Friday, January 31, 2014

நிலவின் நிழல்...!

பிறைமதியே யாயினும் குறைமதி ஆயினள்
பிறைநுதல் பெறினும் கரைமீற நேர்ந்தனள்
கவின்வடி வாயினும் கவியே வடிப்பினும்
கொள்குறி கொள்ளல் தள்ளல் குறைபடின்

நிறைகுறி கொள்ளல் நிலைகுறி கொள்ளல்
நிறைமன நிற்றலில் நிற்பதறியா மென்தளிர்
நின்மலர் மணமெலாம் என்மன வாசமடி
நுண்மதி காண்பது நொங்கும் நுரையும்

வளர்மதி யாயினும் வான்பிறை யாயினும்
வன்மை காட்டின் சிதறும் சிந்தை
மென்மை ஊட்டின் குளிரும் உள்ளம்
தன்மை அறியா தகைமை தானாநீ

நல்மன வெளியில் போய் விழுந்த
நல்விதை முளைத்த வாயிலை எழுந்த
நன்னில மதுவோ என்னில் கொழுந்தாய்
நாளும் மூளும் நாட்ட மறியாயோ..?!

கதிர்மறை கருந்திரள் அலைவினில் உறையொளி
காணுதல் கண்மறை யாயினும் கதிர்வெளி
மீளுதல் பெண்மதி காணுமோ..? - சுடரொளி
சூழ்ந்திட இடர்தனை தாவுதல் நன்றே

தெளிநீர் கலங்கி தெளிந்த பின்னும்
தெளிவது வெள்ளம் - உள்ளம் துள்ளும்
வெள்ளிமலை மீதினில் படரும் ஒளியாய்
விழும் உயிர்தனில் ஓர்துளி அன்பினால்.

Saturday, January 18, 2014

கவி....”தை”..!

உள்ளத்து பள்ளங்களில் இட்டு நிரப்புகிறேன் உன்னை - உள்ளே
உணர்வுக் குவியல் தொட்டுச் செல்கிறது உன்னை - வெளியே
உந்தித் தள்ளும் உணர்வு முகிழ்ப்புகளை விழுங்க - தனியே
உட்கார இடம்தேடி தவிக்கும் உள்மன ஒழுகலில் - சகியே

உன்னை என்னுள் செதுக்கச் செய்கிறேன் நினைவே - சிலை
தன்னை கலை அன்னை காணுதல் போலே - மலை
தன்னில் மறையும் கதிரவன் பாய்தலாய் உள்மன நிலை
என்னில் கரையும் என்னை நானே தேற்றத் தோற்கிறேன்

மின்னல் வீச்சில் ஊடுறுவல் செய்து மனதை சாய்க்கும்
கன்னல் மொழியில் கண்கள் கொய்து கயல் விழிகள்
பின்னல் அளந்து பின்னால் காட்டும் கார்குழல் - நடையில்
அன்னம் கலந்த அழகு காட்டும் ஒய்யார இடையில்

அருவி கொட்டும் நீராய் பெருகி வரும் தமிழால்
அறிவு மடை திறந்த கவிவயல் நிரம்பும் எழிலால்
செறிவு ஓடை கலந்து உளவியல் ததும்பும் பொழிலால்
குருவி கூடாய் ஆடும் சித்தம் உன்னால் நித்தம்

சமர் புரிய சரிசம அமர் நிலை ஆய்ந்து
சடுதியில் புரிந்த முத்தப் போரில் ஆழ்ந்து - விடுகையில்
சத்தமின்றி வீழ்ந்தே வாழ்ந்த நிலை நினைவுத் தொடுகையில்
சாமரம் வீசிடும் நிகழ்கால நிமிடங்கள் கரைந்தே - நிசத்தில்

பாமர சிந்தனை பாய்மர ஓட்டம் எடுக்க - அலை
பாயும் மனதின் நிந்தனை வாட்டம் கொடுக்க - நிலை
மாயும் குணத்தை நிறுத்த பாட்டும் தொடுக்க - கலை
வாயும் சுவைத்தமிழ் சிந்தும் சந்தம் கனிவாய் - உலை

