Tuesday, November 30, 2010

"காணாமலே"....!


இனிய என் உறவே........
கண்ணிமைக்கும் காலத்துக்குள்
காணாத உன்மேல் காதல் வர.....
காரணமென்ன......?

நெஞ்சமே.....நீ
நெடும் பொழுதை
அவள் நினைவில் கழிக்க வேண்டிய
அவசியம் என்ன......?

நீ யாரென எனக்கும்....
நான் யாரென உனக்கும்....
எதுவும் தெரியாமலே......!
எழும் வேட்கையின்
மூலம் எது....?

நீ என்பது.......
என் வரையில்........
எதுவாகவுமில்லை.
நீ பெண் .......
என்பது தவிர.....!!

எந்த கோட்டையும்
இதுவரை கட்டாத எனக்கு
"காதல் கோட்டையும்"
கைவரக்கூடுமோ...!?

நெஞ்சை அழுத்தும்
உன் நினைவுகள்....
உன்னை "வல்லினம்"
என்கிறது.

என் இரவை அடைகாக்கும்
உன் நினைவுகள்....
விழிகளில் விழுந்த
"உரோமமாய் உறுத்துகிறது"....!

எங்கோ இருந்து கொண்டு
என்னை உன்வசப் படுத்த
எப்படி கற்றாய்...?
உன் ஈர்ப்பு விசைக்கு
எதிரான என் விசைகள்
காந்தத்தின் முன் இரும்பாய்.......
உன் பக்கமே என்னை
இழுக்கின்றன........!!

புரிந்து கொள்.
பிரியமே........!!
சின்னதான ஒரு அன்பு
அணுகுண்டாய் "என் இதயத்தில்"
துளைக்கும் வண்டாய்
துளையிடுகிறது.

உனக்கென்ன......
உணர்ச்சி ஊமை.... நீ..!
உனக்கும் சேர்த்தல்லவா
எனக்குள் போராட்டம்....!!

நீ பேசும் வரை....
மௌன விரதம்....
வாய்க்கு மட்டும்...!!
உணர்வுகளை கொண்டொரு
"பட்டிமன்றம்"
உள்ளுக்குள்....!

சொல்....!
நீ.........
என்னவளா......?

"பிரமை....!"


பின்னிரவு தாண்டியும்...
பின்னியபடி கால்கள்...!
பின்னந் தலைக்கு....
தலையனைக் கைகள்...!
புரண்டு படுக்க
முரண்டு பிடிக்கும் மனம்...!
பிசுபிசுக்கும் நினைவுகளில்....

தனியொரு இரவை
தனியொரு மனிதனாய்....!
தவிர்க்கத் துடிக்கிறேன்...
தண்ணீர்க் குடிக்கிறேன்...!
இரவுக்கு பின்னும் நீளும் என்
உறவுப் போராட்டம்...
உணர்வுப் போராட்டம்...!!

சூழும் மயான மௌனத் தீயில்
பாழும் மனம் சிதை எரியும்...!
எழும் தனிமை எரிக்கும் ரணம்
தழும்பாய் நிலைக்கும் என் தனிமை...!!

நிழலுருவம்  ஒன்று
எனைப் பார்ப்பதாய்.....
என்னையே சுற்றி வருவதாய்...! இரவில்...
ஏற்படும் பிரமை...!!,
நிசமாக இன்னும்
எத்தனை நாள் கடும் தவமோ.....?

Monday, November 29, 2010

"வாழ்க்கை...!"வனாந்தரங்களில்...
அலைகழியும் வாழ்க்கை
மணற்  புயலாய்....!

புழுதிப் பெருவெளியில்...
ஒண்டிக் குடித்தனம்
நடத்திக் கொண்டிருக்கும்....!
தனிமரம் முகம் சுழிக்கும்
அலைப் பரப்பில்....
காலத்தின் நினைவலைகள்....!
கால்தடம் பதிந்த
மணற்பரப்பு.

நீருக்கு அலையும்
வேருக்குள் தாகம்...!
நிலத் தகர்ப்பில்
நீளும் வாழ்க்கை...!!

மணல் முகட்டில்
தகதகக்கும் அழகொளியில்
கேட்பாரற்று கிடக்கும்....
வாழ்க்கை.....!!

சுனைத் தேடும் ஒட்டகத்தின்
சுவாசத்தில்....!
உயிர்ப்பின் தேடல்
காற்றாய் கரைகிறது...!!

தங்கத் தட்டில்
மரகதம்
மணல்வெளியின்
புல்வெளி...!!
பசுமையாய் வாழ்க்கை....
படர்ந்து கிடக்கிறது...!!

மார்பில் ஒளியொழுகும்....
மணல் மலைகள்...!!
திங்கள் ஒளி மணல்வெளியில்...!!
திறந்து கிடக்கும் வாழ்க்கை....
திருட யாருமின்றி...!!

பகலும் இருளுமாய் வாழ்க்கைப்
பறிமாற்றம்....!
பாலையில் பாலொழுகும்
பால் நிலா...!!
காய்ந்து கிடக்கிறது.....
கவனிப்பாரின்றி...!!

கருமேகக் கைகுலுக்களில்
கவின்மிகு ஓவியங்களாய்
ஒளிந்துக் கிடக்கிறது....
வாழ்க்கை....!
திறந்து பார்க்க யாருமின்றி...!!


Sunday, November 28, 2010

"பொற்கிழி சிவனும், தரும அடி தருமியும்"


சிவன் : எவனடா இங்கே எனது தருமியின் துறை மீது குற்றம் கண்டு பிடித்தது....?
 

அரசன் : அவையில் "சபை மரியாதையுடன்"  பேசவும்..., அவன் இவன் என ஏக வசனம் வேண்டாம்.
 

சிவன் : மைனாரிட்டிகளை  சேர்த்துக் கொண்டு "மெஜாரிட்டி" என சொல்லிக் கொள்ளும் நீர்ப் பேச வேண்டாம் மரியாதைப் பற்றி...., அமைதியாக அமரும். தருமி.... "உன் திட்டத்தை"  குற்றம் கண்டு பிடித்தவன் எவன் எனக் காட்டு..., இந்த கூட்டத்தில்...,
 

தருமி : "எதிர்க் கட்சிகள்" சொக்கா.... குறிப்பாய் சொன்னால்... சுப்ரமணிய சுவாமி......
 

சிவன் : ( ஒரு கணம் பயந்து....) அடேய்... அடேய்... என் மகனிடமே என்னை வம்புக்கு இழுத்து விட்டாயே படுபாவி....., அவன் சிறுவயதிலேயே எனக்கு "பாடம்" நடத்திய வாத்தியார். அவனிடம் என்னை மாட்டி விட்டுட்டியே..... உன்னை நம்பி நான் வந்திருக்க கூடாது.
 

தருமி : சொக்கா... இது உங்கள் மகன் இல்லை. இது இந்திய அரசியலின் "சரவெடி" சுப்ரமணியசுவாமி..., பயப்படாமல் பேசுங்கள். ம்..ம்..ம்..
 

சிவன் : அடேய்... பேர் இராசியப் பார்த்தியா..! இந்த பேரை வக்கிரவன்லாம்...... கேள்விக் கேக்குராண்டா. இனிமே பூலோகத்துல யாருக்கும் இந்த பேர வைக்க கூடாதுன்னு மேலோகத்துல சட்டம் போடனும்.
 

தருமி : சொக்கா... ஒங்கொக்க மக்கா... வந்த வேலையைப் பாரும்...ம்..ம்..ம்
 

சிவன் : "என் நம்பிக்கைக்கு பாத்திரமான" இந்த தருமி மீது எதிர்க் கட்சிகள் என்ன குற்றம் கண்டுப் பிடித்தன....? குணத்திலா...? நடத்தையிலா...?
 

நக்கீரர் : குணத்தில் குற்றம் இருந்தால் அது மன்னிக்கப் படலாம். நடத்தையில்தான் குற்றம் இருக்கிறது.
 

சிவன் : யார்... யார்.. இவன்....? என்னையே எதிர்த்துப் பேசுபவன். நான் உருவாக்கிய கூட்டணியடா இது...
 

அரசன் : சொக்கா இவர் எதிரணி.... சற்று மரியாதையாகப் பேசவும். மானம் போய் விடும்.
 

சிவன் : ம்..ம்.. நீர் அமரும் மங்குனி.. நான் பார்த்துக் கொள்கிறேன். ஓ.... நீர்தான் அந்த "சாமியா"..?
 

நக்கீரர் : நான் அந்த சாமியல்ல.... "கந்த சாமி".
 

சிவன் : ம்..ம்ம்ம். ( என செருமி விட்டு ) சரி தொடங்கிய பிரச்சனைக்கு வாரும். என்ன குற்றம் கண்டீர்..?
 

நக்கீரர் : உங்கள் அமைச்சரின் கீழ் இயங்கும் இலாக்காவில் "ஊழல்" நடந்திருக்கிறது. அதற்கு அவரும் உடந்தை.
 

சிவன் : "ஊழல்" யூ மீன் "கையூட்டு"...ஹ..ஹ..ஹ...ஹ... வெட்கம்.. வெட்கம்..., ஊழல் பற்றி யார் பேசுவது...? உங்களில் எவன் ஊழல் செய்ய வில்லையோ அவன் பேசட்டும் ஊழல் பற்றி......
 

அமைச்சரவை : ( மயான அமைதியில்....எல்லார் தலையும் குனிந்த படி )
 

நக்கீரர் : நான் இருக்கிறேன்.... எனக்கு பதில் சொல்லும்...?
 

சிவன் : என் எதிரணியோடு "கை" கோர்த்துக் கொண்டு "பார்ப்பனீயம்" பார்க்கும் நீயா என்னைக் கேள்வி கேட்பது...?
 

நக்கீரர் : "கை" கொடுப்பது... பின் கால் வாரி விடுவது... இதெல்லாம் எனக்கு தெரியாது.... கூட்டணி சூத்திரமெல்லாம் உமக்குத்தான் அத்துப்படி.. திராவிடன் பெயரை சொல்லி திராவிடனையும், பார்ப்பான் எனச் சொல்லி பார்ப்பனரையும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாற்றுவீரோ....?
 

சிவன் : ( மனதுக்குள்.... அடேய் உண்மையை பேசுகிறானேடா....) சரி..சரி... என்ன ஊழல் என விளக்கமாக சொல்லும்?
 

நக்கீரர் : ஏன் உங்கள் நம்பிக்கை நாயகன் சொல்லவில்லையோ....? பிறகு என்ன வக்காளத்து வேண்டியிருக்கு...? சரி சொல்லித் தொலைக்கிறேன். அலைக்கற்றை ஏலம் விடுவதில் ஊழல்....செய்திருக்கிறார் தருமி...
 

சிவன் : எப்படி...?
 

நக்கீரர் : ங்கொய்யால... உசுர வாங்குரான்யா...., ஐயா பெரியவரே, அரசாங்கத்துக்கு நியாயமா கிடைக்க வேண்டிய இலாபத்தை குறைத்து .., குறைந்த விலைக்கு சில நிறுவனங்களுக்கு விற்றிருக்கிறார் உங்கள் அமைச்சர்...
 

