Friday, December 31, 2010

ஓ...! என் பிரியமே...!


ஓ...!
என் பிரியமே...!

நீ என் பாடுபொருள்
நான் உனைப் பாடும் பொருள்

நீ என் கவிதை
நான் உன் உட்பொருள்

நீ என் பல்லவி
நான் உன் சரணம்

நீ என் வீணை
நான் உன் ராகம்

நீ என் சுருதி
நான் உன் சங்கீதம்

நீ என் நடனம்
நான் உன் அபிநயம்

நீ என் மௌனம்
நான் உன் மொழி

நீ என் கனவு
நான் உன் விழி

நீ என் உணர்வு
நான் உன் உணவு

நீ என் பரிவு
நான் உன் பாசம்

நீ என் சுவாசம்
நான் உன் திலகம்

நீ என் நிசம்
நான் உன் நிழல்

நீ என் பிரிவு
நான் உன் உறவு

நீ என் மெய்
நான் உன் பொய்

நீ என் கர்வம்
நான் உன் அகந்தை

நீ என் வினை
நான் உன் விதி

நீ என் இணை
நான் உன் துணை

நீ என் வாழ்வு
நான் உன் நலம்

நீ என் நிலம்
நான் உன் விதை

நீ என் சொந்தம்
நான் உன் பந்தம்

நீ என் பாதம் 
நான் உன் பாதை

நீ என் சித்தம்
நான் உன் நித்தம்

நீ என் சுயம்
நான் உன் சுயம்பு

நீ என் பிரபஞ்சம்
நான் உன் நிலா

நீ என் பாதி
நான் உன் முழுமை

நீ என் பக்தி
நான் உன் முக்தி

நீ என் "நான்"
நான் உன் "நீ"

நீ என் "சக்தி"
நான் உன் "சிவன்"

நீ என் "பரம்"
நான் உன் "புறம்"


ஓ...!
என் ஆனந்தமே...!

உன்னை நினைத்தே...
உயிர் ஒடுங்குகிறேன்...!!

ஏற்றருள்...
என் சீவனை.



Thursday, December 30, 2010

"என் செய்வாய்"...!


கண்ணே..!
கண்களை மூடிக் கொள்ளலாம்... 
கனவை என் செய்வாய்..!

பெண்ணே..!
மனதை மூடி மறைக்கலாம்...
நினைவை என் செய்வாய்..!

மலரே..!
உடம்பால் மறையலாம்...
உயிரை என் செய்வாய்..!

மருக்கொழுந்தே...!
ஓடி ஒளியலாம்...
உள்மனம் என் செய்வாய்..!

உணர்வே...!
ஊமையாய் நடிக்கலாம்...
உண்மையை என் செய்வாய்..!

சொந்தமே...!
மௌனமாய் இருக்கலாம்...
மனதை என் செய்வாய்...!

இனியவளே...!
இல்லை என்றொரு பொய் பேசலாம்...
இமைவடிக்கும் நீரை என் செய்வாய்..!

வாசமுல்லையே...!
வாய் மறுதலிக்கலாம்...
மெய் பேசுமே என் செய்வாய்..!

சகத்தியே...!
சரிந்ததும் சரிசெய்ய...
முந்தானை அல்ல காதல்..!
முன்வினை....
தொடரும்...!!

அகத்தியே...!
கண்ணுக்குள் ஒளிரும் காதல்...
பெண்ணுக்குள் மறையுமோ...?!
பசும்பொன்னுக்குள் தொலையுமோ..?!

பனி விலகலாம்...
பாசம் விலகுமோ..?!
பாறைக்குள்ளும் தேரையுண்டு
பாரடி பெண்ணே..!
பாருக்குள்ளே காதலிக்காதவர்
யாரடி கண்ணே..? 

"ஆன்ம இராகம்"....!


அதோ என் கோவில்...!

இங்கேதான் என் இறை
எப்போதும் இருக்கிறது.
ஓடோடி வரும்...
ஒவ்வொரு முறையும்
கதவடைப்பில்...!

ஆன்மாவின் இராகம்
அழைக்கிறது.
என் ஆன்மாவின்
இராகங்கள் இதோ உனக்காக...

உன்னை குரலால் தொழுகிறேன்.
கவிதையால் ஆராதிக்கிறேன்.
எண்ணங்களால் பூசிக்கிறேன்.
எவ்விதமாய் மாசுப்பட்டேன்...? 
எனக்கு மட்டும் கதவடைப்பு....?!

இருப்பினும் என் துதிகள்...
யாவும் உனக்காய்...!
விழிகளில் விளக்கேற்றுகிறேன்..!
வெளிச்சத்தில் என்னைக் காண்பாய்..!!

ஏ...!
என் இறையே...
உன்னை அருகமர்ந்து
தரிசிக்க தவமிருக்கிறேன்.



பாவங்கள் படியாத இந்த மலரை
உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
காம்புகள் காயும் முன் காண்பாயோ...!

ஆழ்மனதமர்ந்து என் ஆழம் காண்கிறாய்.
உள்ளிருந்து கொண்டு உடன்வர மறுக்கிறாய்..!
நிழலென பின்தொடர்வேன் நிசத்திலும்
நீயறியாயோ என் துணையே....!!

வாழ்வில் வளம் சேர்க்கும் 'தமிழ்' தந்தேன்.
வாட்டம் நீங்க வாராயோ "என் தமிழே"..!
நீ என் மொழி... நீ என் வழி...
நீ என் விழி... நீ என் தழி...!!

ஆர்ப்பரிக்கும் சூழலில் உன்னை சரணடைகிறேன்.
ஆரவாரம் இன்றி எனை ஆட்கொண்டருள்..!
பேதமைகளில் பொருந்தா வண்ணம்
"பேரருட்செய்" பெருந்தகையே...!!

நின் தீர்த்தங்களில் என் தேகம் நனையட்டும்
நின் திரவியங்களில் என் மனம் குளிரட்டும்
நின் மூர்த்தங்களில் என் ஆன்மா அமரட்டும்
நின் கீர்த்தனைகளில் என் சுதி சேரட்டும்.

கடைக்கண் பார்வையில் தழுவிக்கொள்.
காதலின் விளிம்பில் விம்மித் தவிக்கும்
என் சீவனை....!!
கரங்களில் ஏந்தி கரையேற்று.

இப்படியாகத்தான் உன்னை நேசிக்கிறேன்.
எப்படியேனும் எனைத் தேற்று. 




Wednesday, December 29, 2010

ஓ.... என் சீவநதியே...!


ஓ....
என் சீவநதியே...!
இதயப் பாலையில்
உயிர்ச்சுனையாய் நீ...!
நிற்காமல் ஓடிக்கொண்டிரு...

சோகம் சுட்டெரிக்கும்
என் பால் மேனியில்...
உன் தெளித்துளிகள்
தீர்த்தமாகட்டும்...!

சுழன்றடிக்கும் உணர்வுச்
சூறாவளிகளில்...!,- என்
கனவுகள் களவாடப்படுகின்றன.
ஆதியந்தம் என்னோடு
பந்தமாய் இரு.

சுடும் மணலும்
சுத்த வெளியும் தவிர
என்னிடம் எதுவுமில்லை.
உன் கரையோரம்
காத்திருக்கும் "எனதுயிர்"..!
கவனித்து செல்...!!

புதைந்து கிடக்கும்
மணல்வெளியில்...
புதைத்து வைத்திருக்கிறேன்
"இரகசியமாய்" உன்னை.
நீ என் "உயிரின் தேடல்"...!

வாடையிலும், கோடையிலும்
வளர்ந்து கொண்டே இரு.
பருவங்கள் சொல்லி
பயமுறுத்தாதே...!,-நான்
'பாடையில்' போகும் வரை...

சுழித்தோடும் உன்
நெளிவுகளில்தான்...
என் சொர்க்கம்...!
வளைவுகளில் என்
வாழ்வு சமைப்பவள் நீ..!!

உன் வருகைக்காய்
காத்திருக்கும் "என் காதல்"
இதயப் பாலையின் 
ஒரு மூலையில்...!
சருகுகளின் சப்தத்தில்
செவி சாய்க்க மறவாதே...!!

என்னில் காயும்
பால் நிலாவை
பரிசளிக்கிறேன்.
"பரிசுத்தமே"...!
புன்னகை சிந்து.

கதிரொளியில்...
காய்ந்து விடாமல்
மேகக்குடைப் பிடிக்கிறேன்..!
"பவித்திரமே"...!
மகிழ்ச்சி நுரைப் பொங்கு..!!

புனலாடை மேல்
மணலாடைப் போர்த்துகிறேன்...!
தனலாடைத் தவிர்க்க..!
மனவாடை மறக்காதே..
மரிக்கும் வரை.!...

நெகிழ்ச்சிக்கொள்ளும் தருணங்களில்
நீந்துகிறேன் நினைவலைகளில்....!
பூத்திருப்பாய் "என் புன்னகையே"...!!
"காத்திருப்பாய்"... என் காலம்..!!!

எப்போதும் என்னோடிரு...
ஓ...
என் சீவநதியே...!
நீ...!!
"என்னுயிர்".



"எருக்கம் பூக்கள்"...!

முத்திரையாய் பதிந்த "காதல்"
முகவரி தேடித்தேடி...
முழுவதும் "சுயம்" இழந்தேன்.

"எருக்கம் பூக்கள்"
"இறையை" அடைய
எண்ணித்தான் பூத்தாலும்
கிள்ளுவார் இல்லாமல், - தனை
அள்ளுவார் இல்லாமல்...
எதற்கும் இல்லாமல்..
உதிர்ந்து போகும்..!

..............................

காதலும் .......!

நானும்.....!!

Saturday, December 25, 2010

"புனிதருக்கு".....!

