Friday, October 29, 2010

"நான்" தேடல்....!


மனசாட்சி : வணக்கம் தமிழ்க் காதலன். "நான்" யாரென்று புரிகிறதா?

தமிழ்க்காதலன் : எனக்குள் அரவம் போல் படமெடுத்தாடும் உன்னைப்           புரியாமலா..? "நான்" பற்றிய தேடல் எனக்கு வாழ்க்கையாகிறது. நான் என்பது நீயா? நீயாக இருக்க முடியாது என்பது என் எண்ணம்.

மனசாட்சி : என்னை யாராக நீ அடையாளம் காண்கிறாய்?

தமிழ். கா    : என் நிகழ்வுக்கும், நிசத்துக்கும் எதிரான இன்னொரு "துருவம்" நீ. என் தடுமாற்றங்களின் "தகப்பன்" நீ.  என் "தவறு"களை தவறாமல் சுட்ட .... என் "சரி"களின் மீது சவாரி செய்யும் வழித்துணை நீ. என் முன்னோர் வாய்மொழியில் .... "மனசாட்சி".

மனசாட்சி  : நானும் நீயும் வேறென்றா நினைக்கிறாய்..?

தமிழ். கா     : நிச்சயமாக.., நீ  நானாக இருக்க முடியாது. "நான்" என்கிற நானும் நீயாக இருக்க முடியாது.

மனசாட்சி  : எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய்..?

தமிழ். கா     :  நீ என்னைக் கவனிப்பது போல்.. நானும் உன்னை கவனித்திருக்கிறேன். உன்செயல்பாடுகள் உன்னை வேறாகத்தான் காட்டுகின்றன.

மனசாட்சி  : எப்படி..?

தமிழ். கா     : என் சுயங்களில் நீ பங்கு கொள்வதில்லை. அதாவது என் சிந்தனை, சொல், கற்பனை, செயல், இப்படியான என் இயக்க மூலங்களில் நீ இருப்பதில்லை. என் எண்ணங்களில் இல்லாத நீ என் எண்ணங்களுக்கெதிரான விளைவுகள் பிரதிபலிக்கும்  கண்ணாடியாக என் முன் நிற்கிறாய். நான் வேறு. நீ வேறு.
 

மனசாட்சி  : என்னால் உன்னை பிரதிபலிக்க முடியும்.

தமிழ். கா     : ஆயினும் நானல்லவே நீ.  பிரதிபலிக்கப் படுவது பிம்பம் ஆகும். நான் என்பது பிம்பம் அல்ல. பிம்பம் வேறு. பிம்பம் நிசமாக முடியாது. அதாவது மூலமாக முடியாது. நான் இருக்கிற போதுதான் நீ.  நீ பிரதிபலிக்க நான் வேண்டும். புரிகிறதா?.

மனசாட்சி  : ம்ம்ம்ம் ஆனால்.., நான் இல்லாத நீ எப்படி முழுமை அடைவாய்...?

தமிழ். கா     : நீ முழுமை என குறிப்பிடுவது எதை? முழுமை என்பது என்ன? எப்படி இருந்தால் முழுமை? இவ்வளவு காலம் என்னோடு நீ இருந்திருக்கிறாய். உன் கூற்றுப் படி....., இப்போது நான் முழுமையானவனா?

மனசாட்சி  : இல்லை. நீ முழுமை இல்லை. முழுமை நோக்கி நகரும்... அரைகுறை. முழுமை என்பது பூரணம். நிறைவு. மேலும் நிரம்ப முடியாதது. இனி எதுவும் தேவைப் படாத நிலை. முற்றல். எந்த நிலையில் இருந்தாலும் அது பரிபூரணம் என்றால் அதுதான் முழுமை.

தமிழ். கா    : அப்படியென்றால் நீ முழுமையா? நீ கூறுகிற முழுமை இங்கே எங்கே ... எதில் இருக்கிறது?

மனசாட்சி  : நீ சொன்னது போல் நானும் நீயும் வெவ்வேறான துருவங்கள் எனக் கொள். உன்னை முழுமையாக்க நான் காலியாக வேண்டும். அதாவது ஒரு காலிக்குடத்தை நிரப்பும் இன்னொரு முழுக்குடம் தானே காலியாவது போல். உன்னை முழுமையாக்க.... என்னை காலி செய்ய வேண்டும்.

தமிழ். கா      : அதை யார் செய்வார்?

மனசாட்சி   : சில நேரம் நீ. பல நேரம் நான்.

தமிழ். கா      : அப்படியானால் ... நீ நண்பனா? எதிரியா?

மனசாட்சி   : உனக்கெதிரான நண்பன் நான்.

தமிழ். கா      : நான் எப்போது முழுமையாவேன்?.

மனசாட்சி   : என்னைக் காலி செய்கிற போது? அல்லது நான் காலியாகிற போது.

தமிழ். கா      : நீ எப்போது காலியாவாய்...?

மனசாட்சி   :  நீ முழுமை அடைகிறபோது...!

தமிழ். கா      : ம்ம்ம்ம் முரண்பாடாய் தெரிகிறதே...?

மனசாட்சி   :  வாழ்க்கை.

தமிழ். கா      :  நீ எனது குறையா? நிறையா?.

மனசாட்சி   :  ஹ..ஹ..ஹ... அது என்னைப் பொருத்ததல்ல. உன்னைப் பொருத்தது. நீ குறையாய் இருந்தால் நான் நிறை. நீ நிறையானால் நான் குறை.

தமிழ். கா      :  சுருங்க சொன்னால் என் எதிரி.

மனசாட்சி   :  அப்படியில்லை. உடன் பிறப்பு. உன் மீது எனக்கு தார்மீக பொறுப்புகள் உண்டு.

தமிழ். கா      எனக்கு எதேனும் உன்மீது பொறுப்புகள் உண்டா?

மனசாட்சி   :  இல்லை.

தமிழ். கா      :  நீ எதற்காக என்னுடனேயே இருக்கிறாய்..?

மனசாட்சி   :  நான் இல்லாத நீ ... இருக்க முடியாது. அதனால்தான்..

தமிழ். கா      :  எப்படி சொல்கிறாய்?

மனசாட்சி   :  உனது இன்னொரு பாகம் நான். உன் அறிவின் தெளிவு நான். உன் குழப்பத்தின் முடிவு நான். உன் செயலின் சிந்தனை நான். நீ தடுமாறுகிறபோது உன்னை வழி நடத்துபவன் நான். மொத்தத்தில் உன் பின் புலம்.

தமிழ். கா      :  அப்படியானால் எனது செயல்களின் விளைவுகளில் நீ பொறுப்பேற்பாயா?

மனசாட்சி    : மாட்டேன். உன் பாவங்களில் எனக்கு பங்கில்லை.

தமிழ். கா       :  புண்ணியங்களில் உண்டோ..?

மனசாட்சி    :  நான் உன் பாவமோ.. புண்ணியமோ அல்ல.

தமிழ். கா       :  எதிலும் பங்கெடுக்காத நீ எதற்காக என்னோடு இருக்கிறாய்?

