Wednesday, April 27, 2011

"பொக்கிசப் புருசன்..."


 

புரட்சிக்காரனுக்கு பொண்டாட்டி நான்.
மிரட்சியின் பிடியில்....
பொழுதுகள் யாவும்
புரட்சியாய்..

கட்டியணைக்கும் வேளையிலும்
காரல்மார்க்ஸ் பேசுகிறான்.
கட்டாந்தரையில் உருண்டபடி
கம்யூனிசம் வீசுகிறான்.
முத்தங்கள் கூட...
முரட்டுத்தனமாய்..!!

அவனும் ஓர்க்காலத்தில்
மெல்லுடலிதான்...
ஆங்காங்கே சந்தித்த அவலங்கள்
அவனையும் சிந்திக்க வைத்தது

சீர்கெட்டச் சமூகம் சிந்தித்தே
சிந்தனைக்குள் தேள் கொட்ட
சீறும் சிறுத்தையானான்.

இறுக்கமான அவன் பிடியில்
இன்னும் இருக்கிறது...
அதிகமான "காதலும்" அதனுள்
"அடக்கமான" காமமும்.

பள்ளிகளின் பாசிசக் கொள்கை
பணக்கார வர்க்கத்தின் ஏகோபித்த
ஏகாதிபத்தியம் எதற்கென கேட்கிறான்..?

பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சுகள்
தடவும் நாக்குபூச்சிகள்...
நாளைய சமூகத்தின் நச்சுப்பாம்புகள்.

பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையென
போதிக்கும் புளுகுமூட்டைகள்.
மனிதம் கொன்று அறிவியல் பேசும்
அறிவிலிகள் மனித அரைகுறைகள்.

மலரினும் மெல்லிய இதயம் அவனுக்கு.
வல்லூறுகளின் நகக்கீறல் விழுந்தே
வழுக்குப் பாறையாகிப் போனது.

மார்த்தழுவும் வேளையிலும்
மார்க்சிசம் போதிக்கிறான்
பெண்ணியத்தை ஆண்டுகொண்டே
மண்ணியத்தை தேடுகிறான்.

இருட்டுக்குள் இருந்தாலும்
வெளிச்சம் வீசும் அவன் விழிகள்
சமூக இருட்டை சாடுகின்றன.

அடுப்படியில் எட்டிப் பார்க்கும்
அவனது சமதர்ம கொள்கைகள்.
அரிசிக் கல் பொருக்கி அறுவாமனையில்
காய் நறுக்கி ஆசையாய் உதவிகள்...

சிந்தனைக்குள் வாழ்ந்தவன்
"சிந்தனைகள் வாழ்க்கை" என்றான்
அவன் சிந்தித்தவாறே "நின்றான்".

அவனை முந்தானைக்குள் முடிஞ்சுக்கோ
என்ற என் தாய்க்கு எப்படிச் சொல்வேன்..?
அவன் காட்டாற்று வெள்ளம் என்று.
    
"சமதர்ம சமூதாயம்" அவன் இலட்சியம்
குறைந்தபட்சமாய் "மனிதாபிமானம்" கேட்கிறான்.
உயிர்ப் போகும் வேளையிலும் உதவாத
உயரதிகாரிகளின் சுயநலம் சாடுகிறான்.

சிறுதுரும்பும் நகர்த்தாத கைகளுக்கு
வாய்ப்போர் எதற்கென ஏளனம் பேசுகிறான்.
வாடிக் கிடக்கும் சமூகத்தை...
நாடிக்கிடக்கிறது அவன் மனம்.

இப்போது உணர்கிறேன்...
தன்னலம் பேசும் சமூகத்தில்
பிறர்நலம் பேணும அவன்....

எனக்கு.....................
           
பொக்கிசப் புருசன்.
பொல்லாத மனுசன்.              

Tuesday, April 26, 2011

"வருத்தமுற்று..."


வருந்தி அழைத்தும் நீ வாராதிருப்பதென்ன...?
வருத்தமுற்று நான் வாட வாளாயிருப்பதென்ன...?
பொருத்த மற்றவொன்றைப் போற்றி வளர்ப்பதென்ன...?
பொன்மலரே..! கண்மலராயோ என் மடியில்..!

