Tuesday, June 28, 2011

"தேகத் துருவம்..!!"



தேகத் துருவத்துள் கிளரும் மோக
அலைகளில் மூழ்கும் மனம் மருகும்
மாமாயை மயக்கும் மத்தகத்து வித்தகம்
மறைத்து வைக்கும் மகோன்னத மகரந்த


சூல் கொள்ளும் சுகம் யாவும்
மால் தந்த மயக்கமோ அன்றி
மன்மத கரும்பின் கணுக்களில் வடியும்
மாதவ அமுதக் கலச அமுதமோ..?!


துருவத்துள் துய்யும் பருவம் தொட்டு
துருவத்தின் துன்பம் தொடரும் இன்பம்
மேல்கீழ் மாற்றித் தலைக்கீழ் தொங்கும்
தத்துவம் தந்த மகா சக்தி.


பெற்றது பிரபஞ்சமா..? பெற்றெடுத்தது பிரபஞ்சமா..?
கற்றதுக் கொண்டு காண முடியவில்லை
கண்மூடி தவம் செய்ய மனமில்லை
தங்கமே உன்னைத் தவிக்க விட்டு.


முகத்துக்கே மூன்று சென்மம் போகும்
முன்னழகும் பின்னழகும் மூட்டும் தீயில்
முற்பிறவியும் சேர்த்து பிறக்கத் தோன்றும்
முப்பால் சுகமும் முப்பாலுக் கப்பாலும்


மூழ்கத் தூண்டும் மோன இரசம்
மூச்சு முட்டும் சுகம் சொர்க்கத்திலுண்டோ..?!
ஒளியும் ஒலியும் ஒளியும் ஓரிடத்தில்
ஓய்யாரமே..! உன்னோடு மௌனமாய் முயங்குகிறேன்.


பிணைவதும் பிரிவதும் பின்கூடி பிணைவதும்
பிரபஞ்சப் பிழை,- திருத்துவோம் இணைந்தவை
பிரியாமல் இருக்கச் செய்வோம் இன்னுமாயிரம்
பிரபஞ்சம் பிறக்கச் செய்வோம் பின்னும்


பிறிதொரு பூமிப் படைப்போம் பிறக்கும்
உயிர்களில் இன்னும் இன்பம் வைப்போம்
பசியற்றப் பகலும் பசித்தீரா இரவும்
படைப்போம் பந்தியில் இருவருமே பரிமாறுவோம்.


உண்ணுவது உணவாகும் உன்னதம் துய்ப்போம்
உண்டும் இல்லையும் ஒன்றெனச் செய்வோம்
உன்னில் தொடங்கி என்னில் முடியம்
உன்னதப் பொழுதுகள் பிரபஞ்ச விடியல்கள்..!!


சாகா வரம் பெற்ற சாகரமே..!
சாயா மனம் சாய்க்கும் மோனரசமே..!!
யோனிக்கும் ஞானிக்கும் முடிச்சிட்ட முக்கூடலே..!!!
யோகத்தில் தேகத்தை நிறுத்தி மோகிக்க


நீளும் சங்கம சடங்கின் மடங்கு
நாளும் பூத்திருக்கும் நந்தவனமே..! நனித்தேன்
நல்விருந்து நாவுக்கு சுவை நற்கவி
நல்மனதுக்கு சுகம் நறுமலர் நீ


உன்னில் உறைந்து கிடக்கும் பிரபஞ்சத்தை
பிறக்க வைக்க பெரும்பேறு பெற்றவன்
உனக்காக தன் தவம் கலைகிறான்...
உயிர்த்தெழு..! உன்னதமே உலகு செய்வோம்.

Monday, June 27, 2011

"மதிமயக்கம்"




பானையில் பொங்கும் பாலில் புரிகிறது 
மனம் எங்கும் வழியும் இன்பம் 
மண்பானை வாய் வழியும் நுரையாய்
கடைக்கண் வழிக் கசிகிறது காதல். 


இதழ்கடை ஒழுகும் குறுநகை மகரந்தம் 
தாங்கும் மலரென விரிகிறது விழும் 
குழியில் விழுந்து கிடக்கும் இதயம் 
எழுந்து நடக்க எத்தனைக் காலமோ..?


கண்மணி சுவாசம் சுடும் சூட்டில் 
மழுங்கும் மதி மயங்கும் காலம் 
விழுங்கும் பாவைப் பாவைப் பார்த்து
முயங்கும் மனம் முனங்கி கிடக்க


கதிர் வந்துப் போகும் காலை
மாலை மாலைக் கேங்கும் மனம் 
அன்றிலைப் பார்த்த அன்றி லிருந்து
குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிரும்


வதனம் வாடிக் கிடக்க விம்மும் 
விம்மல் மூடி மறைத்த தும்மலாய்
வந்து வந்து தலைக் காட்டும்
நொந்துக் கொள்ள நோகும் மனம்.


