Tuesday, November 10, 2009

"நினைவில் நீ..!"

நீ கால்தடம் பதித்த வழிகளிலெல்லாம்
என் நினைவுகள் ஒற்றி நகல் எடுக்கிறேன்.
நினைவு சுழல்கள் என் நெஞ்சம் அழுத்த
நிலைதடுமாறுது என் இரத்த ஓட்டம் .
எனக்கு மட்டுமல்ல….
என் போன்ற… சக நண்பர்களுக்கும்தான் தோழி.
கனவுபோல் தோன்றுகிறது…
நிகழ்ந்துபோன இறந்தகாலம்…!
இல்லை …இல்லை…!?
அவை இறந்த காலங்கள் இல்லை.
உன்னோடு நாங்கள் வாழ்ந்த காலம்.
சுவாமிநாதன் என்டெர்பிரைசஸ் நிறுவனத்தில்
நான் கால்தடம் பதிக்க, எனக்கு
வழித்தடம் வகுத்தவள்.
அந்த நன்றியுணர்ச்சி என் நெஞ்சம் நிறைக்க …
கண்களில் குளம் கட்டுகிறது …கண்ணீர் !
அணைபோட யாருமில்லாததால் ….அந்த
“அன்பு” வெள்ளம் கரை மீறுகிறது.
நினைத்துப் பார்க்கிறேன் !
நீ நிகழ்த்திய அதிசய மாற்றங்கள் …
எத்தனை …எத்தனை …!

எவருக்கும் திறக்காத “இரும்புக்கதவு”
உனக்கு மட்டும் “உடனே” திறந்தது.
பணியாளர்களுக்காய் … நீ
புரிந்த துணிகர பணிகள் பாராட்டுதலுக்குரியவை.
பின் வாங்காத உன் “கம்பீரம்” …எல்லாராலும்
பின்பற்ற படவேண்டியவை.

மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும்
“மகத்துவம்” உனக்கு இறைவன் கொடுத்த வரம்.
பனிமலர் பார்த்திருக்கிறேன் …!
“பணிமலர்” இப்போதுதான் பார்க்கிறேன்.
நிறைவு செய்யும்வரை …
நீ விழி மூடாமல் உழைக்கும் உழைப்பு ..
எதையும் சந்திக்கும் துணிச்சல் …
மறக்க முடியுமா ?...

உன்னைப்போல் ஒருவர்
இனி வரலாம் ?!
உன் பணிகள் …செய்வது அரிது !
எத்தனை துயரங்கள் தாங்கி …
இத்தனை உயரம் சென்றிருக்கிறாய்.

விழிகளில் வழியும் உன் துயரங்கள் மறைத்து
முன் நிற்பவர் குறை கேட்கும் …
குறை தீர்க்கும் …
நல்ல உள்ளம் ….எல்லோர்க்கும் வாய்க்காது.

முகத்துக்கு முன்னால் புகழ்ந்தவர்கள்,
முதுகுக்கு பின்னால் இகழ்ந்தவர்கள்,
எல்லோருக்கும் நன்மை செய்தாய்.
பிறரின் உயர்வுக்கு வழிவகுத்தாய் .
ஒவ்வொருவரின் தனிப்பட்ட குறை நிறைகளை
கவனம் கொண்டு கேட்கும் பக்குவம் …
பாராட்டுதற்குரியது.
பசுமரத்து ஆணியாய் ..
எங்களின் நினைவுகளிலும் ..உணர்வுகளிலும் ..
கலந்து போனாய் ., உள்ளுக்குள்
உறைந்து போனாய்.
ஒரு வகையில் …
“பிரிவு” என்பது …
மனிதனுக்கான இன்னொரு “பரிணாம வளர்ச்சி”!
அந்த வகையில் …உன்
அடுத்த வளர்ச்சி காண ஆவலாய் உள்ளோம்.
எங்களோடு …உறவாடி …
எங்களோடு …உரையாடி …
நீ வாழ்ந்த வாழ்க்கையை …
நாங்கள் இழப்பதை நினைக்கும்போது…
“இந்த நாள் விடியாமல் போயிருக்கலாம்”
எனத் தோன்றுகிறது.

