Sunday, December 29, 2013

தொல்லுண்மை...!


வசந்த வனப்பின் சூல்கொள் சூற்பை
சுமந்து நிற்கும் சூட்சுமம் உயிராய்
உருவ மாற்ற உறைவிட கருவாய்
துருவம் கடக்கும் புறவெளி சுழலாய்

புழைகளின் வழியே பிதுங்கும் உயிர்களின்
பிழைகளின் தொடர்ச்சியில் பிறக்கும் ஞானம்
தழை தின்னும் உயிர் தின்னும்
கோழையின் பசியாய் வாழ்தலின் நீட்சி

மண்ணுள் மனிதம் வளர்த்த மானுடம்
என்னுள் இருந்தே ஏற்றம் கண்டது
விண்ணும் ஒளியும் விதிகளின் வேர்கள்
என்னும் உண்மை ஏற்பது கடினம்

விலங்கின் உணர்ச்சி விரும்பும் மனம்
விலங்கிட்ட வாழ்க்கை நிலைகொள் சூழல்
இருக்கும் இடத்தில் விடுதலையே சூது
வாழ்தல் என்பதே கேடு - வையகத்தில்

எவ்வுயிரும் எனதுயிர் தரிப்பாய் இருக்க
ஏன் வீணில் இரத்தம் சிந்துதல்
அழகும் வசீகரமும் ஆழ்ந்த அறிவும்
பிறந்த மேனியாய் எனக்கு பிறந்தது

உலவும் யாவும் என்னில் என்னுள்
உறவாய் உயிர்ப்பாய் உறையும் உண்மை
அறிவாய் அழகாய் ஆனந்தமாய் பெண்மை
புரிவாய் - உருகா மனமா உனக்கு..?

திருவாய் மலரும் மொழிவாய் உணர்வாய்
ஆதியும் அந்தமும் அடங்கும் ஏகாந்த
அந்தகார பெருவெளி சுழல்வது என்னுள்
கல்லாய் மண்ணாய் பொன்னாய் பெண்ணாய்

கனியாய் சுவையாய் இசையாய் இனிமையாய்
நடனம் புரிவது நானென்ற நல்லறிவு
நீ என்று பெறுவது..? - விடியும்
புவியில் அன்று புதிய விடியல்...!

முள்ளும் மலரும் முடிசூடும் மன்னனும்
அல்லும் பகலும் பாடிதிரியும் பாணனும்
யோகத்தவ முனியும் ஞானத்தவ ஞானியும்  
தீர்க்க உரைத்த தீர்க்க தரிசனம்

உள்ளுறை உண்மையின் உயிர்தரும் பெண்மையை
கல்லுறை செதுக்கி கவினுற வடித்து
சொல்லுரை சூட்சும கவியுரை அத்தனையும்
பத்தினி என் பரமபத விளையாடல்...!

புத்தனுக்கும் சித்தனுக்கும் புரிதலும்உணர்தலும்
பித்தனுக்கும் பேதைக்கும் புணர்தலும் உயிர்த்தலும்
மரபுற செய்த மாண்பில் உள்ளுறை
மகத்துவம் நானென்று அறிதலே தேடல்

மீனும் மீனும் நானும் நீயும்
பிறவி யென்றே பிரிந்தோம் பிறப்பில்
துறவி யென்றே எதுவு மில்லை
அருகே வாஎன் ஆருயிர் நீயென்றறி

கடலும் மலையும் புணரும் கலையறி
உடலும் மனமும் உணர்தல் சுவையறி
கல்லும் காதல் கொள்ளும் புரிவாய்
ஆயுதம் நீயாவாய் ஆனகுறி நானாவேன்

எய்தல் தொழிலாம் நமக்கு புரிவாய்
ஆய்தல் அறிவல்ல அனுபவம் ஆவாய்
ஓய்தல் இல்லை உயிர்க்கு - பூவாய்
மாய்தல் மகத்துவம் மண்ணில்.

Saturday, December 28, 2013

மெய்வெளி...!