மனசாட்சி    :  வழிநடத்த...!

தமிழ். கா       :  எனக்கு வழி தெரியாதா?

மனசாட்சி     :  உன் வழிகளின் விளைவுகள் தெரியாது.

தமிழ். கா        :  என்னால் யோசிக்க முடியும்.

மனசாட்சி     :  எவ்விதமாய் யோசிக்க முடியும்...?.

தமிழ். கா        :  என் வாழ்க்கை, என் பாதை, என் பயணம் பற்றி, எனது தேவைகளுக்கான தேடல் பற்றி, என் செயல்களின் விளைவுகள் பற்றி.... யோசிக்க முடியும்.

மனசாட்சி      :  தெளிவாக யோசிக்க முடியுமா?

தமிழ். கா         : ( முறைத்து விட்டு ) தெளிவாகத்தான் தற்குறியே..!

மனசாட்சி      :  சரி. கோபப்படாமல் என் கேள்விக்கு பதில் சொல்....

தமிழ். கா         :  கேள்.

மனசாட்சி      :  உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

தமிழ். கா         :  உண்டு.

மனசாட்சி      :  பிரார்த்தனை செய்வாயா?

தமிழ். கா         :  செய்வேன்.

மனசாட்சி      :  எப்படி..?

தமிழ். கா         :  இறைவா..! எனக்கு நல்ல புத்தியை கொடு. நல்ல உடல், மன நலம் கொடு. நல்ல நண்பர்கள் கொடு. என் வாழ்வை வளமாக்கு. நான் பெரிய மனிதனாக வளர எனக்கு ஆசி வழங்கு..... இப்படியாக நீளும்...

மனசாட்சி      :  அதாவது எல்லாமே உன்னை முன்னிலைப் படுத்தி.

தமிழ். கா         :  ஆமாம்.

மனசாட்சி      :  சுய நலம்.

தமிழ். கா         :  இல்லை. இல்லை... பொதுநலத்துக்காக பிரார்த்திப்பதும் உண்டு.

மனசாட்சி       :  இறை மீதான உன் நம்பிக்கைகள் எப்போதும் நிலையானதா?

தமிழ். கா          :  ஆமாம். ஆனால், சில நேரம் சூழல்கள் பொருத்து இறை உண்டா? இல்லையா? என சந்தேகிக்கத் தோன்றும்.

மனசாட்சி       :  நம்பிக்கையற்றவன்.

தமிழ். கா          :  நம்பிக்கை உண்டு. சூழல்களின் மாற்றம் ஏற்படுத்தும் தடுமாற்றம். நம்பிக்கைகள் தகர்த்தெறியப்படும் வினாடிகளில் ..... உடைந்துப் போகிறேன். பிறகு என்னை உறுதிப் படுத்திக் கொள்ள மீண்டும் இறை நாடுகிறேன்.

மனசாட்சி        :  சுயநலம். சுயநலம் சார்ந்த சிந்தனை.... நம்பிக்கை. நம்பிக்கை உடைக்கப்படுகிற போது சுயநலம் உடைக்கப் படும் பயம். கடவுள் மீதான அவநம்பிக்கை.  நிரந்தரமான சுயநலத்தில் நிலையற்ற நம்பிக்கைகள். தெளிவில்லாத அறிவு. குழப்பமான மனநிலை.

தமிழ். கா           :  இங்கு சமூகம் மொத்தமும் இப்படித்தானே பழகி இருக்கிறது.

மனசாட்சி        :  தமிழ்க் காதலா... உண்மைப் புரிகிற போது உன்னை மாற்றிக் கொள்ள என்னத் தயக்கம்?

தமிழ். கா           :  சுயநலமில்லாமல் வாழத்தான் ஆசை. ஆனால் எப்படி?

மனசாட்சி        :  உனக்கு சுயநலம் எங்கிருந்து வருகிறது?

தமிழ். கா           :  வாழ்வியல் மீதான பற்றுதல்களிலிருந்து......, அனுபவிக்கும் ஆசைகளிலிருந்து..., தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலிருந்து...,

மனசாட்சி        :  இவைகள் நிறுத்தி விட்டால்...? அல்லது நிறுத்தப் பட்டால்...?

தமிழ். கா           :  உலக இயக்கம் நின்றுப் போகும்.

மனசாட்சி        :  உன் இயக்கம்...?

தமிழ். கா           :  என் இயக்கமும் நின்றுப் போகும்.

மனசாட்சி        :  தவறான கருத்து.

தமிழ். கா           : என்ன சொல்கிறாய்..?

மனசாட்சி        :  உன் சுயநலம் அற்றுப் போகும். அவ்வளவே. உன் பற்றுகளில் நீ விடுபட உனது ஆட்டங்கள் குறையும். முற்றிலும் விடுபட உனக்குள் ஆட்டம் இருக்காது. ஆனால் இயக்கம் இருக்கும். கவனி.  ஒரு பம்பரத்தை சுற்றுகிற போது என்ன நிகழ்கிறது என்பதை கவனி. முதலில் பம்பரம் தரையில் எகிறி குதித்து ஓடி தலையாட்டி சுற்றும்.  பின் தன் அச்சில் நேராக சீராக சுழலும் போது சிறு அசைவு தெரியும். பின்பு பம்பரம் சுற்றுகிறதா....! நிற்கிறதா....! எனப் புரியாத நிலையில் ஒரு இயக்கத்துக்கு வரும். அந்த இயக்கத்தின் வேகம் குறைகிற போது மீண்டும் தடுமாறி.... கீழே விழும். இதில் சுற்றுவது தெரியாமல் சுற்றுகிறதே .... அதுதான் நான் சொல்வது. அதாவது இந்த பூமி சுற்றினாலும் உனக்கு அது தெரிவதில்லையே. அது போல் இயக்கத்திலிரு. இயக்கம் நிற்காமல் பார்த்துக் கொள். ஆனால் ஆட்டம் போடாதே.

தமிழ். கா      : இப்படி இருக்க என்ன செய்ய வேண்டும்?

மனசாட்சி   :  உன் வரையில் சரியாய், சாதாரணமாய் இரு. பிறருடைய வாழ்வில் தலையிடாதே. ஆசைகள் குறை.

தமிழ். கா      : இந்த உலகில் இது சாத்தியமா?

மனசாட்சி   : சாத்தியமே. முயற்சி செய்.

தமிழ். கா      :  உலகம் என்னை "பைத்தியம்" எனப் பேசும்.

மனசாட்சி   : "ஆடும் பம்பரங்கள்".

தமிழ். கா      :  பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்?

மனசாட்சி   :  அற்புதமாய் இருக்கும். புரிந்து கொள். தேடல் நிறுத்து. ஆடல் நிறுத்து. தேடுவதும் ... ஆடுவதும் அல்ல வாழ்க்கை.  வாழ்க்கை என்பது தெளிவு. தெளிவுக்கு பின்னான அமைதி. அமைதிக்குப் பின்னான அன்பு. அன்புக்கு 
பின்னான காதல். காதலுக்குப் பின்னான கடவுள். புரிந்து கொள்.

