Friday, July 29, 2011

"ஒழுகுதல்..."


ஒழுக ஒழுகும் ஒழுக்கு நீங்க 
ஒழுகுதல் ஒழுங்கு ஒழுங்காய் ஒழுக
ஒழுகிப் பழகும் உருகும் உயிர்
ஒழுகும் அழகு உணர்வார் யார்..?


ஒழுக்க நெறி ஓங்கும் இடம்
ஒழுகும் ஒழுக்கில் விரியும் உலகம்
ஒப்பிலா தொரு ஒழுக்க விதி
உவப்புடன் தந்தான் ஊருக்கு ஒருமுனி.


ஒழுக்கில் ஒருகுடியாய் உருவாகி ஒழுக
பழக மறந்த பழங்குடி நாம்.
ஒழுக்கம் விழுப்பம் தரலாம் விழுந்தவன்
எழலாம் எழாமலும் தொழலாம் தொழுதவன்


ஒழுங்கை ஊர்ப் பேசும் ஒழுங்கு.
மனதில் மலர்ந்த புனிதம் அது
பூத்திருக்கும் உயிர்ப்பின் பொன்மலர்
உழலும் உயிர்களின் புல்லாங்குழல் அது.


எல்லோர்க்கும் பொதுவாம் ஒழுக்க நெறி
ஒழுகிப் பாருங்கள் ஒழுக்கம் புரியும்.
இழுக்கிலா ஒழுக்கே உயர்வு புரி.
அழுக்கிலா மனம் ஆடை கலையலாம்.  

Thursday, July 21, 2011

"மனிதம்"


பிரியமான என் பேரமைதியே...!
உன்னை பின் தொடர்கிறேன் 
என் மனக் காயங்கள் ஆற்று.


ஓடைநீரில் உள்ளுறையும் 
குளிர்ச்சியில் என் மனம் நனை.
உருக்கு ஆலை உலையில் 
என் எண்ணம் துவை.


சிந்தனைகளின் சிறுமை நீக்கு.
புடம் போட்டத் தங்கமாய்
பொன்னொளி வீசட்டும்
என் செயல்கள்.


புன்னைகையால் எனைப் 
பூரிக்க வைக்கும் பூந்தென்றலே..!
இன்னெழில் கூட்டும் உன்னெழில்
இதயம் விரும்புகிறது.


கற்பனைகளில் பூத்துச் சிரிக்கும் 
கற்பகத் தருவே...!!
கனவுகளாகும் என் இலட்சியங்களுக்கு 
கண்களால் உயிர்த் தருகிறேன்.


உறக்கமிலா உலகத்தில் 
இறந்து கொண்டிருக்கும்   
"மனிதம்" மலர...
உயிரால் ஒரு ஓலை எழுதுகிறேன்.


"மனிதம் பூத்துச் சிரிக்கட்டும்".

Monday, July 18, 2011

"நிலா மகள்...!"நிலவும் நிலவும் சந்திக்கிறது
தனிமையில் கொஞ்சம் சிந்திக்கிறது
ஒரு நிலவு ஒளியை கசிகிறது 
ஒரு நிலவு நினைவைப் பிழிகிறது.


கனிந்த மனதின் கந்தர்வ உணர்ச்சிகள் 
நிலவின் இருளுக்கு ஒளி வீசுகிறது...!!


அடைந்த இன்பத்தின் அடைப்புகள் 
உடைப்பெடுத்து ஒழுக
அடைக்கும் முயற்சியில் நீ.


நிலவின் ஒளியில் நீயும்
நின் ஒளியில் நானும் 
ஒளிர்கிறோம்.


வெட்கத்தைப் பிழிகிறாயா...? அன்றி
வெட்கிப் பிழிகிறாயா...?! 


ஈர ஆடைக்குள் இன்னொரு நிலவு.


தொப்புள் கொடி வழியே ஒருத்தி 
துயிலுரிகிறாள்..!!
கர்ப்பத்தில் உள்ளதெல்லாம்
கலங்கி வழிகிறது.  
  
முகிலென அலையும் குழல் 
முன் சென்ம நினைவுகளில் 
மூழ்க வைக்கிறது.


மெல்ல வழியும் உணர்ச்சிகள் 
மேல் மூச்சில் தெரிகிறது.
உள்ளே வடியும் நினைவுகள் 
ஒழுகும் நீரில் புரிகிறது.