இட்ட அரிசியும் உணவிட்ட அரசியும் கலந்திட்ட வேளை
முட்ட முட்டும் தலையில் தொட்டும் கையொடு - கண்கள்
பட்டும் எட்டும் நிலையில் கிட்டியும் கிட்டா இன்பம்
தொட்டு தொடரும் இலையில் பரிமாறல் இதமாய் - வாழ்தல்

வகுத்தல் பெருக்கி தொகுத்த குறுநகை செல்வம் - ஈதல்
பகுத்து இன்புற செழித்து வளர திருமுகம் - காணல்
களித்தல் திளைத்தல் கானக மானும் மயிலும் ஒத்தல்
பொத்தல் பையில் சேமித்த சில்லரை தொலைந்த பிதற்றல்

தொகுத்து மொழிதல் மொழிந்த மொழியில் புரிதல் புகுதல்
புகுத்த விழைந்த அழைத்தல் மிகுந்த அன்பில் அமிழ்தல்
முகத்து முகத்தில் நெகிழ்தல் சிமிட்டும் கண்கள் உயிர்த்தல்
அகத்துள் அகத்தை ஆழ்த்தி கிட்டும் ஆனந்த உலகம்.

இங்கே பிறந்து இங்கே இறக்க....

இங்கே பிறந்து இங்கே இறக்க....

முடியும் வாழ்நாள் கழித்தல் ”வாழ்வு”
பெரும் பொருள் சொல்லும் பொருள்
பேதை மனம் விட்டு பொருள்
தேடுதல் தொழிலாம் உயிர்க்கு

நாடுதல் வாடுதல் ஓடுதல் முடியும்
நாடியும் நரம்பும் ஓயும் ஓர்பொழுதில்
மாயும் உயிர் தவிக்கும் புரிதலில்
வாழாதுபோன வாழ்வை எண்ணி

நல்லதை நாடாது நாடாகாது யாதும்
நல்லதை தேடாது வளராது நல்லது
நல்லதை ஓதாது உயராது மானுடம்
நல்லதை வாழாது நல்லதும் புரியாது

அல்லவை பெருக்க அல்லவை செய்தல்
அல்லவே அல்லவை போக்கல் வழியாம்
அல்லவை நீக்கல் நல்லவை ஆக்கல்
அல்லவோ அல்லவை அழிக்கும்

மோகத்துள் மூழ்குதல் வேகத்தில் விழுதல்
தாகத்தில் தழுவுதல் யாவும் நிலையா..?
தேகத்துள் புத்தி திரிந்து முடிந்து
திருந்துங்கால் வாழ்வில் வருந்துங்கால்

ஒன்றே முடிந்த செயலாம் செயலற்ற
உயிர்க்கு அழுதலும் தொழுதலும் ஆற்றாமை
இறைபெருக்கு நிறுத்தி இரைப்பெருக்க நீந்தி
குறைபெருக்கும் குற்றம் பெருகுதல்

முற்றும் ஒழிதல் வேண்டி முயலுதல்
முன்னம் செய்த பிழைகள் அகலுதல்
பின்னும் தழைக்கும் தலைமுறை நிலைத்தல்
என்னும் எண்ணம் வேண்டுகிறோம்.

Friday, January 17, 2014

”குயிலும் கவியும்...!”



அந்த வனத்துக் குயில் மௌனிக்கிறது
கிளைகளில் நம்பிக்கை இல்லா தீர்மானமோ..?!
அமர்ந்து அமர்ந்து எழுந்த அலுப்போ..?
அங்கும் இங்கும் திரிந்த சலிப்போ...?!

