Wednesday, April 06, 2011

"இறையாண்மை என்றால்....?பதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் இதுவரை விடை இல்லை. அந்த வினாவுக்கு விடையோடு இந்த பதிவில் உங்களை சந்திக்கிறேன். இந்தப் பதிவில் இன்னும் சில வினாக்களை முன் வைக்கிறேன். பயப்படாதீங்க..... இங்கேயே விடைகளும் கிடைக்கும்.

௧. இறையாண்மை என்றால் என்ன? இதுதாங்க நான் கேட்டக் கேள்வி.
  இறையாண்மை என்பது ஒரு தேசமோ, ஒரு இனமோ, ஒரு இயக்கமோ, ஒரு அமைப்போ, ஒரு சமூகமோ தனக்கான அடையாளங்களுடன், தனது பாரம்பரியத்துக்கு தக்கவாறு, தன்னுடைய கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் ஏற்றவாறு தன் சமூகத்தை கட்டி எழுப்ப அல்லது உருவாக்க வரையறுக்கப்படும் ஒரு கொள்கை. அந்தக் கொள்கை வழி நிற்றலும், அதன் வழி தொடர்தலும் அந்த சமூகம் ஏற்றுக்கொண்ட இலட்சியப் பயணமாகும்.

௨. இந்திய இறையாண்மை என்றால் என்ன? இதுதாங்க என்னுடைய அடுத்தக் கேள்வி?
   இந்தியாவின் இறையாண்மை என்பது "வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பது" என்பதுதாங்க. இது நம்மைப் பற்றிய விசயங்களை சுருங்கச் சொல்லி நிறைய விளக்கும் ஒரு தாரக மந்திரம். நம்மிடையே பல்வேறு விதங்களில் வேறுபாடுகள் இருக்கின்றன. இனத்தால், மதத்தால், மொழியால்,கலாச்சாரத்தால், உடையால், உணர்வால்... இப்படி பல வேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் அந்த வேறுபாடுகளைத் தாண்டி "இந்தியர்" என்கிற உணர்வால் ஒன்றுபட்டு இருப்பதையே இந்த "இந்திய இறையாண்மை" சுட்டுகிறது.

௩. நம்மில் பலருக்கு இது தெரிவதில்லை, புரிவதில்லை என்பது வேறு விஷயம். குறிப்பாய் நம்முடைய அரசியல்வாதிகளுக்கு.... இது என்ன அப்படின்னே தெரியாது. இது புரிந்திருந்தால் நம்மை சாதி வாரியாகத் துண்டாட மாட்டார்கள். இங்கே சாதீயப் பெயர்ச் சொல்லித்தான் பலக் கட்சிகள் தங்கள் பிழைப்பை நடத்துகின்றன. இப்போ சொல்லுங்கள் இவர்கள் இந்திய இறையாண்மைக்கு உகந்தவர்களா..? இல்லை எதிரானவர்களா..?

௪. இந்த தேசம் இவ்வளவு இழிவுகளை சந்திக்கக் காரணம், இந்த தேசத்தின் "குடிமக்களின் சிந்திக்காமையே" தவிர வேறெந்தக் காரணமும் இல்லை. நம்மிடையே இருக்கும்... சின்னச் சின்ன பொறுப்பற்றத்தனமும், அலட்சியமும்தான். நம்முடைய அத்தனை அவலங்களுக்கும் காரணம். அவனை விட நான் உயர்வானவனாக தன்னைக் காட்டிக் கொள்ளச் செய்கிற முனைப்பில்தான் நம்மை நாம் இழிவுப்படுத்திக் கொள்கிறோம்.

