்கு விதி செய்த
விளையாட்டுப் பிள்ளை நீ.
அறுவினை யாவும் அறுத்து
மறுவினை மலரச் செய்யும் மாயம் நீ.
மனதாலும் நினைவாலும் வணங்குகிறேன்
ஆன்மாவை அடைக்கல மாக்குகிறேன்.
நல்லறிவும் ஞானமும் வழங்கு.
நல்லத் தமிழ் நாடெங்கும் முழங்கு.
இல்லையும் தொல்லையும் நீக்கி
இம்மையும் மறுமையும் போக்கி
ஏகாந்தம் அளிப்பவா போற்றி..!!
பிறந்த நாள் வாழ்த்துகள்.

Friday, August 19, 2011

"பனிமலர்...!"




துருவத்துள் துளிர்க்கும் மொட்டுக்கு பனியின்
பாறைகள் வேர்விடும் நிலம்,- நீருக்குள்
நிலம் தேடும் வேர்களின் பயணம்
பனிப்பாறைத் தகர்க்கும் உளி..!!


குளிர் உறிஞ்சும் இதழ்களில் துளிகள்
மலரின் தாகம் குளிரைக் குடிக்கிறது..!
பனியின் தாக்கத்தில் இதழ்களில் வெடிப்பு
பருவம் பூக்கும் மொட்டுக்கு..!!


ஆளில்லா இடத்து அழகுப் பூக்கிறது
பாலில்லா விடத்துப் பிறந்தக் குழந்தையாய்..!!
இயற்கையை இயற்கை இரசிக்கும் தனிச்சுகம்
இன்பம் உயிரின் வேர்களில்..!


பனி மலைக்குள் பருவப் பெண்
தனியாய் தலைக் கோதும் அழகு
யாருமற்றப் பால்வெளியில் பளிங்குச் சிலை
யாழ் இசைக்கிறது சுகமாய்...!!




வானத்தை வசப்படுத்தும் மௌன மொழி
வசந்தத்தை நினைவுப்படுத்தும் இதழின் ஒளி..!
சுகந்தத்தை வாரி இறைக்கும் மகரந்தம்
வெண்பனியில் விழுந்தக் கவிதை..!!


மலருக்கு மஞ்சள் நீராட்டும் கதிரின்
மாலை ஒளியில் மயங்கும் சுகம்
மன்மதன் இரதி முயங்கும் சுகம்..!!
மறக்க முடியாக் கிறக்கம்...!




இருட்டுவெளி இழுத்துப் போர்த்திய இரவில்
இத்தனைச் சுகம் தந்த புனிதம்
எவர் கைக்கும் கிட்டாமலே கொட்டுகிறது
இதய உதிரத்தை இதழ்களாய்..!!

Tuesday, August 16, 2011

”கேள்விக்குறி..?”



இதயத்தில் பூத்த நறுமலரே...!!
இன்பக் கோட்டையின் வாசலுக்கு
வரவழைத்து கொன்று போட்டவளே..!!

கொட்டும் குருதியில் வழியும்
அன்பையன்றி யான் அறிந்ததென்ன..??
அறியாமல் விக்கித்து விழிக்கிறேன்.

மிஞ்சும் எழில் கொஞ்சும் தமிழ்
விஞ்சும் சுகம் தந்து வீழ்த்தும்
மதியின் மயக்கம் என்ன...??

கடல் நீந்தும் நத்தைக்கு
கரைக் காட்டும் மேகமாய்
கை காட்டிப் போனவளே..!!

எட்டாத் தொலைவில் இருந்தபடி
எட்டி உதைக்கும் கலையை
எங்கே கற்றாய்...??

நினைவுகளில் தீ மூட்டும்
உன் உணர்வுகளை என்ன செய்ய..??
பருத்தியாய் பற்றுகிறது பாழும் மனம்.

உற்றத்துணை நீ பெற்றதும் கற்றதும்
உழலும் மனம் உதறத்தானா..?
சுழலும் நினைவுகள் சுடுகிறது.