தமிழ். கா       :  ( அமைதியாய்........ )        
*********************************************************

Wednesday, October 27, 2010

" நினைவுச் சுமை...!".

உதிர்ந்துப் போன உணர்வுகள்...!
கலைந்து போன கனவுகள்...!
மறந்துபோன ஞாபகங்கள்...!
யாவும் சுமந்த படி...
தனியொருவனாய்....!
தத்தளிக்கிறேன்...
தனித்த இரவில்...!.

உறக்கத்தில் வழிந்த
உதிரமாய்...!
திட்டாய்...!
திவளையாய்..!! ஆங்காங்கே...
உறைந்துக் கிடக்கும் நினைவுகள்...!

நீண்ட இரவின் இரகசியம் தேடி....
நெடியதொருப் பயணம்.
உணர்வற்றுப் போவதை விட
உயிரற்றுப் போவது மேல்...!

எண்ணங்களின் எச்சங்கள்...!
யதார்த்தத்தின் மிச்சங்கள்...!
இரண்டுமே என் வாழ்வில்...
உச்சங்கள்..!?
ஒன்று அகடாய்...!
மற்றொன்று முகடாய்...!
உயிர் விரும்ப வில்லை.
மனம் இரசிக்கவில்லை... என்றாலும்
நினைவின் பயணம் நிற்கவில்லை...!

இந்த இரவா...?
என் நினைவா...?
எது நீளம்...?
எது நீளும்...?
எனக்குள் ஒரு பட்டிமன்றம்.

நிறைமாத கர்ப்பிணியாய்,- என்
நெஞ்சம் கனக்கிறது.
உடலோடு ஒப்பிடுகையில் ...
உள்ளங்கை அளவுதான் என்றாலும்...
கனக்கும் சமயத்தில்....!
களிரின் எடை...!!

மிதக்கும் ஒன்றும்...
கனக்கும் ஒன்றும்...
மிகச் சமமாய் இருக்க முடியாது.
முரண்பட்ட அதிசயம் நிகழ்த்த
முடிகிறது என்னால்.

மிதக்கும் என் நினைவுகளும்....
கனக்கும் என் இதயமும்....
மிகச் சரியாய்.....
சமமாய்...!!

*********************************

Sunday, October 24, 2010

"மோனம்..."



யாருமிலா வனாந்தரத்தில்...
யாழிகள் உறையுமிடத்துக் கருகில்...
யாழிசைக்கிறேன் ...! என்னிசை


தந்த மயக்கம் யாருக்கோ...?
முதுமக்கள் தாழிக்கோ...?
வருடும் காற்றில் திணறும்...
உணர்வுகள் வடிக்கிறேன்.


குவிந்த மனமோ  இசைத் தியானிப்பில்...!
குவளையம் மறந்தே குதூகளம்.
காற்றில் கறையும் என் கானம்
காதில் வாங்கும் யாழிகள் இரண்டு.


முன் சென்மத்து யட்சன், யட்சனியாம்.
இந்த இசை எங்கள் பாவ விமோச்சனம்
இசைத்திடுக...! என்றனர். 


விழித் திறக்காமல்....
யாழிசைக்கப் பழகி....
விரல்களின் நர்த்தனம்...
மனம் படிக்கும் இரகசியம்...!


புல்தரையோ...! பொட்டல் வெளியோ...!
வாழிடமிட்டேகி.... வயல் பரப்பில்...
வந்து... வந்து வாழ்ந்துப் போகிறேன்...!


யானும்...என்
யாழும்...அதன்
இசையும்...! எங்களோடு  
இரண்டு யாழியாகிய...
யட்சன், யட்சனியும்....!


தனித்த என் மோனத்தில்
தவமிருக்கும்... வாழ்க்கை.
*********************************

"அவளை நினைத்து....!".



நுரைத் தளும்ப கரைப்புரளும் நதிமகள்...!
நரைத் திரை மூப்பிலா இளநங்கை...!
நந்தவனம் நடைபயிலும் அழகிய அசைவுகள்...!
நாளும் மனமேங்கும் உன் வரவுகள்..!

குலுங்கி சிரித்து குதூகளிக்கும் வனப்பில்
குழைந்து நெக்குருகும் இதயம் இன்னும்
கிரங்கி இங்கிதம் கருதி சொல்லப் படாத
காதலை சொல்ல கண்ணாடி முன்.....

ஒத்திகைப் பார்க்கும்...! தினம்.. தினம்...!
என்முன் எனக்கே வெட்கம்....உன்முன்
என்னாவேனோ?... எத்தனை நாள் காத்திருப்பு..!
நெஞ்சுக்கூடு எகிறும் பெருமூச்சில்...! வெப்புரைக்கும்

நாசியில் ....! வெந்து தணியும் ஆசைகள்...!
நயனப் நோக்குக்கே பசலைப் படுக்கை....!
நெளிச்சுழி அதரப் பேரழகில்.... உள்ளுக்குள்
நிகழும் பிரபஞ்சப் பெருவெடிப்பு யாரரிவார்..?

இலட்சம் முறை சொல்லிப் பார்த்தும்
இன்னும் சொல்லத் தயக்கம்....! எனை
சுயம் இழக்கச் செய்யும் உன்வசீகரம்...!
சுத்தமாய் செத்துப் போகிறேன் நானற்று....!

வேரற்ற வேம்பாய் விழும் என்னுயிர்...!
பரவசமடைந்த பக்தனின் நிலையில் வார்த்தைகளின்றி...!
விழிமூட விபூதி பூசும் பூசாரியாய் நீ...!
வியர்த்துக் கொட்டி விசும்புகிறேன் நான்..!

எப்படி? எப்படி? சொல்லிப் புரியவைப்பதென்
நேசம்...? சொல்லிப் புரிதலா?...சொன்னால்தான்
புரிதலா..? நீயாக...., நானாகும் வரை....
காத்திருக்கும் என் நேசம்... வேள்வியாய்...!

என்றாலும் எனக்குள் ஓரெண்ணம் கேள்வியாய்...?
எனக்கு நேர்ந்தது.... உனக்கு நேரவில்லையா...?
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டாம்...!
என்வினைக் கெதிரான எதிர்வினை உன்னிடத்தில்..!?.

Saturday, October 23, 2010

"துறவு...!".


பிட்சாம் தேஹி......!
பிட்சு ஆம் தேகி....!!
பிட்சுவாம் ஏகி.....!!!

பிண்டம் வளர்க்க
பிறன்மனை ஏகும்
பிரபஞ்சத் துகளின்....
பிரார்த்தனை...!

நின்ற இடத்து நிற்காது....
சென்ற இடத்தும் தங்காது....
நிலையற்று திரிதல்...!
நிலையற்ற வாழ்க்கையின்
நிதர்சனம் உணர்தல்....!
உணர்ந்தவாறு நடத்தல்...!!
நடத்தையினால் உணர்தல்....!!!