உலகத்தின் புனிதன் என
உன்னைத்தான் உலகம் சுட்டும்...!
பாவத்தின் சம்பளமாய்
தண்டனைகள் உனக்கு மட்டும்...?!

கடவுளின் மகனாம் நீ
கருணையின் உருவாம் நீ
கற்பித்தார்கள் உன்னை
கர்த்தராய் நின்னை....?!

வாழும் காலத்து வைதார்கள்,- உன்
வாழ்க்கை முடித்து வைத்தார்கள்.
வானுலகத் தந்தை என்றார்கள்,- மீண்டும்
வருவாய் என்றார்கள், வாசலில் நான்.....

மனிதம் பேசிய நீ புனிதன் ஆனாய்
மனிதம் எங்கே இங்கே...?
கனிவு பேசி நீ கருணாமூர்த்தியானாய்
கருணை எங்கே இங்கே...?

எங்கெல்லாம் நீ பேசப்படுகிறாயோ..?
அங்கெல்லாம் துப்பாக்கியின் தோட்டா முத்தங்கள்..?
அமைதி அங்கே ஆச்சரியக்குறி...!
நிம்மதி அங்கே கேள்விக்குறி...?

காலத்தை உன்னை வைத்து கூறு போட்டார்கள்
கலப்படம் செய்ய வசதியாய் ....
ஞாலத்தில் சத்தியம் நிலைக்கும்
நானறிவேன் நின் தூய அன்பை...!

உன் கட்டளைகள் மிதித்து மன்னிப்பு கேட்காமல்
உன் உணர்வுகள் மதித்து மனிதனாகிறேன்.
மண்ணில் நீ பிறந்த காரணம் யாரறிவார்...?
மனிதர் கற்பனைக்கு பிறக்காத கர்த்தா நீ...

உன் நினைவில்......

உன்னை நினைப்போருக்கு என் வாழ்த்துக்கள்.
இனிய கிறித்து நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்........
-தமிழ்க்காதலன்.    

"மக்கள் திலகத்துக்கு"...


'வறுமையில்' பிறந்து....
"வள்ளலாய்" வாழ்ந்து....
"செம்மலாய்" செழித்து...
'சமூகம் சமைத்த'
"அன்பின் அழகே"...!!

பிஞ்சுகளின் பசிப்பிணி நீக்க
பள்ளிகளில் சத்துணவு சமைத்த
"சமதர்மமே".....!

"காலணிகள்" தந்து
"காலணி"களை கரையேற்றிய
"தமிழ் படகே"....!

புத்தகம் தந்து புதிய
பரிணாமம் கண்ட
"புரட்சியே"...!

வறுமை விரட்ட
பதிமூன்று ஆண்டுகளாய்
அத்தியாவசியப் பொருட்களின்
அவசியம் உணர்ந்து
விலையில் கை வைக்காமல்
'கை'யோடு கைக்கோர்த்து
கை வீசி நடந்த
"கர்ம வீரரே"...!

நினைவிலும்...
கனவிலும்
ஏழைகளைத் தாங்கிய
"ஏந்தலே"....!

ஏர்முனையின்
கூர் மழுங்காது காத்த
"விவசாயி" நீ...!        

தேசம் பெரிதென
நேசம் வைத்த
நெஞ்சமே...!

காலங்கள் சென்றாலும்
"காலம் வென்ற
காவியம்" நீ....!!

நீயும் காமராசரும்
இல்லாத தமிழகம்
நினைக்க பயம் தரும்
உணர்வுகள்...!

இன்றைய எங்களின்
வாழ்வாதாரத்தை அன்றே
விதைத்து சென்ற வள்ளல்கள்
வாழ்க... வாழ்க...!

நீங்கள் மறையவில்லை....
எங்களின் இதயங்களில்....
எங்களின் நினைவுகளில்...
நீங்காமல் .....

ஒளியாய் ஒளிர்கிறீர்கள்.

உங்களின் பெருந்தன்மை
எப்போது வரும் இன்றைய
சிறுமை படைத்த
அரசியலுக்கு......!

ஏக்கங்களுடன்....
-தமிழ்க்காதலன். 

(டிசம்பர் 24 ம் நாள் "பாரத ரத்னா" திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளுக்கான சமர்ப்பணம்.)                  

Thursday, December 23, 2010

"அடிமை இந்தியா 2010".

வாழத் தெரியாதவன் வாழுகிற நாட்டில்
ஆளத் தெரியாதவன் ஆளுவான்.


இன்று இந்தியா இப்படித்தான் இருக்கிறது. சொந்த அறிவுள்ள என் அன்பு சொந்தங்களே.... வணக்கம். உங்களில் ஒருவனாய் உங்களுக்காய் பேசுகிறேன். இந்த தேசம் கடந்து வந்தப் பாதையை எண்ணிப் பார்க்கிறேன். 60 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் பெரும்பான்மையாய் ஆட்சிப் பீடத்தில் இருந்து வந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அமைப்பாக காங்கிரஸ் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், ஆரம்ப காலம் தொட்டே உட்கட்சிப் பூசலுக்கு குறைவிலாத கூட்டம்தான் இங்கே குவிந்திருக்கிறது. திறமையான மனிதர்களைப் பெற்றிருந்தும் திறம்பட செயல்படாமல் போனதேன்....? புரியவில்லை. காங்கிரஸ் ஒரு அதிகார வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. இன்றும் நடக்கிறது. நேருவுக்குப் பின் சிறந்த சீர்திருத்தவாதிகளை அந்த கட்சி ஏனோ இழந்து விட்டது.

இன்று என்ன நிலையில் நம்மை இந்த கட்சி வைத்திருக்கிறது என்பதற்கு காங்கிரசின் கையாலாகத்தனங்கள் சாட்சியாய் நிற்கின்றன. ஒரு கட்சி என்பது ஆட்சிக்கு வருவதையும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதையும் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுமேயானால் அந்த கட்சியிடம் தேசியம் சார்ந்த விசயங்களை எதிர்ப்பார்க்க முடியாது. இந்தியாவில் எல்லா கட்சிகளுமே இந்த நிலையில்தான் உள்ளன.

சுதந்திரம் பெற்றதாய் சொல்லிக் கொண்டு இன்னமும் இங்கே மன்னராட்சியைதான் காங்கிரஸ் கடைப் பிடிக்கிறது.
வழிவழியாய் வழித்தோன்றல்கள் மட்டுமே தலைமை ஏற்க வேண்டிய அவசியம் சனநாயகத்தில் எங்கே இருக்கிறது..? நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, நாளை ராகுல், அல்லது பிரியங்கா, ..... இப்படி நீளும் பட்டியலில் சுதந்திரம் எங்கே இருக்கிறது.

இதைப் பின்பற்றி... மாநிலங்களிலும்..... முதல்வருக்குப் பின் மகன் முதல்வர். தொடரும் பரம்பரை பதவிகளில் சனநாயகம் எங்கே பிழைத்திருக்கிறது...? ஏன் அடிமட்டத் தொண்டனுக்கு, நீண்ட அரசியல் பின்னணி உடையவர்களுக்கு, குறிப்பாய் இளைஞர்களுக்கு பதவிகள் தரப் படுவதில்லை. நடக்க தெம்பில்லாதவர்களுக்கு கூட பதவி மோகம் விடவில்லை.


தேசியப் பதவிகள் என்பது ( பிரதமர், முதல்வர்,) ஏதோ இந்திர சபை பதவி என நினைத்து தன் தனிப்பட்ட சுகங்களை அனுபவித்துக்கொள்ள ( ரம்பை, ஊர்வசி, திலோத்தமை களோடு ) என நினைக்க கூடாது.
இந்தப் பதவிகள் அந்த தேசத்தின், மாநிலத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவை என்பது சனநாயகத்தில் புரியப் படாத புதிராக இருக்க வேண்டிய அவசியம் என்ன...?

ஒரு கட்சி என்று வருகிற போது, அங்கே தலைவன் என்று ஒருவர் வருகிற போது, மற்றவர்கள் தலைமை ஏற்கிற வாய்ப்புகள் மறுக்கப் படுகிறது. அதோடு இந்த பிரதமர் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை தரவேண்டும். அப்போதுதான் உண்மையான சனநாயகம் தழைக்கும்.

இங்கே செயித்தவர்கள் சேர்ந்து கொண்டு அதிகப் பணம் கிடைக்கும் கட்சிக்கு தங்கள் ஆதரவு தருவதில் எப்படி சனநாயகம் இருக்க முடியும்..?

எல்லா அமைப்புகளும் இங்கே இருக்கின்றன... எப்படி..? அரசியலுக்கு அடிமையாய். சாமானியனை தண்டிக்கும் அளவுக்கு கூட அரசியல் வாதிகள், அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப் படுவதில்லை. பலப்பல காரணங்களால், பலப்பல பெயர்களால் அவர்கள் தப்பிக் கொண்டே இருக்கிறார்கள். மொத்தமாய் ஒரு பெரியத் திருட்டுக் கும்பல் வசம் இந்த தேசம் சிக்கி சீரழிகிறது. இந்த தேசத்தின் அவலங்களுக்கும், தீர்க்கப் படாத பிரச்சனைகளுக்கும், மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த கட்சியாக "காங்கிரஸ்" பொறுப்பேற்க வேண்டியதாகிறது.