கறுத்த முகம் வெளுத்த தென்ன..?
சிரித்த முகம் சிறுத்த தென்ன...?
கருங்குழல் போர்த்தி இருண்ட முகமென்ன..?
காட்டாற்று வெள்ளம் கைக்கட்டி நடப்பதென்ன..?

பொற்சிலையென போற்றி வைத்தேன் புன்னகையே.!
கற்சிலையாய் உடைந்து காணாமல் போனதென்ன..?
இருட்டு வெளியெங்கும் இன்முகம் தேடுகிறேன்.
உருட்டும் உன்விழிகள் காணாமல் வாடுகிறேன்.

காலவெள்ளம் தந்த காதல் வெள்ளம்
நதியென பெருக்கெடுக்க நான் மட்டும்
நீந்துகிறேன்,- நீந்தக் கற்றுத் தந்த
நீ மட்டும் கரையேறிப் போவதென்ன...?

ஊற்றுப் பெருக்காய் ஊறிவரும் அன்பில்
உன்னை நனைக்க ஓடிவரும் காதல்
உனக்கோ வாழ்வின் கரையில் மோதல்
வருத்தமுற்று வாடுவது நம் வாழ்க்கை.

இன்னும் இலை விடாத உனக்கு
இலையுதிர்க் காலம் இப்போது எதற்கு..?
முளைவிட்டு தளிர்விடு முல்லைக்கொடி நீ
முழுவதும் அள்ளிக் கொள்கிறேன் நான்.

பிரசவக்காலப் பிரளயம் மனதில் மூள்கிறது
பிறவிகள் யாவும் உன்நினைவில் மூழ்குகிறது
நொடிப்பொழுதும் தாங்கா வலி எனக்கு
யுகம்தோறும் துணையாய் நான் உனக்கு.

வருந்தி அழைத்தும் வாராதிருப் பதென்ன..?
வருத்தமுற்று நான் வாட வாளாயிருப்பதென்ன..?

Sunday, April 24, 2011

"சொல்லத் துடிக்குது மனசு..."


எனதன்பு நண்பன் 'மனசு' சே.குமார் அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று அவரின் எண்ணப்படி உங்களுக்கு இந்த காதல் கதையை எழுதுகிறேன். முதல் முறையாய் கதை எழுதுகிறேன். பிழை இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.

....... இனி காதலுக்குள் (கதைங்க..) செல்வோம்.

காதல் என்பது என்ன..? உணர்வா...? உணர்ச்சியா...? பருவமா..? பக்குவமா..? வருவது தெரியாமல் வந்து உயிர் குடிக்கும் மதுவா..? வந்து அமர்ந்து கொண்டு மனம் தின்னும் கழுகா..? வாழ் நாட்களில் நாட்களை பலிக்கொண்டு வாழ்க்கையை திசை திருப்பும் விதியா..? உள்ளத்துள் மூளும் கேள்விகளுக்கு விடைத் தெரியாத ஒரு தருணத்தில் அவன் அவளை சந்திக்கிறான். அவனுள் விழுந்து கிடக்கும் கேள்விக்கு விடையாய் அவள் நிற்பது போல் ஒரு எண்ணம் அவனுக்கு.

வசந்தங்கள் யாவும் சுமக்கும் பருவத்துள் பூத்த பளிங்கு மலராய் அவள்.... உலகத்தை அலட்சியமாய், அனாயாசமாய் எதிர்நோக்கும் அவள் இயல்புக்கு சற்றே முரண்பாடாய் அவன் தெரிகிறான். எல்லாவற்றையும் சாதாரணமாய் எடுத்துக்கொள்ளும் அவளுக்கு 'அவனை' அப்படி கொள்ள முடியவில்லை. அவன் அவளை ஈர்க்கின்றானா..? அல்லது அவளை அவனிடம் இருக்கும் ஏதோ ஒன்று ஈர்க்கிறதா..? குழப்பமாய் இருப்பது போல் தோன்றினாலும் மனதுக்குள் அவனை இரசிப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை. மௌனமாய் இரசிக்கிறாள். மெல்ல அவனை விழுங்கி தன்னை சீரணிக்கிறாள். வெட்கம் உதடுகளில் வழிகிறது.