நினைத்தபடி வாழ்வதல்ல...
நிலைத்தப் படி வாழ்வது.
பிறன் நலன் விரும்புவது.
பேதமற்ற அன்பைப் பகிர்வது.

ஆடைக் கலைவதல்ல...!
ஆடைக் களைவதுமல்ல...!!
வீடு, பேறு ... வேண்டுவதல்ல...
விரும்பியது வேண்டி அலைவதுமல்ல...!!!.

காற்றின் நிலையறிந்து காலன் கதவடைத்து
இட வல கலையறிந்து நாசியின் நாளமறிந்து
உள்ளிழுத்து...உள்நிறுத்தி...வெளியிடும் சூசகமறிந்து
(சு)வாசிக்கும் நிலை "வாசி யோகமாம்".

அப்படி வாசிப்பவன் உன்னிடம் யாசித்தால்
அது உனக்கான வரம்...., யோசிக்காமல் கொடு.
பாத்திர மறிந்து பிச்சை இடுவது...
பக்குவ நிலை பிரித்துணர் கலை.

"யோகங்கள்" அவர் வாழ்க்கை தந்த
வரம்...!! உனக்கும் எனக்குமான தீர்வை
தேடும்  தவம்...!! வாழ்வை சமர்ப்பிக்கும்
பொதுநலம்..!!! வாழ்வதரிது நீயும் நானும்.

சுயம் தொலைத்து பிரபஞ்ச மறியும்
கம்பீரம்...! எத்துனை இடர் வரினும்
எத்துணை யுமின்றி அத்தனையும் தாங்கும்
தைரியம்...! வாழ்ந்துபார்  வலி புரியும்.

உடம்பை உயிரை துச்சமாக்கும் துணிச்சல்.
நாடி நரம்பை வரிந்துணரும் பேராற்றல்.
காமம் கலைந்தேகும் கம்பீர பேராண்மை.
பிரணவம் புரியத் துடிக்கும் பிரபஞ்சம்.

சுயநலம் துறந்த பொதுநல புரிதல்.
வாழ்வியல் அலசும் சோதனைக் கூடம்.
இயற்கையின் நாடிப் பிடிக்க தெரிந்த
நடமாடும் சூரியன் நாட்டு வைத்தியன்.

எளிதல்ல துறவு...!
எல்லாம் துறத்தல்
எளிதல்ல எளியார்க்கு...!
தன்னை துறத்தல்... துறவு..!
தன் மனம் துறத்தல் ... துறவு...!
தன் உடல் உதிர்க்காமல்....
தான் மட்டும் உதிரும்...
தற்கொலை....!
துறவு.

துறந்துப் பார்...!
துணிவிருந்தால்....!!

Friday, October 22, 2010

"என் இரவுகள்...!".


இரவை பகலாக்கும்
இனம் புரியா உணர்வுகளால்....!
இமைகள் இரக்கமற்று...
வேலை நிறுத்தம் செய்யும்
விழி மூடாமல்...!


உணர்வு உலைக்கலன்களில்
உணர்ச்சிகள் கொதிக்கும்
வெம்மைத் தாங்காமல்...!
வியர்வையாய்...
வெளிநடப்பு செய்யும்
நீர்த்திவலைகள்...!

உருண்டும் புரண்டும்.....
உறக்கம் வரா இரவுகள்....
எத்தனை எத்தனையோ...?
விடியற்காலையில்....
விழிமூடிய இரவுகளே....!
ஆயுட்காலத்தில்
அதிகமென நினைக்கிறேன்...!

ஒன்றை நினைத்து...
ஒவ்வொன்றாய் நினைத்து...
நினைவுகள் பின்னும் வலையில்...
உணர்வுகள் சிக்கித் தவிக்கும்.

சுவாசம் கூட மறந்துப்போகும்
சுய சிந்தனையால்....!
ஆழ்மனம் அமைதியின்றி.....
எங்கெங்கோ....!
நினைவுகள் சுற்றிப் படரவிட்டு...
நிலைக்குத்தி  நிற்கும் விழிகளில்...
பார்வையில்லாமல்...!

உணர்வற்ற நிலையில்....
உள்முகம் பார்க்கும் நினைவுகள்.
மனதைக் கொத்தித் தின்னும்
கொக்கிப் புழுக்களாய்....!
கேள்விகள்..?

விடை காணமுடியா கேள்விகளுக்கெல்லாம்....
விதியை நொந்து கொள்ளும் மனம்.
விடைத் தெரிந்த கேள்விகளால் மட்டும்
வாழ்வில் விளைந்த பயன்தான் என்ன...?

"கோடு...,"



ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாய்
ஒரேயளவில்...
ஒட்டாமல்..!!

அதேயளவில் அடுத்தடுத்து
ஒன்றையொன்று...
பாராமல்..!!

கிடைமட்ட கோட்டின் மேல்
வரையப்பட்ட பரவளையப்
புள்ளிகள்...
இதழ்கள்..!!

செங்குத்துக் கோட்டில்
சேர்ந்த முக்கோணம்...
நாசி...!!

என் தலை தாங்கும்
இடித் தாங்கி...
மயிர்கள்...!!

பக்கத்திற்க் கொன்றாய்
பாதியாய் விடப் பட்ட
அரைவட்டம்...
காது...!!

மேலிருந்து கீழ்
சமபங்காக்கும் கோடு...
உதர விதானம்...!!

இடமிருந்து வலம்
இரண்டாய்ப் பிரிக்கும்
நேர்க் குத்துக் கோடு...!!
இரண்டையும் இணைக்க
கிறித்துவ அடையாளம்..!

பெருந்தனத்தில் ஒரு
பிதாகரசு தேற்றம்..!

அடிவயிற்றில் ஒரு
அரைக் கோளம்..!

அதற்கு மேலே
சிறு வட்டம்..!
வியந்துப் பார்க்க...!
விடிவெள்ளி...!!
பிறை நிலா..!!!

செவ்வகத்துள்
சில சாய் சதுரம்..!
சேர்ந்தாற்ப் போல்
சில நாற்கரம்..!!

சில கோடுகளை
இணைக்கும் இட வலம்..
சில கோடுகளை கடக்கும்
மேல்கீழ் தளம்.
புள்ளிகளின் நீட்சி...
கோடுகளாய்...
புரிகிறதா தோழா..!?

Thursday, October 21, 2010

"அளவுக்கு மிஞ்சினால்..!" பாகம்-4



இறுகிக் கிடக்க பாறை...
இளகிக் கிடக்கும் நான்....
நெகிழ்ந்து கொடுக்க மணல்....
சிதறிக் கிடக்க கற்கள்...

என் தேகத்தின் உரோமங்கள் புற்கள்...!
நான் கையசைக்கும் விரல்கள் மரங்கள்...!
என் பெருமூச்சில் அலையும் மேகங்கள்...!
என் அசைவுகளில் மயங்கும் வான்காதலன்...!.

பலப்பல வடிவம் என்னில் யான்
பகல் இரவாய் பிறக்கும் பிறவி
திடங்களின் திடம் நான் கோள்களின்
கோலம் நான்...! காட்சி தரும் பிரபஞ்சம்...!.