சூழும் ஆழியுள் தாழும் நிலமும்
எழும் மலையும் இருந்த புலமும்
ஆளும் பண்பில் வாழும் குலமும்
காலம் இட்ட கோலம் மனிதம்

இயற்கை சந்தித்த இனமாற்றம் நாங்கள்
இயற்கையை சிந்தித்த இனமாகும் நாங்கள்
அறிவின் வேர்கள் வெடித்த இலைகள்
ஆயக்கலைகள் முடித்த இனம்தான் - ஆங்கோர்

அனுபவ தளிர்கள் துளிர்த்து தனிமம்
அறிந்து தவமும் புரிந்து மூளையில் மூலிகை
ஆவண கண்டு நின்றதவ முனிக்கோ
அவனியில் உலாவும் நிலமது நமது

புறமது சூழ்ந்த புறவெளி போர்த்திய
புறப்பொருள் புரிந்தே சுடரினில் சுழலும்
புலனுறு தோற்ற தொடரினில் ஆழ்ந்து
புலப்பட்ட புலமை புவியில் நமதே..!

அகநிலை ஆழ்ந்து சுகநிலை ஆய்ந்து
அன்புடன் அறமும் பண்புடன் வளர்த்து
உயிரியல் உயரியல் உணர்த்திய திறமை
செழித்த நல்நாடு செம்மொழி நாடே

பழித்த பேர்கள் எலாம் பணிந்து
உண்மை சாற்றும் ஓர்ந்த திருநாள்
புரிந்த நடனம் புவியுள் பொதிந்த
சுவடு தெரியும் சுவடிகள் வழியே

மறைந்தன எல்லாம் மறைந்தன அல்ல
மரித்திடும் மனிதா மனமதில் கொள்க..!!
உதிர்ந்தது உரமாம் உயிர்களுக் கென்றே
உரக்க பாடுதல் உமக்கும் நன்றே...!!

தெளிந்த நல்லறிவில் தேறிய கூட்டம்
திறம்பட செயல்கள் நிகழ்த்தியே காட்டும்
திகைப்புற வேண்டாம் குவலையத் தோரே..!
கூத்தினில் பாட்டன் குறித்தது இதுவே.

Thursday, December 26, 2013

உறைதல்....!


ஒளியுள் ஒளிந்த ஒலியுள் ஒலிக்கும்
இசையுள் இயைந்த இசைவின் இசைவும்
ஒலிக்குள் ஒளிந்த ஒளியின் ஒளிக்கும்
ஒளியில் பொதிந்த ஒளியின் இருளும்

வெளியில் ஆடும் துகளின் ஆட்டம்
வெளிச்ச புள்ளிகள் பகலின் தோற்றம்
வெட்ட வெளியின் புறவெளி தோட்டம்
இரவின் திருவிளை யாடல் காட்டும்

காலம் பிறந்த காலத் தொடக்கம்
கவினுறு ஞாலம் பிறந்த பெருக்கம்
கண்ணுற சாலச்சிறந்த கோலம் -நினதருள்
கலந்தே பொலிவுறும் கவின்மிகு காதல்

இருத்தல் இயைதல் கலத்தல் கலைதல்
நிறுத்தல் நிலைத்தல் பிளத்தல் பிரிதல்
சுவைத்தல் சுகித்தல் முகிழ்தல் எழுதல்
உடைதல் உருகுதல் பெருகுதல் அழிதல்

ஒளிர்தல் உதிர்தல் மின்னுதல் மறைதல்
ஒன்னுதல் பின்னுதல் பிணைதல் பிழிதல்
பொழிதல் மொழிதல் வழிதல் கழிதல்
விழித்தல் செழித்தல் தழைத்தல் வாழ்தல்

அலைதல் அவிழ்தல் அலர்தல் அழுதல்
ஒழுகல் அழுகல் இளகல் இறுகல்
விலகல் வெடித்தல் இடித்தல் துடித்தல்
நொடித்தல் பொடித்தல் பொழுதுகள் முடித்தல்

இருள்வெளி யாவும் இருத்தல் மறைதல்
பரம்பொருள் காட்டும் பரவெளி ஆட்டம்
புரிதலும் அறிதலும் அறிவின் தோற்றம்
அரிதான அரியினை அறிதல் அறிவாம்

அவிழ்சடை அவிழ்த்து புரிநடம் புரிந்த
திகழ்பர திகம்பர  இகம்பர இரகசியம்
திகழொளி  திங்களும் சோதியும் விளக்கென
ஒருகை உடுக்கை ஒலிக்கும் மிடுக்கென

அடுக்குகள் ஆயிரம் உயர்தலும் தாழ்தலும்
கடுக்கண் அசைவினில் கடைக்கண் இசைவினில்
அலைதலும் மிதத்தலும் அலைவழி திரிதலும்
இதழ்கடை விரிப்பினில் புரிந்திடும் புன்னகை