குற்றாலத்தில் கொட்டுகிறது
எரிமலைக் குழம்பு..!!
நயாகராவில் வீழ்கிறது
கொதிக்கும் கோப உணர்ச்சிகள்..!!

குளிக்கும் எண்ணமும்...
குதிக்கும் எண்ணமும்...
தற்கொலை செய்து கொள்ள
தவித்து நிற்கிறது வாழ்க்கை.

வெறித்துப் பார்க்கும் விழிகளில்
விழுந்துக் கிடக்கிறாய் பிம்பமாய்...!!
மனம் பட்டும் படாமலும்,- உனைத்
தொட்டும் தொடாமலும்...!!

உடைந்து நொறுங்கும் கண்ணாடியாய்
சிதறிக்கிடக்கும் எண்ணங்களில்
எகிறிக் குதிக்கிறது எதிர்க்காலம்..!!

விடைத் தேடுதல் வேட்கை...
விடைத் தேட வைக்கும் வாழ்க்கையில்
விஞ்சி நிற்கும் கேள்விக்குறிகள்...??

தீமைகள் தவிர்த்த ஊமையின் மனம்
தீயினால் பொசுங்கும் வேதனை யாரரிவார்..??
காணாமல் ஏங்கும் கண்களில் திராவகம்...!!

வளர்பிறைக் காண வந்தவனை
தேய்பிறை வந்து திதிக் கேட்கிறது..?!
வாசக்காலில் நின்று சிரிக்கிறது விதி.

பாசத்தில் மூழ்க விட்டு
பக்குவமாய் மூச்சைத் திணறவைக்கும்
நேசத்தை நெஞ்சில் சுமக்கிறேன்.

விடிந்தும் விடியாதப் பொழுதுகளில்
தொடர்ந்து தேடுகிறேன்..... 
தொலைந்துப் போன உன்
காலடித் தடங்களை.....!

Monday, August 15, 2011

"சுதந்திரம்..?!"



உணர்வுகளால் அடிமைப்பட்ட 
ஒவ்வொரு மனதுக்கும்
சுதந்திரம் எப்போது..??


பழக்கங்களால் அடிமைப்பட்ட
சமூகத்துக்கு பண்பாட்டு 
சுதந்திரம் எப்போது..??


விடுதலை என்பது என்ன..??
வீர உணர்வுகள் உள்ளத்தே
கிளர்ந்தெழும் சமூகத்துக்கா..??
அடிமைத்தளையில் ஆழ்ந்துக் கிடக்கும்
அறிவற்ற சமூகத்துக்கா...??
சுதந்திரம் யாருக்கு சொந்தம்..??


வாழ்க்கை முறை மொத்தமும்
வந்தவன் வாய் சொன்னதாய் இருக்க...
சுயம் தொலைத்த மந்தைக்கு
சொல்லில் கூட சுதந்திரம் கிட்டாது.


தாய்மொழி, தாய்நாடு தவிர்த்த
யாவும் உயர்வெனக் கருதும்
தறுதலைகள் திரியும் நாட்டில்
சுதந்திரம் எப்படி விடியும்...??


உதிரத்தில் உணர்ச்சியற்ற
ஒரு சமூதாயம் இருந்தாலென்ன...?
இல்லாது ஒழிந்தாலென்ன...?!
பற்றில்லாப் பதர்கள் பிறந்த மண்ணில்
கொள்கையும் குறிக்கோளும் குப்பையில் 
கிடக்க கொடிமட்டும் உயர்ந்து பறந்து
நடக்கப் போகும் நன்மை என்ன..???


சுயநலம் ஒன்றே சுகமெனப் போதிக்கப்பட்ட
சமூகம் எப்படி சுதந்திரம் அறியும்..??
ஒருதுளி உதிரமும் சிந்தாதவனுக்கு
வாழ்க்கையின் வலிப்புரிய  வாய்ப்பில்லை.


உயிர்களின் தியாகத்தில் "பூத்த மலர்"
தாலிகளைத் தந்து பெற்ற "சமத்துவம்"
குருதியைக் கொட்டி மடியில் வாங்கிய "வாழ்க்கை"
தலைமுறை மாறியதும் தடுமாறுகிறது.


