Saturday, September 26, 2009

"மனித மதம்..!"

















மனிதா உன்னை
பிடித்திருக்கும்
மதமும் …
நீ சார்ந்திருக்கும்
மதமும் …
உன்னையும் உன்
சக மனிதனையும்
சாகடிக்குமானால்
பிறர் மனதை
நோகடிக்குமானால்
நீயும் உன்
மதமும் எதற்கு?

உனக்குள்
மதத்தின் பெயரால்
பிடித்திருக்கும் மதத்தை
நீக்கிவிட்டு
நிசமாய் நீ
ஒரு மனிதனையாவது
நேசித்து பார் !
உன் கண்களுக்கு
இறைவன் தெரிவான் ..!
உண்மையாய் ஒரு முறையாவது
இறைவனை தேடி பார் …!
உன் கண்களுக்கு
மனிதன் தெரிவான் …!!

உனக்கு உன்னையும்
புரியாமல் நீ
சார்ந்திருக்கும்
மதத்தையும் புரியாமல்
புதிதாய் பிறந்த குழந்தை
நடக்க முயற்சித்து
தடுமாறி விழுவது போல்
உன் செயல்களால் மதமும்
மதத்தின் குறைபாடுகளால்
நீயும் தடுமாறி
இரண்டுமே தவறோ
என்ற தோற்றத்தை
ஏற்படுத்திவிடுகிறீர்கள் .

ஒவ்வொரு மனிதனும்
மதம் சொல்லும்
எல்லா விசயங்களையும்
எடுத்துக் கொள்ளாவிட்டாலும்
ஒரு வழியையாவது
பின்பற்றினால் …
இந்த பூமியை விட
சொர்க்கம் என்று
சொல்லி கொள்ள
வேறு இடம் இருக்காது .

உங்களால் பின்பற்ற
முடியாத மதமும்
மதத்தை பின் பற்றாத
நீங்களும்
இந்த பூமியில் வாழ
தகுதியற்றவர்கள்.
உங்கள் பிறப்பு இந்த
மண் மீது நிகழ்ந்த
மாபெரும் தவறு .
உங்களால்தான்
உங்கள் சுய நலன்களால்தான்
இந்த பூமிக்கு கேடு .

Sunday, September 13, 2009

"திகைப்பு..!"


கண்மணி உனைக்
காணும் போதெல்லாம்
எனக்குள் ஏற்படும் மாற்றம்
பௌதீக மாற்றமா ?
வேதியியல் மாற்றமா ?
இரசவாத வித்தையா ?
நான் நானாக இருப்பதால்
பௌதீக மாற்றம் ..!
நான் நீயாக மாறுவதால்
வேதியியல் மாற்றம் ..!
நான் இங்கேயே இருந்தும்
எங்கேயோ பறப்பதால்
இரசவாத வித்தை என …
எனக்குள் மாற்றங்கள் நிகழ்த்தி
இயற்கையின் முப்பரிமாணம்
காட்டும் நீ யார் ?!!.

ஆன்ம காதல்..!





உன்னை காதலிக்காதவன்
கடவுளாக இருக்க முடியாது ..!!
உன்னை காதலித்தவன்
மனிதனாக இருக்க முடியாது..!
சொல்லடி பெண்ணே …
நான் யார் ??

நினைவுகள் குவித்து
ஒரே நினைவில் நின்றால் …
தியானம் …
என்கிறது சித்தாந்தம் .
ஒரே நினைவில் நிலைத்து போனால்
பைத்தியம் …
என்கிறது மருத்துவம் .
சொல்லடி பெண்ணே
உன் நினைவில்
குவிந்து கிடக்கும்
என் ஆன்மாவின்
நிலை என்ன ..??!

Tuesday, September 08, 2009

மலர்..!


மலரில் நீயும்
மனத்தால் நானும் அழகு .!
உன்னைவிட
என் மனம் அழகு ..!
பெண்ணைவிட
நீ அழகு ..!
தாய்ச் செடியில் இருந்து உன்னையும்
தாய் மடியிலிருந்து ஒரு ஆணையும்
சுலபமாய் பறித்து விடுகிறாள் ...!
சுயநலமாய் பிரித்து விடுகிறாள் ..!!
பெண்ணை விட நீ மென்மை…
உன்னை விட என் மனம் மென்மை…
உன்னை பறிப்பது போலவே ,
என் மனதையும்
எளிதாய் பறித்து போனாள் .