சூனியத்தில் முளைத்த சூட்சுமம் நான்.
சூனியத்துள் விழுந்து எழுந்த விதை...!
சூரியக் கொதிகலனில் கொதித்து வந்த
பிரபஞ்ச பரிமாண கட்டுமானக் கலவை.

இருட்டு வெளியில் இறைந்து கிடக்கும்
துகள் கோள்களின் தூலம் நான்..!
பிரமாண்டங்களின் மூலம் பிரம்மன் படைத்த
ஞாலம்...! புரியாப் புதிரின் மையம் நான்.

கண்ணக் கடவுளுக்கு திண்ணக் கொடுத்த
திண்பண்டம் நான்...! கண்ணக் கடவுளைத்
திண்றவனும் நான்..! அவதாரங்கள் நிகழ
ஆதாரம், மூலங்களுக்கான பிரம்ம மூலம்.

மண்ணாகி... மண்ணே மற்றெல் லாமாகி
மலர்ந்து... மறைந்து நிற்கும் மாயா நான்.
புலர்ந்தப் பொழுதுகளின் காலக் கணக்கும்
புலராப் பொழுதுகளின் ஞாலப் பிணக்கும்

நானெனும் சூத்திரம் யாறரிவார்..? வாலன்
வகுத்த வரைவுக் கோளம் நான்.
வாய்ப் பிளக்க யாவும் மறையும்...!
கண்ணசைவில் கண்டங்கள் காணாமல் போகும்..!

நான்குவிதப் பூதங்கள் தாங்கும் என் பாதங்கள்.
நானில்லா நான்கில் ஞாலம் இல்லை...!
நாலிலும் பாவித்திருக்கும் நாதம் நான்.
நான் கருக்கொள்ள உயிர்க்கொள்ளும் உயிர்கள்..!!.

அறிவின் அமைவிடம் அன்பின் உறைவிடம்
ஆருயிர் வாழ்வேகும் ஆழிச்சூழுலகு நான்.
காற்றுக் கோள் வியாழன் என்கருதுகோள்..!
செவ்வாய் செம்மண் உயிர்ப்புணரா பொட்டல்வெளி..!!

உன்வதை நான் பொறுப்பேன்...! கோபத்தில்
என்வதை நீ பொறுப்பாயோ...! பிழைத்திருக்க
உன்பிழைப் பொறுக்கும் என் பெருமை
அறியா சிறுமைச் செயல் நிறுத்து.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
அறிவுப் பிழற்சியின் அடையாளம் நீ..!
ஐந்தறிவில் விளையா ஆபத்தை ஆறாவதறிவில்
விளைவிக்கும் விபரீதம் நிறுத்து..!

பிழைத்திருக்கும் மிச்சங்களை அழித்து விட்டு
பிழைத்திருப்ப தெப்படி? பிழை திருத்து.
பொல்லாக் கோபம் கொள்ளும் முன்..!!
பிரபஞ்சத்தில் நீ தூசென்ப துணர்..!

உருக்குலையும் மலை...!
கருக்குலையும் கடல்...!
சிதிலமாகும் மண் பரப்பு...!
சீற்றம் கொள்ளும் புறப்பரப்பு...!

என் கோபத்தில்...!?

நான் மண்...!
நீ....?

Wednesday, October 20, 2010

"இலையுதிர் காலம்...!"



அன்பே...!
உன் மீதான என்
நம்பிக்கைகள்....
நீரரித்த வேராய்...
பிடிமானங்கள்
அற்றுப் போய்...!

நித்திரை... நிம்மதி...
குலைக்கும்.....
அதிகாலைக் கனவின்
அசுப சகுனங்கள்....!

இன்றேனும்...
நாளைக்குள்ளேனும்.....
வருவாயோ....!
வாடிக் கிடக்கும்...
என்னைப் பார்க்க...!!

ஒருவேளை....
தாமதமான உன் வருகை...
தாமதமானால்....!
உன் நினைவில்
கறுகிய என்
உடல் காண்பாய்...!!

வருத்தப் பட்டு....
வருத்தப் பட்டு....
வற்றிப் போன
என் மார்பில்...!
ஒரு துளி ...
உதிர்த்துப்  போ..!

எப்பொழுதோ...
இழுத்தணைத்த...
உன்னிரு கரங்களுக்காய்...!
பன்னிரு வருட காத்திருப்பில்...
கரைந்துப் போன என் தேகம்...!
அடையாளம் காண்பாயோ...!

யாருக்கும் தெரியா மச்சம்...
மறக்காதே....மாமா...
நீ மட்டும்...
தனித்த நிலையில்.....
என் உடலம்....
பார்.!!

வேகாத என்
நெஞ்சுக்கூட்டை....!!
வெட்டியான்....
வெட்டுவனோ....?
சாகும் வரை.....
நான் சேமித்த உன் நினைவுப்
பொக்கிசங்கள்- அங்கே
நிரந்தர உயிர்ப்பாய்....!

ஈமச் சடங்கிலேனும்....
உன் உதடுகள்....
என் பெயர்
உச்சரிக்கட்டும்...!! 

*****************************

Tuesday, October 19, 2010

"அவள் அப்படித்தான்"...!


என்னைப் புரியாத நீ..!
உன்னைப் புரிந்த நான்...!
ஊடுறுவும் பார்வையில்...
உணர்ச்சித் தெரிப்புகள்...!

எகிறிக் குதிக்கும் எண்ணக்குதிரை
கடிவாளமிடப்பட்ட கண்ணியவானாய்
நான்... உன்முன்..!

என் நுனிநாக்கில் முடிச்சிட்டுக் கொள்ளும்
உணர்ச்சிகள் !.... மொழிப் பெயர்க்க
வார்த்தைகளின்றி.....
உன்முன்...
மௌனியாய் நான்...!.

உன் விழிக்கோள அசைவில்
என் இதய நரம்பில் ஏழு சுரங்கள்...!
வெட்கி சிரிக்கும்
வினோதச் சிரிப்பில்...
சுழிவிழும் இதழ்க்கடையில்
சிக்கித் தவிக்கும் நான்...!

சிதறி வெடிக்கும் சிந்தனையில்...
கதறி விழும்....
கவிதைகள்...!

எதுவும் புரியாதது போல் வார்த்தைகள்.
எல்லாம் புரிந்ததாய்.... உன்
சின்ன சின்ன அசைவுகள்..!
அர்த்தமாய் நர்த்தனமிடும் நளினங்கள்....!

எனைத் திண்ணாமல் திண்ணும்
உன் எண்ணங்களுக்கு
இரையாகிறேன் நான்...!
தினம் தினம்.

Sunday, October 17, 2010

"அக்கரைப் பச்சை...!!".


செம்மண் பிரதேசங்களில்
செழித்தப் புற்கள் தின்று
கொழுத்தக் காராம்பசு
"கெடாய்க்கு" ஏங்கும் காலம்...
மணப்பாறைக் காளை
மனம் விரும்பி கேட்டும்
மறுத்தப் பசு...
சிந்துவுக்கோ...
ஜெர்சிக்கோ....
வாலைத் தூக்கும்.