சிவன் : அரசே.. இதற்கு உம்முடைய பதில்...?
 

அரசர் : இதெல்லாம் "அசின்"   கொள்கைகள் தலைவா.
 

சிவன் : என்னது அசினா...? எனக்கு தெரியாமல் இங்கு இப்படியெல்லாம் நடக்கிறதா?
 

அரசர் : இல்லை..இல்லை.. வாய் தவறி விட்டது தலைவா..., "அரசின் கொள்கை" என முன்பே விளக்கமளித்து விட்டேன் தலைவா...?
 

சிவன் : அப்புறமென்ன .... விசயத்தை கமுக்கமாக முடிக்க வேண்டியதுதானே... என்னை ஏன் அலைகழிக்கிறீர்...?
 

அரசர் : அதுவந்து.... நமக்கும் மேல ஒருத்தர் ஆப்பு வச்சுட்டார். அதான்....
 

சிவன் : யாரு விஷ்ணுவா....? அவர் என் மைத்துனராச்சே...
 

அரசர் : இல்லை.... இல்லை...., இது "சுப்ரீம் கோர்ட்" என்கிற தர்ம ராசா...
 

சிவன் : அவர்களுக்கு இதில் என்ன வந்ததாம்....?
 

நக்கீரர் : நாட்டின் மீதும்..., நாட்டு மக்கள் மீதும் உள்ள அக்கரை....
 

சிவன் : "துரோகி"...? நம் கொள்கைக்கு எதிரானவன்....
 

அரசர்  : என் தலை போய்விடும் போலிருக்கிறது.... ஏதாவது செய்யுங்கள்....
 

சிவன்  : ஏ கந்தசாமி.... ஊழல் என்றாயே... அது எவ்வளவு... ரூவான்னு சொல்ல முடியுமா...?
 

நக்கீரர் : ஏன் உங்கள் அமைச்சர் உங்களிடம் உண்மையை கூறவில்லையா...? சரி சொல்கிறேன்... ஊழல் மதிப்பு... ரூபாய். 1.76 இலட்சம் கோடிகள்.....
 

சிவன் : அம்மாடி........ ( நெஞ்சைப் பிடித்துக் கொண்டு...) அடேய்.... தருமி... ஏமற்றிவிட்டாயேடா...., என்னையே ஏமாற்றிவிட்டாயேடா...., என் பிள்ளைகளை விட எமகாதகனடா நீ...
 

தருமி : சொக்கா... அவன் பொய் சொல்கிறான்... அவன் சொல்லும் தொகை நான் வாங்கிய இலஞ்சமில்லை. இந்திய அரசுக்கு நம்மால் ஏற்பட்ட இழப்புத் தொகை....  அவ்வளவுதான்... என் மூலமாக நம் எல்லோருக்கும் கிடைத்த இலஞ்சம் ரூவா. 60,000  கோடிகள் மட்டும்தான் தலைவா...?
 

சிவன் : ( ம்.ம்.ம்..ம் அமுக்கி வாசியடா... வெளியில் சொல்லாதே..) நக்கீரா.... சரி இதற்கு தீர்வு.
 

நக்கீரர்  : உடனடியாக உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வாங்கிய பணத்தையெல்லாம் திருப்பி அரசாங்க கஜானாவுக்கு கொண்டுவந்து வைக்க வேண்டும். செய்த தவறுகளையும், உடந்தையானவர்களையும், அவரே வெளிப்படையாய் அறிவிக்க வேண்டும். தண்டனை அனுபவிக்க வேண்டும்....
 

சிவன் : ( ம்க்கும்... நடக்கிற காரியமா இது...) அதுசரி... இதற்கு முன் ஊழல் செய்தவங்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறதா....?
 

நக்கீரர் : ( நொய்ங்க் என முழித்து விட்டு ) இதற்கு அரசர்தான் பதில் தரவேண்டும்.
 

அரசர் : இல்லை தலைவா... வழக்கமா.... சி.பி.ஐ விசாரணை.... பின், கோர்ட்டில் விசாரணை... பின் வாய்தா வாங்களிலேயே..... காலத்தை ஓட்டி மண்டையை போடுவதுதான் மரபு ....பிரபோ...
 

சிவன் : வ்வாவ்... அப்புறமென்ன....!  அதையே பின்பற்ற வேண்டியதுதானே...
 

அரசர் :  இந்த முறை "அமௌண்ட்" அதிகமானதாலயும், இதில எதிர்க்கட்சிகளை நாம கவனிக்காம விட்டதாலயும் இப்போ அவங்க "பொதுக்குழு" விசாரணை கேட்டு ஸ்டிரைக் பண்றாங்க...
 

சிவன் : சரி..சரி.., இது நம்மலோட தப்புதான். என்ன இருந்தாலும் அவங்களும் நாமளும் ஒரே ஜாதி. "அரசியல் ஜாதி". அவங்கள கவனிச்சிருக்கனுமில்ல... என்னாய்யா நீர்... இப்ப எதுனா குடுத்தா வாங்குவாங்களான்னு பார்த்தியா..?
 

அரசர் : முடியாது தலைவா... அதுல ரெண்டு சிக்கல் இருக்கு. ஒண்ணு... விசயம் வெளியில "லீக்" ஆனதால... பொதுமக்கள்... சுப்ரீம் கோர்ட்... மீடியா... உலகம் என மொத்தமும் இந்த மெகா ஊழலைக் கவனிக்குது.
ரெண்டாவது.... எதிர்க் கட்சிகள் இதை வச்சி அடுத்த தேர்தல்ல ஆட்சிய பிடிக்கப் பாக்குராங்க....
 

சிவன் : யோவ்... என்னாய்யா...நீ, ஊழல் அரசியல்ல "கை" வச்ச நம்மல மிஞ்ச ஆள் இருக்கா... ஊழல்ல உங்களுக்கு 60 ஆண்டுகால அனுபவம்யா... அதை வச்சி எதையாவது செஞ்சி சமாளிக்கப் பாரு. நான் வேணா உனக்கு ஒத்தாசையா ஒரு அறிக்கை விடுறேன். அப்படியே நம்ம பய "தருமியையும்" ராஜினாமா பண்ண சொல்றேன். எதுக்கும் ஒரு வாட்டி "மகாராணிய" கலந்து பாருய்யா....
 

அரசர் : சரி தலைவா..
 

சிவன் : கந்தசாமி நீ இந்த விசயத்த இத்தோட விட்டுடனும். என்ன 
சொல்ற... உனக்கு எதுனா வேணும்னா என்ன கேளு..
எவ்வளவு ஊழல் நடந்திருக்கோ அதுக்கு தகுந்தாப்ல பங்கு தரச் சொல்றேன். என்ன சம்மதமா...?
 

நக்கீரர் : இரந்துண்டு வாழ்வோம்...., ஆனால் உம்போல் அசிங்கப்பட்டு, அவமானப் பட்டு, நேரத்துக்கு தக்கபடி அரசியல் கூட்டணி வச்சு... தனக்குதானே புகழ் பாடி..., தினம் ஒரு மேடை ஏறி.., யாரையாவது புகழ்பாட சொல்லி.... மைக்க கடிச்சு ... முழுப் பூசணிக்காயை வாயால மறைச்சி.... இப்படி ஒரு செத்த வாழ்க்கை வாழ மாட்டோம்.
 

சிவன் : அடேய்.... இவன் பார்ப்பான். திராவிட இனத்துக்கு எதிரானவன். நமக்கு துரோகி. தருமி "ஏழை ஜாதி" அப்படிங்கறதால இவனுக எல்லாம் சேர்ந்துகிட்டு நம்ம தருமிய பழி வாங்கறாங்க.... அப்படின்னு நாளைக்கு என்னோட "உடன்பிறப்பு" அறிக்கை விடுறேன். பேப்பர்ல படிக்கத் தவறாதீங்க.... ஏன்னா... "இன்றைய செய்தி... நாளைய வரலாறு"
இலஞ்சத்திலும் திராவிடன் சளைத்தவன் இல்லை அப்படின்னு நாளை உலகம் பேசும்.
 

"தருமி" ங்கிற உன் பேரைக் கேட்டா சும்மா கிடுகிடுன்னு டில்லி அதிருதில்ல.....ராசாஆஆஆ.... நீ சரித்திரம்டா.
 
"இந்திய ஊழல் வரலாற்றை" எழுதுகிற எந்த எழுத்தாளனும் உன்னோட பேர் இல்லாம இந்த சரித்திரத்த முடிக்க முடியாது.
 

அரசர் : மொதல்ல... இதுக்கு ஒரு வழி சொல்லுங்க ... தலைவா... நாளைக்கு நடுத்தெருவுல என்ன பஞ்சாயத்து பண்ண விட மாட்டேன்னு அடம் பிடிக்குறானுக...
 

சிவன் : யோவ்... கவலைப் படாதே... நாளை பேப்பர்ல "ராஜா" ராஜினாமா...ன்னு  வரும்...
 

அரசர் : தல.... என்ன கடைசியில என் தலையில கைய வச்சுட்டீங்க.... நான் எதுக்கு ராஜினாமா பண்ணனும்....?
 

சிவன் : என் கேரக்டரையே புரிஞ்சிக்கலையே நீ. ஒஹோ... நீ உன்ன நெனச்சுட்டியா.... நான் தருமிய சொன்னேன். தருமி ராஜினாமா பண்ணிடுவார்.
 

அரசர் : அப்பாடா..... ஒரு வழியா என் தலை தப்பியது....
 

நக்கீரர் : நாளை நான் சுப்ரீம் கோர்ட்ல "ஊழலாற்றுப் படை" தமிழ்ல நூல் எழுதி.... வெளியிடப் போறேன்.
 

சிவன் : நான் அதை எதிர்த்து "பூணூல்" பிரச்சார உண்ணாவிரதம் மெரினாவுல அதிகாலை 4.30 க்கு மேல் 6.00 மணிக்குள்
இருக்கப் போறேன். எல்லாரும் வந்துடுங்க...
இத்துடன் சபை கலையலாம்....
 

நக்கீரர் : யார் கண்டா....? நாளை ஆட்சியே கலையலாம்....
 

சிவன் :  ( கோபமாக முறைத்து விட்டு ) எப்படியோ தருமி மூலமா நமக்கு நல்ல வரும்புடி...( வருமானம் ), தருமிக்கு தரும  அடி...., நமக்கு நம்ம குடும்பம் பெருசுப்பா.....

( புரிஞ்சுதா....... மக்கா. )

"விபரீதம்"....!!


பொதுவாய் இருந்த
குளம் நிறைத்த
வாய்க்கால், வடிகால்...
வழி யாவும் சுயநலம் சூழ...
பொய்த்து போன பருவமொன்றில்
காய்ந்துப் போன குளம்...!
வறுமைத் தாயின்
வற்றிய மார்பாய்...!

அல்லியும், தாமரையும்
அகலாச் சேற்றில்
ஆழப் பதித்த...
கிழங்கு நோண்டும்
கிழமும்...பேரனும்..!!