இந்தப் பட்டாம்பூச்சியின் 
படபடப்பில் வெடிக்கிறது
என் இதயம்.


நிலவை விழுங்கும் கேதுவாய்
நீளும் குழலில் மூளும் மோகம் 


இருளை ஒளியும் ஒளியை இருளும் 
இழுத்து அணைக்கும் தாகம்.


தீராத மோகத்தைப் பிழிந்து 
தேகத்தை நனைக்கிறாள்...
தீண்டும் உணர்வுகள் பிழிந்து 
என் தாகம் தணிக்கிறாள்...


மேகத்தைப் போர்த்திய நிலவு
தாகத்தைத் தூண்டுகிறாள்.
நீருக்குள் மூழ்கிய நிலவொன்று 
நிலவொளியில் காய்கிறது.


பிரபஞ்ச மௌனத்தை
கைகளால் பிழிந்து 
கண்களால் அளக்கிறாள்.


பருவம் வந்த பௌர்ணமி
பால் ஒளியில் படைப்பின் 
இரகசியம் இரசிக்கிறது.


பனியில் உருகி கனியில்
ஒழுகும் என் காதல்,-அவளின் 
தனிமைப் பிழிகிறது.


இரண்டு நிலாக்களுக்கு மத்தியில் 
ஒரு கவிஞன்.
மொழிக்கும் கவிக்கும் 
சக்களத்தி சண்டை.


இருப்பது எது..? 
இடையா...? உடையா..?வென்று...
இடைக்கும் உடைக்கும் இடையே 
ஒரு யுத்தம்...!!


பளிங்கு மாளிகையில் 
பனியின் தேரோட்டம்.
கனிந்த கனிகளுக்குள்,-என்
கவிதைப் போராட்டம்.


இனிமை கசியும் இரவில்
இளமை கசியும் நிலா..!
சுகிக்கத் தூண்டும் சோம பானம்..!!


முக்கனிச் சுவையோ..?!
இக்கனிச் சுவையோ...?!
முழுவதும் தேன் ததும்பும் நிலா 
மூவாறு பருவத்து பலா.


பால் நிலாத் தழுவும் 
பருவ நிலவின் குவளை மலர்
ஊடுருவி ஒழுகும் ஒளியில்
ஊசலாடுதடி உயிர். 


காப்பிட்டக் கரங்களில் 
கட்டுண்டு கிடக்குதடி என் காதல்..! 


நிலவை கருவாக்கும் முயற்சியில் நீ.
உன்னைக் கவிதையாக்கும் முயற்சியில் நான்.Saturday, July 16, 2011

"விழிகள் தேடும் விடியல்..."பாலையில் பொழியும் 
பனித்துளிக்கு இரவெல்லாம் 
தவமிருக்கும் நத்தைக் கூடாய் 
மனம்...


கண்களில் மிதக்கும்
கண்ணீரில் தத்தளிக்கிறது
என் கனவுகள்.


இரவில்.... 
எருமைத் தேடுகிறேன் 
பௌர்ணமி வருமென்ற 
நம்பிக்கையில்...


மலர் தேடி அலையும் 
பட்டாம்பூச்சியின் சிறகுகளில்
திராவகம் ஊற்றுகிறது 
காலம்.


உணர்ச்சி இழைகளில் 
உயிரைத் தாங்கும் 
நத்தைக்கு,- கடிவாளம் போடும் 
கட்டெறும்பு.
முயலுக்கு ஓடும் நாயாய்
துரத்துகிறது காலம்.
உயிருக்காய் ஓடும் 
முயலாய் நான்.


முண்டி அடிக்கும் நினைவுகள் 
முந்தி விரிக்கிறது...
முன்னிரவு பட்டினியில் பசி
பந்தி விரிக்கிறது...


உலர்ந்த உதடுகளில் 
உயிரின் நலம் விசாரிக்கும் 
கண்ணீர்த் துளிகள்.


வெடிப்பில் உப்பின் உவர்ப்பில்
வெந்து துடிக்கும் உதட்டில் 
இரத்தத் துளிகள்.


ஊமையனுக்குள்ளே 
ஒரு பட்டிமன்றம்....
ஊருக்குத் தெரியாமல் நடக்கிறது.
வெடிக்கும் எரிமலையாய் 
உணர்ச்சிகள்...
காலையும் மாலையும் 
இவனைக் கடந்துப் போகிறது.
மாற்றமிலாப் பொழுதுகளில் 
நின்ற இடத்தில் கரைகிறது
நிகழ்காலம்.