குறையும், நிறையும் நிறைந்த …
கூத்தாடும் குறைகுடங்கள் …
யாவற்றையும் உன் இடுப்பில் சுமந்த ..
இரக்கமுள்ள “கன்னித்தாய்”….!
இரண்டுபக்கம் யோசிக்கும் …”யதார்த்தவாதி ”!
எங்களோடு உன் உணர்வுகளை ,
உணவுகளை பகிர்ந்துகொள்ளும் “பதார்த்தவாதி”!
நம்முடைய புலங்கள் மாறலாம் ,
நினைவுகள் மாறாது .
உணர்வுகள் மாறாது .
உன்னோடு நாங்களும் …,
எங்களோடு நீயும் …,
இணைபிரியா தண்டவாளமாய் …
எப்போதும் வாழ்ந்திருப்போம் ,
எல்லோரும் சேர்ந்திருப்போம் ,
இனி வருங்காலம் …
இனிமையும், வளமையும் பெற்று வாழ …
இறையருளட்டும்.
என்றும் நட்புடன்,

Wednesday, October 21, 2009

"மருதோன்றி...! "


என்னை கவிஞனாக்கினாய் …!
உன்னை கவிதையாக்கினாய்…!
என் கவிதைக்கு
நீயே கருப்பொருளானாய்.
என்னை கனவு காண செய்தாய் …
என் விழிகளில் கனவானாய்…!
கனவிலும் நீயே காட்சித் தந்தாய்.
என்னை பாடச் சொன்னாய் …
நான் பாடும் பாடலானாய் …!
என் பாட்டிற்கு பதமானாய் .

இப்படி -
நான் பாடும் கருப்பொருளும் …
நான் காணும் பருப்பொருளும்
நீயானாய் …!

மாயா …
விளக்கம் காண முடியா வார்த்தை.
விளங்கி விட்டது இப்போது .

நிற்கிறேன் …!
என் நிழலாய் சிரிக்கிறாய் …!
நடக்கிறேன் …!
என் அசைவுகளை – உன்
இசைவுகளாக்கி நகைக்கிறாய் !
சிரிக்கிறேன் ..!
சிரிப்பின் எதிரொலியாய்
என்னை சிதறடிக்கிறாய் …!
சிந்திக்கிறேன் ..
உன் சிந்தனையே நான்தானே …
நானில்லாத சிந்தனை உனக்கேது? -என
என்னை நிந்திக்கிறாய் .

நிதானமாய் …
நித்திரைக்கொள்கிறேன்
என் இரவானாய் …
என் இரவுகளின் உறவானாய் …!
விடியலாய் வந்து என்
விழி திறக்கிறாய் .
என் பகலானாய் …!
என் பகல்களின் பலமானாய் …!

நினைவுகளை நிழற்படம் எடுத்து
மனம் என்றாய் …!
எனக்குள் வெட்கம் என்னைத் தின்ன …
நினைவுகளை திரட்ட முயல ...
மனசாட்சியாய் மாறி எனைக் கொன்றாய் !

என் நினைவுகளை நீ படம் காட்ட
நிர்வாணமாகிறேன் நான் .
என்னை மறைத்துக்கொள்ள
என்னிடம் எதுவும் இல்லை.
என் எண்ணங்களையும் ஊடறுத்து ..
உன்னையே முன்னிறுத்தி …
என்னை வெற்றிக்கொண்டாய் …!
ஏன் என்று கேட்டால் …
உன் வெற்றியே நான் என்றாய் …!

சிந்தனைக்குள் உன்னை
சிறை பிடிக்க முயல்கிறேன்
என்ன விந்தை !
என் சித்தத்தை… நீ
சிறை பிடித்து …
முத்தத்தால் …
முகம் துடைக்கிறாய் …!
என் சிந்தனை குதியாட்டம் போடுகிறது .
நீயோ …!
என் சிந்தனைக்குள்
குத்தாட்டம் போடுகிறாய் .