யார் தொடங்குவது...? எங்கே தொடங்குவது..? எப்படித் தொடங்குவது...? இருவருக்குமே இந்த குழப்பம்...(!)., இன்றேனும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆதங்கம்... இருவருக்குள்ளும். யார் சொல்வார்...? என்கிற தவிப்பு தாகமெடுக்க.... இனிமை வேகமெடுக்கிறது. இவர்கள் சந்திக்க சிந்திக்கிறார்கள். அதற்குள் இவர்களுக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுப்போம்.

அவன் : ரவிவர்மா  
அவள் : ரதி

ரவிவர்மாவின் மௌனம் கலைக்கும் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியா இன்ப வெள்ளம் கரைபுரள... அணைபோட முயன்று தோற்றதின் அடையாளமாய் 'வெட்கம்'. அந்தப் பூங்காவின் அமைதியான இடத்தில் ரதியும், ரவிவர்மாவும். அவள் முழங்காலைக் கட்டிக்கொண்டு பதற்றம் மறைக்கிறாள்.
அவன் உதட்டையும் நகத்தையும் மாறிமாறிக் கடித்த வண்ணம் இவளை அவ்வப்போது ஓரக்கண்ணால் உற்று நோக்குகிறான். கசிகிறது காதல்.

அவன் ம்ம்க்கும்... என செருமிக்கொண்டு., அவளிடம் பேச எத்தனிக்கிறான். அவள் அவனின் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளவே வாழ்வது போல் கூர்மையாகிறாள். மனம் தவித்து.. மருகுகிறாள். இருவரும் ஒரு முறை பார்த்துக் கொண்டு இதழ் பிரிக்காமல் சிரிக்கிறார்கள். அவன் இதழ் பிரிக்க... அவள் இமைத் துடிக்கிறாள்.

சொல்லிவிடத் துடிக்கும் மனதின் போராட்டத்தை மௌனமாய் சீரணிக்கிறான். அவள் அவனை ஆசுவாசப் படுத்த முயல்கிறாள். தண்ணீர்ப் பாட்டிலைத் திறந்து தருகிறாள். அவனும் அதை வாங்கிக் குடிக்க, அந்த அழகை அவள் இரசிக்கிறாள். தன்னை சரியாகப் புரிந்து கொள்ளும் அவளை பெருமையாய் பார்க்கிறான். எங்கே அவளைப் பார்த்தால் உளறிவிடுவோமோ என்கிற அச்சத்துடன் பார்வையை சற்றே தாழ்த்திக்கொள்கிறான். பேச எத்தனிக்கிறான்.

"பிடிச்சிருக்கு.." ஒற்றை வார்த்தை உதிர்க்க இத்தனை பிரயத்தனம். அவளோ இவனை சீண்டிப்பார்க்க விரும்பி "என்னப் பிடிச்சிருக்கு..?" என்கிறாள். இவன் மௌனமாய் அவள் கண் பார்த்து "உன்னைப் பிடிச்சிருக்கு" என்கிறான். அவள் சந்தோசத்தின் உச்சியில் நின்றுக்கொண்டு "எனக்கும்" எனச் சொல்லி வெட்கினாள். ஒருவழியாய் உள்ளுக்குள் நிகழ்ந்த உணர்வு போராட்டத்தில் விடுதலைக் கிடைத்த சந்தோசம் அவர்களுக்கு.

Monday, April 18, 2011

"கலியுகத்துக்குத் திருமணம்"
எனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம்.

               என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் 21 ம் நாள் காலையில் கடலூர் அருகில் உள்ள நெல்லிக்குப்பத்தில் நடைபெற இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கலந்து கொள்ள முடிந்த அத்தனை அன்பு நெஞ்சங்களும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பான ஆசிர்வாதத்தை மணமக்களுக்கு தந்து அவர்களை வாழ்த்துமாறு கேட்கிறேன்.  

