Saturday, October 23, 2010

"துறவு...!".


பிட்சாம் தேஹி......!
பிட்சு ஆம் தேகி....!!
பிட்சுவாம் ஏகி.....!!!

பிண்டம் வளர்க்க
பிறன்மனை ஏகும்
பிரபஞ்சத் துகளின்....
பிரார்த்தனை...!

நின்ற இடத்து நிற்காது....
சென்ற இடத்தும் தங்காது....
நிலையற்று திரிதல்...!
நிலையற்ற வாழ்க்கையின்
நிதர்சனம் உணர்தல்....!
உணர்ந்தவாறு நடத்தல்...!!
நடத்தையினால் உணர்தல்....!!!

நினைத்தபடி வாழ்வதல்ல...
நிலைத்தப் படி வாழ்வது.
பிறன் நலன் விரும்புவது.
பேதமற்ற அன்பைப் பகிர்வது.

ஆடைக் கலைவதல்ல...!
ஆடைக் களைவதுமல்ல...!!
வீடு, பேறு ... வேண்டுவதல்ல...
விரும்பியது வேண்டி அலைவதுமல்ல...!!!.

காற்றின் நிலையறிந்து காலன் கதவடைத்து
இட வல கலையறிந்து நாசியின் நாளமறிந்து
உள்ளிழுத்து...உள்நிறுத்தி...வெளியிடும் சூசகமறிந்து
(சு)வாசிக்கும் நிலை "வாசி யோகமாம்".

அப்படி வாசிப்பவன் உன்னிடம் யாசித்தால்
அது உனக்கான வரம்...., யோசிக்காமல் கொடு.
பாத்திர மறிந்து பிச்சை இடுவது...
பக்குவ நிலை பிரித்துணர் கலை.

"யோகங்கள்" அவர் வாழ்க்கை தந்த
வரம்...!! உனக்கும் எனக்குமான தீர்வை
தேடும்  தவம்...!! வாழ்வை சமர்ப்பிக்கும்
பொதுநலம்..!!! வாழ்வதரிது நீயும் நானும்.

சுயம் தொலைத்து பிரபஞ்ச மறியும்
கம்பீரம்...! எத்துனை இடர் வரினும்
எத்துணை யுமின்றி அத்தனையும் தாங்கும்
தைரியம்...! வாழ்ந்துபார்  வலி புரியும்.

உடம்பை உயிரை துச்சமாக்கும் துணிச்சல்.
நாடி நரம்பை வரிந்துணரும் பேராற்றல்.
காமம் கலைந்தேகும் கம்பீர பேராண்மை.
பிரணவம் புரியத் துடிக்கும் பிரபஞ்சம்.

சுயநலம் துறந்த பொதுநல புரிதல்.
வாழ்வியல் அலசும் சோதனைக் கூடம்.
இயற்கையின் நாடிப் பிடிக்க தெரிந்த
நடமாடும் சூரியன் நாட்டு வைத்தியன்.

எளிதல்ல துறவு...!
எல்லாம் துறத்தல்
எளிதல்ல எளியார்க்கு...!
தன்னை துறத்தல்... துறவு..!
தன் மனம் துறத்தல் ... துறவு...!
தன் உடல் உதிர்க்காமல்....
தான் மட்டும் உதிரும்...
தற்கொலை....!
துறவு.

துறந்துப் பார்...!
துணிவிருந்தால்....!!

2 comments:

எஸ்.கே said...

வழக்கம்போல் சூப்பர்!

தமிழ்க்காதலன் said...

வாங்க எஸ்.கே, உங்கள் வருகையும் சூப்பர்.