Wednesday, January 08, 2014

கோலாட்ட பாடல்


அலைய அலைய அலை யடிக்குது
வலைய வலைய வாருங்கடி
வளையல் சத்தம் வானம் பிளக்கணும்
குலுங்கி குலுங்கி ஆடுங்கடி

பாட்டனும் பாட்டியும் கூடிக் களிச்ச
வாழ்க்கையை பாடுவோம் வாருங்கடி
காட்டுல மேட்டுல வீட்டில எல்லாம்
கல்லில் வடிச்சத பாடுங்கடி

இட்டதும் தொட்டதும் பொன்னானது இங்கே
பொட்டல் வெளியான பூமியில
இடுப்பு வளைஞ்சி மடிப்பு விழவே
உழைச்ச உழைப்ப பாடுங்கடி

ஆனமட்டும் இங்கே ஆணான ஆளெல்லாம்
ஆறு குளம்வெட்டி யானதிங்கே
நீரு நிலமெல்லாம் பாய்ஞ்சி வரவே
நித்த முழைச்சத பாடுங்கடி

உச்சி வெயிலுல சேத்து நிலத்துல
நாத்து நடுங்கதை பாடுங்கடி
கட்டு நெல்லுக்கட்டி களத்து மேட்டுல
கட்டி அடிச்சத பாடுங்கடி

மாட்டு வண்டியும் கூண்டு வண்டியும்
மண்ணில் பறந்தத பாடுங்கடி
மாமன்னன் ஆண்ட மண்ணும் இதுவென
மார்தட்டி குலுங்கி ஆடுங்கடி

சோழனும் சேரனும் பாண்டியனும் வந்து
சொக்கிப் போகவே ஆடுங்கடி
புலியும் வில்லும் மீனும் பறந்த
புண்ணிய பூமிய போற்றுங்கடி

விளைஞ்ச நெல்லில் விதை எடுத்து
விளைய வச்சத பாடுங்கடி
இன்று விளைஞ்சதுல விதையும் இல்லை
விதிய நொந்து ஆடுங்கடி

பூத்து குலுங்கிய பூமியில இன்று
வாட்டி வதைக்குது வறுமையடி
நம்ம வாட்டம் தீர்க்கவே வழியிருக்கா
பாட்டனை கூப்பிட்டு கேளுங்கடி

காட்டை அழிச்சோம் மாட்டை அழிச்சோம்
கருவ காட்டை பாருங்கடி
ஒருநாதி யில்லா இந்த தேசத்துல
வந்து நாம பொறந்தோம் பாடுங்கடி

கலைகள் வளர்ந்த காலமும் உண்டு
சிலைகள் காட்டியே ஆடுங்கடி
அள்ள முடியா வெள்ள மதிலே
அணைய கட்டினோம் பாருங்கடி

குள்ள நரிகளும் கூடி இங்குஒரு
கூட்டாட்சி  நடத்த வாருதிங்கே
கள்ளர் எல்லாம் கலந்து பேசி 
கட்சி நடத்துது பாருங்கடி

குறிஞ்சி முல்லை மருதம் எல்லாம்
காணாம போனத பாடுங்கடி
கரும்பு காய்ச்சி வெல்லம் எடுத்த
காலமும் இப்போ போனதெங்கே..?

இரும்பும் ஈயமும் உறுதி இழந்த
இந்த காலத்தை பாடுங்கடி
அடுக்கு மாடி கட்டிமுடிச்சு
ஆனது என்ன கேளுங்கடி...?

சொத்து சுகத்தை கட்டிக் காக்கவே
சொந்தங்கள் வெறுத்து போனதிப்போ
பெத்த தாயிக்கே காப்பகம் இங்கே
கட்டிக் கிடக்குது பாருங்கடி

கவரு மெண்டு காசு கொடுத்து
காப்பாத்தும் கதைய கேளுங்கடி
நேத்து இருந்த பண்பாடு எல்லாம்
காற்றில் பறக்குது பாருங்கடி

பூத்து உதிரும் பிஞ்சுகளே இங்கு
வேர்களை வெறுத்த நியாயமென்ன...?
காத்து வளர்த்த நன்றியும் நமக்கு
மனசில் நிக்காம போனதென்ன...?

தமிழன் தனித்த குணமும் இழந்த
தரித் திரத்த பாடுங்கடி
தலைநிமிரும் காலமும் எப்போ...?
தலை முறையை கேளுங்கடி.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய கேள்விகளுடன் வரிகள் அருமை...

வாழ்த்துக்கள்...

தமிழ்க்காதலன் said...

நன்றி தோழர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே, மிக அருமையான அவதானிப்பு உங்களுக்கு. இரசனைக்கு எமது வாழ்த்தும் அன்பும்.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

Unknown said...

தொடரட்டும் உங்கள் அறப்பணி...!

sathya said...

பாட்டு தாளம் போட வைக்கிறது

sathya said...

பாட்டு தாளம் போட வைக்கிறது

காயத்ரி வைத்தியநாதன் said...

//உச்சி வெயிலுல சேத்து நிலத்துல
நாத்து நடுங்கதை பாடுங்கடி
கட்டு நெல்லுக்கட்டி களத்து மேட்டுல
கட்டி அடிச்சத பாடுங்கடி// கனவாகிப்போகாதிருக்க வழிவகுக்கட்டும் இப்பாடல்வரிகள்..

இவை சிறப்பென எடுத்துக்கூறமுடியாதவகையில் கவிஞனின் ஒவ்வொரு வரிகளோடு, குழந்தைகளின் கோலாட்ட சப்தமும் ஒலித்து உறங்கும் உணர்வுகளை தட்டியெழுப்பட்டும்..