கடைசி ஆயுதமாய் …என்
கர்வம் கையில் எடுக்கிறேன் .
உன்னைக் கட்டுப்படுத்த …!
ஒரு கண்ணசைவில் …
என் கர்வம் பிடித்தாய் .
உன் கட்டழகால் …
என் கர்வம் மிதித்தாய் …!
கட்டுண்டுபோனது என் கர்வம் .
நிராயுதபாணியாய் …
நிற்கிறேன் …!

கனிவாய்
ஒரு கைக்குழந்தையை
கையிலேந்துவது போல் …
எனை முழுவதும் ஏந்திக் கொண்டாய் …!
செய்வதறியாது … எந்த
செயலும் புரியாது …
உன் விழிகளையே …
வெறித்துப் பார்க்கிறேன் .
வெற்றியின் வெளிச்சப் புள்ளிகள் என்னுள் ..!
உன் கண்களில் ஒழுகும்
காதல் கண்டு கொண்டேன் .

ஒரே ஒரு பார்வை .
என் உயிரின் காதலை
உனக்குள் செலுத்தினேன் …!
சகலமும் என் காலடியில் போட்டுவிட்டு
சரணாகதியடைந்தாய் .

அடிப்பாவி !
என்னிலிருந்த என்னை …
எல்லாவிதத்திலும் வென்றவள் …!
உன்னிலிருந்த உன்னை
உணராமல் போய் விட்டாயே !
என்னிலிருந்த நீ …
என்னைவென்று உன்னை மீட்டெடுத்தாய் …!
இப்போது புரிகிறது …!
காதல்...!

எனக்குள் இருந்த நீ …
உனக்குள் இருந்த நான் …
அதனதன் பகுதி விகுதிகளை …
அதனதன் தொகுதிகளில் …
பத்திரப்படுத்திக் கொண்டன .

முழுமை பெற்ற நிலையில் …
மனம் இலேசாகிறது .
உடல் தூசாகிறது .
என் உயிருக்கு முன்னால் …
இந்த பிரபஞ்சம் புள்ளியாகிறது .

Saturday, October 10, 2009

* அழகு + அவள் = கண்ணீர் ! *உதிரும் உன்
ஒவ்வொரு கண்ணீர் துளியும் …
உன் துயரம் சொல்கிறது ..!

துடைக்கத் துடைக்கத் தொடரும் …
துளிகள் …உன் ..
துயரத்தின் உயரம் சொல்கிறது !
நினைக்க …நினைக்க …இதயம்
கனக்கும் நினைவுகள் ..!உன்
விழிகளில் நிழலாடும் கனவுகள் ..!
விம்மி புடைத்த நாசிகளுக்கு அருகில் ...
விதி வசத்தால் …
விழுந்து கொண்டிருக்கும் ‘நயாகரா ’..!

அழுது பழுத்த கன்னங்கள் ..! அதில்
கண்ணீர் அழுந்த பதித்த உன் எண்ணங்கள் !
வழிந்தோடும் விழி நீரின் வழித்தடம் வழியே…
நீ வாழ்ந்த வாழ்க்கைத் தடம் தெரிகிறது !.
உகுத்து கொண்டிருக்கும் கண்ணீர் வழியே ..
ஊடறுத்து முந்தி தெறிக்கும் ...
உணர்ச்சிகள் புரிகிறது !
சுவாசத் திணறலுக்கு மத்தியில் … உன்
வாச திணறல் தெரிகிறது …!
சுருங்கி விரியும்
நெற்றியின் மத்தியில் …
காலம் தன் கால்தடம் பதித்த
காட்சித் தெரிகிறது !

வரிப் பள்ளங்களா ..! அன்றி …
வாழ்க்கைப் பள்ளங்களா ?
காலம் உனக்குள் வெடித்த
அனுபவப் "பொக்ரான்கள்"…உன்
மௌனம் கிழித்தெறியும்
மகத்தான முயற்சியில் …
தொண்டைக்குள் ஒரு …
தொடர்வண்டி ஓட்டம் தெரிகிறது !
கால வெள்ளம் ஏற்படுத்திய கரைகளை …உன்
கண்ணீர் வெள்ளத்தால் கழுவுகிறாய் …!