வேலியோரம் மேய்ந்து
வெயில் நேரம் வயலில் பாய்ந்து...
கருகருவென வளர்ந்தப் பயிர்...
குறுகுறுவென மேயும் வெள்ளாடு.
குட்டிப் போடும் காலம் வந்தால்
வெளிநாட்டுச் செம்மறிக்கே
"விருந்து" வைக்கும்...!
உள்ளூர் "ஆட்டுக்கடா"...
அவமானத்தில்....
உயிர்த் துறக்கும்.



மலையடிவாரம்....
மண் பிரதேசம்....
பொதிசுமந்தே பொழுது கழிக்கும்
கோவேறுக் கழுதை...!
குட்டிப் போடும் ஆசை வந்தால்,
அரேபியாவுக்கு ஆள் அனுப்பும்.
ஒட்டகம் வந்து...
"உரச"  வேண்டுமாம்...!

சிறுதானியம் தின்றுக் கொழுத்த
எங்கள் வீட்டுக் கோழிகள்....
கொக்கரித்துக் கூப்பிடுமாம்...
ஐரோப்பிய கொண்டை சேவல்...!
கூரைமேல்....
கூவும் உள்ளூர் சேவல்
கோபமாய்  குதித்து
தற்கொலை புரியும்.



எங்கள் மரக்கிளையில்...
கூடுகட்டி வாழும் அண்டங்காக்கை...
அண்ட விடுவதில்லை...
அடுத்த காக்கையை..!
அடுத்த தலைமுறையேனும்....
"வெள்ளையாய்" விரும்பி....
வெள்ளைக் காக்கைக்கு
விரதம் இருக்கும்...
"கறுப்புக் காக்கை..!".

புற்றீசல் கூட...
புலகாங்கிதம் தாங்காமல்...
இனச் சேர்க்கைக்கு....
ஈழம் அலைந்தேகுதாம்...!
பர்மாவிலிருந்து
பறந்து வரும்
இறகு முளைத்த எறும்பு தரும்
குறுஞ்செய்தி...!!.



குளம், குட்டை மீன்
தின்று திகட்டிய வெள்ளைக் கொக்குகள்...
கடலுணவுக்கு ஆசைப்பட்டு...
கற்பிழந்தன....!
வெளிநாட்டு நாரையிடம்.

முட்டையிட கூடு தேடி
இந்திய குயிலொன்று
இங்கிலாந்தில் அலையுதாம்...!
அடுத்த தலைமுறையின்
நிறம் மாற்ற..!!.

பிள்ளைப் பருவம் முதல்...
பிஞ்சுகளின் மழலை மொழி
"மம்மி..., டாடி"...!
பின் வந்த பருவத்தும்....
"காண்வென்ட் கூண்டுக்கிளி...!
பருவத்து ஆடை மாற்றம்...
ஐரோப்பிய ஆடை மாற்றும்...!!
ஆங்காங்கே....
அரேபிய.... வாடை வீசும்...!
கிஞ்சித்தும் "தமிழ்"ப்  பேசாக்
கிளி நாங்கள்...!
மஞ்சத்தில் மட்டும்....
தமிழனை.....!
தாங்குமா நெஞ்சம்...?.

இடைக்கும் தொடைக்குமான
மையப் பிரதேசம்.....
தொப்புள்....! எங்கள்
"தேசிய அடையாளம்"
தெரிந்து கொள்ளவே...
திறந்து காட்டினோம்.

புரிந்து கொள் தமிழா...!

I love America....
I love Europe....
I love England...

Not  You....
Naughty  Boy.


Saturday, October 16, 2010

"அளவுக்கு மிஞ்சினால்...!!". பாகம் 3.



சுழலும் பூமிக்கு சொந்தக்காரன் நான்
சுழலும் வேகத்தில் சூறாவளி..! புழுதித்
திரட்டி படை நடத்தும் புழுதிப்புயல்..!
மலையை முத்தமிட்ட மல்யுத்த வீரன்...!!


கடல் மீண்டு நிலமேகி நிலமீண்டு
கடலேகும் மென்நடைத் "தென்றல்"..!
கடல் வாரி நிலமிறைக்கும் வாளி
நிலம் கொண்டு கடல் தூர்க்கும்


கடலாடி..!! படகு உதைத்து கப்பல்
சிதைக்கும் விளையாட்டு...கடல்சீற்றம்.
சீறுமென் சினம் தாங்காப் பட்டினம்.
சிதறும் மரம் சிதையும் குடில்...!


ஒளிந்து விளையாட தோதான இடம்
மலை.. !! மருவிப் போகும் என்னை
மடக்கிப் பிடிப்பார் யார்? பூவுலகில்.
திரும்பி வந்து தாக்கும் குணமில்லை.

தாக்கினால் தாங்கும் புவி இல்லை.
முதுகில் குத்தும் பழக்கம் இல்லை.
என்முன் முகம் கொடுத்தார் யாருமில்லை.
வேறு வழியின்றி முதுகில் முத்தம்.

இயற்கையின் துப்புரவாளன் மாசு நீக்க
மழை வாரி இறைப்பேன்... காடு
வயல் தூசுத் துடைப்பேன்...கருமேகம்
வெண்மேகம் நானாடும் கண்ணாமூச்சி..!!

காலத்தின் சூலாயுதம்....! பாழ்பட்ட யாவும்
கலைப் பிடுங்கல் என் வேலை.
குலை நடுங்க கொதித்தெழும் வீரன்.
புவிக் காக்கப் புரியும் லீலை.

என்னை உரச தீப் பறக்கும்...!
நானுரச தீ ஊர் எரிக்கும்..!!
பாவிகள் உலகு சூழ்ந்த ஆவியுலகம்..!!
பருவத்தில் எனக்கும் பங்கு உண்டு.

பனங் காட்டிடை நடக்க சலசலப்பு...!
பகட்டாய் நதிக் கடக்க சிலுசிலுப்பு...!  
பருவத்தில் மழை தந்தால் கிலுகிலுப்பு...!
பனிப் போர்த்தி வந்தால் கிறுகிறுப்பு..!!

சங்கின் நாதம்... சந்தன நாற்றம்
புல்லாங்குழல் புகுந்தெழும் கானம்
சங்கீதத்தின் சுரம் யாவுக்கும் உயிர்..!!
ஒலிப் பரவும் ஊடகம்...!

உரக்கப் பேசினால் ஊதல்...
நளினம் காட்டினால் தென்றல்...
கரம் வீசினால் வாடை..
பயிர் கரம் பற்ற மருதம்...

குளிர்ந்த முகம் கொண்டல்...
ஆயிர மாயிரம் பேர் கொண்டேன்
ஆயிர மாயிரம் பேர் கொன்றேன்.
இப்புவிக்கு பாவம், பாரம் என்றால்.