இப்போது பாருங்கள்...., இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப் பெரும் ஊழல்கள் நடந்தேறுகின்றன. ஊழல் காங்கிரசுக்கு புதிதில்லைதான் என்றாலும், தேசத்திற்கு இது மிகப் பெரிய கெடுதல், மிகப் பெரிய அச்சுறுத்தல், நம்முடைய உண்மையான பலம் என்னவென்பதை பரிசோதிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
நம்முடைய அமைச்சர்கள், அதிகாரிகள் தங்களின் மிகப் பெரும் அறிவையும், ஆற்றலையும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதிலேயே செலவிடுவதால்.... இந்த தேசத்தின் பாதுகாப்பு குறித்து கவலைக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

இப்போது இந்த ஒரு ஆண்டில் மட்டும் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் கோடிக்கு ( 210000,00,00,000 )
இதுவரை ஊழல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. நேற்று ஐந்தாயிரம் ( 5000,00,00,000 ) கோடிக்கு தென்னக ரயில்வேயில் ஊழல் கண்டுப் பிடிக்கப் பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் கோடிகளில் அல்ல ஊழல். கோடி கோடிகளில் தான் கொள்ளை.


இதை தடுக்க இங்கே எந்த சட்டமும், திட்டமும், பொது அமைப்பும் இல்லையா...? அப்படியென்றால் வெற்றுக் காகிதங்களில் தொங்கும் இந்த சல்லடை சட்டம் நமக்கு எதற்காக..? நம்முடைய சமூக அமைப்பு எதற்காக...?

அரசியலில் இருந்து விட்டால் என்ன செய்தாலும் அது குற்றமாகப் பார்க்கப் படாதது ஏன்...? தவறுகளுக்கும், தப்புகளுக்கும் நம்முடைய மக்கள் பழகிப் போய், இதுதான் எதார்த்தம், இதுதான் நடைமுறை என்கிற அளவுக்கு இரத்தத்தில் தவறுகள் நம்மில் மிகுந்து கிடக்கின்றன. இலஞ்சம் என்பது உரிமையாக பேசப் படுகிற அவலங்கள் இங்கேதான் நடந்தேறுகிறது.

தேநீர் வாங்கித் தரவில்லை என்கிற காரணத்தால் கோபம் கொண்ட காவல்துறை உயரதிகாரி ஏட்டுகளை பதவியிலிருந்து தற்காலிகமாய் நீக்கும் அளவுக்கு இலஞ்சம் நம்மில் ஊடறுத்து நிற்கிறது. ஒரு உள்துறை அமைச்சர் பேசுகிறார்... காங்கிரஸ் மட்டுமே இன்னும் பத்தாண்டுகளுக்கு ஆட்சியைப் பிடிக்க முடியும். எப்படி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற தாரக மந்திரம் காங்கிரசுக்குத்தான் மிக நன்றாக தெரியும் என்று பேசி இருக்கிறார். அவருடைய பேச்சிலேயே காங்கிரசின் மானம் அவிழ்ந்து கிடப்பதை பாருங்கள்.

இங்கே சாதாரண மனித வாழ்க்கைக்கு தேவையான "வெங்காயம்" ஆப்பிளுக்கு மேலே போய் விலை விற்கிறது. இதையெலாம் இங்கு கவனிக்க ஒருத்தர் கூடவா இல்லை. உணவுத்துறை அமைச்சர் பேசுகிறார். இன்னும் மூன்று வாரம் போனால் வெங்காயம் விலை குறைய வாய்ப்பிருக்கிறது, மக்கள் காத்திருக்க வேண்டும் என்று... இப்படி பேச என்ன துணிச்சல் இருக்க வேண்டும்..? இதற்குத்தானே மக்கள் உனக்கு ஓட்டு போட்டார்கள். உனக்கு அமைச்சர் பதவி வேறு...? மரத்தடி சோதிடன் சொல்லும் பதில் சொல்ல எதற்கு உணவுத்துறை உனக்கு..?

இந்த ஐந்தாண்டுகளில் நடந்த கொடுமைகளைப் பாருங்கள். இந்தியா இதுவரைக் கண்டிராத பணவீக்கம். அதன் காரணமாய் தொடர்ந்து பொருட்களின் விலை ஏற்றம்...?! அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் திறந்து விட்டு நம்முடைய வாழ்வியல் ஆதாரங்களை எவனோ உறிஞ்சிக்கொண்டிருக்கிறான். நாம் சூம்பிப் போய் நிற்கிறோம். இதையெல்லாம் செய்துவிட்டு கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசையும் கையாலாகாத காங்கிரஸ் ஆட்சியில் மகத்துவங்கள் பாருங்கள்.

உலகப் பொருளாதார மயமாக்கல் என்பது இங்கே தவறான அணுகுமுறையாய் போய்விட்டது. தவறான கொள்கைகளில் நம்மை மீள முடியாத் துயரத்தில் இந்த ஆட்சி கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது. இந்திய குடிமகன்களின் நலனை விட வெளி நாட்டானின் முதலீடு முக்கியமாய் போய் விட்டது. அப்படிப் பார்த்தால் நமது அண்டை நாடான சீனாவின் பொருட்களை உள்ளே விடவேண்டியதுதானே..., அதில் ஏன் முட்டுக் கட்டைப் போட வேண்டும்...? ஏனென்றால் இந்திய தொழில் முதலைகளான ரத்தன் டாடா, டி.வி.எஸ், அசோக் லேலாண்ட் போன்றவர்களின் வழி காட்டுதலில் ஒரு கட்சி தன் கொள்கைகளை வகுக்கிறது. பணக்காரர்களுக்கான ஆட்சியாக காங்கிரஸ் தன்னை மிக அதிக வெளிப்படையாக காட்டிக் கொண்டிருக்கிறது.

இவர்களின் வாகனங்கள் இங்கே அரை இலட்சத்துக்கு விற்கப் படுகிறது. சீனா தன் வாகனங்களை வெறும் இருபதாயிரங்களுக்கு தர சம்மதித்தது. இது யாருக்கு இழப்பு....? பணம் போட்ட முதலைகளுக்கு தானே..? எங்கே தன் வியாபாரம் படுத்து விடுமோ என பயந்து முன் கூட்டியே தடுத்து விட்டன இந்த முதலைகள். இப்படி இந்த தேசத்தை குதறி கொண்டிருக்கும் அரசியலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட வேண்டும்.

நம்முடைய தேர்தல் முறை மாற்றி அமைக்கப் பட வேண்டும். நம்முடைய நடைமுறைக்கு ஏற்றார் போல் சட்டம் மொத்தமும் மாற்றி எழுதப்பட வேண்டும். அதுவரை நம்முடைய நாடு காங்கிரசின் அடிமை. காங்கிரசு பண முதலைகளுக்கும், வெளி நாட்டானுக்கும் அடிமை. முதுகெலும்பில்லாத கிருமி.

"இந்தியா என்பது காங்கிரசு அல்ல. காங்கிரசு என்பது இந்தியா அல்ல".

விரக்தியின் எல்லையில்
-தமிழ்க்காதலன்

************************************************************

Wednesday, December 22, 2010

"சீசரின் மனைவியும், மன்மோகன்சிங்கும்"...


இந்த தேசத்தை கலக்கிக் கொண்டிருக்கும் காங்கிரசுக்கும் அதன் ஊழலுக்கும், நாடு நாய் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களிடம் நம்ம பிரதமர் வெடிச்ச "சிரிப்பு வெடி" பற்றி பகிர்கிறேன்.
சமீபத்தில் நடந்த காங்கிரசு மாநாட்டில் பேசிய பிரதமர் "சீசரின் மனைவி சந்தேகத்துக்கப்பால் பட்டவளாக இருக்க வேண்டும்" எனப் பேசி புதிதாய் நிறைய சந்தேகங்களை "கிளப்பி" இருக்கிறார்.

சீசரின் மனைவி என யாரைக் குறிப்பிடுகிறார்...? சீசர் யார்..? புருட்டசு, ஆண்டணிகல்லாம் யாரு அப்படிங்கிற ஆராய்ச்சிய அப்புறம் வச்சிப்போம்.

இப்போதைக்கு அவர் தன்னையே "சீசரின் மனைவி" எனக் குறிப்பிட்டதாக கொள்வோம். இதில் "தான்" ஒரு குறிப்பிட்ட தலைமைக்கு கீழே "உண்மை ஊழியனாய்" இருக்கிறேன், அல்லது "இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்" என்கிற மறைப் பொருளை வெளிப் படுத்தி இருக்கிறார் பிரதமர். அடுத்து இன்னொரு பொருளில் பார்த்தால்.., பிரதமர் என்பவர் அரசியலுக்கப்பால்... கட்சிகளுக்கப்பால்... மக்களின் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்கிற "அரசியல் தர்மம்" பேசி இருக்கிறார் என்றும் கொள்வோம்.

நம்முடைய சந்தேகம்...

இன்று வரை "அலைக்கற்றை ஊழல்" பற்றி ஆளும் கட்சி வாயைத் திறக்காமல் இருப்பதற்கு என்ன நியாயமானக் காரணம்..? குறிப்பாய் பிரதமர் இதுவரை வாய் மூடி மௌனியாக இருக்கிறார். உச்ச நீதி மன்றம் வாய் திறந்து நீதிக் கேட்கும் அளவுக்கு நம்முடைய அரசியல் மலிந்து போய்க் கிடக்கிறது. அப்படிக் கேட்டும் இதுவரை அரசிடமிருந்து சரியான பதில் இல்லை.

இந்திய முதன்மை தணிக்கையரின் அறிக்கையைப் பாராட்டிப் பேசுவதுப் போல் பேசிவிட்டு இறுதியில் இதுப் போல் அரசுக்கு நெருக்கடி தரும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது எனக் கண்டித்த பிரதமர்.... ஏன் தவறுக்குப் பொறுப்பானவர்களைத் தட்டிக் கேட்க வில்லை...? சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி குற்றவாளிகள் தப்பிக்க போதுமான அவகாசம் கொடுத்துப் பின் எதற்கு சி.பி.ஐ விசாரணை என்கிற கண் துடைப்பு நாடகம்.