இன்பத்துள் வைத்த துன்பம் இனிக்கிறது
இன்னும் இன்னும் மனம் கேட்கிறது 
தொடரும் பிறவிகள் தொடரட்டும் உனைத்
தொட்டபடி "மனையாள் நீ" என்றால்...  

"கண்ணீர் உளி...!"


கண்ணீர்த் துளியை உளியாக்கி நான்
காலம் வீசும் கல்லைச் செதுக்குகிறேன்
காயங்கள் யாவும் இதயம் வாங்க.. 
கையில் விழும் அடிகளில் தழும்புகள்...! 


இரேகைகள் வழி ஊடுருவும் வியர்வையில் 
கலந்து வழிகிறது காலம் திவளையாய்..!!
அனுபவச் சிலை வடிக்க வடிக்க 
ஆண்டவன் தரிசனம் அங்கே அரூபமாய்..!!


முக்காலம் முதிர்கிறது,- என் நிகழ்காலம் 
எக்காலமிடுகிறது இறந்த காலமாய் உதிர்ந்தபடி
சிந்தனைகளில் தீப்பொறி சிவக்கும் விழிகளில்
சிதறி தெறிக்கும் இலட்சியக் கங்குகள்


உடைந்துப் போகாதிருக்க உடைகிறேன் நாளும்
குடைந்து கொண்டே குழைகிறேன் குமுறும்
எரிமலையாய் அடக்கி அடக்கி வெடிக்கிறேன்
எனக்குள் நானே என்னை எரிக்கிறேன். 


வார்த்தைகள் பேசா வலிகளை காலம் 
கைகளில் தருகிறது வாங்கிய நான்
கதறும் கதறல் யாருமறியாமல் மறைகிறது
உதிரும் கற்சிதறல் சப்தமாய் காற்றில்..!!


கல் வீசல் நிற்காததால் தொடர்கிறது 
கல்லுடைத்தலும் காலகாலமாய்,- உளிக்கு ஒய்வு 
எப்போது என்கிற வினாவுக்கு விடையின்றி... 
எனக்கான சிலையை நானே வடித்தபடி...

Sunday, June 26, 2011

"விழிகளின் தீபம்..!"




கண்களில் வளர்த்தக் காதல் 
கரைகிறது கண்ணீரில்...!
இதயத்தைக் கடக்கும் துளிகளில் 
மனதின் நேசங்கள் நனைகிறது...!!


வாழுங்கால் வாரா உறவு பின்
வருந்தி காணும் பலன் என்ன..??
அலையும் நீரில் உடையும் நிலவாய்
அழிகிறது வாழ்க்கை அனுதினம்.


காய்ந்த நிலத்தை கட்டியழும் 
உழவனாய் தேய்ந்த கிடக்கிறது 
வலி சுமந்த மனம் வலிக்கு
வலி மருந்தாகும் மாயம் என்ன..?!


சருகுகள் உதிர்ந்த இடத்தில்
இறந்து கிடக்கிறது நிகழ்காலம்..!
இறந்த இலைகளின் வாழ்க்கை
பேசியபடி.... தீ வந்து முத்தமிட 


தேகம் களையும் சருகு சாம்பல் 
உரமாகும் உதிர்த்த மரத்திற்கு
உதவிய திருப்தியில் மீண்டும் 
துளிர்க்கும் இலைகளில் வழியும் 


சாம்பல் இலையின் சாரம் சத்தாய்
வாழ்வின் மையம் வீழ்வதில்தான் 
வீழ்கிறேன் மறுபடி வாழ்கிறேன் 
விழிகளில் தீபமான உனக்காக.  

Saturday, June 25, 2011

"பாலை..."



வரவுகள் எதிர்ப்பார்த்து விழிகள் பூத்த
விடியல்கள் விடிந்தும் விழி மூடா
பொழுதுகள் புலர்ந்தென்ன? மறைந்தென்ன??
பொட்டல்வெளி புழுதிக்கு திசையென்ன? திடலென்ன??


கடும் வெயில் சுடும் மணல்
காயும் காற்று தாங்கும் மனம் 
ஈரக் காற்றும் இராப் பொழுதும் 
தாங்கா கொடுமை என் சொல்ல..?


தனிமை தவிர துணையறியா இளமை 
இருந்தென்ன? போயென்ன?? தவிக்க விட்ட 
பேதைதனை பேசியென்ன? ஏசியென்ன?? ஊசிக்காற்றில்
பெருந்துயர் வருத்த நலியும் உடலுயிர் 


வாழ்ந்தென்ன? ஒழிந்தென்ன?? உணர்ச்சிகள் செத்தபின் 
உதடுகளில் முத்தமிட்டு பிணத்தைக் கட்டியழும்
உன்னதக் காதலை வாழ்த்த மனமில்லை 
உணர்ச்சியோடு ஒருமுறை உன்பெயர் உச்சரிக்கிறேன் 


வந்துவிடு... 
வாழ்ந்துவிடு... 
நான் இருக்கும்போதே....!.