 

                  திருமண வாழ்த்து

கரும்புச்சாறில் கற்கண்டு கலந்து இன்பத்தேன்
கலந்து இதமாய் அமுது படைக்க
அன்னவள் வருகிறாள் அன்ன நடையில்
அன்பில் நனைத்து ஆரத்தழுவு தம்பி

உன்னை உலகமென ஒப்படைத்தாள் தன்னை
உவப்புடன் உரிமைக் கொள் உலகறிய
இப்புவியுள் இன்பம் துய்க்க இன்முகம்
முழுதும் புன்னகை ஏந்தும் பொற்கொடிமருத நிலத்து மருக்கொழுந்து அவள்
குறிஞ்சி நிலத்து மானடா நீ
விருந்துக்கா பஞ்சம்,- அரும்பும் ஆசைகள்
துளிர்த்து செழிக்க தோட்டம் இருக்கு

கனிந்த காதல் நம் கலாச்சாரம்
கனியும் கனிச்சாறு ஒழுகும் அன்பில்
நனையும் நீவிர் நாணியும் போவீர்
அன்னையும் பிதாவும் அகமகிழ வாழ்வீர்

பிள்ளையும் பெரும் பேறுகளும் பெறுவீர்
முத்தமிழ் நம் சொத்து முக்கண்ணன்
நம் கடவுள் பிள்ளைப் பேசும்
பிஞ்சுத் தமிழ்க்கேட்டு நெஞ்சு நிறை.குடும்பப் பெருமை குலப் பெருமை
அரும்பும் மொட்டுக்கு பாட்டன் சொத்து
அழியாமல் காத்து வளர்த்து காப்பாற்று
குழந்தையோடு குலப் பெருமை வளமையும்

சங்கத் தமிழ் சங்கு பாலில்
சங்கம மாகட்டும் தாய்ப்பாலும் தாய்மொழியும்
நம் கண்கள் மறந்து விடாதே....
பிறவிப்பயன் பெற்றவனே "சக்தி"யின் கொற்றவனே. 


ஆனந்தக் கடலில் ஆழ்க்காதல் மூழ்கி
அனுபவ முத்தெடுக்க வாழ்க்கை வளம்
அள்ளி நலம் யாவும் வழங்கட்டும்
அன்பனே தம்பி சுகம் காண்பாய்.

ஊராரும் உற்றாரும் போற்ற ஊரில்
மாற்றாரும் மெச்ச இருவரும் இணைந்து
நல்லற மென்னும் இல்லறம் அமைக்க
ஆசீர்வாதங்களுடன் அன்பு அண்ணன்

 
                                                  -தமிழ்க்காதலன்.

Wednesday, April 13, 2011

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"


கண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட
எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர
குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும்
இல்லத்தில் சுகமும் இனிதே தங்கிட

வாடிய முகங்களில் மகிழ்ச்சி மலர்ந்திட
குறுகிக் குனிந்தவன் நெஞ்சம் நிமிர்ந்திட
வறுமைத் தொல்லை வாட்டம் போக்கிட
தலைமுறைத் தாண்டியும் தமிழன் வாழ்ந்திட

நதிகளில் புதுப்புனல் பாய்ந்து களம்
யாவும் கட்டுக்கதிர் மலையொத்த முகட்டில்
நலம் யாவும் மங்கலமாய் நம்வீடு
வரவேண்டி வந்தது இந்த புத்தாண்டு  

இனிப்புடன் புத்தாடை போர்த்தி உவப்புடன்
உளமார வாழ்த்தி சுற்றமும் நட்பும்
நலம் காண நல்லதொரு விருந்து
நாம் சமைப்போம் தமிழுலகு அமைப்போம்.

வந்திருக்கும் "கர" ஆண்டை கரம்
குவித்து சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.
உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் இனிதே
இன்பம் பெருகி வளமோடு வாழ

வாழ்த்தும் அன்பன்
-தமிழ்க்காதலன்.

Thursday, April 7, 2011

"நதியின் கரை...!"


கடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு
நீண்டு நெளிந்து காற்றில் அலையும்
குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி
மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...!