காங்கிரசின் ஊழல்களில் எந்த ஊழலுக்கு அந்த கட்சி பொறுப்பேற்று பதில் தந்திருக்கிறது...? இன்னும் பீரங்கி ஊழலுக்கே ஒரு முடிவும் இல்லாமல் "ஆள் தலை மறைவு" என வழக்கு வழக்காடு மன்றத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் குரோச்சி இன்னும் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறார். சோனியாவின் சொந்தக்காரர் அல்லவா ...? எப்படி இந்தியாவுக்கு நீதிக் கிடைக்கும்...?

வெளிநாட்டில் இருந்து கொண்டு நம் பிரதமர் நாடாளுமன்ற முடக்கம் பற்றிப் பேசினார். அவ்வளவு அக்கறை இருந்தால், உங்கள் மேல் குற்றம் இல்லை என்றால், எதிர்க் கட்சிகள் கேட்கிற ஜே.பி.சி குழுவை அமைத்துவிட்டு நாடாளுமன்றத்தை நடத்த வேண்டியதுதானே...? இதில் என்ன சிரமம் என்று இன்று வரை ஒரு காங்கிரசுக் காரர் வாய் திறந்து பேசி இருப்பாரா..? இந்தக் குழுவை அமைக்க காங்கிரசு மறுக்க, நியாயமான ஒரு காரணம் சொல்லட்டும்.

பாராளுமன்றம் நடக்காமல் போனதன் முழுக் காரணமும் காங்கிரசைத் தவிர வேறு யாருமில்லை என்பது ஐயம் இன்றி தெளிவு. பாராளுமன்றம் நடக்காவிட்டாலும், இந்த நாடு எக்கேடு கேட்டு குட்டிச் சுவரானாலும் நாங்கள் வாய்த் திறக்க மாட்டோம் என தேசத் துரோகத்தில் அமிழ்ந்திருக்கும் கட்சியாக இன்று காங்கிரசு மாறி நிற்கிறது.

இவ்வளவையும் வைத்துக் கொண்டு, நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் அத்தனையும் இந்த ஆட்சியில் தவறான அணுகுமுறையால் விலை ஏறி, சாமானியன் சாகும் அளவுக்கு நாடு பின்னடைவு கண்டிருக்கிறது. நகரங்களில் அந்நிய நாட்டான் தன்னுடைய பணத்தில் கட்டும் கட்டடங்களில் இந்தியாவின் வளர்ச்சி நிச்சயமாய் இல்லை. நீங்கள் வளர்ச்சி என்பதெலாம் ஒரு பக்க கட்டியாகத்தான் வீங்கி இருக்கிறது.


புற்று நோயை போல் இந்த தேசம் ஊழலால் அரிக்கப் பட்டு செத்துக் கொண்டிருக்கிறது. ஊழல், இலஞ்சம் இல்லாத் துறை ஒன்றை இந்தியாவில் உங்களால் விரல் நீட்டிக் காட்ட முடியுமா..?
செத்துக் கொண்டிருக்கும் என் தேசத்தின் மிச்சமிருக்கும் மானத்தையும் நீங்கள் விலைப் பேசி வெளிநாட்டானுக்கு விற்றுக் கொண்டிருக்கிறீர்கள்....


இந்த முகத்தை வைத்துக் கொண்டு "சீசரின் மனைவி எப்படி சந்தேகத்துக்கப்பால் இருக்க முடியும்...?" எங்களுக்கு சீசரையே நம்ப முடியவில்லை...? அப்புறம் அவன் மனைவி என்ன...?

உங்களில் ஒருவருக்கு மனசாட்சி இருந்தால்....

இந்த கேள்விகளுக்கு பதில் கொடுங்கள்.....?

அதை விட்டு "பத்தினித் தனம்" என்பதெல்லாம் ஊரை ஏமாற்றுகிற முயற்சியே தவிர வேறில்லை.

இப்படிப் பட்ட அரசியல் பிழைப்பு தேவையா....? ஒரு கனம் யோசிப்போம்....?

உங்கள் மடியை அவிழ்த்து விட்டு கை வீசி நடக்க உங்கள் நெஞ்சில் உரமிருந்தால் நடந்து காட்டுங்கள்.
தகிக்கும் கோபத்துடன்.....
- தமிழ்க்காதலன்.   
****************************************                              

Tuesday, December 21, 2010

"காதலே நீ..!!"


தலையறுபட்ட முண்டத்தின்
கழுத்தில் பீறிட்டுக் கிளம்பும்
குருதியில் ஒழுகும் உயிரில்
கசியும் என் பிரியங்கள்..!

உடலையும் தலையையும்
இணைக்கத் துடிக்கும்
நரம்புகளின் துடிப்பில்
தவிக்கும் என் நேசங்கள்..!

கடைசிமுறையாய்
உதடுகள் துடித்து
உச்சரிக்கும் உன் பெயரில்
உயிர்த்திருக்கும்
என் சுவாசம்..!

இமை மூடா விழிகளின்
கடையோரம் காத்திருக்கும்
நீர்த்துளியில் வழியும்
என் ஏக்கங்கள்..! 

நீண்டு விரைக்கும்
விரல் நரம்பில் தெரிக்கும்
முடிச்சில் தவிக்கும்
என் உணர்வுகள்..!

உயிர்ப் பிரியும் வலியில்
உருண்டுத் துடிக்கும்
அடிவயிற்றில் தவமிருக்கும்
என் தவிப்புகள்..!

இற்றுப்போகும் இதயத் துடிப்பில்
கடைசி முறையாய் கதறும்
என் துடிப்புகள்..!

காதலே....!!

மூளைக்குள் முடங்கும்
அறிவின் ஆதாரத் தேடலாய்
நீ...! 

குத்திட்டு நிற்கும் கேசங்களின்
பிரபஞ்சத் தூண்டலில்
பிழைத்திருக்கும் 
உயிர்ப்பாய்
நீ..!
 
ஓங்கி தரை மிதிக்கும்
குதிக்கால்களின் சதைக்கிழிசலில்
பூமியை முத்தமிடும்
இரத்தத் துளிகளில் மணமென
நீ..!

காதுக்குள் புடைக்கும்
நரம்பு மூளைக்கு
தூதனுப்பும்
உன் காலடியோசையில்
.........................................
....என் காதல்....!!! 

******************************************

Monday, December 20, 2010

"இதயத்துக்கு அருகில்"...


இன்னமும் காத்திருக்கிறேன்,- உன்
இதயத்துக்கு அருகில்,
விடியலிலேனும் விழித்துப் பார்.
உறங்கா என் விழிகளை...!
நீ விடை கொடுக்கா இரவுகளை....
மறுதலிக்கிறது மனம்.
*****************************************

சோர்ந்துப் போகும் விழிகளில்
சொக்கி நிற்கும் உறக்கம்.
ஆயினும்,...
காத்திருக்கிறேன்.
கைப்பேசிக்கருகில்....
காதலுடன்...!
நீளும் இரவில்..... 
******************************************

இன்னும் எனை என் செய்வாய் என்னன்பே...!
புன்முறுவலில் ஒப்புதலளிக்கிறேன்.
வாழ்க்கை முரண்படுகிறது...!


பகலிரவு பாதிப்பாதியாகி
இரவில் பகல்,
பகலில் இரவும் நீள்கிறது
 

நெஞ்சுக்குள் நெருப்பு ஒன்று மூள்கிறது.
உமிழ்நீரே உணவாகிறது.
காற்றுக்கு கதவடைக்கும் நாசிகள்
உன் காதலுக்கு கதவுத் திறக்கின்றன.
 

பாழும் வயிறு பசிக்க வில்லை.
ஏனோ..... விழிகள் உறங்கவில்லை.
எதற்கும் மனம் கலங்கவில்லை.
இதயத்துடிப்பில் லயம் இல்லை
 

கவலையும் பயமும் கலந்த பார்வை.
எதையோ பறிக்கொடுத்த முக பாவனை
நிற்க முடியாமல் தவிக்கும் கால்கள்
கணினிக்கும்...
கைப்பேசிக்கும் இடையில்
கழியும் காலம். 
சொல்....!
இதுதான் காதலா...!!

*******************************************

"அதிகாலை"...


பனிப் படர்ந்த அந்த அதிகாலை....
சொந்த மண்ணை சுவாசித்தபடி
விடிந்தது ..., விழித்தேன்...!

மாமரங்களின் கிளைகளில்...
காட்டுக் குயில்களின் கானகுழலோசை..!
கொய்யா மரக்கிளைகளில்...
அணில்குட்டிகளின் மந்தகாச அழைப்பு...!
அவ்வப்போது காகங்களின் கரைதல்...
வீட்டுச் சேவலின் கம்பீரக் கூவல்...
மெல்ல புல்தரையில் கால் பதித்து நடந்தேன்.
மழைக்கால கதிரொளியில்...!

வேலியோர ஓணான்கள்
விரட்டிப் பிடித்தன.    
படபடக்கும் பட்டாம்பூச்சிகள்
பரபரப்பாய்...
வண்ணங்களை வாரி இறைத்து என்
எண்ணங்களில் நீர் இறைத்து சென்றன.
தவளைக்குட்டிகளின் தாவல்கள்...
தேரைகளின் பாய்ச்சலில்....
தெரிந்த தேடல்..!!
உடலோடு உடலிழைத்து
ஊர்ந்து சென்ற பாம்புகள்.

இப்படி....
என் கவனம் ஈர்த்த
எதுவுமே தனித்தில்லை
என்னைத் தவிர...!!
இரட்டைகள்தான் வாழ்க்கை எனில்
நான் மட்டும் ஒற்றையாய்..?
நீ இருந்தும்....
சொல்...!!   

Sunday, December 19, 2010

"இரவின் இரகசியம்...!"

