Tuesday, August 31, 2010

"ஒரு துளி"..!!


ஆதி யந்த மிலாப்பெரு வெளியில்
ஆழிசூழ் சுடரொளியை...
கண்முன் காட்டும் ஒரு துளி...!

ஒளிக்குவித்து ஒளிக்குவித்து
பளிங்காய் மாறி பரவமூட்டும் ஒரு துளி..!

ஈர்ப்புவிசைக் கெதிராய் தொங்கும்
"திரவத் தோட்டம்".

ஒளிப் பெருக்க, குவிக்க
கற்றுத்தந்த விஞ்ஞான வித்து..!!

கூர்மை யாற்றல் கட்டுறை "அணு ஆயுதம்".

பற்றி யெரியும் பசுந்தீ...
தொற்றச் செய்யும் இரகசியம்.

பரப்பு இழுவிசையால்....
பூமிப் போர்த்தும் பன்னீர்.

பிறப்பு இறப்பு பிறவி குணம்
அறுத்த முதல் உளி..!

கலைந்த கட்டுமானம்...மேகம்.
உடைந்த கட்டுமானம்...நீராவி.
ஒன்றிணைந்தால் "ஒருதுளி".

தனக்கென...தனி குணம், நிறமிலா தொழித்து
செல்லு மிடத்து கொள்ளும்
பிரபஞ்ச இரகசியம்.
பூமியின் புனிதம்.

தாவர தவத்தின் வரம்.
மூன்று கட்டுமானத்திலும்
முகிழ்த்தெழும் "முப்பரிமானம்".
அள்ளக் குறையா "அமுதம்".

பரிணாம வளர்ச்சியின்....
படிமானங்கள்...தொடரும்...
பரிமானம்.

ஆழ்கடலின் ஆரம்பம்.
ஆறு, ஓடைகளின் பெருக்கம்.
குளம், குட்டைகளின் ஒடுக்கம்.

உயிர்களின் தொடக்க முதல்
அடக்கம் வரை தொடர்ந்து வரும்
"தொப்புள் கொடி".

"திரவப் படிகம்"

தொலைவு சுருக்கி,
பிம்பம் பெருக்கும் "குவியாடி"...!!

அளவுகளின் அளவுகோள்...!!
இயற்கையின் கண்ணீ ர்..!
******************************

Monday, August 30, 2010

கல்...!


என் கைத்தொழுத சிலை..!
கால் தடுக்கிய தடை...!
முட்டிச் சதைக்கிழித்து இரத்தம்
குடித்த ஆயுதம்...!!

குடிசை தாங்கும் முட்டுக்கால் தூண்,
சிறுதானியம் இடிக்கும் உறல்,
அறுசுவை அரைத்துத் தரும் அம்மி,
இளவட்டம் தூக்கும் வீரம்,
இரவில் மிரட்டும் ஐயனார்,

என் குரல் கேட்டு
என்னைப் போல் பேசும் எதிரொலி,
உன் மேல் பட்டு
கண் கூசச் செய்யும் கதிரொளி.

பூமித்தாயின் தகிப்பு,
வானவெளியின் முகப்பு,
நதியின் தாய்,
நிலமகளின் சேய்,
இயற்கை வனப்பின் இறுப்பு,
பூதங்களின் தொகுப்பு,
என் பாதங்களுக்கும்,
எரும்பின் பாதங்களுக்கும்...பிடிப்பு.

பூமியின் தேர்ப்படை,
உயிர்களின் வார்ப்படை,
குமரியின் உருவகம்.

உன்னை தொட்டால்...
பிரபஞ்சம் விரியும்..!,
பிரபஞ்சம் தொட்டால்...
உன்னில் முடியும்...!!

பெருத்து நின்றால்..."மலை"யாகி,
சிறுத்து நின்றால் "சிலை"யாகி,
கறுத்து நின்றாலும் "கலை"யாகிறாய்.
பனிப் போர்த்தி உறங்கும் பரமசிவன் - உன்னை,
"கல்" என்றார்கள். நான்
"கடவுள்" என்கிறேன்.