பூவுக்கு ஆசைப் பட்டவன்
நாருக்குள் சிக்கித் தவிக்கிறான்.
நாரின் நாற்றம்... 
பூவின் வீச்சமாய்...


புலரும் பொழுதுகள் 
கையில் இருக்கும் 
கடனாய்....
வளர்கிறது. 

Tuesday, July 05, 2011

"உறுபசியும் ஊர் பசியும்..."


மன்னவன் உன்னைச் சுமந்த மடியிருக்கு
முகம் புதைக்க மெத்தென மாரிருக்கு
அகம் முழுக்க அன்பு சுனையிருக்கு 
ஆரமுதே..! உன்பசி தீர்க்க வழியிருக்கா..?


தனங்களைத் தடவிப் பார்க்கும் தங்கமே..!!
ஆழகுப் பொருளாக அல்லவோ ஆகிவிட்டது..?!
ஆவி சுமந்தவள் மருகி உருகுகிறேன்.
அமுதப் பால் சுரக்கா மார்பில்


அலையும் உன் கரங்களின் மென்மை
அனுபவிக்க முடியாமல் அல்லாடுகிறேன்.
காம்புகள் தேடும் இதழ்களைக் கலைகிறேன்
முள்ளாய் மார்பில் குத்துவதாய் குறுகுகிறேன்.


திறந்துக் கிடக்கும் மேனியில் வறண்டு
கிடக்கும் பாலகம் பாலகா உனக்குதவாது.
பரிதவிக்கிறேன் பெற்ற வயிற்றில் பசித்தீ
இரத்தம் வந்தாலும் தர சம்மதம்...


மலரினும் மென்மையாய் கைககளில் கிடக்கும்
மரகதமே...!,- உன்னை வாங்கி கொண்டவளால்
தாங்கிக் கொள்ள முடியா வலி
தணியாத பசியில் தவிக்கும் உயிரே...!


வறண்டு கிடக்கும் முகமாய் வாழ்க்கை 
இருண்டு கிடக்கும் விழிகளில் தொலைதூர
வெளிச்சப் புள்ளிகளை மறைக்கிறது நிசம்..!
வெடித்த இதழ்களில் விதி விளையாடுகிறது..!!


விலைக்கு கேட்கிறார்கள் இரக்கமுள்ள மனிதர்கள்?!
உனக்கு ஒரு விலை..? எனக்கொரு விலை..??
உன்னை விற்றால் ஒருநாள் துன்பம்
என்னை விற்றால் ஒவ்வொருநாளும் துன்பம்


முழுகாமல் இருந்த பெற்றதாலோ என்னவோ 
பாழும் பாசமுனை முழுகச் சம்மதிக்கவில்லை.
தேகத்தைக் கல்லாக்கி மனதை முள்ளாக்கி
விடியும் வரை விலைக்கு விருந்தாகிறேன்.


வரும்படிக்கு பஞ்சமில்லை வறுமைக்கு பாவமில்லை
என்னைத் தாயாக்கிய எங்கள் குலக்கொழுந்தே...!!
ஆலகாலம் அடக்கிய சிவனாய் அடக்குகிறேன்
விழும் விந்தினை விதியை நொந்தபடி...


என்னப் பாவம் செய்தாயோ..? செல்வமே
எனக்கு வந்து பிறந்தாய்,- உனக்கே 
என்னை விற்கிறேன் இன்னொரு கருவுக்கு
எதை விற்பேன் என் இன்னுயிரே..!


கருப்பை நிரப்பியவர்களால் நம் இரைப்பை 
நிறைகிறது,- சொல்ல முடியா சோகத்தை
வெல்ல முடியா வேதனையால் வெல்ல 
முயன்று முடியாமலே வேதனையில் மடிகிறேன்.


இரைப்பைகளில் பருக்கைகள் இட்டு நிரப்ப
கருப்பையை காட்ட சொல்கிறது உலகம்.
தெருவோர நாய்கள் திண்ணையில் தூங்குகிறது.
தெருப்பொறுக்கி நாய்கள் என்னைத் தின்கிறது.


சிவமாவது சைவமாவது பிணம் தின்னும் 
ஊரில் பணம் ஒன்றே வாழ்க்கை
பிழைக்க வழி செய்வோம் இல்லை
பிணமாவோம் ஊராரின் பசிக்கு முன்னால்...