வினாடிகளில் மரிக்கும் வாழ்க்கை
வியப்பைத் தருகிறது எனக்கு.
வினாடிகளையே வாழத் தெரியா நமக்கு
நிமிடங்கள் எதற்கு..?

காலம்....
காத்திருப்பதற்கா...?
காக்க வைப்பதற்கா...?
கண்மணி...!
விரயமாகும் வாழ்க்கை வினாடிகளில்....

புல்லின் நுனியில் பனி சேர்வதும்
அல்லியின் இதழ்கள் அவிழ்ந்து கிடப்பதும்
மல்லிகை மலர்ந்து கிடப்பதும்
இந்த இரவில்தான்.

செடிகளுக்கு இருக்கும் இந்த பேரறிவு
இல்லாமல் போனதேன் நமக்கு..?
பறித்து வைத்தாலும் மலர்ந்து மணம் தரும்.
பருவம் தவறாது மலரும் குணம் மாறாது.

கதவடைத்து உறங்கும் நமக்கு
காற்றின் தூய்மை எதற்கு...?
பிரபஞ்ச இரகசியம் பிரசவிக்கும்
இரவில்....!
இறைந்து கிடக்கிறது வாழ்க்கை.

உலகத்தில்....
அமைதியின் ஆட்சி
அன்பு பிரவாகமெடுத்து
ஆனந்தம் குடிகொள்ளும் இரவு.

வாழ்க்கையின் உண்மைகள்
உறைந்து கிடக்கும்
இரவின் இரகசியம்
படிப்போம் வா...
என்னோடு.

காதல் வசம் கட்டுண்ட
உலகம் காட்டுகிறேன்.       
**********************************

Saturday, December 18, 2010

"காத்திருப்பு...!"

மலரே...!
மகரந்தங்களை மறைக்கலாம்
மணத்தை என் செய்வாய்..?
இதழ்களைக் குவிக்கலாம்
நிறங்களை என் செய்வாய்..?
மொட்டுக்களைத் துளைக்கும்
வண்டல்ல என் மனம்...
மலரில் அமரும்
வண்ணத்துப்பூச்சி..!

காற்றைத் துழாவும்
நின் நறுமணம்...
காதல் விடு தூதெனக்கு...!
மடல் விரியும் இதழ்கள்...
என் விருந்துக்கான இலைகள்...!
நீண்டு வளரும் நின் மகரந்தம்...
நான் விரும்பும் உணவு...!

என் எடை சுமையல்ல,- சுகம்.
உதடுகள் குவித்து உறிஞ்சும்
மதுவில் என் மயக்கம்...!
உன் மடியில் தலை சாய்தல்
என் கிறக்கம்...!

கால்களால் உன் கன்னம் கிள்ள..
நளினமாய் நர்த்தனமிடுகிறாய்..!
என்னால் உன் வாழ்வு சிறக்கும்.
உன்னால் என் வாழ்வு பிறக்கும்.

மறுபடி மறுபடி உன்னிடமே
மண்டியிடுகிறேன்....!!
விடியல்களில் உன் முகம் பார்த்தே
விழிக்கிறேன்.
எட்டி இருப்பதாய் ஒரு
எண்ணம் ....
கொடியில் குடியிருக்கிறேன்....
மலரோடு குடித்தனம் நடத்த....!!

"வஞ்சி..!"

பற்றி நடக்க 
ஒற்றை விரல்
நீட்டினால்...!
பட்ட இடத்தில்
"காமம்" என்கிறாய்...!

விரலின் "நிழல் பற்றி" 
விழுந்து விடாமல்
காக்கும் மர்மம்
நானறியேன் நறுமுகையே...!

மலரினும் மெல்லிய மேனி
மழைப் பொறுக்காதென
குடை கொடுத்தால்...
"இடிக்கவா"...! என்கிறாய்.
என் செய்வேன் செல்லமே...!
இடிந்து போகிறேன்.

பூம்பாதத்தொரு முள் தைக்குமோ...!
விழிகளில் தடம் பார்க்கிறேன்.
"விரசம்" என்கிறாய்.
விழிப் பிதுங்குகிறேன்.

சுவாசம் கூட தனித்திருக்க
காற்றின் கதவடைக்கிறாய்...
புகையும் மனம் புழுங்குகிறது.

மழையில் நனைதல் என் பழக்கம்.
"மோகம்" என்கிறாய்...
மூச்சடைக்கிறேன். 

விட்ட இடத்தில் விக்கி நிற்கிறேன்.
"விரகத்தில்" சொக்கி நிற்கிறேன் என்கிறாய்.

நிழல் கூட பட வேண்டாம்.
பாவி.....
"நினைப்பு" மட்டுமாவது ....?!
****************************************************

Friday, December 17, 2010

"கள்வனல்ல"....!


இருட்டுக் கடை அல்வாவை
திருட்டுத் தனமாய் தருபவளே...!
திண்டுக்கல் பூட்டு போட்டிருக்கும்
உன் இதயத்தின்...
இரும்புக் கதவு திறக்கும்
தமிழ்க் காதலனின் ஒரு
தமிழ்ப்பாட்டு.

தினவெடுக்கும் என் தோள்களில்
கூர்த்தீட்டிக் கொள் புத்தியை..!
திருப்பாச்சிக் கத்தியை...!!
கள்வன் அல்ல உன் காதலன்
இதயம் திருட....!
திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்.
குடிபுக காத்திருக்கிறேன்...
காதலுடன்.
****************************************************           

"கனவில்...!"


கனவில் நீ முத்தமிட்ட சப்தம் என்
காதில் கேட்டது கண்மணி, - அது
கவிதைக்கான பரிசா...!
காதலுக்கான முரசா...!!


உன் மௌனத்தில்தான்
என் காதல் உயிர்த்திருக்கிறது.
மௌனம் கலைத்துவிடாதே...


மகரந்தங்களை மூடிமறைக்கும்
மலரிதழாய்...!
உன் மௌனப் பூதம்
என் காதலுக்கு காவல் காக்கட்டும்.
உள்ளே உயிர்ப்பின் வாசம் நிறைந்து கிடக்கிறது.


இரவில் உறங்கும் பூமியில்
இறங்கும் பனியாய்...!
உன்னில் இறங்கும் என் காதல்.


ஏ...!
இறுகிய பாறையே....!!
உன்னில் என் விதைகள் வேர்விடும்.


நீ...!
இறுகியே இரு
இறுகிய மண்ணில்தான்
விதைகள் முளைக்கும்.
இளகிய மண்ணில் அல்ல.
***************************************************

Thursday, December 16, 2010

"பிரியமானவளுக்கு"...!!


நீ என் சுகந்த சுவாசம்
நீ என் பிரியமான பவித்ரம்
நீ என் பிராத்தனை தோ..த்திரம்
நீ என் பல்லவிகளின் ராகம்.
நான் உனக்கு....?
(தமிழ்க்)காதலன்....!
*****************************************

Wednesday, December 15, 2010

"நேசக்காரி"...?!


நேசமே....
நெபுலாக்களைக் கூட  
நெருங்கிவிட முடிகிறது
என் எண்ணங்களால்....!

சூரியனை சுற்றி வர
நிலாக்களில் உலா போக
முடிகிறது மனதால்....!

பால்வெளித் தாண்டியும்
பறக்க முடிகிறது.
பிரபஞ்ச மையத்தில்
உட்கார முடிகிறது.
புயல் மையத்தில்
படுத்துறங்க முடிகிறது.
அண்டம் கடக்க...
ஒளியை பின் தள்ளி
பயணிக்க முடிகிறது.

அதிசயம் அன்பே...!
உன்னை மட்டும்....
நெருங்க முடிய வில்லை.
நீ என்ன பிரபஞ்ச புதிரா..?

பஞ்ச பூதத் தொகுப்பில்
பிறக்காதவளா நீ...?
பிரம்மனின் 'பின்' நவீனத்துவ
கவிதையா நீ ...!!  

கொள்ளவும் முடியாமல்..
தள்ளவும் முடியாமல், - உனை
அள்ளவும் முடியாமல்..
ஆட்கொள்ளவும் முடியாமல்....!

ஆராதிக்கிறேன்....
ஆலாதிக்கிறேன்....
ஆமோதிக்கிறேன்....
ஆட்சேபிக்கிறேன்....

தனிப் பொருளும் தராது
தான் ஒரு பொருளும் கொள்ளாது
கொண்டுகூட்டியும் பொருள்
கொள்ள முடியாமல்........!?

என்ன வகை இலக்கணம் நீ..?
புணர்ச்சி விதிகளும் பொருந்தாது...
எதிர்மறை பெயரெச்சமா...?
ஈறுகெட்ட எதிர்மறையா....?

கூறு கெட்டவளே.....!

குழப்பத்தில் இருக்கிறேன்
விளக்கி விடு.... என்னை
விளங்கி விடு...!!

உன்னை நினைத்தே சாக
ஒரு சந்தர்ப்பமா.....?!
வாழ்க்கை.     
*****************************************      

"மௌனம் கலைக்காதே...!!"



புனிதத்துக்குரியவளே....

நான் மௌனமாயிருக்கிறேன்.
காந்தவிழிப் பார்வையில்
கலைத்துவிடாதே...
என் மௌனம்...!!

உடைந்தவிழும் என்
பிரபஞ்ச நேசத்தில்
மூச்சுத் திணறி
மூழ்கிவிடுவாய்....!

நெஞ்சில் சுமக்கும் நேசமே...

விழிகளின் விடியல்கள் நீ..!
மோனப் புன்னகையில்
மோதி உடைக்காதே....
மிருதுவான இதயம்...!!

நினைவுகளில் சிம்மாசனமிட்டவளே...

கனவுகளிலேனும்...
கைக்கோர்த்து கொள்...!
உயிர் பெரும் என்
உணர்வுகள்....!!