கவிஞன் திசை நோக்கி தியானிக்கிறான்
இசையின் பிறப்பிடமே ஏனிந்த தயக்கம்..?
அசையும் உன்னசை விலன்றோ எனக்கான
அரங்கேற்ற ஒத்திகை நிகழ்ந்து விட்டது

விழிகளின் வீச்சில் காட்டும் அச்சம்
மொழிகளை ஊமையாய் மாற்றிப் போட்டதோ
கழுத்து அசைவில் சுழலும் உலகம்
நின்றதோ எனக்கு..? முன்னும் பின்னும்

தேடலில் விரியும் தேகத்துள் மனம்
கூடலில் சொரியும் மேகத்து துகளாய்
மிதக்க மிதக்க கனத்து பொழிகிறது
இணக்கம் சுணக்கம் இருத்தல் பிரிதல்

கலைந்து கலத்தல் கவிதையாம் வாழ்வில்
அலைந்து வளைந்து நெலிந்து மெலிந்து
சலைத்த மனம் ஆட்டம் நிறுத்தி
இலயித்து கிடக்கும் ஆடலரசன் அழகில்

ஓங்கி ஒலிக்கும் உயிர்க்குரல் சிலிர்ப்பில்
வாங்கி எழுதும் கவிதை குயிலின்
ஏக்கம் தெறிக்கும் முகிலின் தென்றல்
தாங்கி சிரிக்கிறது கவிஞனின் மனம்.

Thursday, January 16, 2014

”பொங்கல்”

தமிழா.............!
 

உள்ளே உறங்கி கிடக்கும் உணர்வு பொங்குக
தனியே பிரிந்து கிடக்கும் இனமே பொங்குக
கனியான மொழியாம் தமிழில் பொங்குக
காலத்தில் மூத்தவனே உண்மை பொங்குக

நீர்த்த கதைகளை களைந்து பொங்குக
நீரும் நிலமும் நமக்கென்றே பொங்குக
வீரமும் மானமும் இருகண்ணில் பொங்குக
ஈரமும் ஈகையும் நாமென்று பொங்குக

அறிவும் அனுபவம் அனுதினம் பொங்குக
துணிவுடன் தூய்மை போற்ற பொங்குக
நனித்தமிழ் சுழலும் நாவென பொங்குக
மனம் புரிந்த மரபில் வந்தோமென பொங்குக

பெண்மையை உண்மையாய் மதித்தோமென்றே பொங்குக
பொய்மையை முதலாய் மிதித்தோமென பொங்குக
வாய்மையை வாழுங்கால் போற்றியே பொங்குக
தாய்மையை தெய்வமாய் தொழுதே பொங்குக

இறந்தும் இறவா புகழாய் பொங்குக
இன்னும் இருக்கும் தமிழாய் பொங்குக
வாழ்ந்த தமிழன் வரலாற்றை பொங்குக
வழிகள் வகுத்த இனமாய் பொங்குக

இழிவுகள் களையும் கண்கள் பொங்குக
இயல்பில் அன்பில் உயர்வாய் பொங்குக
இசையாய் உயிரில் கலந்தே பொங்குக
இனிக்கும் தமிழில் இனிதே பொங்குக

சுவடிகள் தொட்டே சுவடுகள் பொங்குக
சுகமும் நலமும் சுகமாய் பொங்குக
அகமும் புறமும் அறமே பொங்குக
ஆயுள்வரை யாவரும் நலமே பொங்குக

அடைந்த அவமானம் அகற்ற பொங்குக
அவனியில் அரசன் நீயென பொங்குக
நினைவிலும் அடிமை நீங்கிட பொங்குக
நீ நீயென வாழ்ந்திட பொங்குக

இல்லம் எங்கும் இன்பம் பொங்குக
இனமான சொந்தமே எழுந்தே பொங்குக
அடங்கா திமிரில் ஆர்பரித்தே பொங்குக
அறிவுநெறி ஆண்மக்கள் நாமென்றே பொங்குக

வண்ணம் இழைத்தே வாசலில் பொங்குக
எண்ணம் கலந்தே என்றும் பொங்குக
திண்ணம் கொள்ளும் தினமெல்லாம் பொங்குக
கன்னமெல்லாம் கனிய கனிய பொங்குக

நற்றமிழ் நாளும் செழிக்க பொங்குக
நம்மாடுகள் ஆடுகள் சிறக்க பொங்குக
நம்மாழ்வார் நினைவே நம்மில் பொங்குக
நாமே ஆழ்வாரென்றே ஆழ்ந்து பொங்குக

வையகம் புசிக்க வாழ்வில் பொங்குக
வாழ்ந்திட வரலாறு நம்மில் பொங்குக
பசியும் பிணியும் பறந்துபோக பொங்குக
அன்பும் அறமும் நாமென்றே பொங்குக


எழுவாய் தமிழாய்........கருவாய் தொட்டே....!