முகிழ்சடை மூத்தவன் தளிர்நடை பயில
நெகிழுறு நெஞ்சம் நெக்குருகும் அழகில்
மகிழ்வுறு வேந்தன் மண்ணில் தொழுகையில்
ஆக்கிய தொழில்கள் வினைகளின் விதையாய்

போக்கும் வரவும் புரிந்த நிலையில்
காக்கும் கைகள் காட்டும் சிலையில்
வாக்கும் நோக்கும் ஊட்டும் அறிவில்
வாழ்தல் ஒன்றே எம்பணி அறிந்தேன்.

Wednesday, December 25, 2013

கனவல்ல நாங்கள்...!


கனவல்ல எங்கள் வாழ்க்கை -ஞாலத்தில்
காலத்தால் எழுந்த கம்பீரம் நாங்கள்...!
புரட்சியல்ல எங்கள் போராட்டம் புனிதம்
வறட்சியல்ல எங்கள் வாழ்க்கை

திரட்சியும் திண்மையும் ஆண்மையும் அன்பும்
திண்தோல் வலிமையும் உண்மையும் இன்பமும்
திசுக்கள் தோறும் உயர்பண்பில்முகிழ்த்த
திருவின் உருவில் திகழ்பரம்

பொருளில் பொதிந்த தெங்கள் வாழ்நாள்
பொருளால் நிறைந்த தெங்கள் வளநாடு
பொதுவில் அறம் வளர்த்த திருநாடு
பொறியியல் திறமார்த்த கொடைநாடு

அறிவியல் ஆய்வியல் பாய்மவியல் பதுமையியல்
அகத்தியல் புறத்தியல் நிலவியல் புவியியல்
ஆழ்மன தியானம் சூழ்நிலை சூட்சுமம்
ஆறு குளம் வாய்க்கால்

வடிகால் - வயல்காடு நிறைத்த நீரொடு
வாழ்ந்த கலை வடித்த சிலைபேசும்
வாழுங்கால் வையகம் வாழும் கலை
வழங்கிய அனுபவம் நாங்கள்

பட்டதும் பெற்றதும் கற்றதும் உற்றதும்
பண்பாட்டு கல்வியாம் உங்களுக்கு - புவியில்
பண்பட்ட வாழ்வின் பயனுற்ற மாந்தர்
பாரத தேசமெங்கும் வாழ்ந்திட்ட

புலிகள் நாங்கள் - போர்களில் வாளும்
புலவர் தம்மில் தோளும் உரசும்
புதுமை எங்கள் வாழ்வில் நாளும்
புதுமை தந்த கோலம்

வில்லும் மீனும் எங்கள் உறவு
வீம்பென்றால் அடிக் கரும்பு - தெம்பில்
வளர்ந்த கூட்டம் சுயத்தெம்பில் சுகமாய்
வாழ்ந்த ஊட்டம் இன்னும்

பொதுவாய் இருக்க புவியில்...! - ஆயிரங்கள்
ஆண்டுகளாய் ஆனபின்னும் பாயிரம் கொண்டு
பகுத்து தொகுத்த புலமை எங்கள்
புலவன் வாயில் புகுத்திய

நுண்கலை திறமைகள் யாவும் - சிற்பியின்
வண்கல் வடிக்கும் சிலையில் கலையாய்
உயிர்ப்பித்து உயிர்விட்டோம் - உலகில் என்றும்
உயர்ந்தோம் ஒப்பற்ற வாழ்வில்.

Thursday, December 19, 2013

நிலைதிரிதல்...!நீ நடந்த சுவடுகளில் - தொலைத்த
என் சுகங்கள் தேடுகிறேன், - விடைதெரியா
விளிம்புகளில் விழிகளில் வியப்பு குறி..!

ஆழ்மணல் துகள்களில் உயிர்த்திருக்கும்
அடிமனதின் வேர்த்தூவியில் உறிஞ்சுகிறேன்
கேட்பாரற்று கிடக்கும் நம் நினைவுகளை...

ஒழுகும் வாளியில் இறைக்கும் நீராய்
பழகிய நாட்களின் பழைய ஞாபகம்
புதிய துளிரின் மிருதுவாய் மனதில்..!