Friday, June 24, 2011

"ஊதியம்"


என்னை நானே விலைபேசி
விற்கும் முயற்சி.


தன்மானத்திற்கு பேசப்படும்
விலை.


உயிரை அடகு வைத்து
வயிறு வளர்க்கும் தொழில்.


இதயத்தை அடகு வைத்து
இலக்கு நோக்கும் பயணம்.


அவமானம் விற்றுக் கிடைத்த
வெகுமானம்.


வியர்வைத் துளிக்கு கிடைத்த
சன்மானம்.


எனக்கு நானே செய்து கொள்ளும்
தற்கொலை.


மனதின் காயங்களுக்கு காலத்தின்
மருந்து.


உழைப்புச் சுரண்டலுக்குப் பின்னிட்ட
பிச்சை.


வருந்தி வருந்தி வாங்கிய வாழ்க்கையின்
எச்சம்.


எல்லாம் தொலைத்துப் பெற்ற
ஏகாந்தம்.


சுயம் தொலைத்த சோகத்தில் கிடைத்த
சுகம்.


மனமின்றி கையொப்பம் இட்டபடி
நான்.


மறுபடி மறுபடி கேள்வி கேட்டபடி
என் மனம்.
  
இதற்குதான் பிறந்தாயா...?
இதற்காகதான் வாழ்ந்தாயா...?




எதுவுமற்ற வெறுமையில் கனக்கிறது
கணங்கள்....!!


கனமில்லாமல் சிரிக்கிறது சட்டைப்பையில்
ஒருமாத ஊதியம்.

"விதியின் விளையாட்டு..."




அறுகதிர் அறுக்க அக்கதிர் தொங்கி 
வருகதிர் வாங்கி ஒருகதிர் உதிரும்
முக்கதிர் முளைக் கட்ட திக்கதிரும்
அக்கதிர் அறுக்க அறிவார் யார்..?


வினைகள் விதைத்து வினைகள் அறுத்து 
விதிகள் விளையாடும் வினைகள் அறிவாரோ..?
விதிகள் பேசி வினைகள் முடித்து 
வினைக்குத் துணைப் போவாரோ..?


முன்னம் செய் வினை யாவும் 
முன்வந்து நிற்கும் உரு பிதா 
பின்னர் செய் வினைப் பலனாய்
பின்வந்து விழும் உரு பிள்ளை.


தன் வினைக்கு தக்க துணை 
தன் விதிக்கு தக்க மனை 
தன் மதிக்குத் தக்க வாழ்வு
தன் கதிக்குத் தக்க முடிவு 


விதை ஒன்று விதை விதைத்து 
விதி கரை சேர்க்க விதை 
விருட்சமாம் விதிக்கு விதை விலக்கல்ல 
விதியின் விதி விதையின் மடியில்.


நதியின் கரை சேரும் விதை 
நட்ட மரமாகும் விதிப்படி நல்ல 
நிலம் சேரும் மறுபடி விதையாகும்
விதி விதைத்து வினையறுக்கும் விளையாட்டு.   

Wednesday, June 22, 2011

"அரி...!"




அரிக்கு நரி பரியாகி அரிக்கு
அளித்த அரியது அறிய அரி
அரியொடு துணிய அரியின் திருவை
அளக்க அரிக்கு அறிவது குன்றி 


அரியின் ஆகாயம் ஆராய அரியும்
அரியை அறிய அரியன்றி ஆரறிவார் 
அரிக்குப் பணிதல் அறிவது மார்க்கம் 
அரி பூம்பாதம் புகப் புறப்பட


அரியின் திருவை அலங்கரித்த அலறொன்று
அவிழ்ந்து விழும் வழியில் அரியும்
ஆக்கிய பொய்யில் போய் விழும் 
அரியின் பாவப் பலன் அவ்வாறே.


அரிவைப் பெருமுனிக் குடில் தனிவனம்
நீர்ப் பிரித்த நிலமதில் தவத்திற்கு
கையதுப் பிசைந்த கரைமண் கலயம் 
கொள்வது கங்கை கொண்டது ஏகுதல்


அனுதினம் போல் ஒருதினம் அரிவை
கலயத்தொடு கங்கை புக்க நிற்க
அரி ஆகாயம் மேவியபடி அரிவையின் 
பொலிவில் அறிவது அகன்று ஆசை


ஆவியுள் புக அரிவைத் தேடி
அரி தன் மோகம் மோகிக்க
ஆட்படும் தருணம் ஆட்சேபிக்க அரியின் 
ஆசைக்கும் அரிவையின் பதிபக்திக்கும் சோதனை


அரியது நிலைமாறி உருமாறி பதியின் 
நகலாகி பழிநேர அரிவையை அடைந்த
அறிவின்மை காமம் கொண்ட கோலம்
அரியின் வினை முனியின் சாபம்.