.... எனதன்பு தமிழினத்துக்கு இனிய புத்தாண்டு மற்றும் இயற்கையை போற்றும் பொங்கல் நல்வாழ்த்து.

Tuesday, January 14, 2014

கோலாட்ட பாடல் 2

தோட்டத்தில என்ன இருக்கு சின்னபுள்ள
தோட்டக்காரன கேட்டுப்பாரு கன்னிபுள்ள
வெள்ளரி விளைஞ்சிருக்கு சின்னபுள்ள - அதுல
வேலியும் போட்டிருக்கு கன்னிபுள்ள

சின்ன சின்ன மீனுங்க குளத்துல
துள்ளி விளையாடுது சின்னபுள்ள
காரமடையான் காத்திருக்கு கரையில
காரணம் என்ன கேளுடி கன்னிபுள்ள

கோழியும் மேயுது சின்னபுள்ள - அதுக
குஞ்சியும் மேயுது கூட்டத்துல
வட்ட மடிக்குது வானத்தில் பருந்து
வாட்ட மெடுக்குது கன்னிபுள்ள

பொந்தில பாருடி அணில் பிள்ளை
அணில் குட்டி இருக்கு உள்ளுக்குள்ள
கத்தியும் பேசாத கன்னிபுள்ள
கருடனும் இருக்கு கிளையில

விட்டத்து பூனையும் தெருவுல வந்து
விளையாடும் விதிய பாருபுள்ள
வேட்டை நாய்களும் வெறியோடு அங்கே
நோட்ட மடிக்குது கன்னிபுள்ள

அல்லியும் பூத்திருக்கு ஐய்யனாரு குளத்தில
சொல்லியும் விடாதே ஊருக்குள்ள
ஒருசோட்டு பயலுக புகுந்து அழிப்பான்
ஓரியாடி குளத்துல கன்னிபுள்ள

காடைகள் அடைஞ்சிருக்கு காட்டுக்குள்ள
காட்டியும் கொடுக்காத சின்னபுள்ள
முட்டையும் காடையும் பத்திரமா காட்டுல
மூடர்தம் கண்படாம கன்னிபுள்ள

மயிலும் குயிலும் மாந்தோப்பில் ஆடுதுடி - என்
மனசேனோ பின்னால ஓடுதுடி
வண்ண மயிலும் கானக் குயிலும்
வாழட்டும் வாடி கானகத்துல

குள்ளநரி கூட்டமொன்னு சுத்துது பாரு
முந்திரி கொல்லை மூலையில
கள்ளர் பயமும் காட்டுநரித் தனமும்
கண்டு மிரளாதே கன்னிபுள்ள

பனங்காட்டு பக்கத்துல பதுங்கும் நரிகளை
பார்த்தாலே பயம்வருது சின்னபுள்ள
பணம் காட்டும் நரிகளை விடவா
பயமின்றி வாடி கன்னிபுள்ள

கிணத்து மேட்டில் குமரிக் கூட்டம்
நீரிரைக்கும் அழகுல நிதம்
மூச்சி ரைக்கும் காளையர் கூட்டம்
சேதிய கேளுடி சின்னபுள்ள

வேலிய தாண்டாத கன்னிபுள்ள இது
வெள்ளாம திருடும் கூட்டம்புள்ள
குடத்து தண்ணி குமரிப் பொண்ணு
ரெண்டும் ஊர்சேரணும் சின்னபுள்ள

காலமும் இடமும் புரியணும் உலகில
வாழ்தலும் இருக்கு அதுக்குள்ள
வாட்டமும் வேண்டாம் வாடிபுள்ள – நாம
வாழும்பூமி பாட்டன் வீடுதானே.

