Saturday, January 29, 2011

"நேச முடிச்சுகள்"



காலை கண் விழிக்கும் அந்த முகம்
காணவில்லை....! 
காய்ந்து கிடக்கும்
குழம்பிக் கோப்பைகள்.....
ஈக்களின் வசிப்பிடம்.
எழுப்ப யாருமிலா பொழுதில் 
கதிரின் கருணையற்ற 
சூடு மனதை சுட்டது...!

இரணங்களுடன் தொடங்கும் நாட்கள்
இரணங்களிலேயே முடிகிறது.
அமைதியாய் இருக்கிறது என் வீடு 
உள்ளே நானிருந்தும்...!
ஆளரவமற்ற பாழ் வீடாய்.

நினைவுகள் என்னைத் தின்ன,- நான் 
உணர்வுகளை அசைபோடுகிறேன்.

தனி மரம் பார்வைக்குப் பட்ட போதெல்லாம்
புரியாத அதன் தனிமை கொடுமை....
இப்போதுதான் எனக்கு உரைக்கிறது.

வேதனைகளோடு முடிச்சிட்டுக்கொள்ளும்
வாழ்க்கையின் வேர்கள் நீ என்பது...
நான் உணர்ந்த நாள் இது...!

சல்லி வேராய் நமக்குள் எழுந்த சலசலப்புகள்
ஆணிவேரை ஆட்டம் காணச் செய்துவிட்டன.
உன் அன்பின் வாசம் இப்போது அதிகமாய் வீசுகிறது.
காய்ந்து போகும் முன்.... 
கண்முன் வாராயோ கண்மணி...!

விழிகளில் வழியும் நீர் நின் நேசம் உரைக்கிறது.
யாரும் அறியா வண்ணம் கரங்கள் மறைக்கிறது.
பேரன்பு பெருங்கடலில் எனை தத்தளிக்க விட்டவளே...!
பெருங்காய வாசமாய் பிழைத்திருக்கிறேன்...
உன் நினைவுகளில்...!

சமையலறையும் படுக்கையறையும் என்னை
சாகடிக்கின்றன...!?
பூசையறையோ புறந்தள்ளி கதவடைக்கிறது.
ஈரம் சொட்டும் உன் கூந்தல் வாசம் தேடும்....
நம் குலதெய்வங்கள் சாம்பிராணி மறுக்கின்றன.
சத்தமில்லாமல் நீ சாதித்த வாழ்க்கை புரிகிறது.
யுத்தமில்லாமலே பிரிந்திருக்கிறோம்...
உத்தமியே உணர்வாயோ....!

பாலையில் ஒற்றையாய்
என் கால் நடைப் பயணம்...
பின்னிக்கொள்ளும் என் கால்களோடு
பிணைந்திருக்கிறது என் காலமும்.
சக்தி இல்லா சிவனாய் சாகக் கிடக்கிறேன்
என் சகத்தியே வாராயோ..?!


சந்தோசம் என்பது உறவல்ல... 
சந்தோசம் என்பது துறவல்ல.... 
சந்தோசம் என்பது வீடல்ல... 
சந்தோசம் என்பது வரமல்ல... 
சந்தோசம் என்பது.............!! 
பணமல்ல...., நூலல்ல..., தனிமையல்ல... 


சந்தோசம் என்பது ............?? 


சந்தோசம் என்பது சம்சாரம்.

என் வாழ்வே...!
என் தவமே...!
என் புரிதலே...!
என் விடியலே...!
என் சந்தோசமே....!
உணர்கிறேன்....!!

நீ இல்லாத நான்....

வெறும் கூடு....
உயிரற்ற உடம்பு....
இயக்கத்தில் இருக்கும் துரும்பு...
இருந்தும் இல்லாத கடவுள்.

வா என் பிரியமே....!
வாழாது போன நம் நேசங்களை
வாழ்ந்து தீர்ப்போம்....!
பிரிவது இறப்பினும் கொடுமை என்பது உணர்ந்தேன்.

பிரிதலில் இல்லை வாழ்க்கை.
சேர்தலில்.
பிரிதலில் இல்லை இன்பம்.
சேர்தலில்.
பிரிவென்பது புரிதலின் தொடக்கம்.
புரிகிறது.............!!

புரியப் புரிய ஆழமாய் 
உன் அருமை உணர்கிறேன்.
உணர உணர உன்னைத் 
திணற திணற நேசிக்கிறேன்.

வாழ்க்கையின் பொருள் நீ..!
வாழ்க்கையை சமைப்பவள் நீ..!
சந்தோசத்தின் இருப்பிடம் நீ..!

என் பிழைகள் மற....
என் கர்வம், திமிர்... 
யாவும் மன்னித்து மற...
பரிசுத்த பாசமே...!
வாடுகிறேன் வாராயோ...?!
வசந்தங்கள் தாராயோ..?!           

***************************************



மனதின் சுவாசங்களை உயிர்ப்பித்த காதலா...!
மௌனத்தில் எனை ஆழ்த்தி
இன்பத்தில் எனை வீழ்த்தி
வசந்தங்களில் வாழ்க்கை சொன்ன
இதயக்காதலா....!
நினைப்புக்கும் நிசத்துக்கும்
கண்ணீரால் பாலம் கட்டுகிறேன்.
உன் அன்பே நிரம்பி வழிகிறது...!
நீயில்லா நானிங்கே நடைபிணமாய்...
என்செய்வாய்..! என் செல்வமே..!
காலை முதல் இரவு வரை
உன் தேவைகளை பூர்த்தி செய்வதே
நான் செய்த பூசையாகும்...!
இப்போது எப்படி...?
விருந்திலும் மருந்திலும்
அளவோடிரு அன்புள்ளமே...!
எனை இழுத்தணைத்த இன்பங்களை
என் தலையணையில் சேர்த்திருக்கிறேன்.
தலை வைக்க மறவாதே...!
ஆனந்த கடலில் தள்ளியவனும்
அசோக வனத்தில் தனித்து விட்டவனும்
நீயே...!!
கரை சேர்ப்பாய் என்றே காத்திருக்கிறேன்...?!
உன்னையே உலகமாய் வாழ்ந்தவள்.
உனக்கு எப்படி பிடிக்காமல் போனேன்...?
ஆயினும் என் காதல் உன்னோடு....
இன்னமும் உயிர்த்திருக்கிறது...!
அறியாயோ என் ஆருயிரே...!!



கடந்த காலங்களின் இன்பங்களில்தான்
இழையோடிக்கொண்டிருக்கிறது ...
என் சுவாசம்.
நிற்கும் முன் வாராயோ...?
நின் கரங்கள் தாராயோ...?
எனை ஏந்திக் கொள்ளாயோ...?
என்னுயிரே...!
என் மன்னவா...!
உன் மனைவியாய் மடியும் வரம் தா. 
******************************************

குறிப்பு: இந்தக் கவிதையின் சூழல் என் அருமை நண்பர் மனசு - சே.குமார் அவர்களால் சொல்லப் பட்டது. அவரின் அன்பிற்கிணங்கி இந்த கவிதை எழுத பட்டுள்ளது.

கரு: திருமணத்திற்கு பின் பிரிந்து வாழும் தம்பதிகளின் மனவோட்டம்.

இதே கருவை மையப்படுத்தி மனசு வலைப்பூவில் சே.குமார் கதை எழுதி இருக்கிறார். அதை படிக்க..... 

http://vayalaan.blogspot.com/2011/01/blog-post_29.html

Friday, January 28, 2011

ஓ... என் இயற்கையே எங்கிருக்கிறாய்....?

