Friday, January 21, 2011

"குரலோசை...!"



இறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு
இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி..!
பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின்
மகரந்தத் துகள்களில் காதலின் வாசம்..!

ஒவ்வொரு புல்லும் தனித்தனியாய் தவம்
ஒரு காதலனுக்குத்தான் எத்தனை முந்தி விரிப்பு...!
தனித்தனிப் பந்தியாய்...! தண்ணீர் பந்தலாய்...!
பனித்துளி பரவசங்கள், பழரசமாய்.. இலவசமாய்..!

மூடுபனி மூடிய பனிச்சாரலில் பருவப்பெண்
தாவணி தழுவல் சுகமடி..!,- கரையும்
கற்கண்டு நனைக்கும் இதயத்தில் இன்ப
பிரவாகம் இன்னொரு பிறவிக்கு அடிமானம்...!

கொட்டும் பனியில் கொட்டமடிக்கும் பொழுதில்
இந்திர உலகம் ஆளும் எண்ணமடி...!
இன்பத்தில் நீ மட்டும் மதுக்கிண்ணமடி..!!
கொக்கரிக்கும் மனம் கொண்டைச் சேவலாய்....

ஆழ்துயில் மேவும் ஆழியில் அந்தரங்கமாய்
அன்பை குடித்தும் கொடுத்தும் நிறையும்
ஆனந்த நிமிடங்களில் கரையும் மனம்
அடர்பனி தொடரும் அற்புதம் காணும்....

திரும்பும் திசை எல்லாம் சக்தியாய்...
தீண்டினாய் விழிகளை..! தாண்டினாய் மொழிகளை..!
திக்கித் திணறி முட்டி மோதுகிறேன்..!
தீந்தமிழ் வார்த்தைக்கு சொக்கிப் போகிறேன்..!

என் இரத்த ஓட்டம் மாறிப்போகிறது....
உதிரமாய் தேன் உடலெங்கும் பிரவேசம்..!
திசுக்களில் எல்லாம் இன்ப பிரவாகம்...!!
அணுக்கள் தோறும் ஆனந்த தாண்டவம்...!!!

சொல்லடி பெண்ணே....

உன் ஒற்றை குரலோசையில்
இத்தனை மயக்கமா எனக்கு...?
 


குரலா அது...?
குயிலோசை....

காட்டுக்குள்தான் நான் நிற்கிறேன்....
பட்டணத்தில் இருந்து குயில் கூவுகிறது...!!

***********************************************

3 comments:

Chitra said...

திரும்பும் திசை எல்லாம் சக்தியாய்...
தீண்டினாய் விழிகளை..! தாண்டினாய் மொழிகளை..!
திக்கித் திணறி முட்டி மோதுகிறேன்..!
தீந்தமிழ் வார்த்தைக்கு சொக்கிப் போகிறேன்..!


...Beautiful!

சுவடுகள் said...

இறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு
இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி..!
பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின்
மகரந்தத் துகள்களில் காதலின் வாசம்..!

மொட்டு மலர்தல் போல உள்ளத்தில் காதல் அரும்பி,இதழ் வெடித்து தேன் வடிக்கிறது என்பதை எடுத்து இயம்பும் விதம்.....நிசத்தில் அற்புதமான இராசனையாளன் நீங்கள், என்பதை இனம் காட்டுகிறது.

சுவடுகள் said...

யாரோ அந்த பட்டணத்துக் குயில்....!!!????