Tuesday, August 30, 2011

"நவரசம்...!!"




(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி)


இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம்
இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்
மலரும் மலர் காணும் "உவகை"
மழலை முகம் பார்க்க..!


தனித்த தொருவிடத்தே தவம் கிடந்து
இளைத்த மேனி இன்னும் உருக
மனம் நிறைந்தவன் வருகைக்கு உருகும்
கன்னியின் கன்னக்குழி "நகை..!"


அகம் புறமதில் அகத்தில் ஆழ்ந்தாரோடு
புறவியல் மெச்சுதலில் அளக்கப் பெரும்
அகடு முகட்டில் வந்து விழும்
உலகின் "இளிவரல்" உண்மையாய்..!


உற்றவனைத் தொட்டுவிடத் துடிக்கும் உள்ளம்
உரிய வேளைக்கு முன்னிகழும் சந்திப்பில்
உள்ளே உதறும் உணர்வுகளில் ஒட்டிக்கிடக்கும்
ஊருக்கு முன்னான "அச்சம்...!"


சாதுக்களில் சாந்தம் குடியேற சாற்றும்
சாதுவின் சாது சோதிக்க உள்ளில்
சங்கடமாக விளைந்த உணர்வில்,- நாடும்
காடும் "மருட்கை" கொள்ளும்..!


ஆழியின் வாழ்வில் ஊழ்வினையின் வெகுளி
உள்ளத்துள் புகவும் அகம் அழுக்காம்
ஆயினும் வலியது விதி கொடியது
அதனினும் கொடிது "வெகுளி...!"


கருச்சுமந்த உருச்சுமந்த உயிர் ஒருநாள்
மதிச்சுமந்த மன்னர்முன் தன்னொளி வீச
ஆன்றோர் அகம் குளிர சான்றோனாக்க
பெற்றவளின் உள்ளத்தில் "பெருமிதம்...!"


ஆன்மாவின் ஆழத்தில் விழுந்தக் காயங்களில்
ஆறெனப் பெருக்கும் நீரென கண்ணீர்
ஆழியில் உருகும் பனிநீரென கலக்கும்
ஆழ்துயர் வருத்த "அழுகை..!"


வாழுங்கால் வகைத் தொகை அறிந்து
வழுவாமல் நின்ற பேர்க்கு நிலைக்கும்
மண்ணுலகும் விண்ணுலகும் இன்பமும் வீடும்
வென்ற மேன்மையான "அமைதி...!"
*************************************************


தனிப்பாடல்:


நகைக்கும் உளம் கருவுற உற்றபின்
வலிவந்து துடிக்க பீறிடும் அழுகை
இளிவரல் பேசும் மனம் மரண 
அச்சத்தில் மருட்கையோடு தாதியை 
வெகுளித் தாமதம் தவிர்க்க,-பிறந்தது
"பிள்ளைக்"கேட்க பெருமிதம் சொல்ல
உவகை கொள்ளும் உறவில் அமைதி.

8 comments:

rajamelaiyur said...

Tasteful kavithai

rajamelaiyur said...

Super kavithai

பிரேமி said...

என்ன கவிஞரே...கம்பனைத் தாண்டிப்போக எண்ணமோ? கவிதையில் கம்பனைக் காண்கின்றேன்..... அருமை....:-)

Chitra said...

WOW!!!! ஒவ்வொரு வரிகளையும் மிகவும் ரசித்தேன். உங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இதற்கு முதலிடம்.

sathishsangkavi.blogspot.com said...

..வாழுங்கால் வகைத் தொகை அறிந்து
வழுவாமல் நின்ற பேர்க்கு நிலைக்கும்
மண்ணுலகும் விண்ணுலகும் இன்பமும் வீடும்
வென்ற மேன்மையான "அமைதி...!"..

அழகான வரிகள்...

ISR Selvakumar said...

வெகுநாட்கள் கழித்து,
இனிய தமிழில் இனிய கவிதை!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஆன்மாவின் ஆழத்தில் விழுந்தக் காயங்களில்
ஆறெனப் பெருக்கும் நீரென கண்ணீர்
ஆழியில் உருகும் பனிநீரென கலக்கும்
ஆழ்துயர் வருத்த "அழுகை..!"


பிடித்த வரிகள் கவிதை அருமை...

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை நண்பரே.