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்....?

என்னை புறந்தள்ளி நீ புறம் தள்ளி
மண்ணைத் தூவி கண்ணை மறைத்து
மானிடப் பிறவிக் கொடுத்து மறைபொருளாய்
மனம் படைத்து கலைவடிவாய் காதல்

புதைத்து கண்வழியாய் சிலை வடித்து
பெண் வழியாய் உயிர் கொடுத்து
சித்தனை பித்தனாக்கும் புத்தகமே
உன்னை புரட்டிப் பார்க்கிறேன்..

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்....?

காலம் உன்னில் மறைத்து வைத்த
மர்மங்கள் வாசிக்கிறேன்... பேதையே..! உன்
பேரன்பை யாசிக்கிறேன்...! விடியல்கள் தந்தாய்..
விடிவுகள் இல்லை,- முயற்சிகள் தந்தாய்...

முடிவுகள் இல்லை,- முற்று பெறாத
வாழ்க்கை முன்வினையாய் நீள்கிறது,- புலரும்
பொழுதுகள் என்வினையா...? தன் வினையா..?
புரிதலிலா புரிதலில் புலம்பும் காதல்.

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்...?

வாசலில்லா குடிலுக்கு காவல் எதற்கு...?
பாசமிலா நெஞ்சுக்கு காதல் எதற்கு...?
நேசமிலா வஞ்சிக்கு அன்பு எதற்கு...?
தேசமிலா தமிழனுக்கு மானம் எதற்கு...?

புவியின் மைந்தன் புரியா பூவிதழே...!
கவியின் வேந்தன் காதல் மலரே..!
ரவியின் மையல் தந்த உயிரே..!
ஆவியின் நிழலாய் வருக ஆனந்தமே...!!

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்....?

முகிலும் முக்கடல் நீரும் விரியும்
பார்வைக்கு வெவ்வேறாய் நிலையில் நீயும்
நானும் சந்திக்கும் வாழ்க்கைச் சாகரத்தில்
யாண்டும் வேண்டும் வரம் நீ..!

தனித்த தவத்தில் கிடைத்த வரம்..!
கேட்ட வரமோ தனித்த தவம்..!
வாழ்வது சாபம்,- வருவது பாவம்..!
போகாது கோபம்,- சாகாது தாபம்..!

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்...?

தாகங்களுடன்.......
-தமிழ்க்காதலன்.

Tuesday, January 25, 2011

"புக்ககம்...!"


ஆழ்துயர் ஆழ்த்தும் மாய்துயிர் நீத்தும்
வாழ்துயர் வையத்து நாயுருவி பேயருவி
பாழுருவ பழுதுறவ பேணும் பிழையுருவ
அழைக்கு மத்தகத்து பிதற்றும் பித்துருவ

பாழுயிர் நெக்குருக பலநாள் நெய்யுருக
வாழுயிர் வருந்தி போகுமுயிர் பொருந்தி
புழுதியில் புழுத்த புழுவது நுழைத்த
பேயது பழுத்து பிண்டத்து பெருத்து

தடித்த தண்டொத்து கொழுத்த வண்டொத்து
கிளைத்த கொடியில் முளைத்த இலையொத்து
அழைத்த விருந்துக்கு அமிழ்த மழையொத்து
பிழைத்த மருந்துக்கு குருத்துக் குறியொத்து

நெடுநாள் மூழ்கி நீளும் பொழுதில்
வரும்நாள் தொடங்கி வாழும் நாள்
நெடுக்க நீட்டிப் படுக்கும் பொழுது
வரும்கால் பந்தக்கால் வாழுங்கால் சொந்தக்கால்.
********************************************************

Monday, January 24, 2011

"சுடுசொல்...?"

கொல்லன் பட்டறையில்
கொழுந்து விட்டெரியும்
இரும்புத் துண்டங்களை
இதயத்தில் சொருகிவிட்ட
சுடுசொற்கள்....!

எறும்புகளின் வளையில்
எறியப்பட்ட நெருப்புத் துண்டங்களாய்
எரித்துக் கொண்டிருக்கும்
கடுஞ்சொற்கள்...!

கருகும் இதயம்
புகையும் புகையில்
நரம்புகளில் மூச்சு திணறல்..!

குயவன் கை மண்ணாய்
குமையும் மனம்
அழுந்தப் பிசையும் நினைவுகளில்
ஆழப்புதைந்து கண்ணீர் கசிகிறது...!

தாய் திணிக்கும் இரையை
துப்பும் மழலையாய்....
மனம் காதுக்குள் விழுந்ததை
வெளியேற்ற எத்தனிக்கிறது.

சீரணிக்காத உணவும்
சீரணிக்க முடியா சொல்லும்
உடல் மன நலம் கெடுக்கும்.

எரியும் சூரியனுக்குள் நுழைந்து
எரிக்கும் வார்த்தையை தகிக்க
எண்ணம் கொண்ட மனம்
சூரியச் சூட்டினை தணலாய் ஏற்றது.

சூடுவிழுந்த இதயம் வடுக்களில்
வாழ்க்கையை துடிக்க செய்கிறது..!
இறுப்பும் இறப்பும் ஒருங்கே
தற்கொலை செய்துகொண்ட தருணமது.
 

எண்ணங்களில் எழும் சாம்பலில்
நினைவுத் தூசுகள் மிதக்கின்றன.
வற்றிய உணர்வுகளில் வற்றிப் போய்
கண்களில் உலர்ந்துபோன நிகழ்காலம்..!
கண்ணீராய் உறைந்திருக்கும் இறந்தகாலம்..!!

வற்றிய குளத்தில் படியும் சேறாய்
வாடிய மனதில் படியும் சுடுசொல்.

*****************************************

Sunday, January 23, 2011

"இந்திய தளபதி...!" ( சுபாஷ் சந்திர போஸ் )

வங்கம் தந்த சிங்கமே...!
வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே...!
இந்திய இளைஞர்களின் எழுச்சியே...!
இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...!!

அடிமைத் தளை தகர்த்தெறிய
அரும்பாடு பட்டு ஆயுளில் பாதியை
சிறைச்சாலை செல்லுகளில்
செலவழித்த செம்மலே...!

கல்கத்தாவை கட்டியமைத்த கர்ம வீரனே..!  
தேசத்தின் விழிகளில் கண்ணீர்த் துடைக்க
தேகத்தை தியாகித்து செந்நீர் சிந்தியவனே..!
மேகத்தில் மிதந்து தாகங்கள் தணிந்தவனே.

கூட்டுப் புழுக்களின் கூட்டத்தில் சிறகை பரிசளித்தவனே..!
நாட்டு விடுதலைக்கு எதிரியின் சிறகொடித்தவனே..!
வசதியாய் பிறந்தும் வறுமையை சந்தித்து
வாழ்க்கை முழுதும் தேசம் சிந்தித்தவனே..!

 

செம்மறிகள் முன் சிங்கமென அந்நியர்
அதிர பெரும்படை நடத்திய பேராண்மையே..!
நிலமும் கடலும் தடை இல்லையென
நீண்டு கிடக்கும் உலகில் பறந்தவனே...!!

இன்றும் எங்கள் இரத்தத்தில் இளஞ்சூட்டை
தணியாமல் தகிக்க வைக்கும் புரட்சியே..!
வார்த்தைகளில் இல்லாமல் செயல்களில் வாழ்க்கை
செதுக்கிய செம்மலே...! பாரதத்தின் தவப்புதல்வ...!!