அலைக்கரம் தாவி அணைக்கும் அற்புதம்
மணலெங்கும் நுரைத் ததும்பும் மகிழ்ச்சி..!
நத்தைகளும் அட்டைகளும் காலம் வரைந்த
நவீனக் கவிதையாய் கரை ஒதுங்கும்.

நீலமகள் இடைத்தழுவும் நிலமகன் கரமாய்
அமுத இரசம் ஒழுகும் களமாய்
பரிசுகள் ஒளித்து பளிங்கென காட்டும்
சிலிக்கான் சிலிர்ப்புகள் கூழாங்கல் சிரிப்புகள்..!

பூமியின் நெகிழ்சியும் மகிழ்சியும் மென்மையாய்
வெளிக்காட்டும் நர்த்தனம் மணல் படுகை.
மேகத்தின் மோகத்தில் மொட்டவிழ்ந்த தூரிகைத்
துளிகளின் சிதறிய ஓவியமாய் மழை ..!

 

ஒற்றைத் துளிகளின் கற்றைப் பிணைப்பில்
உருவான இன்பப் பிரவாகம் நதி..!!
மெல்ல மெட்டுக்கு பாட்டெழுதும் கவிஞனாய்
நளினமாய் சதிராடிச் சரிகிறாள் மலையில்.

நழுவும் ஆடையென தழுவும் மலைவிட்டு
நழுவி நிலம் நோக்கி நாணுகிறாள்..!
பிறந்த இடம் விட்டு புகுந்தவிடம்
புகுந்த மிரட்சியுடன் நகர்கிறாள்.

தளர்ச்சி கூடிய இடமெல்லாம் தங்கைகள்
தாங்கிப் பிடிக்க தளிர்நடை பயில்கிறாள்.
இடையா இது கொடியா எனவியக்க
மத்தகமா இது மத்தளமா எனநினைக்க...

சுளிவுகளிலும் நெளிவுகளிலும் பேரழகு கூட்டி
சுருங்கி விரியும் நத்தை மகள்..!
சம்மதம் சொன்ன அத்தை மகள்..!!
இருக்கவா போகவாவென தயக்கம் காட்டி...

மெல்ல மேனியெங்கும் மலர்ப் போர்த்தி
கதிரொளியில் சிரிப்பை எதிரொலித்து மயக்கும்
கண்ணாடிப்பல் இரசித்து கண்மூடும் முன்
சருகையும் சிறகாக்கி விரையும் சதிகாரி..!!!

வேர்களை முத்தமிட்டு மரங்களை கேளிப்பேசுகிறாள்.
விழுதுகள் தொட்டும் தொடாமலும் நகைக்கிறாள்..!
கண்களை மீன்களாக்கி கண்ணடித்து கவர்கிறாள்
இவளைத் தடுக்கும் தகுதி எவருக்குமில்லை.

 


வீணையே தன்னை மீட்டும் அழகு
வெண்நுரை மிதப்பில் கரைப் புரளும்
அலைத்தளும்பி ஆர்ப்பரிக்கும் செழித்த சிரிப்பில்
மனமிழக்கா உயிர் இம்மண்ணில் இல்லை.

நதிக்கு கரை என்பது............?

நதிக்கு கரை என்பது....எதுவோ...?!

நிலமா..?

இல்லை நீரா...?

நதியில்லா விடத்து கரை இல்லை.
கரை என்பது நதியால் தீர்மானிக்கப்படுவது.
நதியின் விளிம்பு விளம்பும் வரம்பு.
நதியே நதிக்கு கரை.          

Tuesday, April 5, 2011

"இறையாண்மை என்றால்....?பதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் இதுவரை விடை இல்லை. அந்த வினாவுக்கு விடையோடு இந்த பதிவில் உங்களை சந்திக்கிறேன். இந்தப் பதிவில் இன்னும் சில வினாக்களை முன் வைக்கிறேன். பயப்படாதீங்க..... இங்கேயே விடைகளும் கிடைக்கும்.