அரியை உறுதுணை ஆக்கிய அரி 
அறிவது அழிந்து ஆக்கிய செயல் 
அரியின் சிரம் அவனி நோக்கிய 
அவமானம் அரியால் அரிக்கு நேர்ந்தது.


அரி அறி அறிவது அரி 
அறிய அரிய அரியை அறி
அறிவது அறிவென்பது அறி
அறநெறி அறிய அரியை அறி.

Monday, June 20, 2011

மெட்டுக்குப் பாட்டு - 3.




படம் : அபியும் நானும்.
பாடல் : வா...வா...என் தேவதையே...!

( வா... வா... என் தேவதையே என்ற பாடலின் மெட்டில் இந்தப் பாடலைப் பாடிப் பாருங்கள்.) 


பல்லவி:


போ போ என் பொய்முகமே
உண்மைத் தேடும் என் மனமே
மெய் ஞானம் தேடுகிறேன்
மெய் மெய்தானா..?  (போ போ என்) 
நான் இருக்கும் பூவுலகு
நறுமணங்கள் வீசிடுமா..?
நான் வசிக்கும் உலகிலே
நல்மனங்கள் பேசிடுமா..? (போ போ என்)


சரணம் - ௧.

தேகமது தேயும்வரை இந்த தேகத்தை
அறிந்திட முடிவதில்லை.
மோகமது போகும்வரை எந்தன் மோனத்தை
புரிந்திட முடியவில்லை.
சிற்றின்ப சேற்றினில் சிதறி ஓடியே 
முற்றிலும் முடிந்திடும் வாழ்க்கை இது
உற்றத்துணை என்று எதுவும் இல்லையே
உண்மைகள் புரிந்திட துடிக்கிறேன்.
சத்தியம் நான் என்று தெரிந்ததம்மா ஒரு 
சத்தியம் எனை வந்து எரிக்கையிலே....      (போ போ என்)


சரணம் - ௨.


மௌனத்தின் முன் மொழி எல்லாம் வந்து 
வாய் மூடி மண்டியிட்டுப் பணியக் கண்டேன்.
காணும் பொருள் யாவும் இங்கே அந்த 
சூனியத்தின் சூலகத்தில் ஒடுங்கக் கண்டேன்.
நித்தியம் அநித்தியம் கலந்த போது என் 
சத்தியம் சிரிப்பதை நானும் கண்டேன்.
வித்தைகள் அறிந்திட விழைந்த பொழுதெல்லாம் 
வீணென்று தெரிந்திட நாணம் கொண்டேன்.
தத்துவப் பிழைகளும் புரிந்ததம்மா ஒரு 
சத்தியம் எனை வந்து அணைக்கையிலே....   (போ போ என்)  

Sunday, June 19, 2011

"பதில் சொல்...?"



என்னை மன்னித்து விடுங்கள் என்றவளே..!
எத்தனை முறை மன்னிக்க வேண்டும்..?
என்னைப் புரிந்து கொள்ளுங்கள் என்றவளே...!
எவ்வளவுத் தூரம் புரிதல் வேண்டும்..?


என்னை பிரிந்து விடுங்கள் என்றவளே..!
எத்தனைக் காலம் பிரிய வேண்டும்..?
என்னை மறந்து விடுங்கள் என்றவளே...!
எத்தனை பிறவிக்கு மறக்க வேண்டும்..?


என்னை எதிர்ப் பார்க்காதீர்கள் என்றவளே..!
எவளை எதிர்ப்பார்க்க வேண்டும் என்கிறாய்..?
என்னை விட்டு விடுங்கள் என்றவளே..!
எப்போது உன்னை அடைத்து வைத்தேன்..?


இத்தனையும் சொல்லத் தெரிந்த என்னவளே
என்னை மணந்துக் கொள்ளுங்கள் என
எப்போது சொல்வாய்....???


உன்னை எண்ணி எண்ணி விம்மும்
ஆழ்மனதுக்கு ஆறுதல் சொல்ல வேண்டாம்.
இன்னும் ஏதேனும் மிச்சமிருந்தால் சொல்...
துடிக்கும் இதயம் நிறுத்தும் வரை 


உனக்காக உயிரை வதைக்கிறேன்,- எனக்காக
எதுவும் கேட்கப் போவதில்லை உன்னிடம்.
காலத்தின் முன் கேள்வியாய் நிற்பவன் 
பதிலைத் தேடி அலைந்தென்ன பயன்..??


பட்டை உடுத்தி பந்தலில் அமரும் 
பக்குவம் உள்ளவள் நீ,- மறந்துவிடாதே 
பத்திரமாயிருக்கும் என் நினைவுகளை அழிக்க.
பத்தரை மாற்றுத் தங்கம் நீ.


பவித்திரம் பாதுகாக்க என்னை உன்மனப்
பரணில் ஏற்றி வை,- தூசுப்
படியும் என்னை தும்ம விடாதே..!
பாசக் கவிதைகள் பறந்து வரும்.