புகழுக்கு மயங்காத புரட்சியின் புத்துயிரே..!
புழுக்களின் கூடாரத்தில் குலவியாய் கொட்டியவனே..!
வழுக்களின் சூழ்ச்சியை வஞ்சகத்தை திட்டியவனே..!
கைக் கொடுக்காதார் கைகளில் தேசம்

காணப் பொறுக்கா நீ கண்டங்கள்
கடந்தாய்.. இந்திய இளையத் துண்டங்கள்
கரம் கோர்க்க வான் தரை 
கடல் யாவிலும் படை நடத்திய

எங்கள் பாரதமே...!

உண்மைகள் மறைக்கப் பட்ட
எங்கள் பாரதத்தின் மர்மமே...!!

இந்தியாவின் இரத்த சரித்திரமே...!!!
 

நின் புகழில் எங்கள் தேசத்தில் புது இரத்தம் பாயட்டும்...! வீரம்
விளையட்டும்..! வங்கம் தந்த தங்கம்...!
வாழிய நின் வான் புகழ்...!!

 

குறிப்பு : இந்திய இளைய சமூகத்தின் "படைத்தளபதி", புரட்சிப்படை நடத்திய "அஞ்சா சிங்கம்", தேசத்தின் தவப் புதல்வன் "சுபாஷ் சந்திர போஸ்" அவர்களின் 114 வது பிறந்த நாளுக்கு தமிழ்க்காதலனின் சமர்ப்பணம்.

சுபாஷ் சந்திர போஸின் குறிப்பு :

பிறப்பு : 23..01.1897. 
பெற்றோர் : தந்தை- ஜானகி நாத் போஸ், தாய் - பிரபாவதி தேவி.
படிப்பு : ஐ.சி.எஸ். ( கேம்ப்பிரிட்ஜ் பல்கலை. இலண்டன் )
*******************************************************

Friday, January 21, 2011

"குரலோசை...!"



இறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு
இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி..!
பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின்
மகரந்தத் துகள்களில் காதலின் வாசம்..!

ஒவ்வொரு புல்லும் தனித்தனியாய் தவம்
ஒரு காதலனுக்குத்தான் எத்தனை முந்தி விரிப்பு...!
தனித்தனிப் பந்தியாய்...! தண்ணீர் பந்தலாய்...!
பனித்துளி பரவசங்கள், பழரசமாய்.. இலவசமாய்..!

மூடுபனி மூடிய பனிச்சாரலில் பருவப்பெண்
தாவணி தழுவல் சுகமடி..!,- கரையும்
கற்கண்டு நனைக்கும் இதயத்தில் இன்ப
பிரவாகம் இன்னொரு பிறவிக்கு அடிமானம்...!

கொட்டும் பனியில் கொட்டமடிக்கும் பொழுதில்
இந்திர உலகம் ஆளும் எண்ணமடி...!
இன்பத்தில் நீ மட்டும் மதுக்கிண்ணமடி..!!
கொக்கரிக்கும் மனம் கொண்டைச் சேவலாய்....

ஆழ்துயில் மேவும் ஆழியில் அந்தரங்கமாய்
அன்பை குடித்தும் கொடுத்தும் நிறையும்
ஆனந்த நிமிடங்களில் கரையும் மனம்
அடர்பனி தொடரும் அற்புதம் காணும்....

திரும்பும் திசை எல்லாம் சக்தியாய்...
தீண்டினாய் விழிகளை..! தாண்டினாய் மொழிகளை..!
திக்கித் திணறி முட்டி மோதுகிறேன்..!
தீந்தமிழ் வார்த்தைக்கு சொக்கிப் போகிறேன்..!

என் இரத்த ஓட்டம் மாறிப்போகிறது....
உதிரமாய் தேன் உடலெங்கும் பிரவேசம்..!
திசுக்களில் எல்லாம் இன்ப பிரவாகம்...!!
அணுக்கள் தோறும் ஆனந்த தாண்டவம்...!!!

சொல்லடி பெண்ணே....

உன் ஒற்றை குரலோசையில்
இத்தனை மயக்கமா எனக்கு...?
 


குரலா அது...?
குயிலோசை....

காட்டுக்குள்தான் நான் நிற்கிறேன்....
பட்டணத்தில் இருந்து குயில் கூவுகிறது...!!

***********************************************

Thursday, January 20, 2011

"கண்ணீர்..!"

இமைகளில் கரையும் மையில்
கரையும் உண்மைகளை கைகளில்
துடைத்து தொலைத்து விடுவாயோ...?!
கைக்குட்டைக் கொண்டு மறைத்து விடுவாயோ...?!

சற்றே சரியும் கூந்தலில்
உண்மைகள் மறையலாம் ஊருக்கு...
உள்ளத்தில் உயிர்த்திருக்கும் என்செய்வாய்...?!
கனவுகள் கலைந்ததாய் ஒரு கதை சொல்வாய்...
காதல் கலைந்ததை சொல்வாயோ..?

நடுங்கும் விழிகளில் ஒடுங்கும் பார்வையில்
உயிர்த்திருக்கும் காதலின் மிச்சங்கள்..!
கண்ணீரில் கரையா நினைவுகளை
உணர்வுகள் விழுங்கி உறைய செய்கிறாய்...!
உண்மைகளையும்தான்...!



கள்ளிக்கு வெள்ளைக் கண்ணீர் 
மீனுக்கு தண்ணீர்க் கண்ணீர்
பெண்ணுக்கு உண்மை கண்ணீர்...!

அழிக்க முடியா நினைவுகளையும்
அரிக்கும் உணர்வுகளையும்
ஒருசேர கரைக்கும் முயற்சி
கண்ணீர்....!

காணாமல் போன காலங்களின்
கனவுகளாய் போன கோலங்களின்
அரிதார அவதாரம் கண்ணீர்...!


கடைவிழியோடி தலையணையில் கொஞ்சம்....
நடுவிழி மீறி தாவணியில் கொஞ்சம்...
நாசிவழியோடி இதழ்கடை கொஞ்சம்...
உண்மைகளாய் உறைந்திருக்கும்
கண்ணீர்...!
உப்புகளின் நிறங்களில் ஒளிர்ந்திருக்கும்...
கண்ணீர்...!
உயிர் சிந்தும் பன்னீர்...!  

Wednesday, January 19, 2011

"விழிகளின் தவம்...!"

ஓ... என் மலரே...!
உன் வருகைக்கான என் தவங்கள்
உயிர் பெரும் நாளிது...!
வரமளிக்கும் தவமே
வாழ்வளித்த சுகம் எனக்கு..!
காம்புகளில் குலுங்கும் மலர்களுக்காய்
காத்திருக்கும் செடியாய்...!
தவிப்புகள் அடங்கிய காத்திருப்புகள்...

ஓ.. என் செவ்வானமே...!

எப்போது வருவாய்...?
என்கிற ஏக்கங்களுடன்,- இரவின்
இருள் கிழிக்கும் உன் வருகைக்காய்
வினாடிகளை மரிக்கச் செய்து
விழிகளில் உயிர்த்திருந்தேன்...! உன்
விடியல்கள் காண...

ஓ.. என் மந்தகாசமே...!

மருக்கொழுந்தும் மல்லிகையும்
மணக்காத காரணத்தால் உன்
நினைவுகள் சுவாசித்து என்
நெஞ்சம் நிரப்புகிறேன்....
வழிகிறது வாசம்...!!

