அண்டப் பெருவெளி யெங்கும் ஆதிமுதல்
ஆயிர மாயிரம் வெளிச்சப் புள்ளிகள்....!!
சுழலும் சூரியனாய்....! விண்மீனாய்..!! புகையும்
கூட்டம் எரிந்து சாம்பலாவது எனைவிரட்டித்தான்.
ஊழிக் காலம் தொட்டே விரட்டும்
முயற்சியில் அவர்களும்., அவர்கள் பேரர்களும்.
அவர்களின் மஞ்சள் வெளிச்சம் எனக்கு
மஞ்சல் நீராட்டு...!!
எனை விரட்டும் வெளிச்சத்தில்.....
அவிழ்ந்து விழும் அவர்கள் அந்தரங்கம்..!!
விலகுவது போல் விலகி விட்டுக்கொடுத்து
விரட்டிப் பிடிப்பது என் "மஞ்சுவிரட்டு..!!"
இப்போதும் நான் பூப்படைந்த பெண்.....!!
எப்போதும் எனை சுற்றும் "கந்தர்வ வெளிச்சம்".
தொட்டு விடத்தான் எப்போதும் துடிக்கும்.
இருண்ட பாழ்வெளியில் இதோ உன் பால்வழி.
தீப் பந்தம் ஏந்தி காலகாலமாய்....
கண்விழித்து தேடும் உன் தேடல் நான்.
என் காலடித் தடம் கூட காணவில்லை
உன் முன்னோர்.., காத்திருக்காதே நீயும்.
பூமியின் அந்தரங்கம் அரங்கேறும் என்னில்...!
உயிர்த் தேடலின் முடிவும் தொடக்கமும்..
என்னில்...! மனித சிந்தனைகள் மெருகேறும்
அர்த்த மண்டபம் நான்..!! கூடிக் குலாவும்
உயிர்கள் யாவும் விரும்பும் என்பொழுதுகள்.
என் குளத்தில் பூக்கும் ஆன்மாவின்....
அந்தரங்கப் பூக்கள்..!! என் வீணையில்
உங்கள் அபூர்வ ராகங்கள்...!!
உங்களின் தாவணித் தழுவல்கள்.., இமைத்
தேடும் கனவுகள்..., இரகசிய பேச்சுக்கள்
யாவும் என்மடியில்..!! உங்களின் இரகசிய
அம்பலம் நான்...!!! குறுகுறுப்புகள்.., கிறுகிறுப்புகள்
கிசுகிசுக்கள் பதியும் குறுந்தகடு நான்..!!
உங்கள் இன்ப உணர்ச்சியில் வெட்கி
குனிவது நான்..!! வெளிச்சம் தராது
தகிக்கும் உங்கள் உடல் வெப்பம்
விரக தாபம் விளக்கும் எனக்கு.
பாவம் செய்யா மனித வாழ்வு ...
"நித்திரை" ..! நிகழ்வது என் மடியில்.
மாலைப் பொழுதுகள் எனக்கு மாமன்முறை...!
வெளிச்சம் கொண்டு வரும் விடியல்கள்
என் பங்காளிகள்...!! வெளியெங்கும் நீக்கமற
நிறைந்த "கடவுள்" நான்..! விரட்ட முடியா
வினோதம் நான்..!
எப்போதும் இருப்பது நான் மட்டுமே.
எல்லைகளற்று விரிந்து கிடப்பது நான்..!
நீங்கள் தேடும் "கடவுள்" தேடும் பொருள் நான்..!!
உங்கள் சிந்தனைக் கெட்டா "சூனியம்"...
நான்...!!
நான் "இருட்டு".
..................................................,
நீ.....???.
*************************************
*************************************
4 comments:
உங்கள் கவிதை எல்லாம் நல்லா இருக்குதுங்க.... ஆனால் எளிதில் கமென்ட் போட முடியாதபடி உங்கள் ப்லாக் சிஸ்டம் தடுக்குதுங்க.... கொஞ்சம் செக் பண்ணுங்க. நன்றி.
உங்கள் கவிதையின் ஆழம் நிறைய யோசிக்கத் தூண்டுகிறது. வார்த்தைகள் கோர்க்கப் படும் விதம் அருமை. உவமைகள் மிக அருமையாக கையாளுகிறீர்கள். ஒரு தகிப்பை உங்கள் வரிகளில் உணர முடிகிறது. நல்லத் தமிழில் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
# என் குளத்தில் பூக்கும் ஆன்மாவின்...
அந்தரங்கப் பூக்கள்..!! என் வீணையில்
உங்கள் அபூர்வ ராகங்கள்...!!
# பாவம் செய்யா மனித வாழ்வு ...
"நித்திரை" ..! நிகழ்வது என் மடியில்.
# மாலைப் பொழுதுகள் எனக்கு மாமன்முறை...!
வெளிச்சம் கொண்டு வரும் விடியல்கள்
என் பங்காளிகள்...!! வெளியெங்கும் நீக்கமற
நிறைந்த "கடவுள்" நான்..!
இந்த இடங்களில் அசத்தலாக நிற்கிறீர்கள்.
நன்றி.
தங்களைப் போன்றோரின் நல்லாதரவு ஒரு நல்ல எழுத்தாளனை இன்னொரு பரிணாமத்துக்கு இட்டுச் செல்லும். வாசகன் என்பவன் எழுத்தாளனின் முதுகெலும்பு. எழுத்தின் சுவாசம். எழுத்தாளானின் மூன்றாம் கை. தொடருங்கள் உங்கள் ஆதரவை.
வாங்க சித்ரா அக்கா.., உங்கள் கருத்துக்கள் வரவேர்கிறேன்.
Post a Comment