குளிக்க.....,
குண்டி கழுவத் தண்ணிக்கு
குளம் இல்லை...!
குழாயடியில்
குடிக்கவே தண்ணீர் இல்லை.
"பின்கழுவல்" எப்படி...?

பேரன் கிழித்துப் போட்ட
காகிதக் குப்பை
பொறுக்கினார் கிழம்...
கீழே குனிந்தபடி...!!
*******************************************

"கிராம அதிகாரி"...!


கதவில்லா வீட்டில்
கதவிலக்க எண்
எழுதி வைத்தார்
எங்கள் கிராம தலையாறி...
முட்டுத் தூண்
முதுகில்...!

ஆளிலா வீட்டுக்கு
ஆளுக்கு ஒரு "அளவுணவு அட்டைப்" பதிந்த
அதிகாரி....! எனக்கு மட்டும்
ஏனோ எழுத மறந்தார்.
இன்னும் நான்
இந்திய குடிமகனாய்...!!
அவருக்கு கொடுக்க
எதுவுமில்லாமல்...!
என்னிடம் எதிர்பார்க்கும்
அவருக்கும் இல்லையோ
என்போல் "அளவுணவு அட்டை"..!!
********************************************************

Saturday, November 27, 2010

"அன்றும் இன்றும்"..!

அன்று...
எரிக்க புகைக்கும் விறகு
எரியூட்டும் எரிபொருள்....
ஏழைத் தாயின் கண்ணீர்...!
இழுத்து ஊதி.... ஊதி ஊதி...
இன்னமுது படைக்கும்
ஏழையின் சோற்றுப் பானை
சிரிக்கும்....
வெந்ததாய் வெளிவந்து...!

இன்று...
குறைவாய் நேரம்
குக்கர் வாய் இறுகும்...
அரிசி கலப்பட வேதிப்பொருள்
அலச நேரமின்றி...
அவசர சமையல்....!
மூடி மூச்சிரைக்கும்
குக்கருக்கு "மாரடைப்பு"..!
காப்பாற்ற விசிலடிக்கும்.
"உள்ளுக்குள்"  மூடி மறைக்கும்
"நாகரீகச் சமையல்". 

அன்று
உழைப்பின் மிகுதி
பிழைப்பின் தகுதி.
வாழ்வின் நித்திய
கடமையில் நிறைவேறும்
ஆசனங்கள்... அத்தனையும்..!
வியாதியின்றி ஆயாவும்...
மகளும், மருமகளும் ஆனந்த
ஆர்ப்பரித்தார்கள்.

இன்று..
தும்மல், சலம், இறுமல்,
எல்லாமும் மருத்துவ மனையில்..!
இருப்பிடம் தற்காலிகம்.
மருத்துவமனை வாடகை வீடு...!
கண்டிப்பாய் பிரசவம் "அறுவை"...!
அறுவை என்பதனாலே....
அளவோடு பிள்ளை...!
தலைவலிக்கு போய்...
தாங்கமுடியா நெஞ்சுவலி...!
வேண்டா விருந்தாய்..சில வியாதி.
இலவச இணைப்பாய்... சில வியாதி.
சொத்தை எழுதிக் கேட்கும்
"நோய்ப் பரப்பு மையங்கள்"...

Friday, November 26, 2010

"வீர வணக்கம்....!!"


இன மான உணர்வோடு...
தமிழ் மண்ணுக்கும்...
தமிழ் மொழிக்கும்....
அதன் சுதந்திரத்துக்கும்...
தன்னுயிர் தந்த தியாகிகளின்
நினைவு நாளில்......

மானமிகு இனத்தின் சொந்த
மண்ணில் ஈனம் கலைய
"தமிழ் ஈழம்" மீட்டெடுக்க....
புகழின் உச்சியில் நின்ற தமிழை
புதைந்து போகாமல் தூக்கிப் பிடிக்க
புத்துயிர் கொடுக்க.....
புயலாய்... புலியாய்...
புறப்பட்டு...
தமிழ் இனத்தின் மானத்தை
சிவப்புக் குறுதிப் போர்த்தி
காத்து நின்ற....மறத்தமிழர்
மரணத்தில்...!
"சுதந்திர சாசனம்" பிரகடனம்...!!

குருதி குழைத்து....
எழுதப் பட்ட அவர்களின்
இரத்த சரித்திரம்....!
பிணங்களை பிழைக்க செய்யும்
மூல மந்திரம்...!!

தாயின் கருவில்
தாயகம் கண்ட வீர மகன்கள்
தார்மீக பொறுப்பெடுத்த
தனிப் பெறும் புரட்சி...!
தமிழன் புரட்சி...!!
தமிழின் புரட்சி...!!!

ஓய்ந்து விட்டிருக்கலாம்...
ஒழிந்து விடவில்லை.
புற்று நோயையே அழிக்க முடியா நீ...தமிழ்ப்
பற்று போரையா சாய்க்க முடியும்...?

"எட்டப்பன்களின்" பிடியில்
தமிழன் தடுமாற்றம்...!
"ஏகாதிபத்தியத்தின்" பிடியில்
தமிழின் தடுமாற்றம்...!!

இருந்தும் விடாமல்...எங்கள்
"கட்டபொம்மன்" கைவரிசைகள்...!
இன்னும் இருக்கும்...எங்கள்
"வன்னி வாழ் கன்னியின்" கருவில்...
"வேலுப் பிள்ளைகள்"...!!


வேலுப் பிள்ளைக்கு
விதி முடிந்தாலும்....அவர்
வேலைக்கு உயிர் இருக்கு....
வவுனியாவில் .....
விதைக்கப் பட்ட "வாழ்வு"
தளிர்விட "கொழுவாய்"
கொழும்பிருக்கு...!

யாழ்ப்பாணம் எங்களுக்கு
தமிழ் யாழ் இசைக்கும் எங்களுக்கு
தலைமை எடுப்போம் தமிழுக்கு...!
விதி முடிப்போம்....
வினை முடிப்போம்...
தமிழைப் பழித்தவன்...
"தலை எடுப்போம்"...!!

விட்டில் பூச்சிகள்
"விளக்கை அணைக்கும்
விபரீதம் நடக்கலாம்...!"
வீட்டை சொந்தம் என
சொல்ல முடியாது.

தீப்பந்தம் போதும்....
ஒரு "தீ" பந்தம் போதும்....
வீட்டில் வெளிச்சம்...
நாட்டில் வெளிச்சம்...
விழுந்த வண்ணம்
எழும் வீரம் வேண்டும்...!!

ஆருயிர் ஈந்த
அனைத்து ஆன்மாக்களின்
"சக்தி" பிறக்கும்....
பிள்ளைகளின் பிஞ்சு
கரங்களில் மிகுந்திருக்க
தமிழை வணங்கி
வாழ்த்துகிறேன்.

Thursday, November 25, 2010

"சீதை...!"

தொட்டுக் கெட்ட இராமன்
தொடாது கெட்ட இராவணன்
பார்த்துக் கெட்ட பரதன்
பக்கத்திருந்து கெட்ட இலட்சுமனன்
பழகி கெட்ட அனுமன்
........................................
சீதை ஒரு சாபம்.
பாதை மாற்றி போட்ட
பயணம் சீதை.....
நிம்மதி குலைத்த
நிசும்பனி சீதை....
வெற்றிக்கு பின்
வெதும்பல் சீதை...

விதியின் விபரீதம்...சீதை
மதியின் மயக்கம்...சீதை
தீயும் தீண்டா தீது...சீதை

அப்போதும்....
இப்போதும்....
அயோத்தியின் பீடை ...சீதை

எப்போதும் இலங்கையின்
சாபம் சீதை...

ஆகாத வேளையில்
அவதரித்த அவலம் சீதை....
போகாத பாதையின்
புகலிடம் சீதை...

நாடாண்டவன் காடாளக்
கண்டவள் சீதை....
காடாண்டவன் நாடாள
செய்தவள் சீதை...
கண்டங்கள் கண்டவன் புகழ்
குன்ற செய்தவள் சீதை...

வேதவள்ளி சாபத்தின்
விபரீதம் சீதை.
தீராத் துயரின்
வசிப்பிடம் சீதை...

ஒரு சொல்லில்....
ஓர் வில்லில்...
வினை முடித்த
வினோதம் சீதை.

இனியும்... வில்லொடிக்க
வேண்டாம்...
எந்த இராமனும்..,
சீதைக்காய்....!

இனியும் சொல் கொடுக்க
வேண்டாம்....
எந்த இராவணனும்..,
சூர்ப்பநகைகளுக்கு....!

பயனற்ற வாழ்க்கையில்
பன்னிரு ஆண்டுகள்
பசித் தூக்கம்
துறக்க வேண்டாம்...
இலட்சுமனன்கள்...!

செய்யாத தவறுக்கு
செருப்பு தூக்கி
அலைய வேண்டாம்...
பரதர்கள்...!

பாரதம் பிழைக்கட்டும்....!!
மனிதம் மண்ணாளட்டும்....!!
அசிங்க பட அவதாரமெதற்கு...???
அவர் தாரத்தோடு பிறன்புணர்ச்சி
போராட்டம் எதற்கு...??

வாழ்க்கை அதுவல்ல...,
வாழ்க்கை அதற்க்கல்ல...!!

Wednesday, November 24, 2010

"இனிது...! இனிது...!!" ( 100 வது படைப்பு )

கொஞ்சு மெழில் விஞ்சும் நெஞ்சமதில்
கொஞ்சு மொழிக் கெஞ்சும் மஞ்சமதில்
கொஞ்ச மின்பம் கொஞ்சத் துன்பமதில்
மிஞ்ச வரும் பேரின்பப் பெட்டகம். கூட்டும் இன்பம் கூட்ட வரும்
கூடும் இன்பம் காட்ட வரும்
காடும் மலையும் கானக் குயிலும்
கதவு திரை ஒதுக்கும் காற்றும்.மொழியின் இனிமை வளமை அழகு
மோனத்தே  நீ  பேசாமல் பேச
புரிய விரியும் அழகு விழிகள்
மௌனத் துயில் மருகும் மானே..மயிலிறகு வருடல் மயிர்க் கூச்செரிதல்
கனியிதழ் வருடும் கனிந்த கனிச்சுவை
பனித்துளிப் பருகும் பாவையின் பருவத்து
முனகல் தாகம் வளர்க்கும் மென்தேகம்.கனலிடை அனலிடை கடும் புனலிடை
தணலிடை மணலிடை கார் முகிலிடை
புல்லிடை புதரிடை பூக் காட்டிடை
புகுந்து தழுவலின்பம் தந்ததொரு மயக்கம்.