ஓ.. என் பிரியசகி..!

சீவனுக்குள் தீ மூட்டி
எண்ணங்களை சிதையிட்டேன்...!
எழும் புகையிலேனும்
என் நேசம் காண்பாயோ...?!
கலங்கும் கண்களில்
காதல்...

ஓ.. என் புனர்சென்மமே...

விழியிழந்தவன் பெற்ற
விழிகளின் இன்பம் எழுதுவேன்...!
யான் பெற்ற இன்பம் எப்படி எழுத...?
சொல்லுக்கும் தமிழ்ப் பள்ளுக்கும்
அடங்காத ஆனந்தத்தை
சொற்குறிகளில் சொல்லமுடியாமல்
திணறுருகிறேன்...!
உன்னை உணருகிறேன். 

ஓ என் நம்பிக்கையே...

விண்வெளியில் ஒளிந்திருக்கும்
விண்மீன்களில் ஒளிரும்
என் நம்பிக்கைகள்...!
உனக்கான என் தவங்கள்
ஒற்றை சூரியனாய்...!  
சுழல்கிறேன் நிதம் உன்னை
சுற்றியே..!,-என் நினைப்புகள்
யாவும் உன்னைப் பற்றியே..!
***************************************






Sunday, January 16, 2011

”திருவள்ளுவர் தினம்”


கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்” - ஒளவை.  

*******************************************************************************

தமிழின் நாடி பிடித்துத்
தமிழரின் நாதம் பிரித்து
வாழ்வியல் புரட்டிய வள்ளுவமே...!
மனித வாழ்வின் மகத்துவம் யாவையும்
மகாநுணுக்கமாய் மூன்றில் அடக்கித்
தத்துவங்கள் கடந்த தாத்பரியமே...!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது..!
சீர்கள் குறைந்தாலும்
பொருட்சிறப்பு குறையாது…!
ஒன்றே முக்கால் அடியில் 
உலகளந்த ஓங்குதமிழ் அது...!

சங்கம் வளர்த்தோர் சாடியபின்
அவ்வை அங்கம் வகித்துச்
சங்கப் பலகையிலேறிய
சத்தியத் தமிழ் அது...!
சத்திய சோதனைக்குப் 
பின்னொளிர்ந்த தங்கத்தமிழ் அது...!

திராவிடத்தின் மதிநுட்பம் பேசிய தீந்தமிழ் ...!
பொய்யாமொழியாய்த் தெய்வப்புலமையாய்ப்
புரவலர் போற்றும் பைந்தமிழ்...!

அறத்துப்பால் இயற்றி உம் ஆறாவதறிவையும்
பொருட்பால் இயற்றி உம் யதார்த்தத்தையும்
இன்பத்துப்பால் இயற்றி உம் மாண்பையும்
இவ்வுலகின் மடியில் தரிக்க விட்டவரே...!

தைமகளின் வருகையை..
தமிழர்களின் மகிழ்ச்சியை..
அருவடையின் ஆர்ப்பரிப்பை..
உம் பிறந்தநாளாய் உலகம் கொண்டாடிட..
உவகையுடன் நானும்..
பொங்கல் வாழ்த்துகளுடன்
உமக்குப் பிறந்தநாள் வாழ்த்தும்....!

******************************************************************************

தைமகள்



புழுதிக் காற்றில் பொழுதுகள்
கழனியில் எங்கள் காளைகள்
காலையும் மாலையும்
களைபறிக்கும் வயல்திருத்தும்
கன்னியர் ஆடவர் பெண்டிர்
உழைத்து உழைத்து 
உலகம் செழிக்க
உணவு சமைக்கும் 
உழவனின்...
உள்ளக்களிப்பை உலகுணர
வந்துவிட்டாள் தைமகள்...!
வளம்சேர்க்கும் பெருமகள்...!
வாசலில் பொங்கும் பொங்கலில்
இன்பம் பொங்கும்..
இந்த உலகமெங்கும்..
உழைப்பைச் சிறப்பு செய்யும்
உன்னதத் திருநாள் - இது
உழவர் பெருநாள்...!

அவர் வாழிய...! அவர் குலம் வாழியவே...!

குறிப்பு: திருவள்ளுவர் தினத்திற்குத் தமிழ்க்காதலனின் சமர்ப்பணம்!

Wednesday, January 12, 2011

"விவேகானந்தம்"

* ஒவ்வொரு உயிரிலும் தெய்வீகத்தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடிகொண்டுள்ள இந்தத் தெய்வீகத் தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான இலட்சியம்.   

* சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டி வைக்க முடியும். இந்த உண்மையை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்.

* அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.    

- சுவாமி விவேகானந்தர்.

******************************************************************************

எழுச்சியின் பொருள் புரிந்ததும் இந்திய
கம்பீரம் எதுவென உலகறிந்ததும்,- உண்மை
ஆன்மிகம் இதுவென உணர்ந்து கொண்டதும்
செங்காவிச்சுடரே..! நின் எழுச்சிக்கு பின்தான்.

நல்லதை கற்கும்வரை நரேந்திரன் நீ..!
நல்லதை விதைத்த விவேகம் நீ..!
நல்லதை மலரச்செய்த ஆனந்தம் நீ..!
நல்லதின் முழுமை "விவேகானந்தம்"..!!

பரம அம்சத்தை குருவாய் கொண்டு
பாரதம் அளந்த குருவாய் நீ..!
பண்பட்டபின் பண்பாடு பேசியவன் நீ
பரதத்தின் பெருமை பேசியவன் நீ.

உலக இளைஞர்களின் திசைக்காட்டி நீ
உலகத்தை சொந்தமாக்கிய சகோதரன் நீ..!
உடல் தாண்டிய ஆன்மாவின் நேசம்
உன்னதமென உணர்த்தியவன் நீ..!!

தென்குமரி தேடியவன் அமைதி குடிலமைத்தவன்
தென்னகத்தின் அமைதி அன்றே புரிந்தவன்
வேர்களைத் தாண்டி விழுதுகள் விட்டவன்
கம்பீரம் காட்டி கடலில் நங்கூரமிட்டவன்.

இதயங்களில் சிம்மாசனமிட்ட இளைய சிங்கம்
இந்திய மண்ணில் கண்டெடுத்த சொக்கத்தங்கம்
இன்னுமிருக்கும் நம்பிக்கையின் இரகசிய அரங்கம்
இளைஞர்களைத் தேடிய ஞானத்தின் அங்கம்.

 
உன்னதங்கள் யாவும் பெற்ற பூமியில்
உன்மத்தங்கள் மேவும் கொடுமை பொறுக்கா
உள்ளக்கிளர்ச்சியில் உயிர்த் துடிக்கும் தினம்
உன்னை நினைத்தே,-மீண்டும் வா ..!

குறிப்பு: இன்று பிறந்த நாள் காணும் இந்தியாவின் "நம்பிக்கை இளைஞன்" நரேந்திரன் என்கிற விவேகானந்தருக்கு, "ஆன்மீக அளவுகோலுக்கு" தமிழ்க்காதலனின் சமர்ப்பணம்.

***************************************************


Tuesday, January 11, 2011

"கொடிகாத்த குமரன்"

நேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க
சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி
யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி
யோசிக்க வைத்த எங்களின் குமரா..!

விழும் அடிகளின் எண்ணிக்கை யாவும்
"வந்தே மாதரம்" சொல்லி எண்ணி
வையத்தில் நிலைத்திட்டாய் எங்கள் நினைவில்
வான்நோக்கி உகுத்திட்டாய் உந்தன் ஆவி.