நேசத்தை நெருஞ்சி முள்ளாய் நினைப்பவள் 
உனக்கெப்படிப் புரியும் உயிரின் வதை..?
இமைகளை மூடி இதயம் நசுக்குகிறாய்
விழிகளை திறந்து விடியல்கள் பொசுக்குகிறாய்.




இன்னும் உன்னை மனம் ஏந்தி 
நிற்கிறது,- ஏமாற்றம் தாங்கிக் கொள்ளப் 
பழகுகிறேன் என்றும் உன் நினைவுகளில்.
வாழ்வது வரமா..? சாபமா..?


பதில் சொல்...?

Friday, June 17, 2011

"உயிருக்கு நீ..."




ஒற்றைச் சொல்லில் உதறிவிட 
எப்படி முடிந்தது உன்னால்..?


மனதார விரும்பிதானே 
"மாமா" என்றழைத்தாய்.


உன் விடியல்கள் யாவும் 
என் முகம் பார்த்த பொழுதில்


"அத்தான்" என அத்தனை ஆசையாய்
ஆவி உருக அழைத்தவள் நீ.


உருக உருக உயிர் குடித்த 
உறவல்லவா நீ.


மருகி மருவித் திரிந்து 
மறுதலிக்கும் மாயம்தான் என்ன..?


முத்தங்களைக் கூட 
மூச்சுமுட்டத் தந்தவள் நீ.


மனம் இழைந்து குழைந்து 
ருசித்த அன்பை எப்படி மறந்தாய்..?


விழிகளில் காதல் தேக்கி வைத்து
காத்திருந்தக் காலம் மறந்தனையோ..?


விக்கித்து நான் நிற்க 
விலகி நிற்கும் காரணம்தான் என்ன..?


இன்னுமொருமுறை உன்னை 
எங்கே காண்பேன்..?


இதழ்களில் இட்ட முத்தம் 
இன்னும் இருக்குதடி ஈரமாய்.


மனதுக்குள் அடைக்காக்கும் 
உன் மெல்லிய சிரிப்பொலிகள் 


என்னைப் பேசவிட்டு நீ
இரசித்த பொழுதுகள்....


என்னைப் பேசவிடாமல் நீ
மட்டும் பேசியப் பொழுதுகள்...


இரண்டுக்கும் இடையில் என்
இப்போதைய உலகம் உருள்கிறது.


மிச்சமென இருப்பதெல்லாம் 
உன் நினைவுகள் மட்டுமே.


அச்சமென்னப் பெண்ணே..?
அருகில் வர...


விழிகளால் தீண்டிய காதல்
மொழிகளால் வளர்ந்த நேசம் 


அத்தனையும் உதறி என்னை
பிணமாக்கி விட்டவளே..!


இரணங்களில் மருந்தென 
உன் நினைவுகள் பூசுகிறேன்.


இதயத்தின் விருந்தென இந்தக் 
கவிதை வாசிக்கிறேன்.


மறந்தனையோ...? அன்றி எனைத் 
துறந்தனையோ..? யானறியேன் பேதையே..!


ஈழத்தை இழந்த தமிழனாய்
இழந்துத் தவிக்கிறேன் உன்னை.


சொந்த தேசமும், தனக்கொரு 
சொந்த நேசமும் இல்லாத மனிதன்


பூமியின் சாபக்கேடு...! புனிதமே 
புரிந்து வா.


கணங்களை கனக்க விட்டவளே..!
காத்திருக்கிறேன்... 


கண் மூடும்வரை
உனக்காக மட்டும்.


உரிமையாய் வந்து 
உயிருக்கு வாழ்வு கொடு.


இல்லை... ஒருமுறை மட்டும் வந்து
"உயிர்த் தண்ணீர்" ஊற்றிச் செல்.      

"வாசி...!"


வாசிக்கும் நாசிக்கும் வாய்த்த வாய்ப்பாடு
வாசிக்கத் தருகிறேன் வாய்த்த பேருக்கு
பெட்டகத்தைப் பேணும் பேழை வாழும்
நூலிழை வழித்திறக்க வாய் நாசி.

வலமிடம் வாய்த்தப் போதும் ஒருப்பொழுது
ஒருவழி வழியும் மறுவழி மறுபடி
வழியும் வாசத்தலம் வாசிக்க வகுத்த
வழிமுறை இட்டுக் காட்ட வாசி.

வலம் தொட்டுப் பாயும் வளி
வாயுப்பை மிக்க வழிந்து வரும்
இடம் தொட்டு கலம் விட்டுப்போம்
காற்றின் குறி ஒரு சுற்று.

இடம் புகுந்து இழைந்தோடி கலம்
மிகுந்து கதவடைத்து மேவும் மேல்
வழித் தாக்கி வலமாக வருமாம்
வாயு வந்த இது மறுசுற்று.