௫. வீட்டின் குப்பையை வீதியில் வீசுவதில் தொடங்கி, குடிநீரை பயன்படுத்த தெரியாத அறியாமையில் இருந்து... எச்சில் துப்புவது முதல்...சாக்கடை மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் வரை எதிர்வீட்டுக்காரன்தான் நம்முடைய அதிக பட்ச இலக்காக இருக்கிறான். அல்லது பக்கத்து வீட்டுக்காரன். நம்முடைய சுகாதாரம், சுத்தம், தேவைகள், அத்தியாவசங்கள் யாவும் நமது வீட்டைச் சார்ந்ததாக மட்டுமே கருதுகிறோம். அது நமது நாட்டைச் சார்ந்தது என்கிற அறிவை நாம் இன்னும் பெறவில்லை. எத்தனை படித்தென்ன...??? நம்மிடம் அடிப்படை அறிவு இல்லாத போது...!!!!

௬. இந்தியனாக இருக்கிற ஒருவன் தமிழனாக, கன்னடனாக, தெலுங்கனாக, மலையாளியாக, பஞ்சாபியாக, குசராத்தியாக, மற்றும் மராட்டியனாக இருக்க நினைக்கிற போது, இந்திய இறையாண்மை நிச்சயம் பாதிக்கப் படும். அப்படி பாதித்து விடக் கூடாது என்கிற கவனமும், கவலையும் இந்திய அரசாங்கத்தின் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

௭. இதில் மற்ற இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் உலகின் வேறு நாடுகளில் தங்களது வேரினை பதிக்கவில்லை. அப்படி பதிக்காமல் போனது அவர்களது யோகமாக போய்விட்டது. ஆனால், இதில் தமிழன் மட்டும் விதி விளக்களிக்கப் பட்டவனாகிறான். இவனுக்கு உலகின் பல நாடுகளில் வேர் இருக்கிறது. நான் வேர் என சொல்வது, தமிழர்கள் தங்களை அதிகாரப்பூர்வக் குடிகளாக வெளிநாடுகளில் குடியேற்றம் பெற்ற வரலாற்றை. அப்படி ஒரு வரலாறு தமிழனுக்கு "இலங்கை" எனும் என் அண்டைய தேசத்திலும் உண்டு. அதிலும் தமிழ்நாட்டுக்கு அடுத்தப் படியாக, அதிகத் தமிழர்கள் ஒரே இடத்தில் வாழும் நாடாக இலங்கை இருக்கிறது.

௮. இன்றைய இலங்கைப் பிரச்சனைக்கு ஒருத் தமிழன் துடிக்கிறான். ஆனால் ஒரு சிங்களவனோ ( நான் சொல்வது இலங்கைவாழ் சிங்களவன் அல்ல.. ஒரிசாவில் வாழும் சிங்களவன் ) பஞ்சாபியோ, மராட்டியனோ, தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ... எவனும் துடிக்காமல் போனது ஏன்...??? ஏனென்றால் பாதிக்கப்பட்டது அவனது இனம் இல்லை. அதனால் அவன் அமைதிக் காக்கிறான். சரி. நம்முடைய பக்கத்து மாநிலம் தமிழ்நாடு, நமது மொழியின் தாய் தமிழ்... என்கிற உணர்வில் ஆதரவு மட்டுமாவது தருகிறானா என்றால் அதுவும் இல்லை. அவன் நமக்கே தண்ணீர் தர மறுக்கிறான். நம்மிடம் மின்சாரம் பெறுகிறான்.

௯. இப்படி இந்தியாவின் இறையாண்மைக்கெதிராக மாட்டிக் கொண்டு விழிக்கும் ஒரே இனமாக என் தமிழினம் இருக்கிறது. ஒன்று நம் உணர்வுகள் புரிந்து மற்றவர்களும் நமக்கு ஆதரவளித்து இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வியல் உரிமையை பெற்றுத் தர வேண்டும்... அல்லது தமிழனாக நாம் போராடி நம்முடைய உரிமையை பெறவேண்டும். அதற்கு தடையாக இருக்கும் ஒன்றை நாம் இறையாண்மை எனக் கொள்வது எப்படி சாத்தியம்???