Monday, November 22, 2010

"நானும் கடவுளும்" - பாகம் 4


            உலகின் அனைத்து மதங்களின் உள்கட்டமைப்பு சாராம்சம் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும். அன்பு, கருணை, இரக்கம், "சீவகாருண்யம்", என இவற்றைத்தான் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு இடங்களில் போதிக்கிறது. ஆனால், நம்முடைய மானிட சமூகம் என்ன செய்து கொண்டிருக்கிறது...??? அன்பின் வழியிலா உலகம் உய்கிறது. "ஆயுதத்தின்" வழியில் தானே அமைதியை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறோம். இதில் பெரிய கூத்து என்னவென்றால், தீவிரவாதத்தை வளர்த்தவனும் அவனே, அழிப்பவனும் அவனே, சூழ்ச்சி செய்து, சூழ்ச்சி செய்து தன்னைதானே சூழ்ச்சியின் பிடியில் சிக்க வைத்துக் கொள்ளும் கொடுமையெல்லாம் நடந்தேருவது வேறு கதை. "கெடுவான் கேடு நினைப்பான்".
 
            எல்லா நாடுகளும் மதங்களை வைத்திருக்கிறது, ஆனால் மதக் கொள்கைகள் மட்டும் நடைமுறைக்கு வராது. எந்த குருமாரும், எந்த விதியும், எந்த நெறியும் தனி மனித வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது. அவர்களுக்கு எட்டாத உயரத்தில் வாழ்க்கை இருக்கிறது என்பது தெளிவாக தெரியும் போது இவை யெல்லாம் கேளிக்கூத்தாக இருப்பது தானாக தெரியும். எல்லா நாடுகளிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் எந்த அரசியல்வாதியிடமும் கொள்கைகள் கிடையாது. 

சூழ்நிலைகளுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் வளைந்துப் போகிற வரைக்கும் எந்த மனிதனாலும், எந்த கொள்கையையும், எந்த நெறியையும், காப்பாற்ற முடியாது. பின்பற்றவும் முடியாது. கூட்டம் சேர்த்துக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியாது. 

           ஒரே ஒரு புரட்சியாளன், ஒரே ஒரு சிந்தனையாளன், இந்த ஆட்டுமந்தையை திசை திருப்பிவிட முடியும், போதும்.

           மதம் விற்றுப் பிழைப்போரே, மதம் சார்ந்து பிழைப்போரே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் .....இந்த உலகில்.... உங்களைவிட, தன் தசை விற்றுப் பிழைக்கும் விலைமகள் வணங்கத்தக்கவள்.

           குறிப்பிடுகிறேன் தெரிந்துகொள்ளுங்கள். பிரார்த்தனை செய்த எந்த மகானும் கூட்டம் சேர்த்துக் கொண்டு பிரார்த்தனை செய்தது கிடையாது. அப்படி பிரார்த்தனை செய்யவும் முடியாது. அப்படி செய்வது பிரார்த்தனையும் ஆகாது.

           பத்து மாடுகள் ஒரே புல்லைத் தின்னமுடியும். ஒன்றாக மேய முடியும். ஆனால் ஒன்றாக அசைபோட முடியாது. தனித்த நிலையில் படுத்துக் கொண்டுதான் அசைப் போட முடியும். அது போன்றதுதான் "தன்னையறிதல்" என்பதும். எல்லா மதங்களின் முடிந்த முடிவு, இறுதி நிலை "தன்னையறிதல்" மட்டுமே.
 
           பத்து பேர் சேர்ந்து ஒரு வேதம் படிக்கலாம், ஓதலாம், பிறரிடம் அது பற்றி பேசலாம். விவாதிக்கலாம். இதற்கு வேதம் தெரிந்திருந்தால் போதும். புரிய வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட உணர்ந்திருக்க வேண்டிய அவசியமோ, கட்டாயமோ இல்லை. ஒரு சினிமாவை பார்ப்பவனுக்கும், அதை எடுப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் இது. பார்ப்பவனால் எடுத்தவனின் நிலையில் நின்று கடினம் உணர முடியாது. எடுத்தவனால் எடுக்கும்போது பார்ப்பவன் அடையும் மகிழ்ச்சியை அடைய முடியாது. ஆனால், படம் எடுத்தவனால் பார்த்தவனாக முடியும். பார்த்தவனால் படம் எடுத்தவன் நிலையைத் தொட முடியாது.
 
           அது போல்தான் ஆன்மீகம். உணர்வது வேறு, அது பற்றி பேசுவது வேறு. அரைகுறை ஆன்மீகவாதியும், அரசியல்வாதியும், அறிவியல்வாதியும் இந்த உலகிற்கு கேடு விளைவிப்பவர்கள். அதிக கெடுதலானவர்கள்.

            புரிந்துகொள்ளுங்கள்........மேய்தல் வேறு, அசைபோடுதல் வேறு.
உனக்குள் இருக்கும் ஒரு விசயத்தை நீயாக உணர, உணர்ந்த ஒருவர் வழி காட்ட முடியும். பதர்கள் விழிப் பிதுங்கத்தான் முடியும்.

            அமைப்பல்ல ஆன்மீகம். அமைப்பதுமல்ல ஆன்மீகம். அமைவது...!!!

            இயேசுவோ, புத்தனோ, காந்தியோ, மகாவீரரோ, நபியோ, கூட்டம் சேர்த்து தியானித்ததில்லை. கூட்டம் சேர்த்து கும்மியடித்ததில்லை. கூட்டத்தால் காசுப் பார்த்ததில்லை.

            கடைசிக் கட்ட தியானத்தில், இயேசு தன் நண்பர்களைப் பார்த்து, நீங்கள் இங்கேயே இருங்கள், நான் பிரார்த்தனை செய்துவிட்டு வருகிறேன் எனக் கூறி, தனியாக நின்றுதான் தியானிப்பார். கடைசியாக உச்சரித்த வார்த்தைகளாக பைபிள் கூறுவது, என் தந்தையே..!! ஏன் என்னை கைவிட்டீர்..?! இதோ என்னுடைய ஆவியை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன் என்பதுதான். இந்த வாக்கியத்தை நன்றாக கவனியுங்கள். இயேசுவின் மனவலிப் புரியும். அவருக்கே அந்த கதி என்றால், வெறும் மதவியாபாரிகளின் நிலை இன்னும் எவ்வளவு மோசம்...!
 
           இன்று எந்த இனம் இயேசுவை தூக்கிப் பிடித்து விற்கிறதோ, அதே இனம்தான் அவரைக் கொன்றது. அவர்களைப் பொருத்தவரை இயேசு என்பவர் "யானை", இருந்தாலும், இறந்தாலும் "ஆயிரம் பொன்" அவர்கள் குறி.

           இவர்கள் சொன்ன கோட்பாடுகள் நம்மிடம் வந்து சேரவில்லை, நாமும் அதை எடுத்துக் கொள்ளவில்லை. நமக்கு அவை தேவையும் இல்லை. நமக்கு தெரிந்தது எல்லாம் "உருவ வழிபாடு", பிறகு "உன்பாடு" என மனதைத் தேற்றும் மாபெரும் முயற்சியே நம்முடைய வழிபாடு.
 
           இது எதைக் காட்டுகிறது தெரியுமா? நம்முடைய "நோகாமல் நொங்கு தின்னும் ஆசையை". நமக்கு மனிதனாய் இருக்கவே தெரியாத போது, இறைப் பற்றி தெரிந்து என்ன ஆகப் போகிறது...??!!  இரைத் தேடும் நமக்கு.......இறை எதற்கு....??!!
 
           மனிதம் விடத் தெரிந்த நமக்கு, மதம் விடத் தெரியவில்லையே..!! சகமனிதனை மதிக்கத் தெரியாத நமக்கு, சாதியை மிதிக்கத் தெரியவில்லையே..?? விட்டு விடுவோமே...மனிதனாய் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்ப்போமே. கூட்டம் குறைத்து, ...கூச்சல் குறைத்து....!!.

            சக மனிதனிடம் நேசம் கொடுப்போம், எடுப்போம். இன்னொருவன் இரத்தம் கண்டால், உங்கள் கண்கள் கண்ணீர் சிந்தட்டுமே..!! குருதி சிந்தா குவளையம் படைப்போம், குரோதம், விரோதம் விடுவோம். இதை செய்ய எதற்கு மதம்..?

            அடுத்த தலைமுறையாவது.........மனிதனாய்.........மனிதத் தன்மையோடு .........பிறந்து, மனிதனாய் வாழ அனுமதிப்போம். இனி பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த சாமிப் பெயரும் வேண்டாம். எந்த மதமும் குறிக்கப் பட வேண்டாம். சாதி சொல்ல வேண்டாம்..............இவை சம்பந்தபட்ட சான்றிதழும் வேண்டாம்.   
          
என் அடுத்த தலைமுறை............."மனிதன்"........"மனிதன்"............."அவன் மனித நேயம் மட்டும் தெரிந்த மனிதன்". வெறும் மனிதனாக மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும்.  
**********************************************************************
( முற்றிற்று...)    

Sunday, November 21, 2010

"நானும் கடவுளும்" - பாகம் 3


உண்மையில் மதம் மனிதனிடம் வளர்த்திருக்க வேண்டிய "மனித நேயம்", இன்னமும் விதைக்கப் படாத விதையாகவே இருக்கிறது. மனிதநேயம் இல்லாத மனிதர்களை கொண்டு "இலாபம்" பார்ப்பது மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிற மத அமைப்புகள், தங்களின் இலாபங்களுக்காகவே மக்களை "மாக்களாக" வைத்திருக்கிறார்கள். எல்லா பாவங்களுக்கும் தண்டணை "மன்னிப்பது" என்பதுதான் என்றால், தவறு செய்பவன் தானாக திருந்தும்வரை அவனுக்கு "மன்னிப்பு" ஒன்றையே மருந்தாக கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மதம், எப்படி நல்ல மதமாக இருக்க முடியும்? "மன்னிப்பு" என்பதும் கூட, எவன் பாதிக்கப் பட்டானோ அவனால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல் பாதிக்கப் பட்டவன் ஒருவன், மன்னிப்பு வழங்குபவன் ஒருவன் என்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.?? அதுவும் பாதிக்கப் பட்டவனுக்கு தெரியாமலே..!! தவறிழைத்தவனுக்கு மன்னிப்பு வழங்கும் அந்த மாபெரும் அதிகாரத்தை இவனுக்கு கொடுத்த "கடவுள்" யார்..?. இதை எப்படி இந்த சமூகம் சகித்துக் கொள்கிறது.

ஒருவகையில் பார்த்தால் ஒரு தனி மனிதனை பாவம் செய்யத் தூண்டும் அமைப்பாக அல்லவா மதம் செயல்படுகிறது. அந்த வகையில் மதம் "சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது". தப்புக்கு துணைப் போனவனுக்குதான் அதிக தண்டனை என்று சட்டம் சொல்கிறது. அப்படி பார்த்தால், "பாவ மன்னிப்பு" என்கிற பெயரில் திரும்ப திரும்ப தவறு செய்யலாம் என தட்டிக் கொடுக்கும் ஒரு அமைப்பை, எப்படி நல்ல மதம் என்பது..? அப்படி மன்னிப்பு கொடுப்பவனை எப்படி நல்லவன் என்பது...? இதற்கு எதற்கு ஒரு மதம்..? முன்பின் தெரியாதவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதை விட, எவனுக்கு தவறு இழைக்கப் பட்டதோ அவனிடத்தில், அல்லது தன்னைப் பெற்றவனிடத்தில் மன்னிப்புக் கேட்பது எவ்வளவு மேல்..?!.
 