பேரன்பு பெட்டகமே....

பிழையிருப்பின் பொருத்தருள்.
பிழையிருக்காது அன்பில்.
பிழைத்திருக்க செய்....! - என்
பிரியங்கள்...!!

ஆன்ம நேசமே....   

ஆன்மக் குடிலில்
அன்பைக் குடியமர்த்த
அழைப்பு விடுக்கிறேன்.
"வாராயோ"- என் வசந்தமே...!!

இன்பங்களின் இருப்பிடம் நீ....

என் கவிதைகளின் கருப்பை நீ...
என் தமிழ்ச் சிந்தனை நீ...
என் சுயம் நீ...
சுகந்தமே...!
சொர்க்கம் சமை..!!

உயிரில் ஊஞ்சலாடும் பேரழகே....

உன்னதங்கள் யாவும்...
உனக்காய் வைத்திருக்கிறேன்.
என்னருந்தமிழே...!
சின்ன சின்னக் கவிதைகளில்
நேசம் நிறைக்கிறேன்...!!

காணாத் தேசத்து கலை எழிலே...

உன் நிழலின் பிம்பங்களில்
உயிர்த் தரிக்கிறேன்.
மௌனமே...! மெல்ல நட
பாதங்களில் படப் போகிறேன்...!          

இன்னமும் இருக்கிறேன்......
"எதற்கு?" எனத் தெரியாமலே...
****************************************

Tuesday, December 14, 2010

"தலை நிமிருமா"....?


"தமிழா"...! என்றேன்.
எவர் தலையும் நிமிரவில்லை.
"தலைவா"...!! என்றேன்.
எவன் தலையும் குனியவில்லை என் பக்கம்.

"ஐயரே"..என்றேன்.   
"ஏன்டா அம்பி"..! என்றவாறே வந்தார் சிலர்.

"செட்டியார்" என்றேன்.
நாட்டுக் கோட்டையிலிருந்து நடந்து வந்தார் சிலர்.
காரைக்குடி கடந்தேகி வந்தார் பலர்.
வாணிக செட்டியார் வரிந்து கட்டி நின்றார்.

"முதலியார்" என்றேன்.
முறுக்கும் நூலோடு முனைப்பாக வந்தார் பலர்.
"கவுண்டர்" என்றேன்.
கோயம்புத்தூர் இடம் பெயர்ந்து வந்தது.

"வன்னியர்" என்றேன்.
வகைதொகையாய் அணிவகுத்தார் பலர்.
"தேவர்...பள்ளர்....பறையர்....
கள்ளர்" ...என பலப்பலவாறே சாதி வைத்து,
சங்கம் வைத்து ...,
கட்சி நடக்கும் காரணம் கண்டேன்.

இங்கே.....
அந்தணன் இருக்கிறான்.
செட்டியார் , முதலியார் இருக்கிறான்.
கவுண்டன், வன்னியன் இருக்கிறான்.
பள்ளர், பறையர், கள்ளர் இருக்கிறான்.

கடவுளே ....!
ஒரு தமிழன் இல்லை.

குலம் சொல்லிக் கூப்பிட்டால் மட்டும்
திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சமூகம்
"திருந்தி" இருக்கிறது.

தமிழும், தமிழுணர்வும் சமூகத்தை
தட்டி எழுப்ப உதவாது என்பதால்தான்,
"தலைவர்கள்" என சொல்லிக் கொள்ளும் தலைகள்
தங்கள் கட்சிக்கு ஆள் பிடிக்க
சாதி வைத்தார் . சாதிக்கொரு சங்கம் வைத்தார்.
சங்கங்களில் தன் கட்சியை அங்கம் வைத்தார்.
சமூக அமைதிக்கு பங்கம் வைத்தார்.
பெரியார் அண்ணா பெயர் சொல்லி,
அந்த பெரியாரையும் இழித்து வைத்தார்.

கொள்கைக்கு முரண் பட்டு நிற்பதே
கொள்கை என்பார்.
தலைகள் பல சேர்த்துக் கொள்வார்.
தகாத இடங்களில் கூட்டம் செய்வார்.
கோட்டைக்கு போகவே உன்முன்
ஓட்டு வேட்டைக்கு வருவார்.

"இலையா" என்பார்.
எதிர்த்த வீட்டில் "கதிரா" என்பார்.
"கனியா" என்பார்.
"கழனி சேர்" அணியா என்பார்.
"ஏர்" அணியா ? அது ஏற்ற அணியா ? என்பார்.
"கை" என்பார்.
கையில் "பை" என்பார்.
"பையில் காசு" என்பார்.
எதிரணி எனக்கு தூசென்பார்.

"புலி" என்பார் பத்து சீட்டு கொடுத்தால்....
"பசுங்கிளி" என்பார்.
"பம்பரம்" விடுவார். பக்கத்து வீட்டில் பட்டியலிடுவார்.
"இலையில்" சோறு என்றால் "இன்னும் இன்னும்" என்பார்.

உறவென்பார், நட்பென்பார்,
பின்னொரு நாள் பகை என்பார்.
பிரிந்து பிரிந்து கூடி....
பிரபஞ்சம் "தான்" என்பார்.

கோட்டை ஒன்றே குறிக்கோள்.
உன் ஓட்டு வேட்டை ஒன்றே கொள்கை.
மற்றெந்த மாற்றமில்லை.
இவர்களில் பாரீர்...!

கும்பிட்டு நிற்பார்.
குனிந்தும் நிற்பார்.
தேவைக்கேற்ப பணிந்தும் நிற்பார்
பாதங்களில் "சரணம்" என்பார்.
"சேர் படிந்த கால்களை"
"பொற்பாதம்" எனப் பொய்யுரைப்பார்.
உனக்கு தொண்டாற்ற தனக்கொரு வாய்ப்பு கேட்பார்.
அவ்வளவு "உயர்ந்த உள்ளம்" கொண்டோர்.
திருவிழாவில் காணாமல் போன குழந்தையாய்
திருதிருவென நீ முழிக்கும் போதே
உன் கையில் இருப்பதை பிடுங்கிக் கொண்டு
உன்னை விழிப் பிதுங்க செய்வார்.

தேர்தல் களத்தில் காட்டும் கண்ணாமூச்சிகளின்
மயக்கம் தெளியும் முன்னே..
மறுபடி தேர்தல் ....
மறுபடி மறுபடி தேர்தல்.

நீ "விழித்தெழ" மாட்டாய்.
அப்படியே நீ விழித்தாலும்,
பிரிந்து நின்று ஓட்டு வாங்கி,
செயித்தவரேல்லாம் சேர்ந்துக் கொள்வார்.
"கூட்டணி" என்பார்.
செத்தது "சனநாயகம்".
செயித்தது "பணநாயகம்".

உனக்கான உரிமைக்கும், சுதந்திரத்துக்கும்
நீ போராடாதவரை...., இங்கே
நடப்பது "சனநாயகமல்ல".

இங்கே எவனும் "தமிழனாய்" இல்லை.
எதை சொன்னால் நீ எழுவாயோ
அதைச் சொல்லி ஆளுகிறான் உன்னை.

இத்தனை ஆயிரம் தமிழர்கள் இலங்கையில்
மாண்டபோதும் இங்கே எவன்
தமிழனுக்காய் , தமிழுக்காய் எழுந்து நின்றவன்..?

உலக அரங்கில் கேட்பாரற்றுப் போன
கூட்டமடா "தமிழினம்".

நீ தலை நிமிர்ந்து பார்...
தாங்காது தரணி எங்கும்.

( குறிப்பு : அன்பு மக்கா ஓட்டு போட்டோ, கருத்து தெரிவித்தோ மாட்டிக்காதீங்க. அதுக்கு நான் பொறுப்பல்ல. )

"மனச் சிதறல்....!"

என் பிரியங்கள் பிழிந்து...
தாகங்கள் தணியும் பேரன்பே...!
என் தேகத்திரவத்தில் வண்ணமெடுத்து
வரையப்பட்ட ஓவியமே...!!

என் எண்ணப் பூக்களில்
உன் நினைவுக் குழலுறிஞ்சிகள்...
அன்புத் தேன் அருந்துகின்றன...!!

என் மூளையை மொய்க்கும்
உன் உணர்வுத் தேனீக்கள்...
தேகத் தேனடையில்
உன் நினைவுகள் சேமிக்கின்றன...!!

ஒளியினும் வேகமாய்
ஊடுறுவுகிறேன் உன்னை...!
நீ காணும் யாவிலும்...
என் பிம்பங்கள்...!!
பிரிய மனமில்லாமல்....
பின்பற்றுகிறேன்..
நிழலாய் நான்...!!

கண்ணாடியில் தெரியும் உன் கண்களில்...
கசியும் என் காதல்...!
உன் எழில் கூட்டும்...!!

காற்றில் அலையும் கற்றைக் குழலை
ஒற்றைத் தலை அசைப்பில்...
சரி செய்யும் அழகில்..
சரிந்துப் போகிறேன்...!
செல்லமே...!!

Monday, December 13, 2010

"வாரம்...!"

ஞாயிறு               :-  நம் கண்கள் சந்திக்கும் நாள்.
திங்கள்                 :-  நம் கரங்கள் "கைக்கோர்க்கும்" நாள்.
செவ்வாய்           :-  நம் இதழ்கள் இடம் மாறும் நாள்.
புதன்                     :-  நம் நினைவுகள் பிணையும் நாள்.
வியாழன்             :-  நம் ஆன்மாக்களின் பரிமாற்ற நாள்.
வெள்ளி                :-  நம் சந்தோசங்கள் சங்கமிக்கும் நாள்.
சனி                        :-  நம் பேதங்கள் களையும் நாள்.