கலைகள் இடவல கணக்கு இருக்கு
கற்றறிந்த பேர்க்கு வாழ்வு இருக்கு
வசமாகாப் பேர்க்கு சவம் இருக்கு
வாசியில் வசிப்போருக்கு சிவமிருக்கு.

வலதுக்கு ஒருப் பங்கு வாங்கு
வாங்கிய வாசியை வகையாய் தேக்கு
தேக்கி நிறுத்த நாலுப் பங்கு
தெருவழி அனுப்ப இரண்டுப் பங்கு

தெரிந்து கொள் தேரைக்கும் தெரியும்
தரை நெளியும் வாசுகி வளியறியும்
நாசி நமக்குண்டு வாசி யாருக்குண்டு
வந்தமர்ந்த பேர்க்கு வகையாக்கித் தருகிறேன்.

வாழ்ந்துப் பார்..! இது கைக்கூட
காலைக் கடன் பட்ட மாலை
இவ்விரு வேளை இனியது அறிவாய்
மற்றது உதவாது மானிடப் பேர்க்கு.   

Thursday, June 16, 2011

”இரவல் இரவு.....”




இமைகளற்ற விழிகள்
காணும் கனவுகள்
மனதின் மௌனப்பக்கத்தில்
பூதம் காத்தப் புதையலாய்....

உணர்வுகளை களவாடும்
உணர்ச்சிகள்...!
உள்வீட்டுத் திருடன்
நிரூபிக்கபட முடியா உத்தமனாய்..!!

பருவங்கள் மாறுவது
பழக்கமாகிப் போக
உருவ மாற்றம் புரியாத
உள்ளம் அடைகாக்கும் நினைவுகள்...!

கொஞ்ச கொஞ்சமாய்
உயிரில் கலந்த நஞ்சாய்
மனம் கொல்லும் மரணம்
மௌனத்தை பதிலாய் தந்த வினாடிகள்....!

காற்றில் மணம் பரப்பும்
சுடுகாட்டுப் பூக்களின் 
சுவாசம் கண்டு முகம் 
சுளிக்கும் அறிவின் அடையாளங்கள்....!

மனிதம் தொலைத்து விட்ட
மனித குணம் தேடும்
பிணம் தின்னும் நாய்கள் பின்வாங்குகிறது 
பணம் தின்னும் மனிதர்களிடம்...!

வெட்டியான்களின் வெறியாட்டத்தில்
பிணம் தூங்க ஒரு இரவல் இரவு தேவை...
இப்போது....!!

இந்த இரவும்.......
இரவல் இரவாய்.

"அம்மா" (200 வது பதிவு)



ஊழிக்கூத்தின் ஊற்றுக்கண்
ஆழிக்காலத்தின் ஆணிவேர்
அண்டத்தை பிண்டமாக்கிய
அருட்பெருஞ்சோதி....!.

காற்றைக் கலனில்
கட்டிவைக்கும் கடவுள்..!
பிரபஞ்சப் படைப்பின்
தோற்றப்பெருக்கம்.

சூனியத்தின் உயிர்த்துளி
ஊடுருவும் சூற்பை.
சூட்சமங்கள் சூழ்ந்து நிற்கும்
சுத்தப் பெருவெளி...!.

பிரபஞ்சக் கோட்டையின்
பிறப்பு வாயில்..!
விதியின் விலாசம் சொல்லும்
தொப்புள் கொடி...!!

தத்துவங்களின் தான்தோன்றி..!
தருமங்களின் மருதோன்றி..!!
உதிரத்தில் உயிர்சமைக்கும்
உன்னதப் பரம்பொருள்...!

காலடியில் உலகம் காட்டும்
காலக் கண்ணாடி.
காலத்தை விஞ்சி நிற்கும்
ஞாலத் தோற்றம்.

ஓசைகளின் உறைவிடம்
உயிர்களின் மறைவிடம்
பாசத்தின் முதலிடம்
பகைமையின் ஒழிவிடம்.

நீளும் வெளியெங்கும் நீளும் சுடரின்
மூலப் பொருளாம் நீ,- மூளும்
தீயாம் நீ வாழுமுயிர்க்கு, ஒலமிட்ட
தொடக்கம் ஓய்வில்லாத இயக்கம்.

காணும் பொருளும் காணா இருளும்
காட்டுவித்து ஆட்டுவிக்கும் காட்சிப் பிரம்மம்
மாயும் உடலும் மாயா உயிரும்
ஊட்டுவித்து உயிர்ப்பித்து காட்டும் காலதர்மம்.

அன்பு பெருவெள்ளம் அறிவணைத்து ஆளும்
பதிக்கு பதிலாகி விதிக்கு சதியாகி
வினைத் துரத்தும் விடியல்கள் விருந்தாகும்
வினையறுத்த வாழ்வின் மருந்தாகும்.