தான் மனிதன் என்று உணர்ந்து, தன் வாழ்வியலை மானுட வாழ்வியலாக எவன் அமைத்துக் கொள்ளத் தெரிந்தவனோ, அவனுக்கு எந்த மதமும் தேவையில்லை. எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணரவில்லையோ, அவனுக்கு எத்தனை மதம் வந்தாலும் மாற்றம் வராது. ஆக எப்படிப் பார்த்தாலும் இந்த மதத்தாலும், சாதியாலும் விளைந்த நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றுமில்லை என்றால், இவற்றை தூக்கி எறிவதில் என்ன சிக்கலிருக்க முடியும்...!!!??

தனக்கு தேவையில்லாத ஒன்றை மனிதன் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன வந்தது..?? தன்னையும், தன்னை சார்ந்தவனையும் அழிக்கும் சக்தி இன்று உலகில் எது என்று பார்த்தால்..?? அது மதமும், சாதியுமாகத்தான் இருக்கும். இதைவிட கொடுமை, மதம் என்ன சொல்கிறது என்பது தனக்கே தெரியாத போது, தான் சார்ந்த மதத்தின் விதிகளை தன்னாலேயே பின்பற்ற முடியாத போது, அல்லது தன் வாழ்க்கையோடு ஒத்துப் போகாத முரண்பாடுடைய மதத்திற்கு ஆள் பிடிக்கும் "கோமான்கள் கூட்டம்" இருக்கிறதே.... அப்பப்பா..?? அது சக மனிதனை படுத்தும்பாடு...சொல்லி மாளாது.
இவர்கள்  முதலைக்கு ஒப்பானவர்கள். இவர்களிடம் மக்கள் படும் பாட்டிற்கு விடிவுகாலம் எப்போதுதான் வருமோ..?

அப்படி ஒருவனை "கட்டாயமாக மத மாற்றம்" செய்து ஆகப் போவது என்ன..?? இந்த கூட்டத்தை பொறுத்தவரை மதமாற்றம் என்பது "வெறும் பெயர் மாற்றம் தானே" தவிர, வேறொன்றில்லை. இவர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் கைக்கூலிகளாகத்தான் இருப்பார்கள். பணம் பார்க்கும் வழி. அவ்வளவுதான். "மனமாற்றம் தராத மத மாற்றம் எதற்கு..?"

அப்துல்காதராக இருக்கும்போது ஒருவன் கொலை செய்து விட்டு, பின்பு அந்தோணிசாமியாகி பாவமன்னிப்புக் கேட்டால் அவன் "மன்னிக்கப் படுவதால்" அவன் பாவங்கள் எப்படி தொலைந்து போகும்..??? அப்துல்காதருக்கு மதம் சொல்வது "மரண தண்டனை". அந்தோணிக்கு மதம் சொல்வது "பாவ மன்னிப்பு" என்றால், அந்த நபருக்கு எந்த தண்டனையைக் கொடுப்பது...??? சட்டம் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா..?? மதத்தின் படி தீர்ப்பென்றால் எந்த மதத்தின் தண்டனையை நிறைவேற்றுவது. யோசியுங்கள். இந்த குழப்பத்திற்கு காரணம் மதமும், மத மாற்றமும்தான். தேவையா..?! யோசியுங்கள்..??

இதுவரை வாழ்ந்து வந்த மனிதச் சமூகம், எவன் சொன்னதையும் முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்துக் கொள்ளவும் முடியாது..? மனித வாழ்க்கை அப்படி.!!? தனக்கு சாதகமானவற்றை மட்டும் எடுத்துக் கொள்கிற புத்தி மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது. பாதகம் என்றால் எவன் சொன்னாலும் கேட்கமாட்டோம். அப்படியென்றால் பொருள் என்ன??? சுயநலம் சார்ந்தே வாழ்ந்து பழக்கப் பட்டிருக்கிறோம்....அல்லது அப்படி வாழப் பழக்கப் படுத்த பட்டிருக்கிறோம்.....என்றால் இதற்கு நமக்கு மதம் எதற்கு..?? அவற்றிற்கு "நன்மார்க்கம்" என பெயர் எதற்கு..??
 

தனி மனிதனிடம் அவனாக உணராத வரை, ஒரு சிறு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத எந்த அமைப்பும் எந்த பெயரிலும் தேவையில்லை என்பது தெளிவாகிறது.

Friday, November 19, 2010

"நானும் கடவுளும்" - பாகம் 2

நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு கூட தண்டனையிலிருந்து தப்பிக்க முடிகிறது. மதம் பற்றி பேசுபவன், சிந்திப்பவன் தப்பிக்க முடியவில்லை. மத குருமார்களே தண்டனை வழங்கி விடுவார்கள். குற்றவாளிகளைப் பற்றி கவலைப் படாத மதம் எப்படி நல்ல மதமாக இருக்க முடியும்?. மதம் சார்ந்த எதிர்ப்புகள் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் "பாவ மன்னிப்பு" வழங்கும் மதம் எப்படி ஒரு நல்ல மதமாக இருக்க முடியும்?. அப்படி பாவங்களுக்கு மன்னிப்பு வழங்க முடியும் என்றால், அத்தனைப் பாவங்களோடு சேர்த்து "சுயசிந்தனையையும்" ஒரு பாவம் என்று மன்னிப்பு வழங்காமல், அவர்களை கொல்ல வேண்டிய அவசியம் என்ன..???

தன்னையும், தன் பிழைப்பையும் பாதிக்காத மற்ற பாவங்கள் பாவங்களாய் தெரிவதில்லை மதம் சார்ந்தவனுக்கு. தான் பாதிக்கப் படக் கூடாது என்கிற கவலை, அவ்வளவு கீழ்த்தரமாய் செயல்பட வைக்கிறது. சராசரி மனிதன் செய்யும் பாவத்திற்கு தரப்படும் தண்டனைப் போல் நூறு மடங்கு அதிகமாக "மதகுருமார்களுக்கு" தண்டனை வழங்கப் பட வேண்டும்.

சமூகச் சட்டம் இயற்றப் பட்ட சென்ற நூற்றாண்டிலிருந்துதான் மதகுருமார்கள் சற்று விலகி இருக்கிறார்கள். அதற்கு முன் அவர்கள் சட்டத்தை கையில் வைத்திருந்தார்கள், அல்லது சட்டத்தை கையில் எடுக்கும் அளவுக்கு "அதிகாரத்தை" வைத்திருந்தார்கள். இன்றும் சட்டத்தில் மதம் தலையிட முடியும். ஆனால், மதத்தில் சட்டம் தலையிடமுடியாது. என்ன ஒரு சமூக கட்டமைப்பு...??
 
பூமி உருண்டை என்று சொன்ன "கலிலியோ"....
எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விக் கேட்க சொல்லி, அறிவைப் புகட்டிய "சாக்ரடீஸ்"....... 
போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கதி என்னாயிற்று?.
ஒப்பற்ற தங்களின் இன்னுயிர் ஈந்தல்லவா உண்மையை காப்பாற்றினார்கள். அவர்களுக்கு சமூகம் தந்த பரிசுகள் நம்மை நாகரீகம் அடைந்த மக்களாய் காட்டவில்லை. எவனாவது சொல்வதை அப்படியே நம்பும் நம்முடைய அப்பாவித்தனத்தையும், உயிர் பயத்தையும், கோழைத் தனத்தையும், அறியாமையையும் தான் காட்டுகிறது.

"புரட்சி" யின் விதையை எவனாவது விதைக்கட்டும், புரட்சி பிழைத்தால் நானும் "புரட்சியாளனாகிறேன்" எனும் நம்முடைய "புறம்போக்குத்தனத்தைத்தான்" காட்டுகிறது.

எல்லா மதங்களின் பின்னனிகளையும் கவனித்தால் ஒன்று புரியும். பெரும்பாலும் யாராவது ஒரு தனிப்பட்ட மனிதனின் "அனுபவக் கோட்பாடாகவோ, அறிவுக் கோட்பாடாகவோதான்" இருக்கும். மனிதன் தான் வாழ்ந்த காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப சிந்திக்கும் சுபாவம் உடையவன் என்பதால், மத கோட்பாட்டை உருவாக்கியவன் அவன் வாழ்ந்த காலத்திற்கும், அவன் அனுபவத்திற்கும், அறிவிற்கும் ஏற்றவாறு அவற்றை உருவாக்கியிருக்கிறான். அந்த பழைய கோட்பாடுகளையே 3000 ஆண்டுகளுக்கு பிறகும் பொருத்தமானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அறிவார்ந்த செயலாக, நடைமுறைக்கு ஏற்றதாக தெரியவில்லை. அதைவிட கொடுமை இதை நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் கொடுப்பதுதான்.
 
சீரணிக்க முடியாத உண்மை என்னவென்றால், காலத்துக்குப் பொருத்தமில்லாதது என்று தெரிந்தும், அதை அப்படியே பின்பற்றுகிற நம்முடைய அறியாமை. மதம் என்கிற விசயம் எப்போது ஒரு அமைப்பாக உருமாறியதோ, அப்போதே அது எல்லாவிதமான "தகிடுத் தத்தங்கள்", "தில்லுமுல்லுகள்", "களவானித்தனங்கள்" அத்தனையும் தன்னுள் உள்ளடக்கிக் கொண்டு மிக மிடுக்கான "வியாபாரியாகி", "சுய இலாபம்" பார்க்க ஆரம்பித்து விட்டது. ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு, "எந்த மதமும்" சொந்தமாக இருக்க கூடாது. இருக்க முடியாது. பொதுவான விசயம் அல்ல ஆன்மீகம். தனிமனிதன் தனிப்பட்ட விதமாய் உணர வேண்டிய விசயம். அதை ஒரு அமைப்பு தந்துவிட முடியாது. அப்படி அதனால் தரமுடியாமல் தோற்றுப்போய்க் கொண்டிருக்கிறது என்பதே எக்கால உண்மையாகவும் இருந்து வருகிறது.

உதாரணம் வேண்டுமா?? இந்த உலகில் தன்னை உணர்ந்து கொண்டவர்கள் என்று நாம் சொல்லிக்கொள்கிறவர்கள் எல்லாரையும் உற்றுப் பாருங்கள். அவர்கள் தன்னை உணரும் முன் எந்த இறுப்பில், எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலையிலிருந்து தன்னை உணர்ந்தபின் புலம்பெயர்ந்து வேறு நிலைக்கு, வேறு இறுப்புக்கு தன்னை மாற்றிக் கொண்டிருப்பார்கள். அப்படி பட்டவர்கள் அமைதியானவர்கள். தான் வாழும் காலத்தே தான் உணர்ந்த படி வாழ்ந்தார்கள்.
 
அதைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று ஒருவன் கிளம்பும் போதுதான் "மனிதனுக்கு அறிவுப் பிறழ்ச்சி" ஏற்படுகிறது.
இந்த உலகில் ஒருவனாலும் இன்னொருவனைப் போல் வாழ முடியாது. அப்படி வாழ இயற்கை அனுமதிப்பதுமில்லை. அப்படியிருக்க "மத குருமார்கள்" தாங்கள் "அவர்களின் ஆசிப் பெற்றவர்கள்", "இவர்களின் சீடன்" என்று சொல்லிக் கொண்டு "தங்களின் மத வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டு" சமூகத்தில் ஒரு குழப்பத்தை விளைவிக்கும் கூட்டமாகத்தான் இருக்கிறார்கள். தானாக எதையும் உணராத எந்த மனிதனும் தன்னை " மதத் தலைவன்" எனச் சொல்லிக் கொள்ள தகுதி இல்லாதவன். அவனால் இந்த சமூகத்துக்கோ, தனி மனிதனுக்கோ ஒரு சிறிதும் பயனில்லை.
 
இன்னும் தெளிவாக சொல்லப் போனால், இங்கே எந்த காலத்திலும், மனிதனிடத்தில் மதம் வளர்க்கப் படவில்லை என்பதுதான் உண்மை. மாறாக, சடங்குகள், சம்பிரதாயங்கள் வளர்க்கப் பட்டிருக்கின்றன. அதாவது எது மத தலைவனுக்கு இலாபம் தருமோ அது மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எது மனிதனை நெறிப்படுத்துமோ  அது வளர்க்கப் படவில்லை என்பதே சரித்திரம் கண்ட சாட்சியாய் இருக்கிறது.
( தொடரும்....)
****************************************************

Thursday, November 18, 2010

"நானும் கடவுளும்" - பாகம் 1


அன்பையும் அறிவையும் உண்மையில் உணர்ந்து கொடுத்தும், பெற்றும் வாழ்ந்து வரும் உலக மனிதர்காள் கேளீர், இதுகாறும் மானிட வாழ்வில் நிகழ்ந்து வந்த பாரம்பரிய விசயங்களில் மானுடத்தை தொற்றிக் கொண்டிருக்கும் "தொற்று வியாதி" களில் மிக முக்கியமான இடத்தை பிடித்துக் கொண்டு மனித சமூகத்தை அழித்துக் கொண்டிருக்கும் 
( வைரசு, பாக்டீரியா ) நச்சு நுண்ணுயிர்களாக இன்றும் இருந்து கொண்டிருப்பவை, சாதியும், மதமும்.
 
யோசித்துப் பார்க்குங்காள், இந்த உலகத்தின் போக்கை வேறுப் பக்கம் திருப்பும் அளவுக்கு சாதியும், மதமும் மனிதனை பிடித்து ஆட்டுகின்றன. நடுநிலையாய் நின்றுப் பார்க்க இந்த சமூகம் தலைப்படுவதில்லை. முயற்சிக்கும் சிலரையும் சொல்லொன்னா துயரம் தந்து "கொன்று" குவித்திருக்கிறது. இந்த உலகம் "பொய்யை போற்றி வந்த அளவுக்கு"உண்மையை புறந்தள்ளியே வந்திருக்கிறது.

இது இன்னதென இனம்காண முடியாத காலத்தில், மானிட சமூகம் அனுபவ ரீதியாக நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்  இவற்றின் பெரும் சக்திகளை கண்டு அஞ்சிய போது, அவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ள மனிதன் கற்றுக் கொண்ட காலத்தில்தான் வீடு தேவைப் பட்டது. அது போலவே தன்னால், மனதால் தாங்கிக் கொள்ள முடியாத "பயங்களை வாங்கிக் கொள்ளவும், தன்னம்பிக்கை தரவும்" மூன்றாம் ஊன்றுகோல் தேவைப்பட்டது. அப்போது பிறந்த கொள்கை, கோட்பாடுகளின் தொகுப்பே பிற்காலத்தில் "மதமாக" தோன்றியது. தொடர்ந்து வந்த மனித வாழ்வில் சமூக கட்டமைப்புகள் உருவாக ஆரம்பித்தது. சமூகத்தை ஒருங்கிணைக்க எடுத்துக் கொண்ட முயற்சியின் தொடர்ச்சியாய் தொழில் பிறந்தது. தொழில் பழகியதன் விளைவாய் சமூகத்தில் "சாதி" தொற்றியது.
 
ஒரு ஒழுங்கான சமூகக் கட்டமைப்பை உருவாக்கப் போய், பிற்காலத்தில் அது "கேவலமாக்கப் பட்டு விட்டது". சாதியும், மதமும் உண்மையில் மனிதனின் பிறப்புரிமைக் கிடையாது. மனிதனுக்கு முன்னால் மண்ணில் எந்த சாதியும், மதமும் கிடையாது. எப்போது சாதி, மதம் பிறப்புரிமையாக்கப் பட்டதோ அப்போதே மனிதன் சமூக ஒற்றுமைக்கு "உலை" வைத்து விட்டான். சாதியும், மதமும் பிறப்புரிமையாக்கப் பட்டப் பிறகு அதைக் காக்க வேண்டிய கட்டாயம் ஒரு சிலருக்கு (யாருக்கு அவை சௌகரியம் தந்ததோ அவர்களுக்கு) வந்தது. அவர்கள் "மதவாதிகள்", "மத குருமார்கள்" என மாறி விட்டார்கள். வில்லங்கம் எங்கே ஆரம்பித்தது..? என்றால்...மதமும், சாதியும் மனித வாழ்வை கட்டுப் படுத்த முயன்று அதில் வெற்றிப் பெற்ற போதுதான்.

மனிதன் பிரித்த சாதிவாரியாகவோ, மதவாரியாகவோ இயற்கையில் பிறப்பு நிகழவில்லை. "அறிவாளிகள்", "திறமைக்காரர்கள்", "ஓவியர்கள்", "புலமையாளர்கள்", "கவிஞர்கள்", "சிற்பிகள்", "தச்சர்கள்", "தீர்க்கதரிசிகள்", என பலதரப் பட்ட திறமையாளர்களும் ஒவ்வொரு சாதியிலும், மதத்திலும் பிறந்தார்கள். வளரும் மானிட இனத்தை இவர்களின் துணை இல்லாமல் "இறைவனாலும்" கட்டமைக்க முடியாது என்ற "கசப்பான உண்மை" புரிய ஆரம்பித்த காலத்தில்தான், "சடங்கு சம்பிரதாயங்கள்" ஆரம்பிக்கப் பட்டன. அதாவது "அறிவாளிகள், திறமையாளர்கள், மற்றும் மேற்சொன்னவர்கள்" அனைவரும் சமூகப் பொதுவில் வைக்கப்பட்டார்கள். இவர்களை எல்லாரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
ஆனால், அவை மத விசயங்களாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் வேலையை செய்து முடித்தப் பின் "மத குருமார்களால்" அவர்கள் வழித்தோன்றல்களால் "புனிதம்"செய்விக்கப் பட்டப் பிறகே, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற "சடங்கை" உருவாக்கியதில் தான் "மதவாதிகள் அல்லது குருமார்களின்"  சுயநலம் தெரிந்தது. தன் பிழைப்பில் மண் விழாமல் தற்காத்துக் கொள்ள முயன்ற சூழ்ச்சி புரிந்தது. தன் பிழைப்புக்கான செழுமைக்காக தொடர்ந்து பல "புதிய யுக்திகளை" கையாண்டு புதிய பல "சடங்கு சம்பிரதாயங்களை" உட்புகுத்தினார்கள். மக்கள் "மாக்கள்" ஆக்கப் பட்டார்கள். பழக்கப் படுத்தப் பட்டார்கள். பதில் தெரியாத கேள்விகளுக்கெல்லாம் "கடவுள்" பெயர் சொல்லி பயமுறுத்தப் பட்டார்கள். கண்மூடித் தனமாய் நம்பும்படி வற்புறுத்தப் பட்டார்கள்.
 
சென்ற தலைமுறையினரின் பழக்கம், அடுத்த தலைமுறையில் வழக்கமாகி, மூன்றாம் தலைமுறையில் சடங்காகி, சம்பிரதாயமாகி, நான்காம் தலைமுறைக்குப்பின் அதுவே "வாழ்க்கை" என்றாகிவிட்டது. ஐந்தாம் தலைமுறைக்கு அது பற்றிய எவ்விதமான சுய அறிவும் இல்லாமல், தொடர்ந்து ....இன்று நம் வரை வந்து நிற்கிறது.
 
மதங்களில் மதம் பற்றி ஆராயும் உரிமை மறுக்கப் படுகிறது. ஐயம் வரக்கூடாது என புத்தியை கட்டிப் போடுகிறது. குருட்டுத்தனமாய் "நம்பு" என்கிறது. சுயமாய் யோசிப்பவன் "ஆபத்தானவனாக" மதம், சாதி சார்ந்தவர்களுக்கு தெரியக் காரணம், அவர்களின் பிழைப்புக்கான ஆதாரம் அடிபட்டுப் போய்விடுமே என்கிற பயம்தான்.

மதம் தோன்றிய காலம் தொட்டே,அதன் குறைபாடு காரணமாய் அதை எதிர்ப்பவர்கள் இருந்திருக்கிறார்கள். உலக இயக்கத் தத்துவத்தில் "அணு" தன்னை சரியாக, அதாவது "முழுமையடைந்த நிலையில்" வைத்துக் கொள்ள முயலும் போது மனிதன் தன் "அறிவை" முழுமை நோக்கி நகர விடாமல் நங்கூரம் இடுவது என்ன "நியாயமாக" இருக்க முடியும்?. நம்முடைய மதங்களில் மதங்களுக்கு எதிராக சிந்திப்பவன் குற்றவாளியாக்கப் படுகிறான். கொடுந்தண்டனை வழங்கப் படுகிறது. உண்மையில் அவன் செய்த தவறு என்ன? இந்த உலகில் யோசிப்பது குற்றமா? சிந்திக்க கூடாதா? சுயமாய் சிந்திக்க உரிமை தராத சமூகம் எப்படி ஒரு ஆரோக்கியமான சமூகமாக இருக்க முடியும்..?.
( தொடரும்................)
************************************************************************************* 

"பிழை...!"

விதியின் சாபத்தில்
விவசாயி...!
பருவத்தின் பிடியில்
பகடையாய்...!
உருட்டப்பெறும்
உருட்டலில்...
மிரட்டும் இயற்கை...!
இதோ..! அதோ..! வென
இழுத்தடிக்கும் மழை...!
காலத்தின் முன்...
கழைக் கூத்தாடி...!
வானம் பார்க்க மட்டுமே
இவன் தலை
"நிமிரல்"...!

உலகம் சமைக்க
உணவு சமைக்கும்...
இவனுலகம்
விடிவதெப்போ...?

வெறுப்பின் உச்சத்தில்
இருக்கும் மிச்சக் கழனியும்
வெறும் காடாய்....!
ஆட்டு மந்தை
அடைந்து கிடக்க...!
கொஞ்சம்.. கொஞ்சமாய்
நகரத்தாரின் நயவஞ்சகம்
விவசாய நிலம் விழுங்கி
வீடாக....!