கால வெள்ளத்தால் …எழுந்த
கண்ணீர் வெள்ளம் …
கைரேகை கன்னத்தில் பதிய
கரங்களால் நீ துடைத்தெறிவது …?
கடந்த காலத்தையும் ..!
நிகழ்ந்த துயரத்தையும் ..!

விளிம்பு சிவந்து
புடைக்கும் நாசியில் …
விதியை வெல்லும் …
தன்னம்பிக்கை தெரிகிறது ..!
உள்ளக் கிடங்கில் ..
உறைந்து கிடக்கும் ..
உண்மைகளை ….
இறந்த காலம் சேமித்து வைத்த
நினைவு சேமிப்புகளை …
நிகழ் காலம் …
நிழற்படம் காட்டாதிருக்க …
நீ காட்டும் முயற்சி புரிகிறது ! உன்
வாழ்க்கை சுழற்சி புலப்படுகிறது !.

'கண்ணாடி முன் நின்று கொண்டு …
“பிம்பம் காட்டாதே ”..என்பது போல் ’…
மனதுக்கு முன்னால் ...
மண்டி இடுகிறாய் ..!
மன்றாடுகிறாய் ..!
எல்லோருக்கும் முன்னால் …
தலைகுனிய …
எவருக்குத்தான் மனம் துணியும் ?!

அன்பை ...! அன்பிற்காய் ...
சுவாசிக்காத வரை …
நினைப்புக்குள் நிம்மதி என்பது …
"தனி ஈழ 'தமிழ்' போர்தான்" …!

Friday, October 2, 2009

"எட்டா சிகரம்...!"
சுற்றி சுழன்றடிக்கும்
சூறாவளியால் …
நங்கூரம் நகர்ந்து ,
தகர்ந்துபோன
கப்பல் …
கட்டுப்பாடிழந்து
கரை ஒதுங்கும்போது
தரை தட்டி …
தானாய் நிற்ப்பது போல்
வாழ்க்கை சூழலில்
சுழன்றடிக்கும் சூறாவளியால்
ஏற்றமிகு எண்ணங்கள் …
ஏக்கமிகு இலட்சியங்கள் …யாவும்
நிசம் தட்டி நிற்கின்றன .

நினைப்புக்கும் நிசத்துக்கும்
இடையேயான இடைவெளி
ஆணுக்கும் பெண்ணுக்குமான
நட்புக்கும் கற்புக்குமான
இடைவேளிபோல் …
இனம் காண முடியா
மென்மை கொண்டிருப்பதால் …
மனம் அடிக்கடி அலைபாய்கிறது .

நினைப்புக்கும்
நிசத்துக்கும் நடுவே
உயிரை உறைய வைப்பதும்
மனதை சரிய வைப்பதும் …
வாழ்க்கைக்கு வாடிக்கையாகிப்போனது .

நினைப்பை சீர்செய்து ,-என்
நிலையை சரி செய்யும் முன்பே
அடுத்தடுத்து … அடுக்கடுக்காய் …
அலைகழிப்புகள் …
அனுபவ வகுப்புகள் ..!!!
தொடர்ந்து வரும்
வாழ்க்கைத் தொடரில்
தொடர்ச்சியாய் வரும்
தோல்விகள் …!!!
ஒவ்வொரு தோல்வியிலும் …தொடரும்
மட்டுமே ..அனுபவமாகிறது .
தொடர் தோல்விகளுக்கு
முற்றுப்புள்ளி..... ??!!.

தொட்டபெட்டா சிகரம் அளவுக்கு
உயர நினைப்பவனுக்கு
உயரம் மட்டும்தான்
கிட்டவில்லை ..!
தொட்டபெட்டாவை போல்
அடுக்குகளுக்கு குறைவில்லை .
அனுபவ அடுக்குகளுக்கு
குறைவில்லை .
உயரம் மட்டும்
உள்நோக்கிப் போகிறது ..!!!

Thursday, October 1, 2009

"கனவல்ல நிசம்..!"கனவல்ல நிசம் …
கனவல்ல நிசம் …
என் காதல் …!

