Wednesday, October 21, 2009

"மருதோன்றி...! "


















என்னை கவிஞனாக்கினாய் …!
உன்னை கவிதையாக்கினாய்…!
என் கவிதைக்கு
நீயே கருப்பொருளானாய்.
என்னை கனவு காண செய்தாய் …
என் விழிகளில் கனவானாய்…!
கனவிலும் நீயே காட்சித் தந்தாய்.
என்னை பாடச் சொன்னாய் …
நான் பாடும் பாடலானாய் …!
என் பாட்டிற்கு பதமானாய் .

இப்படி -
நான் பாடும் கருப்பொருளும் …
நான் காணும் பருப்பொருளும்
நீயானாய் …!

மாயா …
விளக்கம் காண முடியா வார்த்தை.
விளங்கி விட்டது இப்போது .

நிற்கிறேன் …!
என் நிழலாய் சிரிக்கிறாய் …!
நடக்கிறேன் …!
என் அசைவுகளை – உன்
இசைவுகளாக்கி நகைக்கிறாய் !
சிரிக்கிறேன் ..!
சிரிப்பின் எதிரொலியாய்
என்னை சிதறடிக்கிறாய் …!
சிந்திக்கிறேன் ..
உன் சிந்தனையே நான்தானே …
நானில்லாத சிந்தனை உனக்கேது? -என
என்னை நிந்திக்கிறாய் .

நிதானமாய் …
நித்திரைக்கொள்கிறேன்
என் இரவானாய் …
என் இரவுகளின் உறவானாய் …!
விடியலாய் வந்து என்
விழி திறக்கிறாய் .
என் பகலானாய் …!
என் பகல்களின் பலமானாய் …!

நினைவுகளை நிழற்படம் எடுத்து
மனம் என்றாய் …!
எனக்குள் வெட்கம் என்னைத் தின்ன …
நினைவுகளை திரட்ட முயல ...
மனசாட்சியாய் மாறி எனைக் கொன்றாய் !

என் நினைவுகளை நீ படம் காட்ட
நிர்வாணமாகிறேன் நான் .
என்னை மறைத்துக்கொள்ள
என்னிடம் எதுவும் இல்லை.
என் எண்ணங்களையும் ஊடறுத்து ..
உன்னையே முன்னிறுத்தி …
என்னை வெற்றிக்கொண்டாய் …!
ஏன் என்று கேட்டால் …
உன் வெற்றியே நான் என்றாய் …!

சிந்தனைக்குள் உன்னை
சிறை பிடிக்க முயல்கிறேன்
என்ன விந்தை !
என் சித்தத்தை… நீ
சிறை பிடித்து …
முத்தத்தால் …
முகம் துடைக்கிறாய் …!
என் சிந்தனை குதியாட்டம் போடுகிறது .
நீயோ …!
என் சிந்தனைக்குள்
குத்தாட்டம் போடுகிறாய் .

கடைசி ஆயுதமாய் …என்
கர்வம் கையில் எடுக்கிறேன் .
உன்னைக் கட்டுப்படுத்த …!
ஒரு கண்ணசைவில் …
என் கர்வம் பிடித்தாய் .
உன் கட்டழகால் …
என் கர்வம் மிதித்தாய் …!
கட்டுண்டுபோனது என் கர்வம் .
நிராயுதபாணியாய் …
நிற்கிறேன் …!

கனிவாய்
ஒரு கைக்குழந்தையை
கையிலேந்துவது போல் …
எனை முழுவதும் ஏந்திக் கொண்டாய் …!
செய்வதறியாது … எந்த
செயலும் புரியாது …
உன் விழிகளையே …
வெறித்துப் பார்க்கிறேன் .
வெற்றியின் வெளிச்சப் புள்ளிகள் என்னுள் ..!
உன் கண்களில் ஒழுகும்
காதல் கண்டு கொண்டேன் .

ஒரே ஒரு பார்வை .
என் உயிரின் காதலை
உனக்குள் செலுத்தினேன் …!
சகலமும் என் காலடியில் போட்டுவிட்டு
சரணாகதியடைந்தாய் .

அடிப்பாவி !
என்னிலிருந்த என்னை …
எல்லாவிதத்திலும் வென்றவள் …!
உன்னிலிருந்த உன்னை
உணராமல் போய் விட்டாயே !
என்னிலிருந்த நீ …
என்னைவென்று உன்னை மீட்டெடுத்தாய் …!
இப்போது புரிகிறது …!
காதல்...!