கும்பிட்ட தெய்வமும் கும்பிட்ட தெய்வம்..!
கூப்பிட்டக் கரத்திற்கு காப்பிட்ட கருணை..!!
வாழ்விட்ட வள்ளல் இடர்தீர்த்த செம்மல்
இன்னுயிர்க்கு இன்னோருயிர் ஈந்த

ஆழ்ந்தப் பெருங்கருணை அளவற்ற பேரன்பு
தீராத் தியாகம் வேரறுத்த தன்னலம்
மாளாப் பாசத்தில் மீளாது கட்டி
மீண்டும் உயிர்த்திருக்கும் இயற்கை.

பாதத்தில் பணிந்து கண்ணீரை பன்னீராக்கி
கழுவுகிறேன்,- என் கவிதை மலர்த்தூவி
தழுவுகிறேன்..! கிடைக்காத பெரும்பேறாய் கிடைத்த
தாயே..!! கிடக்கிறேன் காலமெல்லாம்.....

நின் காலடியில்.
    

Tuesday, June 14, 2011

"விலையாகிறது வாழ்க்கை"


மானத்தை மறைக்க
தேகத்தை விற்பவள் நான்.

தேகம் தீண்டும் மோகம்
அறியுமா என் தாகம்.

விலைக்குப் பேசப்படும் பொழுதுகள்
விதியை மாற்றாதோ....?

மனதை இழக்காமல்
உடம்பை விற்கிறேன்...

விற்க வேறெதுவும்
இல்லாத காரணத்தால்.

பட்டினிக்கு படுக்கையில்
உணவாகி பின் பசித் தீர்கிறேன்.

பட்ட மரம் போல்
பகலெல்லாம் வாழ்கிறேன்.

உற்ற துணை யாருமில்லை
உருப்படவும் வழி இல்லை.

கற்றவர்கள் வருகிறார்கள்
காசு மட்டும் தருகிறார்கள்.

இச்சைப்படி ஆட்டுவித்து
இம்சித்துப் போகிறார்கள்.

வம்சத்து குலவிளக்கு
வாழ்ந்திருக்க விதிவிலக்கு.

பகட்டு மனிதர்கள் பகலெல்லாம்
தாயம் உருட்ட....

நான் பட்ட காயங்களில்
பட்டினத்தார் சிரிக்கின்றார்.

இரவுக்கு மிச்சமாய் 
இடுப்பு வலி எனக்கிருக்கு.

தசைத் தின்னும் அவசரத்தில்
பிணமாகும் என் தேகம்.

பிழைப்புக்காய் பிழைத்திருக்கேனா...?
பிழைத்திருக்க பிழைத் திருத்துவேனா..?

என் உடல் தொட்ட எவனும்
என் மனம் தொடாத காரணத்தால்

மனதோடு மட்டும் கற்புக்கரசி நான்
கற்பு என்பது மனதுக்குதான் என்றால்.

பணத்துக்கும் வாழ்க்கைக்கும்
முடிச்சிட்டது யார்...?

பணத்தால் உலகை வாங்கும் உலகம்
என்னையும் வாங்கியது விலை பேசி.

விற்றது என் வாழ்வு.
விற்க சொன்னது என் வறுமை.

மனதார சொல்கிறேன்....
என்னை முதன் முறையாய்

பெண் கேட்ட வரன்
கேட்டுவிட்ட தட்சணை

வாங்கும் அளவுக்கு இப்போ
கையில் காசிருக்கு.

வாழ்க்கைத்தர அந்த வரன்
இப்போ வருவாரா...?

மானத்தை காக்க
தேகத்தை விற்பவள் நான்.

மனதோடு மட்டும் கண்ணகி நான்.
எந்தக் கோவலனும் தீண்டா மாதவி நான்.

நிற்க நிலம் இருந்தால்
விற்றுத் தந்திருப்பேன்.

விற்க வீடிருந்தால்
விற்று "மறுவீடு" போயிருப்பேன்.

மிச்சமாய் இருப்பது நான் மட்டும்தான்
விற்க முடிந்தது என் உடல் மட்டும்தான்.

மனதைக் கேட்க யாருமில்லா தேசத்தில்
மற்றதெதுவும் பாவமில்லை.

Sunday, June 12, 2011

”முரசு கொட்டும் முத்தம்...”


நீ ...
முத்தமிட்ட சப்தங்கள்
முரசுக் கொட்டுதுக் காதில்...!


மூளைக்குள் கொட்டமடிக்கும்
உன் நினைவுகள் ...
முதுகு தண்டை துளைக்கிறது.


விழிகளில் விழிகள் கலந்து
விருந்து வைப்போம் வா.


மொழிகளில் மோனம் கலந்து
உணர்வுகள் சமைப்போம் வா.


கனவுகள் நமக்கு கண்களில் அல்ல...
மனதில்...!!


இல்லாமை, இயலாமை இரண்டும்
இல்லாமை செய்வோம் வா.


என்னை உனக்குள்ளும்
உன்னை எனக்குள்ளும்
இடமாற்றம் செய்வோம் வா.