விழிமூடும் வேளை வந்து
விடியலில் கலைந்து போக
கனவல்ல நிசம் …
என் காதல் …!

கதிரொளி பட்டு
கலைந்து போகும்
பனித்துளியாய்
கலைந்து போக
கனவல்ல நிசம் ...
என் காதல் …!

தொலைதூர பார்வைக்கு
தோன்றி மறையும் ...
கானல் நீர் போல்
மறைந்து போக
கனவல்ல நிசம் ...
என் காதல் ..!

பற்றிக்கொண்ட நெருப்போடு
பறந்து போகும்
கற்பூரம் போல்
கரைந்து போக
கனவல்ல நிசம் …
என் காதல் ..!

வானில் வர்ணம் காட்டி வளைந்து
வானவில்லாய் தொலைந்து போக
கனவல்ல நிசம் …
என் காதல் …!

பாய்பொருள் மேல் மிதக்கும்
பருப்பொருள் எடை குறையுமாம் …!
கண்ணீரில் மிதக்கும் என்
இதயம் கனக்கிறதே …!
கனவல்ல நிசம் …
என் காதல் ...!!!

"அதிர்ச்சி..!"


உதிரம் உறைய வைத்து விட்டு
உணர்ச்சிகள் மட்டும்
உடலெங்கும் ஓடவிட்டு
நரம்புகள் தகர்த்தெறிந்து ,-என்
எலும்புகள் உடைத்தெறியும்
உன் பிம்பம் …
விழுந்த என் விழித்திரை
உணர்ச்சி கடத்தா பொருளாய்
உறைந்துபோக …
மின்னல் தாக்கிய மரமாய் ..
உன் எண்ணம் தாக்கிய நான்
உறைந்து போகிறேன் .
விண்வெளி இருட்டுக்குள்
விழி இழந்த
சந்திராயன் போல்
எனக்குள் தொடர்பற்று
தொலைந்து போகிறேன் நான் .

Saturday, September 26, 2009

"மனித மதம்..!"

மனிதா உன்னை
பிடித்திருக்கும்
மதமும் …
நீ சார்ந்திருக்கும்
மதமும் …
உன்னையும் உன்
சக மனிதனையும்
சாகடிக்குமானால்
பிறர் மனதை
நோகடிக்குமானால்
நீயும் உன்
மதமும் எதற்கு?

உனக்குள்
மதத்தின் பெயரால்
பிடித்திருக்கும் மதத்தை
நீக்கிவிட்டு
நிசமாய் நீ
ஒரு மனிதனையாவது
நேசித்து பார் !
உன் கண்களுக்கு
இறைவன் தெரிவான் ..!
உண்மையாய் ஒரு முறையாவது
இறைவனை தேடி பார் …!
உன் கண்களுக்கு
மனிதன் தெரிவான் …!!

உனக்கு உன்னையும்
புரியாமல் நீ
சார்ந்திருக்கும்
மதத்தையும் புரியாமல்
புதிதாய் பிறந்த குழந்தை
நடக்க முயற்சித்து
தடுமாறி விழுவது போல்
உன் செயல்களால் மதமும்
மதத்தின் குறைபாடுகளால்
நீயும் தடுமாறி
இரண்டுமே தவறோ
என்ற தோற்றத்தை
ஏற்படுத்திவிடுகிறீர்கள் .

ஒவ்வொரு மனிதனும்
மதம் சொல்லும்
எல்லா விசயங்களையும்
எடுத்துக் கொள்ளாவிட்டாலும்
ஒரு வழியையாவது
பின்பற்றினால் …
இந்த பூமியை விட
சொர்க்கம் என்று
சொல்லி கொள்ள
வேறு இடம் இருக்காது .

உங்களால் பின்பற்ற
முடியாத மதமும்
மதத்தை பின் பற்றாத
நீங்களும்
இந்த பூமியில் வாழ
தகுதியற்றவர்கள்.
உங்கள் பிறப்பு இந்த
மண் மீது நிகழ்ந்த
மாபெரும் தவறு .
உங்களால்தான்
உங்கள் சுய நலன்களால்தான்
இந்த பூமிக்கு கேடு .