மழலைகளின் இதழ்களில் படிக்கிறது
அடிமையின் ஆங்கில மோகம்
"மம்மி டாடியாக..."


உடுத்தும் உடையில் ஒய்யாரமாய்
சிரிக்கிறது வெளுத்துப்போன நமது
"கலாச்சாரம்".


அலுவலகம் முதல் அரசாங்கம் வரை
அந்நிய மொழியின் கோலோச்சலில்
அடிமைத்தளை அப்படியே இருக்க
எங்கே பெற்றிருக்கிறோம் சுதந்திரம்..?


கல்வியில் களையாதப் "பின்பற்றல்கள்"
உண்ணும் உணவில் மின்னி மிடுக்களில்
எல்லாம் இந்திய நாகரீகம் இல்லாதபோது
இந்தத் தேசத்தின் விடுதலையாக எதைக் கொண்டாடுவது..??


பண்பாட்டை குழித்தோண்டி புதைத்துவிட்டு
பணத்துக்கு பண்பாட்டை விற்கும்
தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்கள்
நடிகையின் கவர்ச்சியில் காட்டும் நேர்காணலில்
அவளின் கிழிந்த ஆடையில்... 
தூக்கிட்டுத் தொங்குகிறது
"சுதந்திரம்".


வெட்கமே இல்லாமல் விரும்பிப் பார்க்கும்
சொக்கத் தங்க உடன்பிறப்புகள் இந்தியனாய்
மூவர்ணக் கொடிக்கு மேல்கீழ்த் தெரியாத
அரசியல் தலைவர்கள் ஆளுகிற தேசத்தில்


கம்பங்களில் ஏற்றப் படுவது தேசியசின்னமா..??
கவிழ்ந்துக் கிடக்கும் நம் அவலமா..??
ஒருமுறை உண்மையாய் சிந்தித்து


மனிதனாய் செயல்படுவோம்,- மண்ணில்
இந்தியனாய் வாழ்ந்து இந்தியாவுக்கு வாழ்வளிப்போம்.


"வந்தே மாதரம்".

Monday, August 01, 2011

"மனத் தாண்டவம்.."



எறிந்தக் கல்லில் தெறிக்கும் நீராய்
எகிறிக் குதிக்கும் மனம் குளத்து
மீனாய் குதூகலிக்க காத்திருக்கும் கொக்கென
கரைமீது காத்திருக்கும் விதியின் விழிகள்


வாழும் கலை யாவும் வகையாய்
வகுத்துணர்ந்த வன்மை சோதியுள் இருளாய்
கூவும் குயில் மறைத்துப் பாடும்
தோகை மயில் காட்டும் நளினம்




ஓடும் நதி மேவும் அலை
தாவும் முகில் போகும் திசை
பார்க்கும் தாகம் தணிய தாவும்
யாவும் ஒரு மாயா மயக்கம்


கனவும் காணும் நினைவும் மனதின்
உணர்வும் மலரும் மலரில் உறையும்
ஒருதுளிப் பளிங்கென ஒட்டியும் ஒட்டாமல்
ஓரமாய் ஒதுங்கும் அழகில் மயங்கும்


வாழ்வில் வரும் வசந்தம் சுகந்தம்
வருந்தும் மனம் திருந்தும் தினம்
அனலாடும் புனலென விதியோடு விளையாட்டு
அதுகாறும் காத்த மௌனம் கலையும்




ஆனந்தத் தாண்டவம் ஆடும் மனம்
மத்தளமாய் கொட்டி கொட்டி கொட்டமடிக்க
விட்டத்து பூனையாய் விதி சிரிக்கிறது
விளங்காத மதியும் வீணே சிரிக்கிறது.


புரிந்தவன் புலவன் புலம்புவான் புலையன்
பிரிந்தவை கூடும் பிணைப்பில் இன்பம்
பிணையும் அரவத்து ஆர்ப்பரிப்பில் நுகரும்
உணர்ச்சிக்கு புணர்ச்சி ஒரு வழியாம்.