௧. இறையாண்மை என்றால் என்ன? இதுதாங்க நான் கேட்டக் கேள்வி.
  இறையாண்மை என்பது ஒரு தேசமோ, ஒரு இனமோ, ஒரு இயக்கமோ, ஒரு அமைப்போ, ஒரு சமூகமோ தனக்கான அடையாளங்களுடன், தனது பாரம்பரியத்துக்கு தக்கவாறு, தன்னுடைய கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் ஏற்றவாறு தன் சமூகத்தை கட்டி எழுப்ப அல்லது உருவாக்க வரையறுக்கப்படும் ஒரு கொள்கை. அந்தக் கொள்கை வழி நிற்றலும், அதன் வழி தொடர்தலும் அந்த சமூகம் ஏற்றுக்கொண்ட இலட்சியப் பயணமாகும்.

௨. இந்திய இறையாண்மை என்றால் என்ன? இதுதாங்க என்னுடைய அடுத்தக் கேள்வி?
   இந்தியாவின் இறையாண்மை என்பது "வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பது" என்பதுதாங்க. இது நம்மைப் பற்றிய விசயங்களை சுருங்கச் சொல்லி நிறைய விளக்கும் ஒரு தாரக மந்திரம். நம்மிடையே பல்வேறு விதங்களில் வேறுபாடுகள் இருக்கின்றன. இனத்தால், மதத்தால், மொழியால்,கலாச்சாரத்தால், உடையால், உணர்வால்... இப்படி பல வேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் அந்த வேறுபாடுகளைத் தாண்டி "இந்தியர்" என்கிற உணர்வால் ஒன்றுபட்டு இருப்பதையே இந்த "இந்திய இறையாண்மை" சுட்டுகிறது.

௩. நம்மில் பலருக்கு இது தெரிவதில்லை, புரிவதில்லை என்பது வேறு விஷயம். குறிப்பாய் நம்முடைய அரசியல்வாதிகளுக்கு.... இது என்ன அப்படின்னே தெரியாது. இது புரிந்திருந்தால் நம்மை சாதி வாரியாகத் துண்டாட மாட்டார்கள். இங்கே சாதீயப் பெயர்ச் சொல்லித்தான் பலக் கட்சிகள் தங்கள் பிழைப்பை நடத்துகின்றன. இப்போ சொல்லுங்கள் இவர்கள் இந்திய இறையாண்மைக்கு உகந்தவர்களா..? இல்லை எதிரானவர்களா..?

௪. இந்த தேசம் இவ்வளவு இழிவுகளை சந்திக்கக் காரணம், இந்த தேசத்தின் "குடிமக்களின் சிந்திக்காமையே" தவிர வேறெந்தக் காரணமும் இல்லை. நம்மிடையே இருக்கும்... சின்னச் சின்ன பொறுப்பற்றத்தனமும், அலட்சியமும்தான். நம்முடைய அத்தனை அவலங்களுக்கும் காரணம். அவனை விட நான் உயர்வானவனாக தன்னைக் காட்டிக் கொள்ளச் செய்கிற முனைப்பில்தான் நம்மை நாம் இழிவுப்படுத்திக் கொள்கிறோம்.

௫. வீட்டின் குப்பையை வீதியில் வீசுவதில் தொடங்கி, குடிநீரை பயன்படுத்த தெரியாத அறியாமையில் இருந்து... எச்சில் துப்புவது முதல்...சாக்கடை மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் வரை எதிர்வீட்டுக்காரன்தான் நம்முடைய அதிக பட்ச இலக்காக இருக்கிறான். அல்லது பக்கத்து வீட்டுக்காரன். நம்முடைய சுகாதாரம், சுத்தம், தேவைகள், அத்தியாவசங்கள் யாவும் நமது வீட்டைச் சார்ந்ததாக மட்டுமே கருதுகிறோம். அது நமது நாட்டைச் சார்ந்தது என்கிற அறிவை நாம் இன்னும் பெறவில்லை. எத்தனை படித்தென்ன...??? நம்மிடம் அடிப்படை அறிவு இல்லாத போது...!!!!