காணும் யாவிலும் நீ...
நான் வாழும் யாவிலும் நீ...
உனை உணராது போனெனே...!
இவ்வளவு காலம்...!!
"பிறப்பிற்கும், எவ்வுயிர்க்கும்" மூலம் நீ.
என் பிறப்பறுக்கும் வாளும் நீ.
கத்திக்கும் முன்னே கண்டெடுத்த ஆயுதம் நீ,
உன்(கற்)கால மனிதனின் முக்காலம் நீ,

என் முப்பாட்டிக்கும், பாட்டிக்கும் அடுப்பானாய்,
என் முன்னோரின் வாழ்க்கைக்கு துடுப்பானாய்,
உனை உணர்ந்து வாழ்ந்ததால் அது "கற்காலம்".
பூமியில் அதுவே "பொற்காலம்".

யோகியர்க்கும், ஞானியர்க்கும் வாழ்க்கை தந்தாய்.
எதுவெல்லாம் யோகம் என்று சொல்லித்தந்தாய்.
பாவலர் பாடும் பொருளும்.
காதலர் தேடும் சுகமுமானாய்.
இறைவன் உறையும் இடமும்,
இவர்கள் உறையும் தலமும் நீ.
மொத்தத்தில் அன்பின் அடையாளம்.
அன்பின் அடைக்கலம்.

குனிந்து செல்வோர் "குகை" என்றார்.
புரிந்து பணிந்து செல்வோர் "கோயில்" என்றார்.
புரியாதார்க்கு புதிர்....
புரிந்தார்க்கு புனிதம்.

மலைத்து நின்றார்க்கு "மலையானாய்".
மெய்மறந்து நின்றார்க்கு "மறையானாய்".
எல்லாமும் உனக்குள் கொண்டாய்,
எல்லாமாய் நீயே நின்றாய்.

நானறிந்த "கடவுள்"
சிலருக்கு மட்டும் "கல்".

Saturday, August 28, 2010

"கள்ளி"...கள்!


முறுக்கி முறுக்கி...
முகம் காட்டுகிறாய்.

திருகித் திருகி...

தலை நீட்டுகிறாய்.

குறுங்கழுத்து உன் கழுத்து...அதில்

குறுக்கும் நெடுக்குமாய் சில எழுத்து.

பட்டகாயம் காட்டுகிறாய்...

பால் சிந்தி ஆற்றுகிறாய்.


உன் காயம் ஆறிய "வடுக்களாய்"

எங்கள்...

காதல் சின்னங்கள்.

நட்பின் பெயர்கள்.

இன்னும்... இன்னும்
ஆங்காங்கே
அன்பின் அடையாளமாய்,

உன் முதுகு, முகம் யாவும்
எங்கள் நகக் கீறல்கள்.

ஆயிரம் முட்கள் இருந்தும்...

அஹிம்சை காட்டும் நீ...

தாங்கமுடியா தருணங்களில் மட்டும்

இங்கொன்றும்... அங்கொன்றுமாய்...

முள் கொண்டு கீறினாய்.

புரிகிறது.

எங்களைப் போல் நீயும் ...

உன் அன்பை எங்கள் மேல் எழுதுகிறாய்.

கிறுக்கியே பழக்கப் பட்ட எங்களுக்கு...

உன் எழுத்துக்கள் "கீறலாய்த்தான்" தோன்றுகிறது.


நீயும் சரி, நாங்களும் சரி...
இரத்தம் சிந்தாமல் அன்பை சொல்ல முடியாதா?.

அன்பின் அடையாளம் இரத்தமா? அன்றி

இரத்தத்தின் அடையாளம் அன்பா?.

காவு கொடுத்தால்தான் காதல் பலிக்குமா?