ஐம்பூதத் துயிர் ஐம்பூத வுயிர்
ஐம்பூதத் துறை ஆருயிர்க் குயிர்
ஐம்பூதத் தோர் அருவம் ஆயின்
ஐம்பூதத் துருவம் கடந்தேகும் ஐயன்.

நான் காற்று...!!
நீ...?
**************************************

Thursday, October 14, 2010

"யார்...?".

கிடைமட்ட கோடு
கிடத்தி நேர்க்குத்து கோடு
கிழித்த பிளவின் விளைவு....
பிறவி..!!

அலை வடிவொத்து
நீள் குழல் அலைந்தேகி...
பிரபஞ்ச கருவாக
வால் நறுக்கி
துளையிட்ட தலை...!

கருக்குழி அடைத்தப்
கருவிழிக் கோளங்கள்...!
பார்வைக்கு பழகாத
இருட்டு உலகம்...!!

இறகாய் முளைத்த
இரு கை வீ சல்...
திரவத்தில் முதல்
நீச்சல்..!!

கால் நீட்டி மடக்கி
சுழன்றது... இந்த 

விண்வெளியின்
முதல் நடைப்பயணம்..!

கூம்புக்குள் குவிந்து...
கூடிப் பெறுகி...
வட்டக் கலசமுடைத்து
வந்தவழி வழிந்தோடி...
காம்புக் கழும் வாழ்க்கை..!!

தொடர்புக் கொடி
துண்டித்த...துறுத்தி..
கண் பார்த்த முதல்
ஆச்சரியக் குறி..!!

வட்டத் தட்டில்...
வாயுறுஞ்சுக் குழல்...!
திசுப் பெருக்க...
தசைத் தின்னும்
பசி..!!

என் பசிக்கு இரையாகும்
இன்னோர் சீவனின்...
இரத்த அணுக்கள்...!!
எனக்கும்...உனக்கும்
பால்...!!

மென்மையாய்
பெண்மை கொல்லும்
பெருந்தன்மை..!!
உணவருந்தல்...!?.

ஆயுதம் மறைத்து
அன்பு குழைக்கும்
ஆபத்தான இதழ்கள்...!!
பதிக்கும் பற்குறி..!!

பற்றும் தனத்தில்
பசியின் நகக்குறி..!!
ஆகாரத்திற்கான
ஆதாரத்தில் நங்கூரம்..!!

நழுவாமல் இருக்க
இடுக்கிப் பிடிக்கும்
கால்களுக்கிடை
நசுங்கித் தவிக்கும்
ஆண்குறி...!!
இடுப்புப் பிரதேசம்
ஈரமாக்கும்...!.

எங்கேயிருக்கிறது....
குழந்தைத் தனம்?.

நான்...
குழந்தையா..?
கொலையாளியா??.

****************************

Wednesday, October 13, 2010

"தீராத் தனிமை...!!"



நொடிக்கொரு நிலை மாறும் வாழ்க்கை
வெடிக்கும் உணர்ச்சி வெறுமை தாளாமல்
தனித்தே வாடும் என்னுயிர் எரிக்கும்
வெப்பத்தில் வெந்து தணியும் உடல்.

மிரட்டும் இருட்டில் மின்மினியாய் விண்மீன்
எத்தனை இரவுகள் எண்ணியும் தீரவில்லை.
தனித்த நிசப்தம்....! தண்ணீர்ப் பானை...!!
தணிந்த பாடில்லை என் தாகம்.

கைநரம்பு புடைக்கும்.., இனம் புரியா
இதயப் படபடப்பு.., இங்கும் அங்கும்
நடை பழகும் இரவின் தனிமை
இதழ் கிழிக்கும் கூரியப் பற்கள்.

உள்ளே நடக்கும் உணர்ச்சிப் பிரளயம்
என்னை கொல்லும் வேதனை புரியா
ஊரும் உறவும் கொள்ளும் உறக்கம்
யாரறிவார் என் புலராப் பொழுதுகள்?.

மெலிந்தேன்.. எலும்பே தோல் திண்ணுமளவு...!
நலிந்தேன்.. திசுக்கள் யாவும் தீர்ந்துப் போக..!!
குழைந்தேன்... நுரையீரல் சுவாசம் சுருங்க..!!
கரைந்தேன் கண்ணீர் வற்றிய கண்களில்...!!!

உணர மறுத்த உறவு..! எனை
முயங்க மறுத்த  நீ..!! உனை
மறக்க மறுத்த என் மனம்..!
யாவும் வெறுக்க முடியா நான்..!!

நரகத் தனிமையில் நான் மட்டும்
நாயாய் அலைகிறேன்....! நகரம் உறங்க..!!
வீடும் அலுவலகமும் பற்றி எரிக்கும்
விரக தாபம் சுற்றித் திரியும் நான்.

என்றோ உன்னைக் காதலித்த காரணம்
இன்னும் இன்னும் இறுக்கமாய்...எனக்குள்
என்றைக்கும்  தீராத... தாகம்..! உன்னோடு.
எங்கோ.. எதற்கோ... இன்னும் அலைகிறேன்.

( இந்த எழுத்து என் இனிய நண்பன் சிவாஜி சங்கர் என்கிற சிவாவுக்காக.)

********************************************************************************

Tuesday, October 12, 2010

"பொழுது".


விழும் பொழுதுகள் வீணாய்....! எனக்குள்
எழும் கேள்வி இலக்கில்லா  கணையாய்..!!
ஈழம் தொலைத்த தமிழனாய்....! தொண்டைக்குள்
விழுங்கும் துயரம்....!! துளிர்விடும் விழியில்.
=================================================
புலம் பெயரும் மனிதன் பூர்வீகம்
வலம் வரும் உணர்ச்சிக்  காதலாய்...!
நிலம் தொடும் உதட்டில் மண்முத்தம்..!!
கலமேறும் வேளையில் கடைசிப் பார்வை...
=================================================
தான்பிறந்த மண் பிரியும் வலி....!!
தண்ணீரில்  தடயமற்று விழுந்து தொலையும்
கண்ணீராய்  எண்ணம் சிதறும் என்னுள்..!!
வான்  அளந்த வள்ளுவமறியா  வேதனை..!!!
=================================================
பிறப்பிறப்புக்கு இடைப்பட்ட பெரும் பொழுதை
உறவு  விழுங்கும்  வாழ்க்கை கசக்க
துறவு மேலா..? உதிரத்துறவு மேலா?
மறக்கும் நினைவுகளில் மறிக்கும் பொழுதுகள்.
*******************************************************

Monday, October 11, 2010

"இருட்டு".


அண்டப் பெருவெளி யெங்கும் ஆதிமுதல்
ஆயிர மாயிரம் வெளிச்சப் புள்ளிகள்....!!
சுழலும் சூரியனாய்....! விண்மீனாய்..!! புகையும்
கூட்டம் எரிந்து சாம்பலாவது எனைவிரட்டித்தான்.

ஊழிக் காலம் தொட்டே விரட்டும்
முயற்சியில் அவர்களும்., அவர்கள் பேரர்களும்.
அவர்களின் மஞ்சள் வெளிச்சம் எனக்கு
மஞ்சல் நீராட்டு...!!

