Saturday, December 31, 2011

நலம் வாழ...!


எம் இனத்துக்கும் மண்ணுக்கும் ஏதேனும்
எள்ளளவு நன்மையேனும் கிடைக்க,- உள்ளத்து
வெளிச்சம் வெள்ளமாய் பெருக்கெடுக்க உயர்வான
எண்ணங்கள் உதிக்க வேண்டி வாழ்த்துக்கள்.

பள்ளத்து பாய்ந்து மேட்டினில் மிதந்து
நதியென நாமும் துன்பத்தில் பாய்ந்தும்
இன்பத்தில் மிதந்தும் வாழ்வியலில் உழலும்
வசமிழந்த மதிமயக்கம் தெளிந்து சுயம்தழைக்க

இளம்பிள்ளைகள் இனியாவது தெருவில் கையேந்தாமல்
முதியவர்கள் தெருவோரம் ஒதுங்கி கிடக்காமல்
காப்பகங்கள் இல்லாத தேசமாய்,- அன்பு
காக்கும் இல்லங்கள் இனியேனும் அமைய

உள்ளத்து அன்பு சுனையூற்றாய் பெருக்கெடுக்க
உள்ளமதில் உறையும் இறை உணர்த்தட்டும்
இங்கு யாவர்க்குமாம் ஓர் பச்சிலை
இங்கு யாவர்க்குமாம் ஓர் மருந்து

புரிந்து வாழ்வோர்க்கும் வாழ முயல்வோர்க்கும்
நன்நாளாய் அமையும் ஒருநாளை எதிர்ப்பார்த்து...



Saturday, December 3, 2011

”இதயத்தின் ஓரத்தி..!”


இதயத்தின் இடவலம் மாற்றிய இன்னமுதே..!
இனிக்க இனிக்க இன்பம் பேசிய என்னுயிரே..!
கனிந்து சுவைத்து ருசித்த காதல்
கசப்பாய் போகும் மாயம் என்ன..?

கண்களை திறந்தால் காதுகள் அடைக்கிறாய்
காதுகள் திறந்தால் கண்கள் அடைக்கிறாய்
உறுப்புகளால் உண்மைகள் தேடுகிறாய்...!
அறிவின் ஆற்றல் ஆற்றாமையாய் கிடக்கிறது.

இலவச இணைப்பில் எப்போதும் நானோ..!
இல்லாத பொழுதுகளில் ஊறுகாய் தானோ..!
சொல்லாத உணர்வுகள் கொல்லும் நினைவுகளை
பொல்லாத மனம் புரியாதது ஏனோ..?

மனதின் ஊடறுத்த உணர்வுகள் உனைத்
தேடும் வேதனை அறியாயோ..? தேடல்
யாவும் தெரிந்தும் ஓரமாய் ஒதுங்கும்
மர்மம்தான் என்ன..? மாறாயோ..?

இழப்புகள் ஒன்றே வழக்கம் என்றானபின்
இழப்பதையே பழக்கமாக்கி கொள்ள
பக்குவமில்லா மனதுக்கு பாடம் நடத்துகிறேன்.
பண்படாமல் அது தினமும் புண்படுகிறதே...!!

வார்த்தைகளில் வைரத்தை வைத்து என்
இதயத்தை கீறுகிறாய்...! - கொப்பளிக்கும் குறுதியால்
உன்பெயர் எழுதும் இதயத்தை என்செய்ய..?!
வலிகளில் வீழ்வதும் வலிகளில் வாழ்வதும்

வாடிக்கை என்றானபின் வேடிக்கை பார்க்கிறேன்
வேதனைகள் மறைத்தபடி....! நடக்கட்டும் நாடகம்.
நல்லதொரு முடிவுக்காய் கொட்டும் பனியிலும்
குடையின்றி காத்திருக்கும் சின்ன இதயத்தை

சிதையும் முன் காணாயோ....? என் பைங்கிளியே..!


Thursday, December 1, 2011

”இருக்கிறேன் என் இயல்புகளில்..!”



இயல்புகளில் இயல்பை இயல்பாய் காணாது
இயலாமையின் அறியாமையில் மிகுந்து மிதந்து
இயல்பு மாறும் பேதமையை என் சொல்ல..!


இதம் தந்த உறவொன்று
இடம் மாறும் நிலைக் கண்டு
தடம் மாறா மனம் தவிக்கிறது.


எதுவுமறியா குறைமதி கொக்கரிக்கும்
எள்ளலில் எகிறி குதிக்கும் இதயம்
எப்படி உணர்த்தும் ஈடற்ற அன்பை.


மாசற்ற திரவியம் மடிமேல் கிடக்க
மதிகெட்டு திசைமாறும் எதிர்திசை பயணம் ஏன்..?
மனம் தேடும் சொந்தம் மறுகும் மாயம் ஏனோ..?


கரைமீறா கடலென அலைமோதும் காதல்
கரையேறி கரையேறி உனைத்தேடும் தேடல்
காணாது போனாலும் கண்டு நீ போனாலும்


வாராயோ என்றேதான் உன் வருகைக்கு
காத்திருக்கும் விழிகளில் விழிநீர் இடும்
விழித்திரையில் விழுந்து உடைகிறது 


உன் பிம்பம் தினம் தினம்..! மாளாத
நேசத்தை விதைத்து விட்டேன்,- மாறாத
உன் வாசத்தை சுவாசித்து வாழ்ந்து விட்டேன்.


ஓயாத அலை ஒன்று உள்ளுக்குள் அலைமோதும்
ஒவ்வொரு விநாடியும் உயிர் குடித்தே அதுவாழும்
உன்னோடு ஒன்றாக ஒன்றிய காலங்கள்...!!


முன்னும் பின்னும் எனை மூழ்கடிக்கும்
எண்ணங்களை என் சொல்ல..! - ஆடும்
உன் மனதுக்கு இரையாகும் நம் சொந்தம்.


இழக்க எதுவுமில்லாதவன் பெற்ற செல்வம் நீ.
இதயத்தால் நேசித்த எனக்கான சொந்தம் நீ.
இன்னும் இருக்கிறேன் உயிரோடு உனக்காக..!!.