தேசப்பற்று பெரிதென்றாய் போற்றினேன்
தேசியம்தான் பெரிதென்றாய் போற்றினேன்
தேசக்கொடியே உயிரென்றாய் போற்றினேன்
தேசத்திற்கே உடல் என்றாய் போற்றினேன்

நாட்டுக்கு ஒரு நல்ல மகன் நீ
நாட்டுப்பற்றில் தலைமகன் நீ
வீட்டுக்கு ஒரு பிள்ளை உன்போல்
வேண்டும் இங்கு விதி மாற்ற...

கொடிகாத்த குமரனின் மண்ணில்,- இன்று
கோடி காத்த மைந்தர்கள் (ஏன்)...? 

குறிப்பு: திருப்பூர் கொடிக்காத்த குமரனின் நினைவு நாளான இன்று தமிழ்க்காதலனின் நினைவாஞ்சலி.   

Monday, January 10, 2011

"சொல்வாயோ...!? (அ) கொல்வாயோ...?!"


பூமி இழந்து புலம் பெயர்ந்தவன்
சாமி இகழ்ந்து சாபம் தரும்
கோபமுடன் கொந்தளிக்கும் மனம்
சபிக்கப் பட்ட வாழ்க்கைக்கு
துவைக்கப் படும் உடலை
ஆற்றுப்படுத்த மாற்றுவழியின்றி
அடர்வனத்து சதுப்பில் புதையும் கால்களின்
அழுத்தமுடன் கசங்கி நசுங்கி
சருகாகிறது.

மெல்லுடலியின் நீட்சியாய்,- வாழ்க்கை
நத்தைக் கூட்டுக்குள் நகர்கிறது,-கரை
ஒதுங்கும் சங்கின் மறைவிடங்களில்
தனித்திருக்கும் தவம் வாழ்க்கை.
உடைத்து விழுந்துடையும் பானையின்
சில்லுகளில் தேங்கும் நீர் குடித்து
உயிர் துறக்கும் சவத்தின் வாயில்
திறந்திருக்கும் வாழ்க்கை.
புகைத்து புகைத்து புகைக்குழியில்
எறிந்த உடலின் எச்சத்தை....
சாம்பல்கள் உதிர்த்து உதிர்த்து
சாம்பலாகும் மிச்சத்தை...
சவமாய் சுடலையில் கிடத்தி
சுருட்டுப் படையல்...!
பாடை மாற்றி பயணம் தொடரும்
பாதை மாறாமல்...!!
செத்துப் போகிறது மனம்.

செல்களின் அழிவு முடிவுக்கு வரும் வரை
செல்லரித்த நாட்களை செலுத்தும்
மண்ணரித்த சருகாய் மனம்
கரையான்களின் அரிக்கும் கேள்விகளில்
கரைந்து மரிக்கும் காலம்.
நினைவிருக்கும் வரை
உன்னை நினைத்திருப்பேனா...?
நின்னை நினைக்கும் வரை
உயிர்த்திருப்பேனா...?
வால் நட்சத்திரமாய்
நீளும் கேள்விகளில்
உணர்ச்சி சாம்பல்கள்.

உன் நினைவில் செத்துக் கொண்டிருக்கும்
சடலமாய் நானும், சடங்காய் வாழ்வும்,
நினைவுகளில் நீர்த் தெளித்து
உணர்வுகளுக்கு உயிர் ஊற்றுகிறது
காலமும் காதலும்.

மனம் கொன்று மணம் கொண்டு
காணும் சுகம் நன்றன்று
கடமைக்கு சந்ததி பெருக்கும்
விலங்கின் தன்மையில் மனிதம்
கொல்லும் மாயச் சமூகம்.
பசித்தாண்டா பின்னறிவு
பகுத்தறிவு பேசும் பேச்சில்
மலம் மணக்கும்.
பசி தாண்டும் முன்னறிவு
பக்குவத்தில் மனிதம்
மணக்கும்.


நெட்டுயிர்த்த ஒற்றை மரம்
நிழல் தராது உன் போல்...!!
படரும் கிளைகள் பரப்பும்
அடர்மர நிழலில் ஆயிரம் உயிர்கள்.
'இலை' யுதிர்க்கலாம் மரம்...!
"இல்லை" உதிர்க்கலாமோ நீ ...?

சொல்லடி...!
என்னை கொல்லடி.  
உன் கையில் மரணமென்றால்...
உயிர்த்திருக்கும் என் உணர்வுகள்.
********************************************


Sunday, January 09, 2011

மெட்டுக்குப் பாட்டு - 2

மெட்டுக்குப் பாட்டு - 2
படம்: பொற்காலம்
பாட்டு மெட்டு: ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ....?!
இந்த பாடல் மெட்டில் பாடவும்....
*********************************************************************
   
அரிது அரிது அரசியல் பிழைத்தல் அரிது
நீதி நேர்மை கண்ணியம் காத்தல் அதனினும் அரிது...
 
பல்லவி:
ஊழல் ஊழல் ஊழல் இங்கே ஊழல் பாருங்கோ (2)
உலகில் உள்ள ஊழல் எல்லாம் ஊழல் இல்லைங்கோ
அரசியல் வாதி எல்லாம் ஊழலிலே திளைக்கிறான்
அதிகாரி எல்லாருமே லஞ்சத்திலே சிரிக்கிறான்
உத்தியோகம் பாக்குறவன் பொழைக்கிறான்,- இங்கே
உடலுழைப்பில் வாழுறவன் தவிக்கிறான்.....    (ஊழல்..ஊழல்)   

சரணம்:1

ஓ...ஓ....ஓ.......
வியாபாரியின் தராசுசுல ஒளிஞ்சிருக்கும் ஊழல்
அட கலப்படத்தில் ஊழல்
அத யாரு இங்க தட்டி கேக்க போறீங்கோ...ஓ..ஓ...
நியாயவிலை கடையிலதான் நலிஞ்சிருக்கும் ஊழல் 
அத கேக்க போனா மோதல்
அட சாகும் வரை போராட்டம் ஏனுங்கோ..?
வலியவங்க சரியில்லே...
வாழவுந்தான் வழியில்லே...
விடிவு காலம் கிடைக்கலயே..
விவசாயி பொழப்பிலே... 
பாசம் எல்லாம் வேசம்,- இங்க
பணம் பண்ணும் மோசம்
அந்த மோசம் களைய வேணுமடா
நமக்கு கொஞ்சம் ரோசம்...           (ஊழல்... ஊழல்) 
       
சரணம்:2

கல்லூரியில் இடம் புடிக்க கட்டுகட்டா ஊழல்
அந்த கல்வியில ஊழல்
அட படிச்சவங்க பண்ணும் பாவம் பாருங்கோ...ஓ..ஓ...
காவல்துறை கிட்டபோனா கை நிறைய ஊழல்
அட நோட்டுக்குதான் மோதல்
அத தட்டிக் கேட்கும் மனுசன் இங்கே யாருங்கோ...
கஞ்சி தொட்டி வச்சாங்கோ
கையேந்த விட்டாங்கோ
தஞ்சை எல்லாம் காஞ்சி போச்சி
கல்லணைய பாருங்கோ...
உழைச்சி என்னடா லாபம்...?
அட முயற்சி எல்லாம் சாபம்...
இங்க நெலச்சி நிக்க வேணுமின்னா
நியாயம் கேக்க வேணும்...                   (ஊழல்... ஊழல்)