Wednesday, January 08, 2014

கோலாட்ட பாடல்


அலைய அலைய அலை யடிக்குது
வலைய வலைய வாருங்கடி
வளையல் சத்தம் வானம் பிளக்கணும்
குலுங்கி குலுங்கி ஆடுங்கடி

பாட்டனும் பாட்டியும் கூடிக் களிச்ச
வாழ்க்கையை பாடுவோம் வாருங்கடி
காட்டுல மேட்டுல வீட்டில எல்லாம்
கல்லில் வடிச்சத பாடுங்கடி

இட்டதும் தொட்டதும் பொன்னானது இங்கே
பொட்டல் வெளியான பூமியில
இடுப்பு வளைஞ்சி மடிப்பு விழவே
உழைச்ச உழைப்ப பாடுங்கடி

ஆனமட்டும் இங்கே ஆணான ஆளெல்லாம்
ஆறு குளம்வெட்டி யானதிங்கே
நீரு நிலமெல்லாம் பாய்ஞ்சி வரவே
நித்த முழைச்சத பாடுங்கடி

உச்சி வெயிலுல சேத்து நிலத்துல
நாத்து நடுங்கதை பாடுங்கடி
கட்டு நெல்லுக்கட்டி களத்து மேட்டுல
கட்டி அடிச்சத பாடுங்கடி

மாட்டு வண்டியும் கூண்டு வண்டியும்
மண்ணில் பறந்தத பாடுங்கடி
மாமன்னன் ஆண்ட மண்ணும் இதுவென
மார்தட்டி குலுங்கி ஆடுங்கடி

சோழனும் சேரனும் பாண்டியனும் வந்து
சொக்கிப் போகவே ஆடுங்கடி
புலியும் வில்லும் மீனும் பறந்த
புண்ணிய பூமிய போற்றுங்கடி

விளைஞ்ச நெல்லில் விதை எடுத்து
விளைய வச்சத பாடுங்கடி
இன்று விளைஞ்சதுல விதையும் இல்லை
விதிய நொந்து ஆடுங்கடி

பூத்து குலுங்கிய பூமியில இன்று
வாட்டி வதைக்குது வறுமையடி
நம்ம வாட்டம் தீர்க்கவே வழியிருக்கா
பாட்டனை கூப்பிட்டு கேளுங்கடி

காட்டை அழிச்சோம் மாட்டை அழிச்சோம்
கருவ காட்டை பாருங்கடி
ஒருநாதி யில்லா இந்த தேசத்துல
வந்து நாம பொறந்தோம் பாடுங்கடி

கலைகள் வளர்ந்த காலமும் உண்டு
சிலைகள் காட்டியே ஆடுங்கடி
அள்ள முடியா வெள்ள மதிலே
அணைய கட்டினோம் பாருங்கடி

குள்ள நரிகளும் கூடி இங்குஒரு
கூட்டாட்சி  நடத்த வாருதிங்கே
கள்ளர் எல்லாம் கலந்து பேசி 
கட்சி நடத்துது பாருங்கடி

குறிஞ்சி முல்லை மருதம் எல்லாம்
காணாம போனத பாடுங்கடி
கரும்பு காய்ச்சி வெல்லம் எடுத்த
காலமும் இப்போ போனதெங்கே..?

இரும்பும் ஈயமும் உறுதி இழந்த
இந்த காலத்தை பாடுங்கடி
அடுக்கு மாடி கட்டிமுடிச்சு
ஆனது என்ன கேளுங்கடி...?

சொத்து சுகத்தை கட்டிக் காக்கவே
சொந்தங்கள் வெறுத்து போனதிப்போ
பெத்த தாயிக்கே காப்பகம் இங்கே
கட்டிக் கிடக்குது பாருங்கடி

கவரு மெண்டு காசு கொடுத்து
காப்பாத்தும் கதைய கேளுங்கடி
நேத்து இருந்த பண்பாடு எல்லாம்
காற்றில் பறக்குது பாருங்கடி

பூத்து உதிரும் பிஞ்சுகளே இங்கு
வேர்களை வெறுத்த நியாயமென்ன...?
காத்து வளர்த்த நன்றியும் நமக்கு
மனசில் நிக்காம போனதென்ன...?

தமிழன் தனித்த குணமும் இழந்த
தரித் திரத்த பாடுங்கடி
தலைநிமிரும் காலமும் எப்போ...?
தலை முறையை கேளுங்கடி.