Saturday, September 12, 2009

"திகைப்பு..!"


கண்மணி உனைக்
காணும் போதெல்லாம்
எனக்குள் ஏற்படும் மாற்றம்
பௌதீக மாற்றமா ?
வேதியியல் மாற்றமா ?
இரசவாத வித்தையா ?
நான் நானாக இருப்பதால்
பௌதீக மாற்றம் ..!
நான் நீயாக மாறுவதால்
வேதியியல் மாற்றம் ..!
நான் இங்கேயே இருந்தும்
எங்கேயோ பறப்பதால்
இரசவாத வித்தை என …
எனக்குள் மாற்றங்கள் நிகழ்த்தி
இயற்கையின் முப்பரிமாணம்
காட்டும் நீ யார் ?!!.

ஆன்ம காதல்..!

உன்னை காதலிக்காதவன்
கடவுளாக இருக்க முடியாது ..!!
உன்னை காதலித்தவன்
மனிதனாக இருக்க முடியாது..!
சொல்லடி பெண்ணே …
நான் யார் ??

நினைவுகள் குவித்து
ஒரே நினைவில் நின்றால் …
தியானம் …
என்கிறது சித்தாந்தம் .
ஒரே நினைவில் நிலைத்து போனால்
பைத்தியம் …
என்கிறது மருத்துவம் .
சொல்லடி பெண்ணே
உன் நினைவில்
குவிந்து கிடக்கும்
என் ஆன்மாவின்
நிலை என்ன ..??!

Tuesday, September 8, 2009

மலர்..!


மலரில் நீயும்
மனத்தால் நானும் அழகு .!
உன்னைவிட
என் மனம் அழகு ..!
பெண்ணைவிட
நீ அழகு ..!
தாய்ச் செடியில் இருந்து உன்னையும்
தாய் மடியிலிருந்து ஒரு ஆணையும்
சுலபமாய் பறித்து விடுகிறாள் ...!
சுயநலமாய் பிரித்து விடுகிறாள் ..!!
பெண்ணை விட நீ மென்மை…
உன்னை விட என் மனம் மென்மை…
உன்னை பறிப்பது போலவே ,
என் மனதையும்
எளிதாய் பறித்து போனாள் .

அழகாய் இருக்கும்வரை
சூடி அழகு பார்த்து …
உன்னை நசுக்கி வீசுவது போலவே …
என் மனதையும் ….!!!?


நறுக்கும்போதும் சரி
நசுக்கும்போதும் சரி
அவள் யோசிப்பதே இல்லை .
உனக்கும் …. எனக்கும்
வலிக்கும் என்று …!

முள்வேலி கொண்ட உன்னை
முன்பின் யோசிக்காமல் பறித்தாள் .
வேலி இல்லாத என் மனதை
வெவ்வேறாய் பிரித்தாள்.


மணம் கொண்ட உன் இதழில்
காலம் தந்த பரிசு …
பனிநீர்த் துளி ..!
மனம் கொண்ட என் இதழில்
காதல் தந்த பரிசு
கண்ணீர்த்துளி …!!!

Monday, September 7, 2009

எனக்குள் நான் !

என் நினைவுகள் தின்று செரித்து
என் உணர்வுகள் கொன்று குவித்து
என் சிந்தனையை சிதையாக்கி
தீ மூட்டும் உன் நினைவுகள் ….
என் கண்கள் சிந்தும் கண்ணீரை
என் பார்வை கக்கும் கனலே
பற்றி எரிக்கிறது …!
உன் உணர்வு தரும் வெம்மையால் .
கண்ணீரோடு காணாமல்போனது
என் கனவுகளும்தான் …!?
ஏந்திழையே !
என்னை கொன்றிருந்தாலும்
உன்னை மன்னித்திருப்பேன் .
என் உணர்வுகளை கொன்றிருக்கிறாய் …
என் செய்வேன்.!?