இடவலம் மாற்றி இன்பம்
துய்ப்போம் வா.


எங்கும் நிறைந்த பரம்பொருளாய்
இறைந்துக் கிடப்போம் வா.


அங்கங்களில் ஆவி நிறைத்து
அழகுத் தமிழ் சமைப்போம் வா.


இன்னொரு அகத்தியன் 
பெற்றெடுப்போம் வா.


தமிழுக்கு ஒரு தனி உலகம்
தங்கமே..! உனக்கும் எனக்கும்
அது சொர்க்கம்.


விண்ணிலும் மண்ணிலும்
தமிழை விதைப்போம்.


தேகத்திலும் மோகத்திலும்
தமிழை வளர்ப்போம்.


அறிவியல் தொழிலியல்
ஆக்கி வைப்போம்.


ஆற்றவொணா சாதனைகள்
ஆற்றி வைப்போம்.


இதழுக்குள் இலக்கியங்கள்
இட்டு வைப்போம்.


இதயத்தில் இலக்கணங்கள்
போட்டு வைப்போம்.


கைக் கலக்க மெய் மறக்கும்
மெய்யின்ப பெட்டகமே..!!


உயிரொடு மெய் கலக்க
உயிர்த்தெழும் மொழி வளமே..!!


வா....! இன்னமுதத் தமிழில்
இலக்கிய விருந்து வைப்போம்.


என்னருந்தமிழை உலக அரங்கில்
ஏற்றி வைப்போம். 

Thursday, June 02, 2011

"உன்னோடு நான்..."


ஓ.... என் பிரியமுள்ள பேரழகே...!

பாழுமுயிர்ப் போகும்வரை
பாவி உன்னை நினைத்தேங்குதல்
பிறவியின் பயனா..?

வாழும் காலம் யாவும்
வருத்தமுற்று வாடிக் கிடத்தல்
வாழ்வதன் பொருளாமோ...?

தேடிய சொந்தம் நீ
தேவை உன் பந்தம்தான்
தேடல் ஒன்றே தவமா...?

என்னுயிர் நாடிய நல்லுயிர்
நினதென்று நான் சொல்லி
நீ அறிதல் நியாயமோ...?

உணர்வுகள் கூடி கைத்தட்ட
உண்மை மௌனித்து நிற்கும்
உணர மறுப்பாயோ உன்னதமே...?

வெள்ளை மனம் கொள்ளையழகு
வெண்பஞ்சு மேகம் நீ
வெண்ணிலவின் தங்கை நீயோ...?

விரும்பாமலும் அரும்பாமலும்
விளையாட்டாய் விளைந்த நேசம்
விருந்தாய் மருந்தாய் விடைதருமோ...?

விழிகளில் தொக்கி நிற்கும்
விடியல்கள் வினாக்களை தாங்கியபடி
விடிவின்றி விடியும் பொழுதுகள்...

காலத்தின் பந்தயத்தில் நான்
காவல்காரனா..? பார்வையாளனா..?
கலந்து கொள்ளாத பந்தயக்காரனா..?

எதுவாகவோ இருந்துவிட்டுப் போகிறேன்...
எப்போதும் உன்னுடன்...!.      

Wednesday, June 01, 2011

"கட்டி அணைத்தல்"



கட்டி அணைத்தல்.....
கட்டி அணைத்தல்???

ஆழ்மனதின் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை
அள்ளி எடுத்து பொங்கும் அன்பின் நுரை

சொல்ல முடியா உணர்வுகளை
சொல்லிவிடத் துடிக்கும்
தேகத்தின் தியானம்.

கரங்களால் பேசப்படும்
கருத்துப் பரிமாற்றம்.

காதோடு சொல்லப் படும்
அன்பின் இரகசியம்.

இதயத்தின் உயிரோசைகள்
இடம் மாறும் இன்பம்.

ஆசைகள் வட்டமடிக்கும்
ஆரவல்லித் தோட்டம்.

முரண்பாடுகளை முற்றுப்புள்ளி
முத்தமிடும் போர்க்களம்.

அன்பை அன்பு ஆதூரமாய்
அரவணைக்கும் மனிதாபிமானம்

சொல்லால் சொல்ல முடியாக்
காதலின் அடையாளம்.

குழந்தையின் உணர்வு மொழி
தாயின் பாச விளக்கம்

உயிரின் பிறவிக்கு காமம்
நடத்தும் கரகாட்டம்

விழிகளின் வியப்புக் குறிகளுக்கு
விளக்கம் தரும் அடைப்புக்குறி

இரட்டைகளின் சங்கமத்தில்
ஒற்றையை பிரசவிக்கும் காதல்

உயிரையும் உடலையும்
இனம் காட்டும் காலக்கண்ணாடி.

தன்னம்பிக்கைத் தரும்
தாய்மையின் அன்பு

நல்லறிவின் அடையாளம்
நல்லோரின் மூன்றாம் கை.

இனியேனும் உன்னை.......???