Wednesday, October 12, 2011

”உள் ஒளி”






செதுக்கும் வரை பொருத்துக் கொள்
சற்றே பிணமாய் உணர்வற்று இரு
சாந்தம் கொண்ட கல்லென சாய்ந்து கிட
மனிதம் உன் புனிதம் உணரும்.....


மொழிகளை விழுங்கும் மௌனத்தை விழுங்கு
வார்த்தைகளின் சூட்சுமம் உணர்ந்து பேசு
பேச்சைக் குறைத்து மூச்சை நிறை
பேதங்கள் யாவும் புரிந்து விடும்....


அறிவற்ற அறிவை அறி அறிந்தபின்
அதிலேயே நிலைத்து நில் அறிவின்
அறியாமை புலப்பட சிறுமைகள் விலகும்
ஆழ்ந்த உணர்வில் அறிவு புலப்படும்...


குழைந்த மனம் குழைந்தபின் இறுகட்டும்
குறைமதி கொண்ட வாழ்வுக்காய் உருகட்டும்
வளர்மதி வளர வளரும் மதியை கவனி
அறிவெது ஆணவமெது இனம் காண்


உணர்வது யாவும் உண்மை என்றறி
உண்மைகள் தவிர்த்த யாவும் எறி
உள்ளுக்குள் உன்னை உனக்குள் எரி
உயர்ந்த பொருளாய் உலகில் திரி