முன்பெல்லாம் …
விழி மூடும்போது
விதி வந்து சிரித்தது .
இப்போதெல்லாம் ….
நீ வந்து சிரிக்கிறாய் …!
சொல்லடி பெண்ணே ..!
நான் எதை நம்ப ???
உன்னையா …!
விதியையா …!!


மின்னலுக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை ..!
ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில்
உயிர் குடித்துவிடுகிறீர்கள் ..!?

மின்னலுக்கும் உனக்கும் ஒரு வேற்றுமை ..
மின்னல் உயிர் குடிக்கிறது …
வலிப்பதில்லை ..!
நீ உயிரோடு மனதையும் கொல்கிறாய்.
வலிக்கிறது ..!
தறிகெட்டு ஓடும் என்
தவிப்புகளை
தவிடுபொடியாக்குகிறது
உன் காந்தவிழிப் பார்வை .
என் எண்ணங்களில்
தீ மூட்டி ,
என்னையே எரிக்கிறது
உன் மோனப்புன்னகை .
என் இதயம் பற்றி எரிந்தாலும்
கவலை படமாட்டேன் .
அது சுற்றி அல்லவா
வருகிறது …உன்னை ..!

உன் இமை மூடும்போதெல்லாம்
என் இதய தேசத்தில் மின்வெட்டு .


எனக்கு சொந்தம் என்று
சொல்லிக்கொண்ட
என்னுடையவைகளை ..
உனக்கு சொந்தமாக்கிகொண்டாய்.
உன்விழி பின்பற்றி என் இமை மூடுகிறது.

நீ
உறங்குகிறாய்.
நான் விழித்திருக்கிறேன்.
உன் இரவுகள் என் பகல்கள்.

உன் உள்சுவாசம்
என் உயிர் பற்றி இழுக்கிறது

உன் வெளி சுவாசம்
என் மனம் தொட்டு வருடுகிறது .
இந்த இழுபரியில்தான்
என் இதயம் துடிக்கிறதா பெண்ணே !?
உண்மை சொல் .!

நீ பசியில் வயிறு குழைகிறாய்.
நான் பரிதவித்து உயிர் குழைகிறேன்.
நீ உணவு உண்ணுகிறாய்.
நான் கை கழுவுகிறேன்.

என் ஒரு நாளை
உன் முழு நாளாக்கி கொள்கிறாய்.
ஒவ்வொரு நாளும் இப்படியே ...
சொல் !
நான் நானாவது எப்போது ?

என் வாழ்வு தேனாவது எப்போது ?

Thursday, September 3, 2009

"நிசம்"

நிலவின் நிசத்தைக் கூட
கறைகளாகவே..
பார்த்துவிட்டவர்களுக்கு…
மலரின் -
"மகரந்தங்கள்"
தூசுகலாகத்தான்
தெரியும்.

Monday, August 24, 2009

'நீ'!மனதின்,
மௌன சேமிப்புகளை …
தூரிகையில் மொழி பெயர்த்தேன்!
நீ!!

Sunday, August 23, 2009

"மாற்றம்"

வளர்ந்து கொண்டே இருக்கும்
ஒரு பொருளும்
தேய்ந்து கொண்டே இருக்கும்
ஒரு பொருளும்
இந்த பிரபஞ்சத்தில் இல்லை!!!.

இந்த பிரபஞ்சத்தில்
இல்லாத ஒன்று
என்னிடம் இருக்கிறது -அதுவும் …
வளர்ந்து கொண்டே இருக்கிறது !!

"என் காதல் …!!!”

"புன்னகை!"


எல்லாம் அறிந்தவனாய்
எனை உணர செய்ததும்
எதுவும் அறியாதவனாய்
எனைத் திணற செய்ததும்
கொஞ்சம் கொஞ்சம்
குழம்ப செய்ததும்
கொஞ்சம் கொஞ்சமாய்
நிரம்ப செய்ததும்
நீ காட்டும் மௌனப்புன்னகை!!!.

"புதிர்"

இந்த பிரபஞ்ச இயக்கமும்
காதலில் நீ காட்டும் தயக்கமும்
இன்னமும் புரியாத புதிர்தான் எனக்கு.