எனக்குள் இருந்த நீ …
உனக்குள் இருந்த நான் …
அதனதன் பகுதி விகுதிகளை …
அதனதன் தொகுதிகளில் …
பத்திரப்படுத்திக் கொண்டன .

முழுமை பெற்ற நிலையில் …
மனம் இலேசாகிறது .
உடல் தூசாகிறது .
என் உயிருக்கு முன்னால் …
இந்த பிரபஞ்சம் புள்ளியாகிறது .

Saturday, October 10, 2009

* அழகு + அவள் = கண்ணீர் ! *



உதிரும் உன்
ஒவ்வொரு கண்ணீர் துளியும் …
உன் துயரம் சொல்கிறது ..!

துடைக்கத் துடைக்கத் தொடரும் …
துளிகள் …உன் ..
துயரத்தின் உயரம் சொல்கிறது !
நினைக்க …நினைக்க …இதயம்
கனக்கும் நினைவுகள் ..!உன்
விழிகளில் நிழலாடும் கனவுகள் ..!
விம்மி புடைத்த நாசிகளுக்கு அருகில் ...
விதி வசத்தால் …
விழுந்து கொண்டிருக்கும் ‘நயாகரா ’..!

அழுது பழுத்த கன்னங்கள் ..! அதில்
கண்ணீர் அழுந்த பதித்த உன் எண்ணங்கள் !
வழிந்தோடும் விழி நீரின் வழித்தடம் வழியே…
நீ வாழ்ந்த வாழ்க்கைத் தடம் தெரிகிறது !.
உகுத்து கொண்டிருக்கும் கண்ணீர் வழியே ..
ஊடறுத்து முந்தி தெறிக்கும் ...
உணர்ச்சிகள் புரிகிறது !
சுவாசத் திணறலுக்கு மத்தியில் … உன்
வாச திணறல் தெரிகிறது …!
சுருங்கி விரியும்
நெற்றியின் மத்தியில் …
காலம் தன் கால்தடம் பதித்த
காட்சித் தெரிகிறது !

வரிப் பள்ளங்களா ..! அன்றி …
வாழ்க்கைப் பள்ளங்களா ?
காலம் உனக்குள் வெடித்த
அனுபவப் "பொக்ரான்கள்"…உன்
மௌனம் கிழித்தெறியும்
மகத்தான முயற்சியில் …
தொண்டைக்குள் ஒரு …
தொடர்வண்டி ஓட்டம் தெரிகிறது !
கால வெள்ளம் ஏற்படுத்திய கரைகளை …உன்
கண்ணீர் வெள்ளத்தால் கழுவுகிறாய் …!

கால வெள்ளத்தால் …எழுந்த
கண்ணீர் வெள்ளம் …
கைரேகை கன்னத்தில் பதிய
கரங்களால் நீ துடைத்தெறிவது …?
கடந்த காலத்தையும் ..!
நிகழ்ந்த துயரத்தையும் ..!

விளிம்பு சிவந்து
புடைக்கும் நாசியில் …
விதியை வெல்லும் …
தன்னம்பிக்கை தெரிகிறது ..!
உள்ளக் கிடங்கில் ..
உறைந்து கிடக்கும் ..
உண்மைகளை ….
இறந்த காலம் சேமித்து வைத்த
நினைவு சேமிப்புகளை …
நிகழ் காலம் …
நிழற்படம் காட்டாதிருக்க …
நீ காட்டும் முயற்சி புரிகிறது ! உன்
வாழ்க்கை சுழற்சி புலப்படுகிறது !.

'கண்ணாடி முன் நின்று கொண்டு …
“பிம்பம் காட்டாதே ”..என்பது போல் ’…
மனதுக்கு முன்னால் ...
மண்டி இடுகிறாய் ..!
மன்றாடுகிறாய் ..!
எல்லோருக்கும் முன்னால் …
தலைகுனிய …
எவருக்குத்தான் மனம் துணியும் ?!

அன்பை ...! அன்பிற்காய் ...
சுவாசிக்காத வரை …
நினைப்புக்குள் நிம்மதி என்பது …
"தனி ஈழ 'தமிழ்' போர்தான்" …!

Friday, October 02, 2009

"எட்டா சிகரம்...!"