பகட்டு வாழ்க்கை
முடிவில்....
பட்டினிச் சாவு...!
தவிர்க்க முடியா
வரமாகி விடும்.

தரணி யெங்கும்
பிணந்தின்னும் கழுகு
கொழுக்கும்...!
பிண வீச்சத்தில்
மூச்சுத் திணறி
மாரடைப்பில்...
மாண்டு போகும்
மனித மந்தை...!

மனித மாமிசம்
விலை போகும்...!
உயிர்ப் பிழைக்க
நர மாமிசம்...
நல்ல உணவாகும்...!!

காலம் தண்டிக்கும் முன்
பிழை திருத்து.
பிழைத்திருக்கும்
"பெரும்குடியாம்"...
"விவசாயி" வாழ்வை
வளப்படுத்து.
"விவசாயம் தழைக்க செய்".
மனிதம் "பிழைக்க"ச் செய்...!!?

Tuesday, November 16, 2010

"குழம்பி...!"


இளஞ்சூட்டில் இதழ்ப் பதிக்க பரவசம்...!
இதமாய் கை அணைக்க சுகம்
ஆவி நுகர்ச்சி ஆன்ம இன்பம்...!
ஆடைக் களையும் நாவுக் கிளர்ச்சி..!!

குவளைக் கடையும் கைகள் மிதமாய்
பாற்கடல் அமுதம் விளிம்பில் இதமாய்
பருகத் ததும்பும் பருவ உணர்ச்சி
பார்த்துப் பருகும் பார்வை நுகர்ச்சி...!

வாய் சரிந்து வழியும் அமுதம்
இதழ்க் குவித்து இழுக்க வின்பம்..!
இனிய உணர்வில் கண்கள் செருகும்
மணக்கும் மணத்தில் மிதக்கும் மனம்...!!

கனக்கும் கணம் குறையும் கைகளில்
கணங்கள் கணக்கும் சுவைத்த மனம்...!
இதழ்க் கடை வழியும் ஒருதுளி
இழுத்துச் சுவைக்கும் நாவுக் கிறங்கும்...!!.

பிரிந்த காதலி பின்னொரு நாள்
காணும்...! இன்பதுன்ப இரட்டை உணர்ச்சி
குதூகளிக்கும் மனதுக்குள்...!!, இன்று காலை
கிடைத்த குழம்பியின் கடைசிச் சொட்டில்...!!!.

"குடில்...!"குடிசைக்குள் ஒண்டிக்...
குடித்தனம் நடத்த...
எத்தனிக்கும் குடியானவன்...!
பக்க சுவரில்லா குடிசைப்
பற்றி கொண்டு வாழ்க்கை....
பனை ஓலை சுற்றி...!


குளிரும் மழையும்
குடித்தனம் நடத்தும் 
குடிசையில் ...!
வெயில் மட்டும்
வெளிநடப்பு செய்யும்.


இழுத்து போர்த்த
இருந்த கோணி போதவில்லை.
அன்னவளைஅணைத்துக் கொள்வது
அத்தியாவசிய தவமாகிறது...!
உடற்சூட்டில் அவன் குளிர்காயல்...!


இருட்டுக்குள் இன்ப விளையாட்டுக்கு
இடையூறாய் இங்குமங்கும்
பெருச்சாளி பெருந்தொல்லை...!
தானியம் திருடும்...
கொடித்துணி கந்தலாக்கும்.
இலவச இணைப்பாய்
வளைந்து நெளியும்
கண்ணாடி விரியன்...!
கருகிய திரியுடன் 
மண்ணெண்ணை விளக்கு
இருட்டுக்குள் ஒளிந்துகொள்ளும்.


பெயருக்குத் தனிக்குடித்தனம்.
பெரும்படையாய் சிற்றுயிர்...!
வௌவ்வாள் தலைகீழ் தொங்கி
வாய்வழி கக்கும் மலம்...
வெற்றுடம்பில் சந்தனம்...!
சில சமயம் பல்லிகளின்
சிறுநீர் பன்னீர்...!


வருவாய்க்கும்...
வெறும் வாய்க்கும் இடையில்
வாழ்க்கை நகர்வு...!
அதிகாலைத் துவங்கி
அந்திசாயும் மாலை வரை
இடுப்பொடிக்கும் வேலை...!
அதன்பிறகு அரிசி வாங்கி
அடுப்படியில் வேலை....!
இருட்டு வந்து "இரவுவிடை" பகர
"பெரும் பொழுது" பசியாறும்.


பசிமறுத்த வயிறு
ருசி மறக்கும்...தாமத
உணவு மறுக்கும்.
எரிக்கும் புகையில்...
எரியும் கண்களின்...
பசி அறியா பத்தினியாள்...!
இதோ "இப்ப புடிச்சிக்கும்" எனத்
தேற்றும் தேற்றலில்...
தேம்பும் நெஞ்சம்...!


அவள் அடிவயிறு ஒட்டி
அவிழத் துடிக்கும் இடைக்கச்சை...!
பசிப் போக்க பறப்பவன்...அவள்
மெலிந்த தேகம் கண்டு
நலிந்தவன்...!
வாய்விட்டு அழ முடியா
வறுமை...! சுதந்திரத்தின் 
முதலாளி...!!


சகத்தியின் மேனிச்
சுருக்கம் அவன் கண்
சுருக்கும்...!
இத்தனை இடர்களிலும்
எத்தனை நம்பிக்கை...!!
நாளை விடியும் என்று...!!!
*****************************

Monday, November 15, 2010

"பூங்குழலி...!!"


புலரும் பொழுதுகளில்
எனக்கான உன் ஏக்கங்கள்...!
சுவாசத் தவிப்பில்...உன்னை
சுவீ கரிக்கும் என் தழுவல்கள்.....! 
என் வருகை உணரும்
உன் சுவாச சுகந்தம்...!
 
இடைவெளி விட்டுத்
தொடரும் என் நாகரீகம்...!
இடைத்தொட்டு நகரும்
உன் நயன நளினங்கள்...!
 
அடிக்கடி அணைக்கத் துடிக்கும்
ஆதூர விழிகிளில் பரவசம்....!
குறுகுறு பார்வைப் புரிந்தும்
விறுவிறு வென மென்நடை...!
 
தீண்டலில் தலை சாய்க்கும்....
பயிர்களின் நர்த்தனத்தில்....
தெரியும் உந்தன் ஒய்யாரம்....!
பாத்திகளில் நடை பயிலும்
பாதக் கொலுசுக்கு...
தலை சாய்க்கும் "தாலாட்டு"...!
 
அயர்ச்சி நீக்கும்...உன்
ஆயாச வருகைக்காய்...!
வாலிப வயோதிக அணிவகுப்பு...
சாலைகளில் சந்திப்பு...!
 
கலையும் கார்குழலில்
அலையும் உன் கரம் கண்டு
அத்துமீறும் இதயத்துடிப்பு...!
இளைஞர்களின் ஏகாந்தம்...!
கவிஞர்களின் கனவுசிரிப்பு...!
 
உன் வருகைக்கு வந்தனம் சொல்லும்
சன்னல் திறப்புகள்...!
காலத்தின் காயம் ஆற்றும்...
காதல் மருந்து...!
வாராயோ....! என்
முன்னும் பின்னும்.
வருவாயோ....! என்
இடவலம்.
 
வாழ்க்கை சுகந்தம் தந்த
காலங்களில்...
உன் பெயரில்....பேரின்பம்.
"தென்றல்"...!
*******************************

Sunday, November 14, 2010

"ஊஞ்சல்...!"நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்....
இன்னும் மறக்க முடியா..அந்த
இனிய நினைவுகளில்...!

இன்பத்தின் எல்லை நீ...!
யான் பெற்ற இன்பம் நீ...!
வலியின் முடிவில்...உன்
வாழ்க்கைத் தொடக்கம்...!
இன்னும் அந்த நினைவில்....
நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

நீயும் நின் தாயும்...
நினைவிழந்த தருணமது...!
பாசத்தின் பிடியில்...
மனம் மரணித்த...
நொடி யுகங்களில்....!
மௌனத்தில் என்...
உணர்ச்சித் தகனம்...!
பந்தயக்குதிரையாய்....
பரபரப்பில்...... நிகழ்காலத்தில்
நான் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறேன்.

உள்ளும் வெளியும்....
ஒவ்வொரு முறையும்....
உயிர்பிரியும் வலி புரியா
செவிலித்தாயின்...பிரவேசம்...!
விழிப்பிதுங்க தொண்டை
அடைக்கும் ஆர்வம்...
வார்த்தைப் பிசிறலாய்...!
வந்து விழுந்த "குவா....குவா...!"
கண்களில் மடைதிறந்த
காவிரியில் இன்றும் நனைந்தபடி...
நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

"தாயும் சேயும் நலம்"....சொன்னத் (செவிலித்) தாய்க்கு
தங்கத்தில் சங்கிலிப் பரிசு
தர விழைந்த மனம்.
அனிச்சையாய்...கைகள்
ஐம்பது ரூபாயுடன்...
இனிப்புகள் வழங்கியது....
அத் தாய்க்கு..!

சந்தோசம் பிசைந்த மனதோடு
சம்சாரம் நோக்கிப் பார்வை...
"சிங்கம்" பிறந்திட்டான்...!
சிதறிய வார்த்தைக்கிடை
சிந்திய கண்ணீ ர்....விழுந்தது
அவள் கன்னத்தில்...!
அந்த எண்ணத்தில்...
நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

பிள்ளைப் பருவத்து...
பள்ளித் துவக்கம்...
இன்று உனக்கு.....!
அழைத்து செல்லும்
பள்ளி வாகனம்....
புகைவிட்டபடி....புறப்பட
காலத்தின் வேகத்தில்
கையசைக்கும் என் விரல்களில்....
கலைந்தோடும் நினைவுகளில்...
நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

நிகழ்காலத்தில் நிற்கத்தான்
எத்தனிக்கிறேன்...!
இறந்தகால உந்தம்
இன்னும் இருப்பதால்...
எதிர்காலம் நோக்கியே
என் பயணம்...!
நிற்காத காலத்தில்....
நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

என் குழந்தைப் பருவத்துக்கும்...
என் "குழந்தைப்" பருவத்துக்கும்....
இடையில்...!!

( அனைத்து குழந்தைகளுக்கும் உங்கள் தின வாழ்த்துக்கள்...)
அன்புடன் .... "தமிழ்க்காதலன்".

Friday, November 12, 2010

"அன்புடன்...!"

பாரெங்கும் பரந்து விரிந்து
முன்பின் முகம் தெரியா
சுற்றம் நட்பு எதுவும் அறியா
உன்னையும் என்னையும்
இந்த "பாசத்தில்" கட்டி வைத்து
இன்பக் கடலில் தள்ளிவிட்டு...
அன்பலைகளால் மூழ்கடிக்கும்
அன்னைத் தமிழை வணங்கி...
அளவளாவிய ஆனத்தத்துடன்...
இருவிழி நீர்ப் பெருக்கி..
இன்னமுதத் தமிழ்ப் படைக்கிறேன்.