௰. எமது விரல் கொண்டு எம் கண்ணை குருடாக்குவது போல இந்திய இறையாண்மைப் பேசும் இந்திய அரசு நமது ஆயுதங்களை கொடுத்து தமிழ் இனம் அழிய உதவுவது இந்திய தமிழனுக்கு எதிரான செயல் இல்லையா..? இந்திய தமிழர்கள் இந்தியாவின் ஒரு முக்கியமான மாநிலமாக இருக்கும் போது, எப்படி அந்த இனத்தை அழிக்க நினைப்பவனுக்கு ஆயுதம் வழங்கியும், படை அனுப்பியும் உதவலாம்...? அவனுக்கு இந்தியாவில் சிவப்புக்கம்பள விரிப்பில் வரவேற்பு எதற்கு..?

௧௧. அப்படி என்றால் இந்தியாவின் இறையாண்மையை மேற்கண்ட வகையில் இந்திய அரசு மீறவில்லையா..? இந்திய அரசு மதிக்காத ஒரு இறையாண்மைக் கொள்கையை,   ஒருத் தமிழன் எப்படி மதிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறீர்கள்..? தமிழன் எதற்காக மதிக்க வேண்டும் சொல்லுங்கள்...??? உங்களால் எங்களுக்கு கிடைக்காத நீதிக்காகவா..? உங்களால் எங்களுக்கு கிடைக்காத தண்ணீருக்காகவா..? நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்த முடியாத மத்திய, மாநில அரசுகள் "இந்திய இறையாண்மையை" மீறியதாக அர்த்தமில்லையா..??


        எனதன்பு பதிவுலக வாசகர்களே, படைப்பாளிகளே, கவிஞர்களே, எழுத்தாளர்களே, சிந்தனைவாதிகளே, சீர்திருத்தவாதிகளே...... கொஞ்சம் நில்லுங்கள். சிந்தியுங்கள். பதில் சொல்லுங்கள்.....

குறைந்த பட்சம் ஒரு மனிதனாய்.....

அதிகப் பட்சம் ஒருத் தமிழனாய்......

உலகின் நதி மூலம் நாம். இப்போது அதன் வேர்கள் புரையோடியப் புண்களால் அழுகத் தொடங்கி விட்டது.
களை எடுப்போமா...? அல்லது நம் காலை எடுப்போமா...?


உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும்....

-தமிழ்க்காதலன்.

14 comments:

Chitra said...

என்னை மிகவும் சிந்திக்க வைத்த பதிவுகளில் ஒன்று, இது. விளக்கமாக பல விஷயங்களை பற்றி சொல்லி இருக்கீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

களை எடுக்க யாரும் முன் வர்ற மாதிரி தெரில நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நம்மிடையே இருக்கும்... சின்னச் சின்ன பொறுப்பற்றத்தனமும், அலட்சியமும்தான். நம்முடைய அத்தனை அவலங்களுக்கும் காரணம். அவனை விட நான் உயர்வானவனாக தன்னைக் காட்டிக் கொள்ளச் செய்கிற முனைப்பில்தான் நம்மை நாம் இழிவுப்படுத்திக் கொள்கிறோம்.

உண்மை...
மிக விளக்கமாக சொல்லியிருக்கிறிங்கள் நண்பரே.

எமது விரல் கொண்டு எம் கண்ணை குருடாக்குவது போல இந்திய இறையாண்மைப் பேசும் இந்திய அரசு நமது ஆயுதங்களை கொடுத்து தமிழ் இனம் அழிய உதவுவது இந்திய தமிழனுக்கு எதிரான செயல் இல்லையா..? இந்திய தமிழர்கள் இந்தியாவின் ஒரு முக்கியமான மாநிலமாக இருக்கும் போது, எப்படி அந்த இனத்தை அழிக்க நினைப்பவனுக்கு ஆயுதம் வழங்கியும், படை அனுப்பியும் உதவலாம்...? அவனுக்கு இந்தியாவில் சிவப்புக்கம்பள விரிப்பில் வரவேற்பு எதற்கு..?

நியாயமான கேள்விகள் யார் பதில் தருவார்..

அனிதா ராஜ் said...

ramesh,migavum chindiga vaikirathu ungal pathivu.ungalin kopam niyamanthu

MANO நாஞ்சில் மனோ said...