௬. இந்தியனாக இருக்கிற ஒருவன் தமிழனாக, கன்னடனாக, தெலுங்கனாக, மலையாளியாக, பஞ்சாபியாக, குசராத்தியாக, மற்றும் மராட்டியனாக இருக்க நினைக்கிற போது, இந்திய இறையாண்மை நிச்சயம் பாதிக்கப் படும். அப்படி பாதித்து விடக் கூடாது என்கிற கவனமும், கவலையும் இந்திய அரசாங்கத்தின் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

௭. இதில் மற்ற இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் உலகின் வேறு நாடுகளில் தங்களது வேரினை பதிக்கவில்லை. அப்படி பதிக்காமல் போனது அவர்களது யோகமாக போய்விட்டது. ஆனால், இதில் தமிழன் மட்டும் விதி விளக்களிக்கப் பட்டவனாகிறான். இவனுக்கு உலகின் பல நாடுகளில் வேர் இருக்கிறது. நான் வேர் என சொல்வது, தமிழர்கள் தங்களை அதிகாரப்பூர்வக் குடிகளாக வெளிநாடுகளில் குடியேற்றம் பெற்ற வரலாற்றை. அப்படி ஒரு வரலாறு தமிழனுக்கு "இலங்கை" எனும் என் அண்டைய தேசத்திலும் உண்டு. அதிலும் தமிழ்நாட்டுக்கு அடுத்தப் படியாக, அதிகத் தமிழர்கள் ஒரே இடத்தில் வாழும் நாடாக இலங்கை இருக்கிறது.

௮. இன்றைய இலங்கைப் பிரச்சனைக்கு ஒருத் தமிழன் துடிக்கிறான். ஆனால் ஒரு சிங்களவனோ ( நான் சொல்வது இலங்கைவாழ் சிங்களவன் அல்ல.. ஒரிசாவில் வாழும் சிங்களவன் ) பஞ்சாபியோ, மராட்டியனோ, தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ... எவனும் துடிக்காமல் போனது ஏன்...??? ஏனென்றால் பாதிக்கப்பட்டது அவனது இனம் இல்லை. அதனால் அவன் அமைதிக் காக்கிறான். சரி. நம்முடைய பக்கத்து மாநிலம் தமிழ்நாடு, நமது மொழியின் தாய் தமிழ்... என்கிற உணர்வில் ஆதரவு மட்டுமாவது தருகிறானா என்றால் அதுவும் இல்லை. அவன் நமக்கே தண்ணீர் தர மறுக்கிறான். நம்மிடம் மின்சாரம் பெறுகிறான்.

௯. இப்படி இந்தியாவின் இறையாண்மைக்கெதிராக மாட்டிக் கொண்டு விழிக்கும் ஒரே இனமாக என் தமிழினம் இருக்கிறது. ஒன்று நம் உணர்வுகள் புரிந்து மற்றவர்களும் நமக்கு ஆதரவளித்து இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வியல் உரிமையை பெற்றுத் தர வேண்டும்... அல்லது தமிழனாக நாம் போராடி நம்முடைய உரிமையை பெறவேண்டும். அதற்கு தடையாக இருக்கும் ஒன்றை நாம் இறையாண்மை எனக் கொள்வது எப்படி சாத்தியம்???

௰. எமது விரல் கொண்டு எம் கண்ணை குருடாக்குவது போல இந்திய இறையாண்மைப் பேசும் இந்திய அரசு நமது ஆயுதங்களை கொடுத்து தமிழ் இனம் அழிய உதவுவது இந்திய தமிழனுக்கு எதிரான செயல் இல்லையா..? இந்திய தமிழர்கள் இந்தியாவின் ஒரு முக்கியமான மாநிலமாக இருக்கும் போது, எப்படி அந்த இனத்தை அழிக்க நினைப்பவனுக்கு ஆயுதம் வழங்கியும், படை அனுப்பியும் உதவலாம்...? அவனுக்கு இந்தியாவில் சிவப்புக்கம்பள விரிப்பில் வரவேற்பு எதற்கு..?