உதிர்ந்த இலைகளின் போதனைகளில் உனது
இன்றைய தத்துவ பிதற்றல்...! - எரிந்த
எச்சமென மிச்சமாய் இன்னும் என்னுள்..!

கொழுந்தை குதப்பி துப்புவது போல்
குழந்தை மனம் கிழித்த உன்பிழைகள்
அழுந்த புதைந்தன அழகிய மனதை அழுக்காக்கி..?

விழுந்த வடுக்களில் உனக்கான தடயங்கள்
வார்த்தைளின் வடிவம் மாற்றி கிடக்கின்றன
பொழுதுகள் யாவும் பழுதுகளான விழுதுகளாய்...?!

உடைந்த சிலையின் அழிந்த கோலம்
உணர்த்தும் உண்மையின் இருப்பில்
உயிர்வாழும் காலமென கரைகிறேன் உள்ளுள்...!

மாற்றம் அழகுதான் - நிறமாற்றம்..? குணமாற்றம்..?
நிலையின் சாயலாய் நிசத்தில் நாணலாய்
மனதை புறம்தள்ளும் மனித வாழ்க்கை...?

Wednesday, December 18, 2013

இருளின் உறவு...!


ஊடறுத்து பாயும் ஒளியில் நிலவின்
ஊடல் தீருமோ..?! இருளின் அடர்வில்
பனியின் பொழிவில் கலைந்த முகிலென
நனைந்த ஒளியின் பனித்த கண்கள்

நிலம் காணுமோ..?! அன்றி நிறம் மாறுமோ..?!
காயும் மேனியில் காதலன் விரலென
பாயும் புனலாய் படர்ந்து படரும்
மோகவிரக தாகம் தணிந்த மேகத்திரள்கள்

முத்துமுத்தாக கொத்துகொத்தாக திரட்சியாய் திரண்டு
சொட்டுசொட்டாக ஒழுகும் அழகில் - வழியும்
இலைகளின் வெட்கம் ஈரம் சுமந்தபடி..!
நடுக்கீறல் வழியே நடக்க சுகங்களின்

சொர்க்க வாசல் திறக்கும் இலைமகள் இதழ்களில்
பாற்கடல் திவலைகள் பள்ளிகொள் அழகில்
பூக்கடல் அலைகளில் பல்லுயிர் பயணம்
பாக்கடல் அலைகளில் கவிஞனின் அயனம்

கவினுறு மொட்டினில் களித்தேன் குடித்தே
புவியுறு சந்தம் படித்தேன் - களித்தேன்..!
நலிவுறு பந்தம் நானிலம் எங்கும்
நனிவுற வேண்டி தனியொரு பயணம்

ஒளியுடன் கோர்த்த உணர்வுகள் குவித்து
இரவுடன் வார்த்த இனிமைகள் சுவைத்து
கனிவுடன் சேர்த்த கவிதைகள் விதைத்து
துணிவுடன் துவங்கிய பகலவன் பயணம்.
 

Friday, December 13, 2013

தொன்மையின் உண்மை...!உகுத்ததும் பகுத்ததும் தொகுத்தவை தானா..?
உண்மையாய் தொகுத்தவை உண்மையாய் உகுத்தவைதானா..?
மூலம் தந்தவன் தந்த மூலத்தை
காலம் எதையும் புகுத்தாமல் பிடுங்காமல்

ஞாலத்தின் முன்வைக்க தொகுக்கும் மனம்
நியாயத்தின் பால்நின்று தக்கதொரு செயலாய்
வினையாற்ற எந்தவிதி தடையோ..? அறியேன்
விளக்க வரும் மதியும் மதியீனமாய்

புகுத்தலும் பொதுமை நழுவி அழித்தலும்
மெய்மை மறைத்து குழியில் புதைத்தலும்
ஆய்வியல் மொழியியலில் அடிக்கடி நிகழ்தல்
வரலாற்றின் சுவடுகளை வருங்கால சந்ததிகள்

அறியவொட்டா கொடுமையை அறிவினர் அறிவீனமாய்
செய்பிழை திருத்தி மெய்பொருள் செழிக்க
உழைமின்..! உழைமின்..!! என்றே உரக்க
குரலெடுத்து அறைகூவல் விடுக்கும் அவலம்

நமக்கு நேர்ந்த கொடுமை என்சொல்ல...?
அழியா தனவெலாம் அகத்தே கொண்டது
பொய்யா மொழிக்கே உரிமையான பிறப்பில்
உதித்தவன் உதிர்க்கும் மொழிகள் வெல்லும்

காலம் தாங்கி நிற்கும் நமது கருவூலங்கள்
கோடியான கோடியாம் எடுப்போம் தொகுப்போம்
வாடிய இனம் தழைக்க வையகத்தில்
நாடிய யாவும் நன்மையாய்.  