Friday, January 07, 2011

மெட்டுக்கு பாட்டு - 1

மெட்டுக்கு பாட்டு - 1
படம் : மைனா
பாட்டு மெட்டு : சிங்க் சிக்காம் சிமிக்கிப் போட்டு சிலுசிலுக்குற ரவிக்கை போட்டு...
இந்த பாடலின் மெட்டில் இந்த பாடலை பாடுங்கோ.... 
*********************************************************
ஆண்:
சின்ன சின்ன நெனைப்பு புள்ள
சிங்காரியே  தினமும் தொல்ல
அந்த கால நெனைப்பு இப்போ
நெஞ்சில் ஓரமா....ஏ
கொஞ்ச நேரம் கொஞ்சவாடி
கண்ணே ஓரமா....1

பெண்:
சின்ன சின்ன தீப்பொறிதான்
குடிசை வீட்ட கொளுத்திப் போடும்
குரங்கு வாலு தீ புடிச்சி 
இலங்கை எரிஞ்சிது 
நீயும் அந்த குரங்கு போல
உனக்குத் தெரியுமா...?   2

ஆண்:
கொல்லையில நெல்லு புள்ள
நெல்லுக்குள்ள வரப்பு உள்ள
வந்து போடி நீயும் புள்ள
கொஞ்ச நேரம்தான்...ஏ
வஞ்சி உன்ன நெனச்சதால
கஞ்சி இறங்கல...    3

பெண்:
நெல்லறுக்கும் அருவாருக்கு
நெனப்பு எப்புடி உனக்கிருக்கு..?
வரப்புகுள்ள வந்து போனா
வம்பு பண்ணுவ..
வரமாட்டேன் போடா மச்சான்
என்னா பண்ணுவ..?  4

ஆண்:
கும்பகோணம் வெத்தலையே
கொடமொளகா பத்தலையே
தாராசுரம் தாம்பாளம் நான்
வாங்கி வரட்டுமா
தாம்பூலம் போடாமலே
நீயும் சிவக்குற.... 5

பெண்:
ஆசை வச்ச மீசை மாமா
சாடையில பேசலாமா
மஞ்ச தாலி கட்டிப்புட்டா
மாமன் எனக்கு நீ
மத்ததெல்லாம் அப்புறமா
கொஞ்சம் வழிவிடு... 6

ஆண்:
மீசை மேல சத்தியமா
ஆசை புள்ள உம்மேலத்தான்
நைசா இப்போ நீயும் ஏண்டி
நழுவ பாக்குற...
உன்ன கைகழுவ எண்ணமில்ல
காத்திருக்கேன்டி...  7

பெண்:
முரட்டுபய பெத்த புள்ள
வறட்டு வம்ப விட்டுபுட்டு
வம்சத்துக்கு விளக்கேத்தும்
வழிய பாரையா...
வக்கணையா சமைச்சு போட
ஆள பாரையா... 8

ஆண்:
மல்லிகையா மணக்கும் புள்ள
மாமனுக்கு பொணக்கு புள்ள
மஞ்ச தாலி வாங்கி வாரேன்
தாலி கட்டிக்கடி..
என்ன தத்தளிக்க விடாம நீ
மேல ஒட்டிக்கடி... 9

பெண்:
வெத்தலைய வாங்கு மச்சான்
சுண்ணாம்புக்கு ஏங்கும் மச்சான்
பாக்கு போல பக்குவமா
பாத்து நடந்துக்கோ...
பரிசம் போட்டு பச்ச புள்ள
கைய புடிச்சுக்கோ... 10
    

( # எனது இந்த புதிய முயற்சிக்கு உங்களின் ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்ப்பார்க்கிறேன். மறக்காமல் தெரிவிக்கவும்.)  

   

Thursday, January 06, 2011

"மென்மைக்குள்ளும்"...!!

காற்றில் விரவும் தூசதன் பாசப்பிணைவில்
வான் மறையும் வன்மை புகுத்தும்
மென் பொருள் நிறம் மாற
காணாது போகும் கதிரொளி காண்

துகள்களின் கட்டமைவு கவிழ்ந்தவிழ கொட்டும்
துளிகளில் தோரணமாய் மழை.. மழை
துண்டங்களின் சிதறல் தூறல்,- தூறல்
துவண்டவிழ விழும் இதயச் சாரல்

மென்மைகளின் முடிவெல்லாம் வன்மையாய்
வன்மைகளின் வழியெல்லாம் மென்மையாய்
மேந்துளி விழ மேல்மண் நெகிழ்வது
பூம்பெழில் பாவையின் பார்வையில் காண்.

ஒழுகும் துளியின் ஒன்றினைப்பில் ஓடை
அழகு இதழின் ஒருங்கிணைப்பில் வாடை
பழகுத் தமிழ்.. பழகவரும் மேடை
இழக்க குறையும் எதிலும் எடை

ஒன்றின் வாலில் மற்றொன்றின் தலையாய்
ஒவ்வொன்றின் முடிவில் மற்றொன்றின் தொடக்கம்
ஒன்றுக்கொன்று முரண்பாடாய் முதலிலும் முடிவிலும்
ஒன்றுமே இல்லாமல் என்றுமே வாழ்க்கை.

கனவுகள், உணர்வுகள், நினைவுகள், எண்ணம்
யாவிலும் மென்மை இருப்பது திண்ணம்.
வன்மையின் விதை மென்மை ஈதுண்மை
வஞ்சியின் நெஞ்சம் கண்டு தெளி.

தொடாத தேகம் இல்லை யாரும்
தொடாமல் மோகம் இல்லை நாளும்
துடிக்காத இதயம் இல்லை நெஞ்சம்
வலிக்காமல் காதல் இல்லை.. காதலி.


பிறப்பு வலி, மூலம் சுகம்.
இறப்பும் வலி, முடிவு ஆனந்தம்.
மறுப்பும் வலி, முதல் சோகம்.
ஏற்பும் வலி, முற்றும் பேரின்பம்.
****************************************

Wednesday, January 05, 2011

"அவளுக்குத்தான்"...!!

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்....!

என்னை மொழியால் மணந்தவள்...தன்
அன்னைத் தமிழால் கவர்ந்தவள்...என்
எண்ணம் யாவும் உணர்ந்தவள்... தாயின்
வண்ணம் பாசம் தருபவள்.

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

முழுவதும் என்னில் தொலைந்தவள்
முழுநிலவை தன்னில் தொலைத்தவள்
அன்புக்கு முன் அவள் காட்டாறு
அவள் அன்பில்தான் இந்த பாட்டாறு.

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

பிஞ்சுத்தமிழில் என் நெஞ்சம் நிலைத்தவள்
கொஞ்சுத்தமிழில் என் கற்பனை நிறைத்தவள்
விஞ்சும் தமிழின்றி விழிக்கிறேன்,- அவளே என்
நெஞ்சில் தமிழாய் மலர்கிறாள்...!!

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

உணர்ச்சித் ததும்பும் வேலையெல்லாம்
உள்ளிருந்து வழிக் காட்டுகிறாள்...!
மறைந்து கொண்டு மறுகும் அவள்
அன்பின் வெப்பத்தில் உருகும் காதல்...!!

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்....!

நினைவுகளில் நேசிக்கும் பாசக்காரி
நிசங்களில் யோசிக்கும் ரோசக்காரி
நிழலாய் நான் என்பதில் ஆசைக்காரி
நிகழ்வுகளின் வலியில் கோபக்காரி.