நான் தமிழ்க்காதலனாகி....
தமிழை நேசிக்க...என் தமிழ்
சுவாசித்த நேயநல் இதயங்கள்
அத்தனைக்கும் அன்பு பெருக்கி
கரம் கூப்பி வணங்குகிறேன்.

முத்தமிழின் முக்கடல் சங்கமத்தில்
தத்தளிக்கும் தமிழன் நான்.. எனை
அன்பெனும் படகில் ஏற்றி அரவணைத்து
இன்னும் இருக்கும் உலகம் காட்டி
நாளும் மனம் சந்தோசிக்க என்னில்
வசிக்கும் அத்தனை நட்பூக்களுக்கும்
நான் நன்றிகள் பாராட்டுகிறேன்.

உடன் இருந்து உதவும் சிவா...
தொலைவில் இருந்தாலும்
தொடர்பில் வரும் தோழமை சே.குமார்....
இனிக்க நினைக்கும் என் நேசமிக்க
வினோத... வினோத் நிலா...
அன்புடன் கை கோர்க்கும்
அக்கா சித்ரா...,
அன்பு ஆனந்தி...
இதம் நல்கும் பத்மா...
இன்னுமின்னும் தம்பியான
செல்வக் குமார்...,
நேசத்தில் நனைத்த...
தோழர் தினேஷ்க் குமார்...
அன்பு பாராட்டிய
ஐயா ... காளிதாசு...
அழகியாய் சிரிக்கும்...
அழகி...
தோழமையுடன்
"தோழி"
என்னுடன் இருக்கும் எஸ்.கே...
இன்னும் இன்னும் ....
இப்படியாக நீளும் "பாசப்பட்டியல்"
நான் சிக்குண்ட "நேசப் பட்டியில்"
நிதம் நிதம் அன்புக் குவியல்...!

இன்னும் என்னை அவ்வப்போது
அரவணைக்கும் ஆதரவு கரங்கள்
அத்தனைக்கும் என் அன்பின் நன்றிகள்.

நான் பார்த்தறியா... பா.ரா
எனையும் அறியார் ஆயினும்
நேசமுண்டு நெஞ்சுக்குள்
பாசமிக்க தந்தை அவர் பக்கத்தில்
இருக்கவியலா விட்டாலும்
நாளும் அவர் குடும்ப சுகம்
விரும்பும் நான்.

நான் ரசிக்க சுவைக்க...
"அடர்த்தமிழ் நேச" எனவழைக்கும்
நேசமித்திரன்...

யாவர்க்கும் என் நெஞ்சார்ந்த
வணக்கங்களும் நன்றிகளும்.

இன்று புதுமணத் தம்பதியாகும்
என்னுடன் பணியாற்றிய
"அகிலா" வுக்கு என் ஆசிகள்.

இன்று தம் வாழ்க்கையின்
இன்பம் பெருக்கி நல்குடும்பம்
சமைக்க புதுமணை புகுந்தேகும்
இனிக்க நினைக்கும் தோழன்
வினோத்நிலா....!

உங்கள் யாவருக்கும் ....
அன்பில் என் ஆனந்த ஆசிகள்.
கண்டங்களில் நாம் துண்டங்களாய்
தொலைத்துவிட்ட நம் நேசத்தை...
தமிழ்த் தேசத்தை...
வலைப்பூ வழியாக...
வடிவமைத்து புனரமைக்க...

வாழ்வேகும் தமிழ் நெஞ்சங்கள்
உங்கள் அனைவருக்கும்...
தமிழ்க் காதலனின்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து தோள் கொடுங்கள்
தோழர்களே...!.

***********************************

Wednesday, November 10, 2010

"எங்கே அவன்...?".

பரந்த வெளியெங்கும்
திரிந்தலையும் ஆன்மாவின்
தேடல்....!
 

இன்னும் நேசிக்க
எத்தனை எத்தனை
இரகசியம் வைத்தாய்
இறைவா...!
 

ஒட்டகத் திமிலொத்து
ஓங்கிய மலைகள்...!
என் எண்ணத்தின்
எழுச்சியாய்...!
 

பாலாடைக் கூம்பு வாய்
வழிந்தோடும் பாலாய்
நதிகள்...!
 

மரகதப் பச்சை
பசும்புல் வெளி...!
 

நீலநிற ஆடைக்குள்
ஆழிப் பெண் நளினம்...!
தும்பைப் பூ படுக்கையாய்
துருவம்...!
 

மோருக்குள் மிதக்கும்
வெண்ணை உருண்டை
வழுக்கல்கள்....
பனித்துண்டங்கள்....!
 

தூய்மை துயிலும்
புள்ளினங்கள்...!
 

வளி மிதக்கும்
வான்துகள் தீட்டும்
வடிவம்...என்
கற்பனையின் களஞ்சியம்.
 

தேவைக்கு மேல்
தேடாத நல்லறிவு
பாரெங்கும் பார்க்கிறேன்
விலங்கிடத்தில்...!
 

இயற்கையின் மடியில்
இதமாய் வாழ்க்கை...
எந்த மிருகமும்
பசியடங்கி பின்
கொலை நிகழ்த்தவில்லை.
அதுவும் உணவுக்காய்
மட்டுமே...!
 

ஆடம்பரத்துகான
அத்துமீறல்கள்
எங்கும் இல்லை.
எல்லையிலா உலகில்
எல்லைகளற்ற வாழ்க்கை...!
 

தனித்துவம் இழக்காத
தார்மீக வாழ்வு....!!
பூவுலகில்....
தாவரங்கள்..
புள்ளினங்கள்...
விலங்கினங்கள்...
இங்கே கிடக்கும்
சுதந்திரம்....!
 

ஏனோ இல்லை...
எதுவும் மாந்தரிடம்.
 

இறைவா...!
இன்னும் தேடுகிறேன்
மனிதனை...!!!.

**************************

Tuesday, November 9, 2010

"பச்சைக் கிளி"

பச்சை பாத்திரத்தில் பூத்திருக்கும்
பச்சைக்கிளி படர்ந்திருக்கும்
கவிந்த கவின் கூடு தழைத்த
தளிர் மிக்க துளிர் சொக்க
முகம் சிவக்கும் பஞ்சவர்ணம்.

பழம் எதுவென குழப்பும் அழகு
அலகாய் அமைந்த அதிசயம்..!
கழுத்து மேல் என் காதல்
சொல்லும் மஞ்சள் தாளி...!
வெட்கத்தில் சிவந்த மூக்கு..!

வளைத்தேடும் உன் வேகம்
வலைப் போடும் என் மோகம்
சிக்குவது யார்? நீயா? நானா?
சிலந்தி வலை நேசம்...!

முரண்டு பிடிக்கும் உன் கழுத்து
திருகல்...! முனக வைக்கும் என்னை..!!
குறுகுறுக்கும் பார்வைக்காய்
நெடுந்தவம் நான் புரிவேன்.

பிதுங்கும் விழிகளை உருட்டும் அழகில்
பிதுங்கும் நெஞ்சம் முயங்க கெஞ்சும்..!
பச்சைக்கிடை பதுங்கும் உன் பாசாங்கில்
இச்சைக்கிடை இம்சையாய் தேடும் நான்..!

பேசும் உன் பேச்சில் என் மூச்சு...
உள்ளும் வெளியுமாய்...
ஊசலாடும்...அவத்தை புரியுமா?
நிசத்தை நான் சொல்ல ....வெட்கமுனக்கு?

வேட்கை எனக்கு...!!

வாராயோ ... பைங்கிளியே..!!!

"பட்டாம்பூச்சி...!"


வண்ணங்கள் சுமந்த வண்ணம் என்
எண்ணங்களில் மிதந்த வண்ணம் உன்
இறுப்பு சுவற்றில் ஒட்டியபடி உன்மேல்
இதமாய் என் நினைவுகள் ஓடியபடி....

பிரமிடு ஒன்று நிலைக்குத்தி நின்றதாய்
நினைப்பு ஒன்று வந்து மோத நான்
பிரமித்து பார்த்தபடி.... நேரிய இறக்கை...!
வீட்டுக்குள் வந்த "பெர்முடா" முக்கோணம்...!

எப்படி பார்த்தாலும் ஒரு செங்கோண
முக்கோணம்....! அசையாத உன் இறுப்பில்
அதிசயித்து அசையாத ஆனந்தமாய் நான்.
வட்ட வட்ட வளையங்களை சுற்றியே

விழிப்பாவை வளையமிட தவிர்க்க வியலா
தருணத்தில்... நிறங்கள் மேல் மயக்கம்...!
நீளும் இரவில் நீண்ட என் நினைப்பு
உன்மீதான இரக்கம், கிரக்கம் எதுவும்

குறையாமலே..! இயற்கையின் ஆற்றல் பிரமித்தபடி..!
உடலைவிட பெரிய அளவில் இருந்தும்
உலகம் சுற்ற இலாவகமாய் அசைக்கும்
அழகில் மயங்காத மானிடம் இல்லை.

நித்திரை சுகம் தழுவி...முதல்நாள்
முத்திரை பதித்த வாழ்க்கை முடிந்து
மறுநாள் விழித்து வாழ்கிறேன்...விழித்து...!
மாலைப் பொழுது வருகைக்கு பின்னான

உன் வருகை எதிர்ப்பார்த்து அனிச்சையாய்
அங்கும் இங்கும் அலைந்த கண்கள்...
அதேயிடம் நிலைக்குத்தி பின் தேடல்...!
அதிர்ச்சியில் உறைந்த கண்களோடு நானும்....

எந்த அழகும் இல்லா எனை
அடுத்தநாள் வாழ அனுமதித்த இயற்கை
அய்யகோ...! கொள்ளை அழகு கொண்ட
உன்னை அனுமதிக்க வில்லையா? அந்தோ...!

இப்போதும் கலையாத அழகுடன் நீ...!
காணப் பொறுக்கா நிலையில் என்காலடியில்.
சுமக்க முடியா இறக்கைச் சுமையால்...
சாய்ந்து கிடந்தாய் கவிழ்ந்த படகாய்...!

கனத்த இதயம் படபடக்கிறது.... உன்
படபடப்பு அடங்கிய தெப்படி?.. யோசித்தபடி
சிலையாய் நிற்கிறேன் நிலைப்படி சாய்ந்தபடி...!
வாழ்க்கை மீதான தாக்கத்தில் வண்ணங்கள்

எதுவும் என் எண்ணத்தில் இல்லை.
எந்த வண்ணமும் கலையா அழகிய
இறப்பு இன்னமும் பாதித்த எனதிறுப்பு...!
மௌனம் சுமந்த இரவு...! மனம்

சுமந்த மரணம்...! ஒற்றை வினாடி
உறவில் இத்தனை பாதிப்பு எனக்கு.
உள்ளுக்குள் அழுதபடி என் சட்டை
அலங்கரித்த உன் வண்ணங்கள் நினைவில்...!