௧௧. அப்படி என்றால் இந்தியாவின் இறையாண்மையை மேற்கண்ட வகையில் இந்திய அரசு மீறவில்லையா..? இந்திய அரசு மதிக்காத ஒரு இறையாண்மைக் கொள்கையை,   ஒருத் தமிழன் எப்படி மதிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறீர்கள்..? தமிழன் எதற்காக மதிக்க வேண்டும் சொல்லுங்கள்...??? உங்களால் எங்களுக்கு கிடைக்காத நீதிக்காகவா..? உங்களால் எங்களுக்கு கிடைக்காத தண்ணீருக்காகவா..? நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்த முடியாத மத்திய, மாநில அரசுகள் "இந்திய இறையாண்மையை" மீறியதாக அர்த்தமில்லையா..??


        எனதன்பு பதிவுலக வாசகர்களே, படைப்பாளிகளே, கவிஞர்களே, எழுத்தாளர்களே, சிந்தனைவாதிகளே, சீர்திருத்தவாதிகளே...... கொஞ்சம் நில்லுங்கள். சிந்தியுங்கள். பதில் சொல்லுங்கள்.....

குறைந்த பட்சம் ஒரு மனிதனாய்.....

அதிகப் பட்சம் ஒருத் தமிழனாய்......

உலகின் நதி மூலம் நாம். இப்போது அதன் வேர்கள் புரையோடியப் புண்களால் அழுகத் தொடங்கி விட்டது.
களை எடுப்போமா...? அல்லது நம் காலை எடுப்போமா...?


உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும்....

-தமிழ்க்காதலன்.

Friday, April 1, 2011

"இதயத்துக்குரியவள்...!"


போகாத் துயர் தந்தாய் நீ
போகு முயிர் போகும் வரை
நீங்கா நிழல் நான் உனக்கு
நீடு நல் வளம் காண்.

காடழைத்த சேதி காதில் விழுங்கால்
கண்மணி,- கண்மணி உதிர்க்கட்டும் ஒருதுளி
கடமைக்காய் அன்றி நம் காதலுக்காய்...!
காலம் உடைத்த கலன் மாயும்...

காணலாம் ஞாலன் வகுத்த வுயிர்
வாழ்த்தும் காதல் நின்று வாழ
நின்னை நினைத்த நெஞ்சும் ஆவலில்
தாவி அணைத்தக் கரங்களும் அஞ்சுமோ..?!

மேவித் தழுவும் மேனியில் தீக்கண்டு
மெல்லிய மனம் பாடும் வல்லினம்
கேட்கிறதா என் கண்மணி..! நீர்த்த
வாழ்வில் நீர்க்கு முயிர் தாங்கும்

நின் நினைவுகள் அடைத்து அடைக்காக்கும்
அதிர்வுகள் இன்னொரு சென்மத்துக்கு எனை
அழைக்கும் இரகசியம் பிறவிக்கு பிறவி
பின்பற்றும் நின்னடி, நில்லடி..! எனக்கு

பதில் சொல்லடி..!! பாதிவுயிர் பறித்தவளே...
மீதியை மீதமின்றி பறிக்க மனமன்றி
பாதியில் எனை விட்டு பரிதவிக்க
ஆவியுள் அடங்கி ஆட்டுவிப்பவள் நீ.

 

வாழும் நாளெல்லாம் வாளாயிருக்க யான்
வாழாதிருந்து பழக்கமில்லை...! கேள்,- சித்திரமே
சிந்தனை முழுக்க சிம்மாசனமிட்டு சிறகை
ஓடித்து பறக்க சொல்பவள் நீ.

ஆன்மாவின் அதிர்வுகளில் அலைபாயும் நின்
நினைவுகள் அதிர வைக்கும் பிறவிகள்
அடுத்தடுத்து தொடுக்கும் அம்புகளாய் தொடர்ந்து
இதயம் கிழித்த உதிரம் உனைச்சேரும்..!

விடுக்கும் எண்ணமில்லை எடுக்கும் பிறவிதோரும்
என்னவளே..! இப்போதும் அப்போதும் இனி
எப்போதும் நின்னைத் தொடரும் உறவில்
உயிர்த்திருக்கும் என் காதல்..!,- தனித்தே

 

தவமிருக்கும் உனக்கே வரம் கேட்கும்..!
உதறினும் உதறா உறவிது என்பதறிய
எத்தனை சென்மமோ நானறியேன் இனியவளே...!!
இன்னும் நீ என் இதயத்துக்குரியவள்.