Tuesday, December 10, 2013

மானுடமே கேள்..!

 

அண்டம் உடைந்த பூமியின் கண்டம்
அடைந்து உயிரின் கருவாய் பிண்டம்
உமிழ்ந்த தருவாய் பிறந்த மனிதன் - தமிழன்
வாழ்ந்த தடம் பேசுகிறேன் வையகமே கேள்

முற்றிய குரங்காய் நின்று நிமிர்ந்தவன்
முடி உதிர்ந்த மனிதனாய் எங்கும் திரிந்தவன்
கல் எடுத்து கல்லுரசி நெருப்பில்
கல்வி கற்றவன் தமிழன் - பூமியில்

சடை தரித்து உடை தரித்து - நீரின்
நடை மறித்து மடை திறந்து - நிலம்
திருத்தி பயிர் வளர்த்த கோமான்
பருத்தியும் பட்டும் கண்ட சீமான்

தமிழ் உடுத்தி தனை உயர்த்தி
தரணிக்கு மொழி தந்தவன் தமிழன்
தண்ணீரில் தன்நீர் கலந்து புவியின்
தரையெலாம் கரையேறி நின்றான் - தமிழால்  

திசைகள் எங்கும் தடம்பதித்து வாழ்வில்
இசைகள் மூலம் இன்பம் கண்டு
இலக்கணம் பேசிய இனத்தவன் - பொழிந்த
இசைக்கும் மொழிந்த மொழிக்கும் 

இலக்கணம் பேசிய இனத்தவன்  - பாரில்
திண்தோள் படை நடத்தும் மறவன்
திருந்திய கலைகள் கண்ட எளியன்
திருக்கோயில் சிலைகள் கொண்ட தலைவன்

பண்பட்டு பண்பட்டு பண்பாடு தந்தான்
புண்பட்டு புண்பட்டு நன்னாடு தந்தான்
பண்ணுக்கு பொன்தந்து புலமை போற்றினான்
பறவைக்கு ஆடைஈந்து இரக்கம் காட்டினான்

வாழ்வுக்கு பொருள் வகுத்து பொருளீட்டினான்
வழுக்காத நெறிவகுத்து வாழ்ந்து காட்டினான்
இழுக்கான பின்னாலே இறந்து காட்டினான்
தமிழன் மானம் இழுக்கான பின்னாலே

இறந்து காட்டினான் - புகழுடன் வாழ்தலே
இவ்வுலக வாழ்வென்று இருந்து காட்டினான்
செருவென்ற போதிலும் செருக்கென்ற ஒன்றை
தெருவில் வீசினான் உயர்பண்பால் தமிழன்

கொண்ட புகழ் கொண்டே கொடிநாட்டினான்
கொள்கை இகழ்ந்தார் தலை வென்றே
கொடி உயர்த்தினான் - அகமும் புறமும்
ஐந்திணையும் அறுசுவையும் முத்தமிழில்

சொல்கொட்டி கல்வெட்டி காவிய வரலாறு
இடங்காட்டி  இனங்காட்டி பெருவாழ்வு பெற்றான்
இடத்தாலும் பொருளாலும்  காலத்தாலும் இனத்தாலும்
தமிழன் அழியாதவன் கண்டுகொள் மானிடமே.

Monday, December 9, 2013

உயிர்த்தேடல்...!


இரவுக் கொடியின் ஒளிப் பூக்களில்
இதயம் எழுதுகிறேன் என்னுயிரே - விழிகளின்
மொழிகள் சிந்தும் சந்தம் விழுகிறதா..?
மனதில் புதைகிறதா நினைவில் உறைகிறதா...?

கன்னிக் கொடியின் கனவுப் பூக்கள்
பின்னி முடித்த பண்ணின் பாக்கள்
எண்ணி கிடக்கும் என்னில் விண்மீனாய்...!
மென்னி விழுங்கி இடறுகிறேன் இரவை...

