Saturday, October 16, 2010

"அளவுக்கு மிஞ்சினால்...!!". பாகம் 3.சுழலும் பூமிக்கு சொந்தக்காரன் நான்
சுழலும் வேகத்தில் சூறாவளி..! புழுதித்
திரட்டி படை நடத்தும் புழுதிப்புயல்..!
மலையை முத்தமிட்ட மல்யுத்த வீரன்...!!


கடல் மீண்டு நிலமேகி நிலமீண்டு
கடலேகும் மென்நடைத் "தென்றல்"..!
கடல் வாரி நிலமிறைக்கும் வாளி
நிலம் கொண்டு கடல் தூர்க்கும்


கடலாடி..!! படகு உதைத்து கப்பல்
சிதைக்கும் விளையாட்டு...கடல்சீற்றம்.
சீறுமென் சினம் தாங்காப் பட்டினம்.
சிதறும் மரம் சிதையும் குடில்...!


ஒளிந்து விளையாட தோதான இடம்
மலை.. !! மருவிப் போகும் என்னை
மடக்கிப் பிடிப்பார் யார்? பூவுலகில்.
திரும்பி வந்து தாக்கும் குணமில்லை.

தாக்கினால் தாங்கும் புவி இல்லை.
முதுகில் குத்தும் பழக்கம் இல்லை.
என்முன் முகம் கொடுத்தார் யாருமில்லை.
வேறு வழியின்றி முதுகில் முத்தம்.

இயற்கையின் துப்புரவாளன் மாசு நீக்க
மழை வாரி இறைப்பேன்... காடு
வயல் தூசுத் துடைப்பேன்...கருமேகம்
வெண்மேகம் நானாடும் கண்ணாமூச்சி..!!

காலத்தின் சூலாயுதம்....! பாழ்பட்ட யாவும்
கலைப் பிடுங்கல் என் வேலை.
குலை நடுங்க கொதித்தெழும் வீரன்.
புவிக் காக்கப் புரியும் லீலை.

என்னை உரச தீப் பறக்கும்...!
நானுரச தீ ஊர் எரிக்கும்..!!
பாவிகள் உலகு சூழ்ந்த ஆவியுலகம்..!!
பருவத்தில் எனக்கும் பங்கு உண்டு.

பனங் காட்டிடை நடக்க சலசலப்பு...!
பகட்டாய் நதிக் கடக்க சிலுசிலுப்பு...!  
பருவத்தில் மழை தந்தால் கிலுகிலுப்பு...!
பனிப் போர்த்தி வந்தால் கிறுகிறுப்பு..!!

சங்கின் நாதம்... சந்தன நாற்றம்
புல்லாங்குழல் புகுந்தெழும் கானம்
சங்கீதத்தின் சுரம் யாவுக்கும் உயிர்..!!
ஒலிப் பரவும் ஊடகம்...!

உரக்கப் பேசினால் ஊதல்...
நளினம் காட்டினால் தென்றல்...
கரம் வீசினால் வாடை..
பயிர் கரம் பற்ற மருதம்...

குளிர்ந்த முகம் கொண்டல்...
ஆயிர மாயிரம் பேர் கொண்டேன்
ஆயிர மாயிரம் பேர் கொன்றேன்.
இப்புவிக்கு பாவம், பாரம் என்றால்.

ஐம்பூதத் துயிர் ஐம்பூத வுயிர்
ஐம்பூதத் துறை ஆருயிர்க் குயிர்
ஐம்பூதத் தோர் அருவம் ஆயின்
ஐம்பூதத் துருவம் கடந்தேகும் ஐயன்.

நான் காற்று...!!
நீ...?
**************************************

5 comments:

Chitra said...

ஐம்பூதத் துயிர் ஐம்பூத வுயிர்
ஐம்பூதத் துறை ஆருயிர்க் குயிர்
ஐம்பூதத் தோர் அருவம் ஆயின்
ஐம்பூதத் துருவம் கடந்தேகும் ஐயன்.


....... தமிழ் வார்த்தைகளில், ஒரு துள்ளலுடன் விளையாடி இருக்கீங்க....

எஸ்.கே said...

நல்ல நடை, அருமையான வரிகள்.

தமிழ்க்காதலன் said...

முதல் முத்திரைப் பதிக்கும் எனதினிய சகோதரி..., ( சித்ராவேதான் ), வாங்க.., ( நமக்குள்ள இந்த முகமன் முன்னுரை தேவையா என்ன? ) உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

முதல் வருகை தரும் எஸ்.கே க்கு வணக்கம். வாங்க.., உங்களின் பேராதரவு பெருக விழைகிறேன். கருத்துக்கு மிக்க நன்றி.

M.Kalidoss said...

இதயச் சாரல்,
இன்று திளைத்தேன்.
இன்னும் குளிர்கிறது.
இரவின் நடுவில்,
நட்டநடு நிசியில்,
கொட்ட விழித்திருந்து,
கத கதப்பாய், என் மனதை,
கவின் மிகு உன் கவிதைகள்,
கருத்தை பிசைந்து,
கங்குதனை எழுப்பிய
போருரான், இவன்
புலமை.யாம் மெய்மறந்து,
போற்றுதுமே!
வாழ்க !வளர்க!