நேசத்துக்குரிய நெஞ்சத்துக்கு தெரியும் முன்னே...

எங்கள் நேசம் பற்றிய இரகசியம்

நீ தெரிந்துகொள்வதால்தானோ
உன்னை..
"கள்ளி" என்கிறார்கள்.
காதலியைத் தீண்டும் இன்பம்...

கள்ளியே உனைத் தீண்டிய பின்புதான்...
பல
காளையர்க்கு கிடைக்கிறது.

வாட்டும் வறுமையிலும்,
சேர்த்துவைத்த செல்வத்தை செலவழித்து,...
ஈட்டும் பொருள் யாவும் யமக்கே தந்து...

படி..படியென்று...

படிப்படியாய் படிக்க வைத்தது....

படர்ந்த உன் மேனியில் எழுத
பயன்படுகிறது.

எங்களின் நியாயமான "ஆசைகள்"
உனக்கு "வன்முறையாகிறது".

புத்தன் சொன்னது புரிகிறது.

எங்களின்....
"ஆசையே உங்களின் துன்பத்திற்கு காரணம்".


இலைகளை முட்களாக்கி நீ மெய் கிழிக்கிறாய்...

இதழ்களில் வார்த்தை முட்களேந்தி...அவள்

இதயம் கிழிக்கிறாள்.

மென்மையில் நீயும், அவளும் ஒன்றுதான்.

மெத்தையில் அவள் உன்னைப் போலவும்,

உன்னை கீறும்போது நீ அவளைப் போலவும்,

உருமாற்றம் அடைகிறீர்கள்.


"தழைத் தின்னும் ஆடும்...
உன்
தண்டு தின்னும். ஏன் தெரியுமா?
தனியாதக் காதலால்"...!!!


தாவரங்களில் நீ தனித்துவம்.

இலை, பூ எதுவும் உதிர்ப்பதில்லை.

கால மாற்றத்தால் காய்வதில்லை.

இருக்கும் வரை பசுமையாய்...

இறக்கும் வரை இளமையாய்...

இருந்துவிட்டு போகிறாய்.
இறந்தாலும் இருக்கிறது முட்கள் உன்னுடனே.
இன்றும் இருக்கிறது அவள் நினைவு முட்கள் என்னுடனே..!!!
கள்ளியே...! உன்னிடம் ...
கன்னிகள்
கற்க வேண்டிய பாடம் இது.

வெட்டி நட்டால் வேலியாகிறாய்.

விட்டுவிட்டால் காலியாகிறாய்.
உன்னைத்
தொட்டுவிட்டால் காளியாகிறாய்..!
விளையும் பயிர்களுக்கு தாயாகிறாய்..!

வீழ்ந்துக் கிடக்கும் கொடிகளுக்கோ சேயாகிறாய்...!

இப்படி பல நேரங்களில் நீ பெண்ணாகிறாய்.


ஆட்டுக்கு உன் பால் அமுதமாகிறது.

ஆட்டுப் பால் எங்களுக்கு அமுதமாகிறது.

குழந்தைக்கு உன் பால் கொடிய விடம்...

குமரியோ உன் போல் கொடிய விடம்.


பருவங்கள் பகைக்காதவள் நீ.

குளிர்விடும் காலம் உன் துளிர்விடும் காலம்.
கோடையில்தான் உன் குடும்பம் குதூகளிக்கும்.

ஆடியில்தான் உனக்கு மக்களால்...

மகப்பேறு காலம்.


"வறுமையில் செம்மை" நீ...
வாழ்ந்துகாட்டுவது உண்மை.

தரிசானாலும் சரி, கரிசானாலும் சரி...

தழைத்தோங்குகிறாய்..!


பிறந்த வீடும், புகுந்த வீடும்

செழிக்கச் செய்கிறாய்.

களமும், கட்டுக் கதிர் நெல்லும்
உழவன்
குதிர் சேறும் வரை காவல் செய்கிறாய்.