எனை விரட்டும் வெளிச்சத்தில்.....
அவிழ்ந்து விழும் அவர்கள் அந்தரங்கம்..!!
விலகுவது போல் விலகி விட்டுக்கொடுத்து
விரட்டிப் பிடிப்பது என் "மஞ்சுவிரட்டு..!!"

இப்போதும் நான் பூப்படைந்த பெண்.....!!
எப்போதும் எனை சுற்றும் "கந்தர்வ வெளிச்சம்".
தொட்டு விடத்தான் எப்போதும் துடிக்கும்.
இருண்ட பாழ்வெளியில் இதோ உன் பால்வழி.

தீப் பந்தம் ஏந்தி காலகாலமாய்....
கண்விழித்து தேடும் உன் தேடல் நான்.
என் காலடித் தடம் கூட காணவில்லை
உன் முன்னோர்.., காத்திருக்காதே நீயும்.

பூமியின் அந்தரங்கம் அரங்கேறும் என்னில்...!
உயிர்த் தேடலின் முடிவும் தொடக்கமும்..
என்னில்...! மனித சிந்தனைகள் மெருகேறும்
அர்த்த மண்டபம் நான்..!! கூடிக் குலாவும்

உயிர்கள் யாவும் விரும்பும் என்பொழுதுகள்.
என் குளத்தில் பூக்கும் ஆன்மாவின்....
அந்தரங்கப் பூக்கள்..!! என் வீணையில்
உங்கள் அபூர்வ ராகங்கள்...!!

உங்களின் தாவணித் தழுவல்கள்.., இமைத்
தேடும் கனவுகள்..., இரகசிய பேச்சுக்கள்
யாவும் என்மடியில்..!! உங்களின் இரகசிய
அம்பலம் நான்...!!! குறுகுறுப்புகள்.., கிறுகிறுப்புகள்

கிசுகிசுக்கள் பதியும் குறுந்தகடு நான்..!!
உங்கள் இன்ப உணர்ச்சியில் வெட்கி
குனிவது நான்..!! வெளிச்சம் தராது
தகிக்கும் உங்கள் உடல் வெப்பம்

விரக தாபம் விளக்கும் எனக்கு.
பாவம் செய்யா மனித வாழ்வு ...
"நித்திரை" ..! நிகழ்வது என் மடியில்.
மாலைப் பொழுதுகள் எனக்கு மாமன்முறை...!

வெளிச்சம் கொண்டு வரும் விடியல்கள்
என் பங்காளிகள்...!! வெளியெங்கும் நீக்கமற
நிறைந்த "கடவுள்" நான்..! விரட்ட முடியா
வினோதம் நான்..!

எப்போதும் இருப்பது நான் மட்டுமே.
எல்லைகளற்று விரிந்து கிடப்பது நான்..!
நீங்கள் தேடும் "கடவுள்" தேடும் பொருள் நான்..!!
உங்கள் சிந்தனைக் கெட்டா "சூனியம்"...
நான்...!!

நான் "இருட்டு".
..................................................,
நீ.....???.
*************************************

Saturday, October 09, 2010

"அளவுக்கு மிஞ்சினால்....!" பாகம் - 2.


வளைந்து நெளிந்து வனப்பு காட்டும்
வாலைக்குமரி..! மிகுந்து கரை உடைக்கும்
காளி...! தளும்பும் என் தளிர்
நடை தாதுப் பொருள் இடமாற்றம்.

உயிர்த்துக் கிடக்கும் உயிர்க்கு உணவளிப்பேன்..!
உணவளிக்கும் பயிருக்கு உயிரளிப்பேன்...!
சலசலத்து ஓடும் நான்.... சற்றே
சீறிப்பாய நிலைமாறும் பயிர் தலைசாயும்.

பாலைப் புகும் வேளை சோலை
ஐந்து நிலம் சமைப்பதென் வேலை
புனலாகி அனல் அணைக்கும் பாஞ்சாலி
எதிர்பாராமல் வந்து போகும் விருந்தாளி.

எதிர்த்தவர் தலை சாய்க்கும் அருந்த...தீ..!!
இசைந்து கொடுக்க அசைந்து கொடுப்பேன்.
என்முன் எழுந்து நிற்க வேரறுப்பேன்..!!
என் தடம் மாற வாழ்க்கைத் தடுமாறும்.

அடங்கி கிடக்க ஆழி...! ஆர்ப்பரிக்க
ஆழிப்பேரலை சூழும் நிலவுலகம்
நில்லாது போகும் யான்முகம் சுழிக்க..!
காடும், மேடும், கலமும் காணாது போகும்.

துகள் மிகப் பனி..! துளிமிக மழை...!
மழை மிக நதி...!! நதி மிக காட்டாறு..!
பொங்கும் புனல் தங்கும் கடல்..!!
கடல் வியர்வை காற்றில் நீராவி..!!

என் உருவ மாற்றத்தில் உலகின்
பருவ மாற்றம் .....! எனக்கில்லை பருவம்.
காலம் கணிக்கும் கணினி....நான்.
ஞாலம் துய்க்கும் ஞானம் நான்.

நான் நீர்...!!
நீ....??.
***********************************

Friday, October 08, 2010

"அளவுக்கு மிஞ்சினால்...!" பாகம் - 1.


குளிர்ந்த கோள்கள் குழம்பாகும்
சுற்றித் தீப் பிழம்பாகும்....,
பூதங்கள்
நான்கும் நானாவேன்,
நான் மட்டும்
தனித் தீவாவேன்...
ஐம்பூத ஒடுக்கம்.!


எரிப்பேன் எச் சத்தையும் அதன்

எச்சத்தையும் மீதம் வைக்காமல் மிச்சத்தையும்.

எரிப்பதால் எழும் புகையும்...எரிப்பேன்.

எதிர்ப்பதால் சூழும் பகையும் எரிப்பேன்.


விண்மீன்கள் விழுங்கும் வாய் எனக்கு

வாய்ப்பிருந்தால்.., எரி விண்மீன் எரிக்கும்

விழியெனக்கு. சூல் கொள்ள தாங்கும்

சூற்ப் பை இல்லை எனக்கு.


சூரியன் செரிக்கும் என் வயிற்றில்..!!
கோள்கள் நகரும் என் நரம்பில்...!!
இரத்தம் சிவப்பல்ல என் முன்...!!!

என் நாடி பிடிப்போர் எவருமுண்டோ..?


நான் இல்லாத சூரியன் கரும்பூதம்.

நான் இல்லாத பிரபஞ்சம் பாழிருள்.

நான் இல்லாத பூமி நரகம்.

நான் இல்லாத இயற்கை கொடுமை.


விதிக்கும் விளக்காவேன்..! உன்
விழிக்கும்
வழி காட்டுவேன்.. அணுக்குள்
அடங்கி
அண்டம் நிறைந்து கிடக்கும்
நான்
.....!!?

விதி முடிந்தால் பிணத்தை எரியூட்டுவேன்.


நான் நெருப்பு...!!!

நீ.....???
************************************************