Monday, July 04, 2011

"அவனும் அவளும்...!"
அவளுக்கு ஒன்று எழுதி 
அவளுக்காய் ஒன்று எழுதி 
அவளுக்குள் ஒன்றி எழுதி 
அவளோடு ஒன்றாய் எழுதி 


அவள் அவளாக அவளின் அவளை
அவளுக்கு காட்டிச் சிரிக்கும் அவளை 
அவள் அறியாது அவளற்ற அவளாக 
அவள் இருக்க அவளுக்குள் அவளாய்
இவன் இருக்கும் இரகசியம் எவரறிவார்..?
இவன் அவளாய் இவனுக்குள் அவளாய்
இவனின் இவனாய் இவனை புரிந்த 
இவனைப் புரியும் அவளின் அவள்


அவளும் இவனும் அவனும் இவளுமாய் 
ஆனபின் ஆணென்ன பெண்ணென்ன அறிவாயோ..?! 
அறிவாய் திருவாய் அன்பாய் ஆர்ந்த 
அற்புதம் அறிந்த அவனும் அவளும் 
உண்டு இல்லையில் உருண்டு எழுந்து 
நன்று தீதில் நனைந் தெழுந்து
அன்றிலும் இன்றிலும் ஆழ்ந் தெழுந்து
ஒன்றில் ஒன்றாய் ஒன்றிக் கிடக்கும் 


உன்னத வினாடிகளில் ஓர்ந்துக் கிடக்கும் 
காலம் ஓய்வெடுத்தப் படி,- உள்ளுள்
உறங்கும் உண்மை விழித்தெழும் இன்மை 
இம்மை நீக்கி உண்மை ஊட்டுவிக்கும்
அவனும் அவளும் அறிந்த உண்மை 
அவனால் அவளும் அவளால் அவனும் 
அவனையும் அவளையும் அவ்வவ்வாறு அறிந்த 
ஆன்மத் தேடலின் அவசியம் புரிந்தது.

Friday, July 01, 2011

"மலரும்..! மனிதனும்...?"
ஆதவன் ஆடை களைந்து நடக்கிறான் 
அந்த நந்தவனம் உடல் சிலிர்க்கிறது 
மலர்களின் மடியில் பனித்தேன் பருகுகிறான்
இலைகளில் வழிகிறது செடிகளின் வெட்கம்..!! 


ஆதவன் மோகம் அறிந்த மேகம் 
மலர்களை மறைத்து மதிலென நிற்க 
"இதென்ன இடைஞ்சல்" என மருகும்
மலர்களின் முகம் பார்க்கும் மேகம் 
ஆதவன் தீண்ட கருகிப் போவாய்
இத்தனை அழகும் "பாழாகும் பாவம்" 
மெலிதானக் கருணை மூச்செரியும் கார்மேகம்
"அதற்குதானே பிறந்தோம் ஆதவனை வரச்சொல்"...


கட்டளையிடும் மலர்களின் காதலில் உடைகிறது 
மேகத்தின் கருணை,- சூழும் ஆதவன் 
மோகம் சுட்டெரிக்க இதழ் பிரித்து 
இதழ் பிரித்து மெல்ல மெல்ல 
சுவையென சுவைக்கும் தணியாத தாகம் 
மலர்களின் மேனியில் அடங்கும் ஆசை 
ஒடுங்கும் இதழில் நடுங்கும் தேகம் 
வதங்கி அழிந்துதிரும் அந்தியில் ஆதவனோடு


ஒருநாள் வாழ்க்கைக்கு ஒத்திகை நடத்தும்
ஒவ்வொருப் பூவும் செத்து மடியும் 
மறுபடி மறுபடி பிரசவிக்கும் செடிதான் 
மலர்களின் மாறாக் காதல் அறியும்


மகள்களின் துயரம் அன்னையை சாரும் 
மகரந்த சேர்க்கைக்கு ஆதவன் வேண்டாம் 
அழும் அன்னையின் குரல் கேளாமல்
மலர்களின் தழுவல்கள் மறுபடியும் ஆதவனோடு...!


இழப்பது இன்பமென பாடம் புகட்டும்
மலர்கள் மனிதனுக்கு அளிப்பது இன்பமென 
அறிவு புகட்டும் ஆதவன்,- எதுவும் புரியாமல்
மரங்களை வெட்டும் மனித இனம்.