சுற்றி சுழன்றடிக்கும்
சூறாவளியால் …
நங்கூரம் நகர்ந்து ,
தகர்ந்துபோன
கப்பல் …
கட்டுப்பாடிழந்து
கரை ஒதுங்கும்போது
தரை தட்டி …
தானாய் நிற்ப்பது போல்
வாழ்க்கை சூழலில்
சுழன்றடிக்கும் சூறாவளியால்
ஏற்றமிகு எண்ணங்கள் …
ஏக்கமிகு இலட்சியங்கள் …யாவும்
நிசம் தட்டி நிற்கின்றன .

நினைப்புக்கும் நிசத்துக்கும்
இடையேயான இடைவெளி
ஆணுக்கும் பெண்ணுக்குமான
நட்புக்கும் கற்புக்குமான
இடைவேளிபோல் …
இனம் காண முடியா
மென்மை கொண்டிருப்பதால் …
மனம் அடிக்கடி அலைபாய்கிறது .

நினைப்புக்கும்
நிசத்துக்கும் நடுவே
உயிரை உறைய வைப்பதும்
மனதை சரிய வைப்பதும் …
வாழ்க்கைக்கு வாடிக்கையாகிப்போனது .

நினைப்பை சீர்செய்து ,-என்
நிலையை சரி செய்யும் முன்பே
அடுத்தடுத்து … அடுக்கடுக்காய் …
அலைகழிப்புகள் …
அனுபவ வகுப்புகள் ..!!!
தொடர்ந்து வரும்
வாழ்க்கைத் தொடரில்
தொடர்ச்சியாய் வரும்
தோல்விகள் …!!!
ஒவ்வொரு தோல்வியிலும் …தொடரும்
மட்டுமே ..அனுபவமாகிறது .
தொடர் தோல்விகளுக்கு
முற்றுப்புள்ளி..... ??!!.

தொட்டபெட்டா சிகரம் அளவுக்கு
உயர நினைப்பவனுக்கு
உயரம் மட்டும்தான்
கிட்டவில்லை ..!
தொட்டபெட்டாவை போல்
அடுக்குகளுக்கு குறைவில்லை .
அனுபவ அடுக்குகளுக்கு
குறைவில்லை .
உயரம் மட்டும்
உள்நோக்கிப் போகிறது ..!!!

"கனவல்ல நிசம்..!"



கனவல்ல நிசம் …
கனவல்ல நிசம் …
என் காதல் …!

விழிமூடும் வேளை வந்து
விடியலில் கலைந்து போக
கனவல்ல நிசம் …
என் காதல் …!

கதிரொளி பட்டு
கலைந்து போகும்
பனித்துளியாய்
கலைந்து போக
கனவல்ல நிசம் ...
என் காதல் …!

தொலைதூர பார்வைக்கு
தோன்றி மறையும் ...
கானல் நீர் போல்
மறைந்து போக
கனவல்ல நிசம் ...
என் காதல் ..!

பற்றிக்கொண்ட நெருப்போடு
பறந்து போகும்
கற்பூரம் போல்
கரைந்து போக
கனவல்ல நிசம் …
என் காதல் ..!

வானில் வர்ணம் காட்டி வளைந்து
வானவில்லாய் தொலைந்து போக
கனவல்ல நிசம் …
என் காதல் …!

பாய்பொருள் மேல் மிதக்கும்
பருப்பொருள் எடை குறையுமாம் …!
கண்ணீரில் மிதக்கும் என்
இதயம் கனக்கிறதே …!
கனவல்ல நிசம் …
என் காதல் ...!!!

"அதிர்ச்சி..!"


உதிரம் உறைய வைத்து விட்டு
உணர்ச்சிகள் மட்டும்
உடலெங்கும் ஓடவிட்டு
நரம்புகள் தகர்த்தெறிந்து ,-என்
எலும்புகள் உடைத்தெறியும்
உன் பிம்பம் …
விழுந்த என் விழித்திரை
உணர்ச்சி கடத்தா பொருளாய்
உறைந்துபோக …
மின்னல் தாக்கிய மரமாய் ..
உன் எண்ணம் தாக்கிய நான்
உறைந்து போகிறேன் .
விண்வெளி இருட்டுக்குள்
விழி இழந்த
சந்திராயன் போல்
எனக்குள் தொடர்பற்று
தொலைந்து போகிறேன் நான் .