//இன்றைய இலங்கைப் பிரச்சனைக்கு ஒருத் தமிழன் துடிக்கிறான். ஆனால் ஒரு சிங்களவனோ ( நான் சொல்வது இலங்கைவாழ் சிங்களவன் அல்ல.. ஒரிசாவில் வாழும் சிங்களவன் ) பஞ்சாபியோ, மராட்டியனோ, தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ... எவனும் துடிக்காமல் போனது ஏன்...??? ஏனென்றால் பாதிக்கப்பட்டது அவனது இனம் இல்லை ///

அதனாலதான் பிரபாகரன் இறந்ததை சந்தோஷமாக செய்தி சொல்லி கொண்டிருந்தது மலையாள சானல்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

வளகுடா நாடுகளில் ஒரு மலையாளி செத்தாம்னா, ஒட்டு மொத்த மலையாளிகளும் குரல் கொடுத்து நீதி கிடைக்க செய்கிறார்கள். ஆனால் அன்று பதினோரு தமிழர்கள் [[பஹ்ரைன்]] தீயில் கருகி போனதுக்கு நீதி கிடைத்ததா என தேடிப்போனால் எந்த தமிழனுக்குமே தெரியவில்லை.....!!!! எங்கெங்கெல்லாமோ விசாரித்து பார்த்து விட்டேன்.

கடைசியா என் அறிவுக்கு எட்டியது என்னான்னா "தமிழனிடம் ஒற்றுமை இல்லை" என்பதுதான்....அது சோழனாகட்டும், சேரனாகட்டும், பாண்டியனாகட்டும்......இவர்களுக்கும் இது பொருந்தும்.

சௌந்தர் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தது இருக்கிறேன் http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_07.html

செல்வா said...

அண்ணா இறையாண்மை பற்றித் தெளிவா சொல்லிருக்கீங்க. உங்கள் கேள்வி நியாயமானது. ஆனா இலங்கைத் தமிழர்களை தமிழர் அப்படின்னு மொழியின் அடிப்படையில் பார்த்தால் அப்புறம் எப்படி மற்ற மொழி பேசுறவங்க உதவிக்கு வருவாங்க ? மொதல்ல மொழி அப்படிங்கிற அடிப்படையில் இருந்து விலகவேண்டும். மனிதநேய அடிப்படையில் பார்க்கவேண்டும் என்பதே எனது கருத்து :-)

Anonymous said...

அருமை,உண்மை,அனைத்துமே

Anonymous said...

இந்தியனாக இருக்கும் ஒருவன் தமிழனாக இருக்கவியலாது என்பதில்லை. 'வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பது' எவ்வாறென்றால், நம் மொழி மற்றும் கலாச்சார தனித்தன்மைகளைப் போற்றிக் கட்டிக்காப்பதுடன், மற்றவர்களின் மொழி கலாச்சாரத் தனித்துவங்களையும் மதித்து, இந்திய நாட்டு நலனைக் கருதிச் செயல்படுவதுதான். மற்ற மொழியினரையோ மாநிலத்தாரையோ தாழ்த்தி எண்ணும்போதும் பேசும்போதும், 'அவனை விட நான் உயர்ந்தவன்' என்று காட்டிக்கொள்ளும்போதும்தான் இந்தியாவின் இறையாண்மைக் கொள்கையிலிருந்து மட்டுமல்லாமல், மனிதக் கொள்கையிலிருந்தே தவறிவிடுகிறோம்.

sat said...

தமிழ் தேச தோழர்களே ......

soundar said...

its a nice message i truly inspired by this
mu heartily wishes to u friend

Dineshkumar said...

பல பிரச்சனையைபற்றி சிந்திக்க நிறையபேர் இருக்கிறோம் ஆனால் செயல்படுத்த குறைவாகவே இருக்கிறோம் இதுதான் நம்மிடம் இருக்கும் மிகமுக்கியமான பிரச்சனை

Unknown said...

irayanmai patri ennoda kaelvikum vidai kidaithathu matrum pala nalla yosanaigalum kidaithathu.. mikka nandri....