உருகும் பாகாய் உணர்வுக் குவியல்
பருகும் வாகாய் இரவின் பசியில்
பெருகும் தழலாய் ஊணின் மசியல்
கருகும் விறகாய் உயிரின் விடியல்...!

வெட்ட வெளிநோக்கி வெற்றுப் பார்வை
விடியலை நோக்குவதாய் வினோதம் காட்டி...!
பொட்டல் வெளியாய் மனம் புழுதிபரப்பி
கொட்டும் இரவை கட்டி அணைத்து

எனை மீட்டி வதைக்குமுன் நினைவுகள்
ஆழியின் அலைகள் ஆடும் என்னுள்
தாழிடா மனதில் தடுமாற்றம் உள்ளுள்
மோழியின் பிளத்தலாய் மொழியின் கிளர்தல்

அடைபடுமோ என்னில் உடைபடுமோ உன்னில்
வதைபடுமோ வசந்தம் சிதைபடுமோ..?! - உறவில்
நிலைபடுமோ வாடல் கலைபடுமோ - தேடல்
தடைபடுமோ ஊடல் சிறைபடுமோ..?! 

நடுங்கும் குளிரில் நடுங்கும் இரவில்
ஒடுங்கும் மனம் அடங்கும் உயிர்
ததும்பும் உணர்வால் தழைக்குமோ...?! - நாளை
ஒழுகும் பொழுதில் உயிர்க்கீற்று உறையுமோ..?

மெய்சிலிர்த்து மெய்சிலிர்த்து மெய்யுரை மெய்யில்
மையுறை கோலால் மனம் எழுதும்
தையலின் தாகம் பொழியும் பூம்பனியாய்
வைகறை வாசலில் அடிவான் நிரம்பும்

கண்ணுறைக் கனவே..! பெண்ணுறை பிணியே...!
மண்ணுறை விதையே...! மனமுறை கவியே..!
உடனுறை உன்னதம் தருவாய் - புவியில்
உடலினில் உயிராய் உறவு.

மெய் தோன்றல்...!மடிக்கிடத்தி மாரழுத்தி புகட்டிய பால் 
புத்தியில் இன்னும் புதைந்துக் கிடக்கிறது..!
கூடைநீரில் குளிப்பாட்டிய உணர்வுகள் உள்ளுக்குள்
கூடையாய் இன்னும் குவிந்துக் கிடக்கிறது..!


தத்திநான் நடந்ததும் தவழவிட்டுப் பார்த்ததும்
ஒற்றைவிரல் பிடித்து ஒய்யாரமாய் நடந்ததும்
கற்றைக்குழல் திருத்தி காற்றில் அலையவிட்டதும்
குழைவாய்க் குழைந்து இதழில் ஊட்டியதும்

அசைபோடும் நினைவுகளில் அசைகிறேன் இன்னமும்
தனக்கான தெல்லாம் எனக்கான தெனவாக்கி
பாசத்தில் உயிர்வளர்த்த நேசத்தில் உடலுருகி
பொங்கும் உணர்வுகளில் கலங்கும் மனம்

எத்தனை இடர்களிலும் என்னை சுமந்து
அத்தனை சுமைகளும் அன்பால் சுமந்து
பித்தனாய் பேசவிட்டு பேயனாய் அலையவிட்டு
சித்தனாய் ஆக்கியப்பின் சீவனைப் போக்கினாய்

ஆருயிரில் அழியாச் சுடர் ஏற்றி
ஆழிசூழ் உலகு அறிவு காட்டி
ஆனந்த மெலாம் எமக்கே கூட்டி
ஆண்டுகள் கழிந்தன உமக்கே வாழ்வில்...!

இருளும் மருளும் மிரட்டும் வாழ்வில்
இன்று என்னை மிரள விட்டு
இருந்த விடமகன்ற தாயுமான எந்தையே...!
இறுதியுள் இருப்பாய் இருப்பாய் எம்முள்

கார்த்திகை உதித்த கார்த்திகையில் உயிர்த்த
கருணையுட் புகுந்த திருவின் உருவில்
வீரமும் மானமும் வாழ்வெனக் கண்ட
வள்ளல் வளர்த்த அன்பும் அறமும்

விதையாய் விழுந்து கிடக்கிறது – நாளை
விதியை விழுங்கும் வீரியத்தோடு...! வாழ்வெலாம்
நல்வழி காட்டி நடக்க நற்றுணையாய்
உள்வழி காக்கும் உயிராவாய்.