வாரம் என்பது நமக்கு வாழும் நாள்.
************************************************************************

"நீயாகவே இரு"...!


நீ என் பலம்.
மனதின் உரம்.
நீ இரும்பாகவே இரு...!
நான் இராசத்திராவகம் ஆகும் வரை...!!

சிந்தனையில் சூடேற்றி... சூடேற்றி
நியூரான்களில் நெருப்பை பற்ற வைக்கிறேன்.
அது ஹைப்போதலாமஸ் வரை காற்றாய்ப் பரவுகிறது.

பிட்யூட்டரி முதல்....
பித்தப் பை வரை... உன்
பிம்பங்களின் சாயல்கள் சேமிக்கிறேன்...!

கொதிக்கும் குறுதியால்...
புடைக்கும் நரம்புகளில்
சதைக் கிழியும் சப்தம்...
நாளமில்லாச் சுரப்பிகளை
நடுங்க வைக்கிறது...!!

என் காதலோ....!
புடைக்கும் நரம்புகளை விறைப்பாக்கி
சுருதி சேர்க்கிறது...!!

தசை நார்களுக்கும்
தாகம் எடுக்கிறது...!
இரத்தம் குடித்து
"கண்ணீர்" வெளியிடுகின்றன...!!

மூளையின் வெப்பத்தில்....
விழிகளில் "வியர்வை"...!!
உணர்ச்சிகளின் மோதலில்
தடித்த இதழ்கள்....
துடிக்க மறந்தன...!!

விறைத்துப் போன
விரல்கள் பார்த்து...
கண்ணீர் வடிக்கிறது
பேனா....!
"கவிதைகள்"...!!

உப்புகள் ஆவியாகும் வரை
உடற்சூடு ஏறட்டும்...!
அதுவரை பொறு.
அடக்க முடியாவிட்டாலும்...
அடக்கு.

பிறப்புக்கும் இறப்புக்கும்.... இடையில்
காதல் எழுதுகிறேன்...!!
என் காதலை
எழுதி முடிக்கும் வரையாவது...
உன் மௌனம் கலைக்காதே...!!

கல்லறைக்கு முன் காதல் சொல்லாதே.
பிரேதத்தின் மேல் விழுந்து புரளாதே.
என் கடைசிச் சொட்டுக் காதலையும்
உன் உயிர் குடிக்கும் வரை....
காத்திறு....!!!

Sunday, December 12, 2010

"மழையில்...!"


குடை இருந்தும் நனைகிறேன்...
குளிர்கால மழையில்....!
மனதிற்கு இதமாய் மழை...!!
உடலுக்கு இதமாய் குடை...!!
மனமா...?
உடலா...?
மழையா...?
குடையா...?
வென்றது.... மனம்.
வெட்கி நின்றது குடை...!
சந்தோசத்தில் நான்...!!
சலதோசத்தில் ...உடல்...!!
*********************************************************
  

 




உன்னைச் சுற்றி....
என் நினைவுகள் பின்னும் வலையில்...
சிக்கிக் கொண்ட "சீவனாய்" நான்..!!
********************************************************



பிறைக்கு பின்னாலிருக்கும் இருளாய்...
என் பிரியமே...! நீ இருக்கும்
காரணம் என்ன....?

இப்படிக்கு,
பிறையின் வெளிச்சத்தில்...
பிழைத்திருத்தும் எழுத்தாளன்.
**********************************************************
 

 


மௌனமே...!!
என் மரணம்
உன் மடியில் நிகழட்டும்...!
உன் மீதான அன்பை ...
சாம்பலாய் மிச்சம் வைத்து செல்கிறேன்.
தேவையிருப்பின் "திருநீராக்கு"...!!.
*********************************************
***********************

"கரையில் நீ...!"

உன் நினைவென்னும்...
இன்ப வெள்ளத்தில்....
இழுத்துச் செல்லப் படுகிறேன்.
இன்னும் நிற்கிறாய் கரையில் நீ...!

ஆங்காங்கே.....
காதல் சுழல்களில்....
மூழ்கி திக்குமுக்காடுகிறேன்.
மூச்சடைக்கிறேன்.
கைக் கொடுத்து
கரையேற்ற வேண்டியவள்
இன்னும் நிற்கிறாய் கரையில் நீ...!

காதல் ஒரு சூதாட்டமா...?
மேலும் கீழும், உள்ளும் வெளியும்
எத்தனிக்க முடியாமல்....
எனை இழுத்தடிக்கிறது.
இங்கே மூழ்கி எங்கோ எழுகிறேன்.
இன்னும் கரையில் நிற்கிறாய் நீ...!

தளும்பும் நுரையில்
உன் நினைவுகள்...!
என் சிந்தனைச் சிமிழ்
உடைக்கும் உன் காதல்...!
மணற்பரப்பில் ஊன்றும் கால்களில்
தட்டுப்படும் உன் மிருதுவான தேகம்...!!
மயக்கத்தில் மிதக்கிறேனா....?
மயங்கித்தான் மிதக்கிறேனா...?

என்னவளே...!
எதுவும் புரியாமல்...
அன்பெனும் அலைகளுக்கு நடுவே
அலைமோதுகிறேன்...!!
இன்னும் கரையில் நிற்கிறாய் நீ...!

காலவெள்ளத்தில் எனை தள்ளியக் காதல்
கரையிலேயே உன்னை வைத்திருப்பதன்
காரணம்....
என் இறப்புக்குப் பின்...
வற்றிப் போகும் இந்த நதியில்
கண்ணீர்ப் பெருக்கவா....!?

Saturday, December 11, 2010

"மகாகவிக்கு...!"


செந்தமிழ் செந்நாச் சுழல் பண்நாவுக்கரசே...!
செப்புமொழி ஈரொன்ப தாட்கொண்டு சிறப்பு
செம்மொழி  நம்மொழி தொன்மொழி நன்மொழி
இம்மைக்கும் மறுமைக்கும் யெனநவின்ற நாயக...!

மென்தமிழ் வண்டமிழ் பண்டமிழ் நுண்தமிழ்
கற்றமிழ் நற்றமிழ் கொற்றமிழ் பொற்றமிழ்
முத்தமிழ் மூத்ததமிழ் மூவேந்தர் முகிழ்தமிழ்
பெற்றமிழ்ப் பெற்ற பெருந்தமிழ் நாயக...!

செங்கோல் வளைத்த செருக்குடைத் தமிழ்
சென்ற விடத்து சிறப்புடைத் தமிழ்
நின்ற விடத்து நெஞ்சு  நிமிர்தமிழ்
கொற்றவன் கொலுவில் கோலோச்சுத் தமிழ்

அரங்கனும் சிவனும் அண்டியத் தமிழ்
அரசும் சிரம் தாழ்த்தும் ஒண்டமிழ்
அகத்தியல் புறத்தியல் ஆட்சியல் ஆய்ந்தமிழ்
வீரமும் ஈரமும் கண்ணாய்க் கொண்டமிழ்

பனைபார் தமிழ் மனைபார் தமிழ்
தனைப்பார் தமிழ் திணைபார் தமிழ்
நினைப்பார் தமிழ் அணைப்பார் தமிழ்
எனைபார் தமிழ் இணைபார் தமிழ்

சிந்துதடி அவன் தமிழ்ச் சிந்துக்கவி
சீட்டுக்கவி...என்றோர்ப் பாட்டுக் கவி
முண்டாசுக் கவி எங்கள் மூத்தக்கவி
மாநிலம் ஆண்ட எங்கள் மகாகவி...!!

நின்செந்நாத் திறம் என்நாப் பெற
நின் திலகத்தீ  விழிகள் பெற
கொட்டு முரசே..! கொட்டு முரசே..!!
திசை எட்டும் கொட்டு முரசே...!!!

( ** பிறப்பிறப்பை வென்ற பெருங்கவிக்கு
பிறந்ததின சமர்ப்பணம் **  தமிழ்க்காதலன் )

Friday, December 10, 2010

"இன்னும் எனை ரணமாக்கு..!"


இன்னும் எனை ரணமாக்கு...
என் பிரியமே...!
மரிக்கும் முன் மரணம்
இன்னதெனக் கண்டு
சொல்கிறேன்....!

இன்னும் எனை ரணமாக்கு...
என் செல்லமே...!
பிறக்கும் வலி....
பிரிவின் வலி....
இனம் பிரித்துக் காட்டுகிறேன்...!

இன்னும் எனை ரணமாக்கு...
என் காதலே...!
காதலின் ஆழம்....
எதுவரைக்கும்....?
கண்டு வந்து சொல்கிறேன்....!

இன்னும் எனை ரணமாக்கு...
என் தமிழே...!
துன்பத்தின்....
எல்லையை....தொட்டு
தொல்காப்பியம் செய்கிறேன்....!

இன்னும் எனை ரணமாக்கு....
என் சகியே....!
சாதலினும் கொடியது...
காதலா...!
காதலினும் கொடியது...
சாதலா...!
பாப்பையாவையும்...
அறிவொளியையும்....
பட்டிமன்றத்தில் சந்திக்கிறேன்...!!

இன்னும் எனை ரணமாக்கு...
என் பிழையே...!
கடலினும் பெரிது...( என் )
காதல் என்பது....
காட்டுகிறேன்....!

இன்னும் எனை ரணமாக்கு....
என் உன்னதமே...!
இடுப்பு வலியினும்...
இதயவலிக் கொடுமை
இதுவெனக் காட்டுகிறேன்...!

இன்னும் எனை ரணமாக்கு....
என் சத்தியமே....!
சாகா வரம் சாத்தியமா....?
சத்தியலோகம் சென்று
வருகிறேன்...!

இன்னும் எனை ரணமாக்கு....
என் பவித்திரமே...!
மீண்டும் ஒரு
கருக்குழிக்குள்...
கருவாகிறேன்....!