எமக்காக இரவு பகல் ஏவல் செய்கிறாய்.

குலப் பெண்கள் உன் குணம் கற்று...

குடும்பம் செய்கிறார்கள்.


இவ்விதமாய்
இருவரும்
ஒன்றென்பதால்தான்...
உங்களை "கள்ளி" என்றார்களோ...?!
"அடிக் கள்ளி".

Monday, August 23, 2010

காத்திருந்த காதல் ...!


கண்ணில் குளவி கொட்டும் போதே
காலில் தேள் கொட்டியவனாய் நான்...
இதுவே பொறுக்க முடியவில்லை என்கிறேன் நான்.
இன்னும் இருக்கிறது என்கிறாய் நீ.
என் உடம்புக்குள்...
அங்குலம்...அங்குலமாய்...
நச்சு நகரும் நரக வேதனையை
அனுபவிக்கிறேன் நான்.
கொட்டிய தேளின்
கொடுக்கின் முனை அளவு கேட்கிறாய் நீ.
"இடுக்கன் கலைவது" .....யோசிக்கிறேன்.
என் யோசிப்பு புரிந்தவளாய் ...
"நான் காதலி" என்கிறாய்.
கடுக்கும் வலியிலும் உன் காதல் ....
இனிக்கிறது கண்மனி.
பொருத்துக் கொள்ள முயல்கிறேன்...உன்
புன்முறுவல் காட்டு.
இருக்கிறாயா?? இதோ வருகிறேன் என்கிறாய்,
இறப்பவனை பார்த்து.
இருக்கிறேன்....சீவன் இருக்கும் வரை..என்கிறேன் நான்.
கண்ணில் கொட்டிய குளவியோடு....நீயும்
காணாமல் போனாய்.
விழிமூடும் முன்னே வருவாய் என எதிர்ப்பார்த்தேன்.
உனக்கு முன்னே முந்திக்கொண்டது குளவி விடம்.
திறக்க முடியாத அளவு வீங்கி விழிமூடிக் கொண்டது.
சும்மா இருக்குமா தேளின் விடம்...?!
நீ வந்து சேரும் முன்னே...
விதி வந்து சேர்ந்தது.

"சுதந்திர தேசம்?!"


என் இந்திய தேசத்து சகோதர, வணக்கம். வெற்றிகரமான 64 வது சுதந்திர தினத்தை கொண்டாடிமகிழ்ந்திருப்பாய். கோட்டை கொத்தளங்களில் கொடி ஏற்றி பார்ப்பவர் பரவசப்படும் அளவுக்கு எமது அரசியல்வாதிகள் அரங்கேற்றிய சுவாரசியங்கள் பார்த்து புலகாங்கிதம் அடைந்திருப்பாய். அன்றைய தேதியில் தொலைக்காட்சிப் பெட்டிமுன் அமர்ந்து அசத்தலான நிகழ்ச்சிகள் எது எதுவென? பட்டியலிட்டு பார்த்திருப்பாய்..!. பொதுசேவை செய்யும் புதுப்புது நடிகைகள், பிழைப்புக்கு வழி தேடும் பழைய நடிகைகள், இவர்களின் அசத்தலான பேட்டிக் கேட்டு அசந்து போயிருப்பாய். உனக்கு பிடித்த நடிகனின் அடுத்த படம் வெளியாகும் தேதி, அல்லது படபூஜை பார்த்து ரசித்து லயித்து இருப்பாய். இன்றைய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் என உன்னை "மயங்க வைக்கும் மத்தாப்புக்கள் " பார்த்து மகிழ்ந்திருப்பாய். பட்டிமன்றம், பாட்டு மன்றம் இவற்றொடு வழக்கமான உன் "பாட்டில்" மன்றத்தையும் அரங்கேற்றி ஆனந்தமடைந்திருப்பாய்.