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

சின்ன சின்னதாய் சில வரிகள்
சித்திரமாய் அவள் காதல்....!,- நானும்
சின்னதாய் அவள் காதல் கேட்கிறேன்...
சிணுங்களுடன் ஓடி மறைகிறாள்...!

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

வாழைக்குருத்தாய் வளரும் அன்பின்
வளர்ச்சியில் மிரண்டு போகிறாள்..!
வாலைப்பெண்ணாய் வந்து போகிறாள்
வாழ்க்கை மொத்தமும் தந்து போகிறாள்.

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

சொல்லாமலும் கொள்ளாமலும் தள்ளாமலும்
விடாமலும் விலகாமலும் விழாமலும்
வராமலும் தராமலும் பெறாமலும்
விழுதுகளாய் தாங்கும் அவள் நேசம்.

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

தள்ளி நின்று என்னை அள்ளிப்போகும் ஆனந்தமே..!
துள்ளி விழும் கவிதையில் மொட்டவிழும் தெய்வீகமே..!
'கள்ளி'..! நின் காதலில் தமிழோடு நான் பிணங்குகிறேன்.
'காதலே'...! "தமிழாய்" நீ என்னில்...!! மயங்குகிறேன்.      

Tuesday, January 04, 2011

"புரியப்படாத புரிதல்"...!


உருகும் மெழுகுவத்தியின்
ஒழுகும் ஒளியில்
புழங்கும் சீவன்கள்..., ஒருபோதும்
உணர்வதுமில்லை....
உருகுவதுமில்லை....
மெழுகுவத்திகாய்...!

உருகும் மெழுகாய் என் பிரியங்கள்....!!

காயும் கதிரில் வாழ்ந்து
மாயும் உயிர்கள்...வாழ்த்து
பாடவில்லை....!
கதிரின் புனிதம்
புரியவில்லை....!

காயும் கதிராய் என் காதல்...!!

வத்தக் குழம்பில்
கூடிப்போன காரமாய்,-கொஞ்சம்
வச்சப் பாசத்தில்
காதல் கூடிப்போச்சு,- என்
காதலில் குற்றமில்லை,- உன்னைக்
காதலிப்பதும் பாவமில்லை.

"உரைக்கும்" காரமாய் என் உணர்வுகள்....!!

மணக்கும் மல்லிகை நீ, -உன்னை
மணக்கும் மன்மதன் நான்,
பிணக்கும் ஏனடியோ...? பின்
வழக்கும் ஏனடியோ...?

புரியாதவளுக்காய்...அவளைப்
புரிந்தவன்...


Monday, January 03, 2011

"விடுதலை தமிழன்"

தமிழர் நாகரிக வேரில்
வெடித்தெழுந்த எங்கள் வேங்கையே..!
சுதந்திர காற்றை சுவாசிக்க
சூழ்ச்சிகள் வென்ற மறத்தமிழ..!
மானமும் வீரமும் கண்ணென
காப்பாற்றி மனிதம் காத்த மாருதமே...!!

இனமான உணர்வை இறுதிவரை
இன்முகத்தோடு காத்தவரே..!
கோட்டையில் கொடி பறக்க
குலதெய்வம் காவல் காக்க
மருதுபாண்டிய நட்பு நோக்க
மண் காத்த மறக்கூட்டத் தலைவ..!!

செந்தமிழ் சிறக்க நல்லாட்சி தந்து
குடிகளைப் போற்றிய கோவே..!
புலவரும் பாணரும் பாடிய பழந்தமிழே..!
அந்நியனை மீசையில் மிரட்டிய அதிசயமே...!!
அண்டியவரை கருணையில் காத்தவரே.

 

செழுங்கழனி செந்நெல்லும் செங்கரும்பும்
உழுத வயல் ஊடுருவும் பயிர்வகையும்
பக்குவமாய் காத்த பசுமை புரட்சியே...!
பகை என்று வந்திட்டால் பாயும் புலியே...!
நகைமுகம் மாறாத நறுந்தமிழே...!!

காட்டிக்கொடுத்ததாலேயே...
"கௌரவம்" குனிந்த எங்கள் கட்டபொம்ம...
'எட்டப்பன்கள்' இருக்கிறார்கள் இன்னுமிங்கே..
உம்போல் கட்டபொம்முவைதான்...
காணமுடியவில்லை....!

விடுதலைக்கு வித்திட்ட வீரமே...!
விழியில் வாள் சுழற்றும் சிங்கமே...!!
கயத்தாறு கயிற்றை முத்தமிட்ட கடைத்தமிழே...!!!
தூக்குமேடை அல்ல நம் தோல்விக்கு காரணம்
துரோகக் கூட்டம்தான்.

அந்த கூட்டம் மட்டுமே இன்று பல்கிப்பெருகி
பாரெங்கும் திரிகிறது பார்...!
மீண்டும் நீர் பிறந்திட வேண்டும்.
இம்முறை தோற்பது நாமல்ல அவர்கள்.
குலம் கெடுத்த கோடரிகளின் வேரறுப்போம்.
கும்பிட்டு கைஎடுத்தால் குலம் காப்போம்.

நல்ல தமிழ் சமூகம் படைப்போம்...
பாஞ்சாலங்குறிச்சி மட்டுமல்ல...!
பாரதமெங்கும்....!!
அஞ்சாசிங்கமென இங்கொரு
ஆண் கூட்டம்....
உன் வரவுக்காய்...

மீண்டும் பிறந்திடு எங்கள் கட்டபொம்ம...!!

வாழ்க தாயகம்..! வாழ்க தமிழ்..!! வாழ்க நின் புகழ்...!!! 
குறிப்பு : இன்று பிறந்த நாள் காணும் எங்கள் "தமிழ் கோ" "வீர பாண்டிய கட்டபொம்மு"வுக்கு தமிழ்க்காதலனின் பிறந்த நாள் வாழ்த்தாக இந்த கவிதை சமர்ப்பணம்.          

Sunday, January 02, 2011

"வலைப்பூவுலகுக்கு நன்றி'.... (150 வது பதிவு)

பதிவுலக வலைப்பூ எழுத்தாளர்களுக்கும், வலைப்பூ வாசகர்களுக்கும் தமிழ்க்காதலனின் வணக்கம். உங்களில் ஒருவனாய் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பகிர்கிறேன்.... நாளும் நலமோடு வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்களையும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மானிட சமூகத்தின் நிகழ்கால மதிப்பீட்டாளனாகவும், இறந்த கால பதிப்பீட்டாளனாகாவும், எதிர்கால சிற்பியாகவும் ஒரு எழுத்தாளன் இருக்கிறான். இருக்க வேண்டும். இருப்பவர்கள்தான் எழுத்தாளர்கள். அப்படிப்பட்ட அரும்பெரும் பணியை தனக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கும் மிகப் பெரும் சாதனையாளர்களான உங்களுக்கு நன்றி சொல்லாமல் போனால் அது நம் தமிழ்க் கூறும் நல்லுலகத்துக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.

