Saturday, January 07, 2012

”பூம்பெழில் பூவே..!”

இதயச் சோலையில் நறுமணம் வீசும் மலரே..!
உயிர்ப்பூவின் இதழ்களில் உன்னத சிருங்காரமே..!
பூம்பெழில் புன்னகை பூவிதழ் சிந்திட
பூந்தளிர் மேனியில் மோனரசம் ததும்ப

... சுழித்தோடும் வெட்கமதில் சுகம் கூட்டும்
சுந்தரி நீ..!,- பளிங்கு கன்னத்தில் தேனூறும்
பவளமல்லி உன் எண்ணத்தில் நீந்தும்
இன்பம்தான் எத்தனை எத்தனையோ...?!

குறுஞ்சிரிப்பில் குறுந்தொகை கண்டேன் - உன்
குவிந்த புருவத்தில் திருப்பாவை கண்டேன் - என்
அகம்விழுந்த உன்னகத்தில் அகநானூறும் இன்னும்
ஆற்றுப்படையும் ஆயிரமாயிரம் செந்தமிழ் செழுமையும்

கண்ணாரக் கண்டு கொண்டேன் காதலால்
ஆதலால் கண்மணியே அவிழ்நகை இதழில்
ஆனந்த தாண்டவம் ஆர்ப்பரிக்கும் இதயத்தில்
பூப்பரிக்கும் பூம்பெழிலாள் உன் பொன்மனம்

கொண்டேன் குறிஞ்சி தேன்கூட்டில் சொட்டும்
தேன்துளி பட்டுத் தெறிக்கும் பசுஞ்சோலை
மான்குட்டி முகம் காட்டி சிரிக்கும்
மந்தகாசம் உன் பொன்னழகு மிஞ்சும்

பூவழகு உண்டோ..? பூவுலகில் கண்டார் உண்டோ..?
இனியும் காண்பார் உண்டோ..? ஒற்றை
சிலிர்ப்பில் உயிர்த்தறிக்கும் ஓங்காரம் நீ..!
கற்றையாய் அலையும் காற்றில் உனைத்தேடி

அலையும் என் உயிர்த்தீண்டல் உணராயோ...?!
உள்ளத்தில் உறைந்திட்ட பைங்கிளியே.!
உள்ளூர இரசிக்கும் பொன்னழகே...! செல்லத்தீண்டலில்
சிணுங்கும் என் சிங்காரமே கண்மலர்வாய்.

Thursday, January 05, 2012

”சரணாகதி..!”

நூலளந்த மனம் வானளந்த விதம்
தானளந்த தன்னுணர்வில் ஆழும்
நானளந்த மனதின் மகரந்தம் விழும்
பாரளந்த பரமன் பதத்தில்..!
யாரளந்த போதும் மீளாத இடம்
யானளந்த போது மீளக் கண்டேன்
வாலளந்த வாயு புத்திரன் வாள் அளந்த
வான் பரப்பில் வண்ணம் கண்டேன்

இளம்தளிர் தள்ளாட வரும் தளிர்
தானாட தள்ளாடும் குளத்தில் மீனாட
அல்லாடும் மனதில் ஆர்ப்பரிப்பு கொண்டாட
சொல்லோடும் பொருளோடும் திண்டாடும்

முன்னும் பின்னும் மூண்டது யாகம்
முன்னால் பின்னது கண்டது தியாகம்
மூன்றும் ஒன்றில் ஒன்றிய தேகம்
மூவாறு பருவத்து முடங்கிய தாகம்

பாவாற்றில் பாலோடும் பண்ணில் தேனோடும்
மூவாறும் கலந்த வெள்ளம் முன்னாடும்
பாவூறும் உள்ளம் மணக்க வாயூறும்
அமுதம் சுவைக்க சிந்தை தானூறும்

சிவனுள் சீவன் கலக்க....

Wednesday, January 04, 2012

”குருவிக்கூடு..!”

பற்றற பற்றிய பற்றில் பற்றற
முற்றிய முற்றல் முற்றிலா முற்றில்
தொற்றிய தொற்றலாய் தொடரும் பிறவித்
தொற்றில் பதியமிடும் பற்று.
 
விட்டது விட்டு விட்டத்தை விட்டு
விற்றது கற்றது பெற்றது விற்றது
வீட்டின் வீட்டை விட்டு விலகி
கூட்டின் பிடியில் கூடிய குருவி.
கூட்டுக்குள் கூட்டில் கூடுபாயும் கூடிய
கூட்டுக்குள் கூடும் கட்டி கூடுவிட்டு
கூடடையும் கூத்தில் குருவிக்கு குருவி
கூட்டுக்கு கூடு குவியும் பற்று.
காட்டுக்கு காடு இடம் தேடி
காட்டில் ஓர் கட்டில் அமைத்து
காட்டுக்குள் கால்தலை மாற்றி காடடைய
கட்டுக்குள் அடங்காத குருவி காட்டில்.

மாடத்தில் ஏற்றிய மாடவிளக்கு எரிகிறது
மாடம் விட்டு மாடம் விட்டு
மாடங்கள் மாறும் விளக்குகள் மாறவில்லை
மாற்றமிலா சோதியில் ஏற்றிய தீபங்கள்.

Sunday, January 01, 2012

நலம் வாழ...!


எம் இனத்துக்கும் மண்ணுக்கும் ஏதேனும்
எள்ளளவு நன்மையேனும் கிடைக்க,- உள்ளத்து
வெளிச்சம் வெள்ளமாய் பெருக்கெடுக்க உயர்வான
எண்ணங்கள் உதிக்க வேண்டி வாழ்த்துக்கள்.

பள்ளத்து பாய்ந்து மேட்டினில் மிதந்து
நதியென நாமும் துன்பத்தில் பாய்ந்தும்
இன்பத்தில் மிதந்தும் வாழ்வியலில் உழலும்
வசமிழந்த மதிமயக்கம் தெளிந்து சுயம்தழைக்க

இளம்பிள்ளைகள் இனியாவது தெருவில் கையேந்தாமல்
முதியவர்கள் தெருவோரம் ஒதுங்கி கிடக்காமல்
காப்பகங்கள் இல்லாத தேசமாய்,- அன்பு
காக்கும் இல்லங்கள் இனியேனும் அமைய

உள்ளத்து அன்பு சுனையூற்றாய் பெருக்கெடுக்க
உள்ளமதில் உறையும் இறை உணர்த்தட்டும்
இங்கு யாவர்க்குமாம் ஓர் பச்சிலை
இங்கு யாவர்க்குமாம் ஓர் மருந்து

புரிந்து வாழ்வோர்க்கும் வாழ முயல்வோர்க்கும்
நன்நாளாய் அமையும் ஒருநாளை எதிர்ப்பார்த்து...