சுதந்திரம் எதுவென சொல்லப் படாமலே சுதந்திர தினத்தை கொடியேற்றிக் கொண்டாடும் ஒரு அரசு. சுதந்திரத்துக்கு தொடர்பில்லாதவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தும் தொலைக்காட்சி சேனல்கள், "புடவை கட்டத்தெரியாதவர்களை மேடைக்கு அழைக்கிறோம்" என அப்பட்டமாய் கூவாமல், அமைதியாய் செயல்படுத்தி வரும் நம்முடைய "தமிழ்ச்" சேனல்கள், தமிழுக்கும், தமிழனுக்கும் செய்யும் தொண்டுகள் சொல்லி மாளாது.

நாலு பேரு பார்க்க, நாலு பேரு கைத்தட்ட, நாம எப்படி வேண்டுமானாலும் கூத்தடிக்கலாம். அதுதான் நமது சுதந்திரம் ...என எண்ணித் திரியும் ஒரு கூட்டம். கருவில் இருக்கும் குழந்தைக்கும் "சுயநலம்" சொல்லித் தரும் ஒரு கூட்டம்,

தமிழ்நாட்டில்
பிறந்துவிட்ட கொடுமைக்காகவே, தாய்மொழியை தவிர, தனக்கு சம்மந்தமில்லாத மொழிகளை தன் பிள்ளைகளுக்கு திணிக்கும் பெற்றோர்கள், சொந்த மண்ணில் சுயம் தொலைத்து வாழ சொல்லித் தரும் ஆங்கிலப் பள்ளிகள். ஏன்? எதற்கு? என தெரியாமலே கலாச்சாரம் இழந்து, இதுதான் "நாகரீகம்" என தன் எண்ணங்களுக்கு தோதான, தன் தனிப்பட்ட ஆசைகளுக்கு இடையூறு செய்யாத ஒன்றே தன் கலாச்சாரம் என கண்மூடியாய் வாழும் இன்றைய தலைமுறை.
இந்த சமூகத்தை வழிநடத்துவதாய் எண்ணிக்கொள்ளும் சினிமாக்காரர்கள், இவற்றிற்கு மத்தியில் ஒரு குறையும் இன்றி உன் "சுதந்திரம்" கோலாகலமாய் கொண்டாடப் பட்டிருக்கும்.

63
ஆண்டுகள் முடிந்த பின்னும் இந்த தேசத்தின் தெருக்களில் "குழாயடி சண்டை நின்றபாடில்லை". உடை உடுத்தாமல் வெற்றுமேனியாய் அலைபவர்கள் இருக்கிறார்கள். இருக்க இடம் இல்லாத எண்ணற்ற கோடி பேர் இருக்கிறார்கள். சமூக குற்றங்கள் குறைவின்றி அரங்கேறி வருகின்றன. இரவு வேளைகளில் இருட்டைத் துழாவும் கிராமத் தெருக்கள் இருக்கின்றன. பிச்சை எடுப்பது தொழிலாக்கப் பட்டு அதற்கு சங்கம் வைக்கும் அளவுக்கு சமூகம் முன்னேறி இருக்கிறது. தசைவிற்பது சட்டப் படி நியாயமாக்கப் பட்டு தனித்த தொழிலாக்கப்பட்டு விட்டது. கல்விச் சாலைகள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு கொள்ளை அடிக்கும் கூட்டணி வெற்றிப் பெற்றிருக்கிறது. மதுவிற்பனை அரசாங்க மயமாக்கப்பட்டு அதிக இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறது. சட்டம் இங்கு "சிறைச்சாலைக்குள்" ஜாமின் வேண்டி மனுத்தாக்கள் செய்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் தனித்த மாண்புகள் தொலைக்கப்பட்டு சில பெருங்குடி மக்களின் கைப்பிள்ளையாய் இந்த அரசாங்கம் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு இந்திய பிரஜையின் பிரசவம் முதல் சுடுகாட்டு சவ அடக்கம் வரை இங்கு இலஞ்சம் இல்லாத துறை எதுவுமில்லை. சக மனிதனும், சாமானியனும் இங்கு சகசமாய், சரிசமமாய் மதிக்கப் படுவதில்லை. "சட்டம் எல்லோருக்கும் பொது" என சட்டத்தில் மட்டும் சாகாமல் இருக்கும் "சமரசம்".