அழகாய் இருக்கும்வரை
சூடி அழகு பார்த்து …
உன்னை நசுக்கி வீசுவது போலவே …
என் மனதையும் ….!!!?


நறுக்கும்போதும் சரி
நசுக்கும்போதும் சரி
அவள் யோசிப்பதே இல்லை .
உனக்கும் …. எனக்கும்
வலிக்கும் என்று …!

முள்வேலி கொண்ட உன்னை
முன்பின் யோசிக்காமல் பறித்தாள் .
வேலி இல்லாத என் மனதை
வெவ்வேறாய் பிரித்தாள்.


மணம் கொண்ட உன் இதழில்
காலம் தந்த பரிசு …
பனிநீர்த் துளி ..!
மனம் கொண்ட என் இதழில்
காதல் தந்த பரிசு
கண்ணீர்த்துளி …!!!

Monday, September 07, 2009

எனக்குள் நான் !

என் நினைவுகள் தின்று செரித்து
என் உணர்வுகள் கொன்று குவித்து
என் சிந்தனையை சிதையாக்கி
தீ மூட்டும் உன் நினைவுகள் ….
என் கண்கள் சிந்தும் கண்ணீரை
என் பார்வை கக்கும் கனலே
பற்றி எரிக்கிறது …!
உன் உணர்வு தரும் வெம்மையால் .
கண்ணீரோடு காணாமல்போனது
என் கனவுகளும்தான் …!?
ஏந்திழையே !
என்னை கொன்றிருந்தாலும்
உன்னை மன்னித்திருப்பேன் .
என் உணர்வுகளை கொன்றிருக்கிறாய் …
என் செய்வேன்.!?

முன்பெல்லாம் …
விழி மூடும்போது
விதி வந்து சிரித்தது .
இப்போதெல்லாம் ….
நீ வந்து சிரிக்கிறாய் …!
சொல்லடி பெண்ணே ..!
நான் எதை நம்ப ???
உன்னையா …!
விதியையா …!!


மின்னலுக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை ..!
ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில்
உயிர் குடித்துவிடுகிறீர்கள் ..!?

மின்னலுக்கும் உனக்கும் ஒரு வேற்றுமை ..
மின்னல் உயிர் குடிக்கிறது …
வலிப்பதில்லை ..!
நீ உயிரோடு மனதையும் கொல்கிறாய்.
வலிக்கிறது ..!
தறிகெட்டு ஓடும் என்
தவிப்புகளை
தவிடுபொடியாக்குகிறது
உன் காந்தவிழிப் பார்வை .
என் எண்ணங்களில்
தீ மூட்டி ,
என்னையே எரிக்கிறது
உன் மோனப்புன்னகை .
என் இதயம் பற்றி எரிந்தாலும்
கவலை படமாட்டேன் .
அது சுற்றி அல்லவா
வருகிறது …உன்னை ..!

உன் இமை மூடும்போதெல்லாம்
என் இதய தேசத்தில் மின்வெட்டு .


எனக்கு சொந்தம் என்று
சொல்லிக்கொண்ட
என்னுடையவைகளை ..
உனக்கு சொந்தமாக்கிகொண்டாய்.
உன்விழி பின்பற்றி என் இமை மூடுகிறது.

நீ
உறங்குகிறாய்.
நான் விழித்திருக்கிறேன்.
உன் இரவுகள் என் பகல்கள்.

உன் உள்சுவாசம்
என் உயிர் பற்றி இழுக்கிறது

உன் வெளி சுவாசம்
என் மனம் தொட்டு வருடுகிறது .
இந்த இழுபரியில்தான்
என் இதயம் துடிக்கிறதா பெண்ணே !?
உண்மை சொல் .!

நீ பசியில் வயிறு குழைகிறாய்.
நான் பரிதவித்து உயிர் குழைகிறேன்.
நீ உணவு உண்ணுகிறாய்.
நான் கை கழுவுகிறேன்.

என் ஒரு நாளை
உன் முழு நாளாக்கி கொள்கிறாய்.
ஒவ்வொரு நாளும் இப்படியே ...
சொல் !
நான் நானாவது எப்போது ?

என் வாழ்வு தேனாவது எப்போது ?

Friday, September 04, 2009

"நிசம்"

நிலவின் நிசத்தைக் கூட
கறைகளாகவே..
பார்த்துவிட்டவர்களுக்கு…
மலரின் -
"மகரந்தங்கள்"
தூசுகலாகத்தான்
தெரியும்.