இன்னும் எனை ரணமாக்கு....
என் சுகந்தமே...!
உன்னால் நான் பட்ட
வேதனை சொல்கிறேன்...!

இன்னும் எனை ரணமாக்கு....
என் சொர்க்கமே...!
உனக்கு வராத காதல்...
எனக்கு மட்டும் வந்த
காரணம் கண்டுபிடிக்கிறேன்...!

இன்னும் எனை ரணமாக்கு...
என் சகத்தியே...!
உன்னோடு உணர்வுகளில்
வாழ்ந்துப் போகிறேன்....!

இன்னும் எனை ரணமாக்காமல்...
இப்போதேனும் பிணமாக்கு....!!!

"தமிழ் தந்தை"....!

என் தமிழ்த் தந்தையே....!

நின் பவித்திரமான பாதங்களுக்கு...
என் பாதாதிகேச வணக்கங்கள்.
பிறக்க கூடா இடத்தில்
பிறந்துவிட்ட காரணத்தால்....
பிரிவின் வலி பாடிய...
"தமிழ்ப் பொக்கிசமே"...!

அன்னைத் தமிழின்...
அகம் புறம் ஆண்டவனே...!!
இகத்தியல் இன்பம் தாண்டி...
எழுதுகோல் துன்பம் தாங்கிய....
"தமிழின் தலை மகனே"...!

புரட்சிக்கு பொருள் சொன்னப்
புயலே...! கண்களில் அனல் கக்கும்
கர்வமே...! காளிக்கும்... மூலிக்கும்
"தமிழ்க் கண்ட தத்துவமே"....!

நெஞ்சத்தின் திமிரை எல்லாம்
முறுக்கி முறுக்கி மீசையில்
காட்டிய... "என் தமிழே"...!

இராகத் தாளத்தோடு
பாடல் சொன்ன "பைந்தமிழே"...!

கோணங்கியாய் கொக்கரித்த...
"கொண்டைச் சேவலே"...!
ஏனோ... இன்னும் இங்கே
விடிய வில்லை...!!

செல்லம்மாவை...
சேர்ந்தப் பின்னும்
கண்ணம்மாவை காதலித்த
"கண்ணியமே"...!
காதல்....
உறவல்ல....!
"உணர்வு"... எனச் சொன்ன
"ஏந்தலே"...!

பாஞ்சாலிகளை...
பராசக்தியாய்....
பார்த்த "பரம்பொருளே"...!

தேசத்தை காதலிக்க
கற்றுத் தந்த "கௌரவமே"....!
நேசத்தை விதைத்து சென்ற
"வீரிய வித்தே"...!

பத்திரிக்கைத் தமிழின்
"சிம்மாசனச் சிங்கமே"....!
நூல் மாற்றி நூதனம் கண்ட
"பூணூல் புரட்சியே"...!

யாக்கையை நேசித்த....
தமிழ்க் காக்கையே....!
"காந்தியின் கௌரவம்"
கிழித்த "தமிழ்க் கத்தி"
இரண்டு...!
ஒன்று நீ...!
இன்னொன்று ...
பகுத்தறிவு பகலவன்...
"பெரியார்"...!

உலகில் காந்தியின் பிழைத்
திருத்திய பெரியார்....
"தமிழ்த் தாடி" வைத்த
"பெரியார்" மட்டுமே...!

நீ மூழ்கி முத்தெடுத்த...
முத்தமிழ்ச் சங்கமத்தில்...
கரையில் நின்று...
சிப்பிகள் சேமிக்கிறேன்...
நான்...!

என் வீரத் தமிழே...!
எங்கள் பாரதி...
வாழ்த்து... ! எங்களை.
வளர்ந்து காட்டுகிறோம்....!!
இன்னும் இங்கே இருக்கும்
"விவேகானந்தன்களை"
வெளிக் காட்டுகிறோம்....

அன்னைத் தமிழே
வாழிய நீ...! பிரபஞ்சத்தின்
எதிரொலியாய்....!

வணங்குகிறேன்.

" இப்போதேனும்"....!


உன்னையே நேசித்து... நேசித்து
உரமேறிய என் தேகத்தின்...
எரியும் சிதையில் வெடிக்கும்
என் நரம்பின் வெடிச் சப்தங்கள்
கேட்கிறதா ... கண்மணி...!

உடைந்து நொறுங்கும்
எலும்பின் மூலங்களில்
உருகி ஒழுகும்...
என் காதல் பார்... இன்னெழிலே...!!

உன் மீதான என் காதலின் வண்ணங்களை
உப்புக்கள் வெடித்து ...
ஒளிர்ந்துக் காட்டுகின்றன...!
இப்போதேனும் புரிகிறதா...? என் நேசம்..

நெஞ்சமே...!!
எரிந்துக் கொண்டிருக்கும்
என் காதலில்....
எஞ்சியிருப்பது வேகாத...
என் நெஞ்சுக்கூடு மட்டுமே...!!

உன் நினைவுகளின் சேமிப்புக் கலன் அது.
உடைத்து விடப் போகிறான்....
ஓடிவரும் அந்த வெட்டியான்.
தடுத்து நிறுத்து என் தங்கமே.

முற்றி முதிர்ந்த என் கபாலத்தில்
கசிந்தொழுகும் என் "கவிதைக் காதல்"
கவனிக்க மறக்காதே.

பிரியமாய் இருந்த காலங்களில்
பிரிந்துக் கிடந்தவளே...!!
இப்போதேனும் உன் காதல் சொல்...!
இல்லையெனில்....
இன்னுமொரு சென்மம் எடுப்பேன்.



Thursday, December 09, 2010

"அரும்பும் முன்"...!!


அரும்பும் முன் கறுகும்
மொட்டாய் என் காதல்...
ஆனதெப்படி..?
இப்போதுதானே....
மனச்செடியின்...
முதல் பூ...!!

உரமாக காம்பிருந்தும்
உதிர்ந்ததெப்படி...?
கருவில் சிதையும் கருவாய்
உதிரத்தில் கரைந்து...
குற்றுயிராய் துடித்து...
குறுதியாய்க் கொப்பளிக்கிறது.

பிரியமே...!
புரியாமல் போனதெப்படி...?
விதைத்த விதை முளைத்து
மூன்றாம் இலை காணும்முன்
தீயில் கருகக் காரணம் என்ன...?

நோகுமென் நெஞ்சம் நிதம்
காதல் தீயில் கருகச் சம்மதமோ...!?
காணும் யாவும் நீயாய்...
நீ மட்டும் காணாமல்...!!

சித்திரமே...!!
நின்னை நினைத்தே விடியல்கள்...!
நினைவுப் பால்வெளியில்...
விடிவெள்ளி நீ....!!
திசை மட்டும் காட்டுகிறாய்.
கரை சேர்க்க மாட்டாயோ....?

காதலே ...!
கரைகிறேன்.
திசுக்கள்தோறும் உருகுகிறேன்...!
உயிரணுக்கள் யாவும்..
உன்னைச் சுற்றும்...
உண்மையறியா உன்மத்தமா நீ....?

உன்னை கருவரைக்குள் வைத்த
என் காதலை...
கருவருக்க எப்படி முடிந்தது உன்னால்...?

என்னில் வேரூன்றி உன்மேல்
படர்ந்த காதலின்...
கிளைகளை வெட்டியிருக்கிறாய்.
வேர்கள் இன்னும் ஆழமாய்....
என்னில்...!!!

"ஒரு நாள் பயணத்தில்....!"


முகப்பரு முளைக்கும் வயதில்லைதான்....
இருந்தும் முளைத்திருக்கிறது
முகப்பருவாய்.....
காதல்...!!
*************************************************************

எப்போதோ பூக்கப் போகும்
பூக்களுக்காய்....
பன்னிரண்டு ஆண்டு காலம்
உயிர்த்திருக்கும்.....
"குறிஞ்சி....!"
செடித் தரும் நம்பிக்கையில்....
நானும் காத்திருக்கிறேன்.
உனக்குள் பூக்கும் .....
என் காதலுக்காய்....!!
*************************************************************

உருண்டோடும் இரும்புச் சக்கரங்களின்
"தடக்...தடக், தடக்....தடக்" சப்தத்தில்
என் இதயத் துடிப்பு கேட்கிறதா கண்மணி...!!
**************************************************************

ஒவ்வொரு நிறுத்தத்திலும்....
உன் பார்வை சன்னல் வழியே
வெளி நோக்கட்டும்...!
உன் கண்கள்...
ஏதேனும் ஒரு நிறுத்தத்தில்
எனை சந்திக்கக் கூடும்...!!
**************************************************************

கழுத்து வரைப் "போர்த்திக் கொள்"
கண்மணி...!!
அணைத்துக் கிடக்கும் பாக்கியம்
அதற்கேனும் கிடைக்கட்டும்...!!
*************************************************************

காதலே....!!
கற்றைக் குழலில்....
கழலும் உன் ஒற்றைக் குழல் தருவாயோ...?!
உன் மணம் தேடும் என் நாசிக்கு மருந்தாக...!!
*************************************************************

மனிதனுக்குக் கடவுள் தந்த புற்றுநோய்
காதலா...! அசுர வளர்ச்சி அபாரம்...!!
தினம்...
என்னைத் தின்று தன்னை வளர்க்கிறது...!!!
**************************************************************

உனக்கென்ன ஒய்யாரமே....!
ஒற்றை வார்த்தையில் நிறுத்திக் கொள்கிறாய்...
ஏற்றமிரைத்தவன் பாடி நிறுத்தியப்
பாடல் வரிக்கு... மீதி வரித் தேடிய
கம்பனாய் நான்...!! இதோ...
காகிதங்கள் நிரப்புகிறேன்...!!
***************************************************************