இந்த தேசம் முழுக்க பொதுப்பணித்துறையில் இலஞ்சம் வாங்காத நேர்மையான துறை இல்லை. மண் வெட்டுவதில் இருந்து, மனை கட்டுவது, அணைக்கட்டுவது, பாலம் கட்டுவது, சாலை அமைப்பது, குடிநீர்க் குழாய் அமைத்தல், ஏரி, குளம், வாய்க்கால் வெட்டுவது, சுடுகாட்டுப் பாதை அமைப்பது வரை இலஞ்சம் அளவுக்கு மீறி வளர்ந்து நிற்கிறது. அன்னக்காவடியாய் அரசியலுக்கு வந்தவர்கள், ஐந்தாறு ஆண்டுகளில் கோடிகளுக்கு அதிபதிகள். இங்கு வருமான வரித்துறை என்ன செய்கிறது? புரியவில்லை. ரொட்டிக்கடைகாரனிடம் வரிக்கட்ட சொல்லி வற்புறுத்தும் இவர்கள் கோடிகளில் கொள்ளை அடிப்பவனிடம் எதுவும் பேசாதது ஏனோ தெரியவில்லை?

திருட்டை பெரிய அளவில் செய்தால் அது இந்த தேசத்தில் "ஊழல்" என அங்கீகரிக்கப் படுகிறது. மந்திரிகளை கேட்டால், மக்கள் சரியில்லை என்பதும், மக்களை கேட்டால் மந்திரிகள் சரியில்லை என்பதும் இங்கு வாடிக்கையாகிப் போனது. யாரும் பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் தட்டிக்கழித்து, "தப்புக்கு தப்பே சரி" யென தப்பாகிப் போனது என் தேசம்.

இங்கு சாமானியனுக்கு வளையாத சட்டம் இருக்கிறது. இங்கு வலுத்தவன் வளைக்காத சட்டம் இல்லை. காசு கொழுத்தவன் தப்பிப்போக சட்ட ஓட்டைகளுக்கு பஞ்சமில்லை. நியாயம் கேட்பவனுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இங்கு எதையும் மதிக்காதவன் "பெரிய மனிதன்" . வழிவகை தெரியா அப்பாவிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாய்???. "வலுவில்லாத சட்டத்தால் வலுதது விட்ட குற்றம்" ஆலமரமாய் வளர்ந்து விட்டது. கொலை கூட சாதாரணமாக செய்யமுடிகிறது. செய்துவிட்டு சகஜமாய் வாழ முடிகிறது. அவனது குற்றத்துக்கான தண்டனை சட்டம் கொடுக்கும் முன்பே அவன் இயற்கையாய் இறந்துவிடுகிறான்.

நீதிக்
கேட்டவன் பேரன் காலத்தில் நீதி வழங்கப் பட்டால் அதற்கு பெயர் "நீதியா?". "செத்தவன் கை வெற்றிலைப் பாக்காய்" சட்டமும், நீதியும் சாமானியன் விசயத்தில் செயல்படுகிறது.

இலட்சம் பேரை கொன்றுவிட்டு எளிதாய் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு தப்பிசெல்ல முடியும். உன்னிடம் பணம் இருந்தால்.,,, இந்த தேசத்தில் உன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆள் தலைமறைவு என வழக்கை கிடப்பில் போட்டுவிட முடியும். நாடாளுமன்றத்தில் உன்னைப் பற்றி எவரும் கேள்விக்கேட்காதவரை உன்னை எவரும் சீண்ட மாட்டார். நீயாக வந்து சரணடைந்தால் கூட "உண்மையான குற்றவாளியை நாங்கள் ஏற்கனவே பிடித்து விட்டோம்" என உன்னையே அதிர்ச்சிக்குள்ளாக்குவார்கள். அப்படி பட்ட வசதிகள் எல்லாம் இந்த தேசத்தில் உண்டு.