ஒவ்வொரு எழுத்தாளனும், எழுத்தாளினியும்  அவர்களுடைய மொழியை சிறப்படைய செய்கிறார்கள். மொழியை வடிவமைக்கும் தொழில்நுட்பவாதியாகிறார்கள். மொழியை புணரமைக்கும் சீர்திருத்தவாதியாகிறார்கள். நாளைய சந்ததிக்கு நம் சரித்திரம் சொல்லும் வரலாற்றை சமைக்கிறார்கள். அப்படிப்பட்ட பணியை செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு தமிழ்க்காதலனின் மனமார்ந்த நன்றிகளை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

அறம், பொருள், இன்பம்

வாழ்வாதாரமான இந்த தலைப்புகளை மையப்படுத்தி கதை, கவிதை, கட்டுரை, எழுதும் அத்தனை பேருக்கும் என் பாராட்டுக்களும் நன்றிகளும்.

வீடு, பேறு

மனித வாழ்வை நெறிப்படுத்தும் வழிமுறைகளை மையமாய்க் கொண்டு எழுதும் அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.

கவிஞர்களுக்கு

தம் சிந்தனையை மொழிவளத்தோடு குழைத்தெடுத்து, இனிமையும், தமிழ்ச் சுவையும் சேர்த்து கவிதைப் படைக்கும் தமிழார்வ கவிஞர்களுக்கு எமது பெருமைக்குரிய நன்றிகள்.

கட்டுரையாளர்களுக்கு

தான் வாழும் சமூகத்தின் கண்ணாடியாக விளங்கும் கட்டுரையாளர்களுக்கு மிகுந்த மகிழ்வான நன்றிகள்.

கதாசிரியர்களுக்கு

தம் எண்ணங்களையும், கற்பனைகளையும் எழுத்தாக்கும் சமூகச் சிற்பிகளுக்கு வாழ்த்துகளுடன் நன்றிகள்.

கலைத்துறையினருக்கு

தாம் சார்ந்த கலையைப் பற்றி எழுதி மற்றவரும் அந்த கலையை பயில ஆர்வத்தை தூண்டி கலை வளர்க்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் தமிழ்க்காதலனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தொழில்நுட்பவாதிகளுக்கு

தான் தெரிந்திருக்கும் தொழில் நுட்பத்தை மிகச் சரியான விளக்கமுடன், வழிகாட்டலுடன், படங்களும் தந்துதவி இன்றைய தலைமுறையை அடுத்த தொழில்நுட்ப பரிமாணத்துக்கு அழைத்து செல்லும் மிகப் பெரும் சமூகத் தொண்டு செய்து கொண்டிருக்கும் அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் உங்களின் கரங்களை என் கண்ணொற்றி, முத்தங்களுடன் நன்றிகள்.

( நீங்கள்தான் நாளையத் தமிழுலகத்தையும், நம் தமிழன்னையையும் உண்மையாய் வாழ வைக்கும் மண்ணின் மைந்தர்கள் என்கிற சிறப்பை பெறுகிறீர்கள்... )
எழுத்தாளர்களின் சாதனை

நம்முடைய தமிழக அரசு சமீபத்திய சாதனையாக சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளும் "செந்தமிழ் மாநாடு" சுமார் 300  கோடி ரூபாயில் என்ன சாதனை நிகழ்த்தி இருக்கிறதோ அதை விட அதிகமாகவே நம்முடைய வலைப்பூ உலகில் அரும் பெரும் சாதனைகள் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி மிகச் சிறப்பாய் நடந்தேறி வருகிறது.

முன்பெல்லாம் எழுத்தாளர்கள் குறைவு.... வாசகர்கள் அதிகம். ஆனால் இன்று....
ஒரு வலைப்பூவுக்கு சொந்தமான ஒவ்வொருத்தரும் எழுத்தாளன்.....
ஒவ்வொரு வலைப்பூ எழுத்தாளனும் ஒரு வாசகன்....

நிலையைப் பாருங்கள்... வாசகனை எழுத்தாளனாய், எழுத்தாளனை வாசகனாய் வைத்திருக்கும் இது மிகப் பெரும் சாதனை. இந்த ஈடு இணையற்ற சாதனையை நம் பதிவுலகம் மிகச் சிறப்பாய்  செய்து கொண்டு வருகிறது. இது நல்லதொரு தொடக்கம். அறிவு மிக எளிதாய் எல்லோரையும் சென்று சேரும்.

இப்படி நம்மையும் நம் மொழியையும் கட்டமைக்க, அடுத்த தலைமுறையின் கணினி வாழ்க்கைக்கு நம் மொழியைக் கொண்டு சேர்த்து அவர்களுக்கும் உதவி, மொழியையும் வளர்த்து, காக்கும் சீரியப் பணியை எந்த மாநாடும் செய்துவிட முடியாது என்பது திண்ணம். அந்தப் பணியை சத்தமில்லாமல் வலைப்பூவுலகம் செய்து வருகிறது.

உலக நாகரீகங்களில் தமிழர் நாகரீகம் தலை சிறந்தது..... மறவாதீர். அதை எப்போதும் தலை சிறந்ததாய் வைத்திருக்க பாடுபடுவோம்.

வேண்டுகோள்

நம்முடைய ஒவ்வொரு கணினியும் ஒரு நூலகம், ஒவ்வொரு பதிவும் தமிழை இணையத்தில் இறக்கி வைக்கும் மொழியாக்கம். அதை மிகச் சரியாய் பயன்படுத்துவோம்.

முடிந்தவரை தனித்தமிழில் எழுதுங்கள். எழுதிப் பழகுங்கள். எந்த மொழியானாலும் அந்த மொழியில் எழுதும் போது அந்த மொழியை மட்டும் கையாளுவதுதான் அந்த எழுத்தாளனின் திறமை. மொழியை கலந்து எழுதுவது என்பது நம்முடைய மொழியறிவு குறைவையே வெளிக்காட்டுகின்றன. எல்லா மொழியும் சிறப்பே. ஒரு ஆங்கிலேயனோ, பிரஞ்சுக்காரனோ, அரேபியர்களோ அவர்கள் மொழியில் எழுதும் போது தமிழை மேற்கோள் காட்டி எழுதுவது கிடையாது. அவர்களுக்கு தமிழ்த் தெரியாது. அப்படி எழுத அவசியமும் கிடையாது.

தமிழர்களுக்கு மட்டும் என் இந்த தலை விதி.... இனி இவ்விதி மாற்றுவோம். பிற மொழிக் கலப்பு தவிர்ப்போம். அது நம்முடைய அடையாளம் அல்ல. அது நம்முடைய கௌரவம் அல்ல.

புரிந்து கொள்ளுங்கள்.....

ஒரு பழையத் துணியிலோ, புதுத் துணியிலோ கிழிசல் என்றால்... அங்கே நாம் பழையதில் புதியதையும், புதியதில் பழைய துணியையோ ஓட்டுப போட்டு தைத்தால் முடிவில்... கிழிசலும், ஒட்டுத்துணியும், தையலும் அப்படியே தெரியும் அசிங்கமாய்....

அது போலதான் ஒரு மொழியில் பிற மொழிக் கலந்து எழுதுவதும் ..... அசிங்கமாய்.........

தவிர்ப்போம். புதிய தமிழ் வார்த்தைகளை கண்டு பிடிப்போம். இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவோம். வளர்வோம் நாமும், நம் மொழியும், நம்முடைய நாகரீகத்தொடு.

நன்றி... வணக்கம்.                                                       
குறிப்பு : இந்த சாதனைக்கு பேருதவி செய்து கொண்டிருக்கும் நம்முடைய "கூகுள்" வலை முகவரிக்கு ஒட்டுமொத்த வலைப்பூவுலகத்தின் சார்பாக தமிழ்க்காதலன் நெகிழ்ச்சியுடன் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்... நன்றி கூகுள்.