"
அடிப்படை தேவைகளுக்கு அல்லாடிகொண்டிருக்கும் பெரும்பான்மை கொண்டது இந்த தேசம் என்றால், 63 ஆண்டு கால சாதனை என்ன? பட்டினி சாவு பல மாநிலங்களில் இன்னமும் இருக்கிறது என்றால், இங்கு விளைந்த முன்னேற்றம்தான் என்ன?".

"
வாங்கத்தெரிந்தவன் அரசியல்வாதி, அவனுக்கு கொடுக்கத் தெரிந்தவன் அதிகாரி". என் இனமான சொந்தங்களை கொன்று குவித்துவிட்டு, அப்படி கொன்ற கொடுங்கோலன் இங்கு வந்து இன்ப சுற்றுலா செய்ய இட வசதி செய்து தரும் கொடுமையான மாற்றாந்தாய் மனப்போக்குடைய அரசாங்கத்தை இந்த தேசம் தவிர, உலகில் வேறு எங்கும் காண முடியாது.

மருத்துவம் இங்கு எப்படி வியாபாரமாக்கப் பட்டிருக்கிறது தெரியுமா?. எல்லாவற்றிற்கும் விலை வைத்து விற்க ஆரம்பித்துவிட்டார்கள். "காலாவதியான மதுபுட்டி முதல், மருந்து புட்டி வரை".??? இதில் எங்கே என் தேசம் ஒருமைப்பாட்டை அடைந்திருக்கிறது? திருடுவதிலா?? கொள்ளை அடிப்பதிலா??

வெளியூர்
திருடனை விரட்டி அடித்துவிட்டு, உள்ளூர் திருடனை உலாவர விட்டிருக்கிறோம். இதில் எந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாக நாம் பெருமை கொள்ளத் தோழா?.

ஒரு பக்கம் நம் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் நமது மொழி "செம்மொழி" யாகி கோடிக்கணக்கில் விழாக் கோலம் பூண்டிருக்கிறது. எனக்கொரு சந்தேகம் நண்பா, தமிழை வழக்கில் சுத்தமாக பேசிக்கொண்டிருக்கும் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
தமிழே பேசாத "தமிழ் நாட்டில்" தமிழுக்கு விழா எடுக்கிறார்கள். ஒரு இனம் அழிந்தால் அந்த இனத்தின் மொழியும் அழியும் என்பதுதானே ஆன்றோர் வாக்கு. அப்படி இருக்க.....அழிந்துவரும் இனத்தின் மொழி எப்படி வளரும்??? ஒரு தனி மனிதனை சார்ந்ததா மொழி என்பது???.

1947
ல் உனக்கு அளிக்கப் பட்டிருந்த "சுதந்திரம்" ஆங்காங்கே பிடுங்கப்பட்டு விட்டது தெரியுமா உனக்கு? ஆட்சியில் இருப்பவனை எதிர்த்துப் பேசினால், பேசியவன் பெயர் "தீவிரவாதி". தவறுகளை சுட்டிக்காட்டி தர்ணா செய்தால் அவன் "தேசத் துரோகி". இலஞ்சம் கொடுக்க மறுப்பவன் "குற்றவாளி". ஊழல் செய்தவன் "தேசியவாதி". அதற்கு துணைப் போனவன் "காந்தியவாதி". கொலை செய்தவன் "அவதாரம்". அதைப் பார்த்தவனுக்கு "அபதாரம்". தேசியத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் "மாறுதல் தராத தேர்தல்"....மறுபடி....மறுபடி..?!.
இந்த சுதந்திரம் இருந்தால் என்ன??? போனால் என்ன???.