"சுவாசம்"

உன் சுவாசங்கள்
ஏற்படுத்தும் மாற்றங்கள்
என் மனதிற்குள் மையம் கொண்டு
உணர்ச்சி புயலாய் உருவெடுக்கிறது .

"மயக்கம்"


சில்லென்று ஓடும்
சிற்றோடைகளும் .. உன்
சிற்றிடை கண்டால்
சிலிர்த்து கொள்கிறது பெண்ணே !!!
தங்களுக்குள் மெய்சிலிர்த்து
விரைத்து நிற்கிறது பெண்ணே...
பனிக்கட்டியாய் ...!!

"வியப்பு!"

வானவில்லை யார்
காற்றில் பறக்க விட்டது ?!!
உன் தாவணியால்
நிகழ்ந்து விட்ட அதிசயம் கண்டு
விழிகள் வியர்க்கிறேன் நான்.

"தாக்கம்!"


பிறை நிலாக்களை வெட்டி
வீதியில் வீசியது யார்?..உன்
விரல் பிரிந்து கிடக்கும்
நக நறுக்கல்கள் கண்டு
நெஞ்சம் கொஞ்சம்
உடைந்து போகிறேன்.

"நெகிழ்ச்சி"


சீவிவிட்ட மாட்டுக் கொம்புகளை
செதுக்கி வைத்தது போல்
நெருக்கி வைத்த உன் புருவம் கண்டு
நெஞ்சம் நெகிழ்கிறேன்.

"உவகை"

இருண்டு கிடக்கும்
இப்பிரபஞ்ச பெருவெளியாய்
சுருண்டு கிடக்கும் உன்
கருங்கூந்தல் பெருவெளியை
கண்டு மகிழ்கிறேன்.

"வேட்கை!"


ஒரு வினாடி தோன்றி மறையும்
உன் உருவம் கண்டுவிட்டால்
ஒரு கோடி ஆண்டுகள்
உயிர்த் தரிக்கும்
ஆற்றல் கொள்கிறது என் மனம்.

"வேகம்!"
என் எண்ணம் செல்லும் வேகத்துக்கு
ஈடான ஒரு பொருளை …
இன்னும் இந்த
பிரபஞ்சம் காணவில்லை !!!

நூறாயிரம் முறை
சுவாசிக்க வேண்டிய காற்றை
ஒரு மூச்சில் சுவாசித்தால் வரும்
மூச்சித் திணறல் போல்
உனைக் காணும் போதெல்லாம்
எனக்குள் சிந்தனை சிதறல் …
எண்ணத் திணறல் …
கற்பனைக் கதறல் ..!

"தகிப்பு!"

என் எண்ணங்களுக்கு
ஈராயிரம் ஈனுலைகளும்
தரமுடியாத வெப்பத்தை
உன்னிரு விழிப்பார்வைகள்
தருகின்றன !!!

ஏக்க பெருமூச்சில் …
எட்டூர் எரிக்கும் …
வெப்பம் தெறிக்கிறது பெண்ணே ..!
மூளை முதல் …
முதுகு வாள்முனை வரை …
முறுக்கேறி நிற்கிறது
"என் காதல் ..!"

"வலி"இதயம் வலிக்க
இறுக்கி பிழிந்து
இரத்தம் எடுத்து
என் நரம்புகளை நறுக்கி எடுத்து
இரத்தம் தோய்த்து
உனக்கு வர்ணமூட்டுகிறது …
என் காதல் !

Saturday, August 22, 2009

"மௌனப் புயல்"


ஒளிதரும் விளக்கின்
சுடர்விடும் தீபம் போல் இருந்த
என் காதல் …
உனை காணும் போதெல்லாம்
கனன்று கிடக்கும் நெருப்பு
சுழன்றடிக்கும் சூறாவளியால்
காட்டுத்தீயாவது போல்
என் உயிர்ப்பற்றி சுட்டெரிக்கும்
என் காதல் …!!!
மனதை எரித்து …
மனதை எரித்து …
உணர்ச்சி சாம்பல் குவித்து
உன் உருவம் செய்து
உயிர் ஊட்டுகிறது !!!

Tuesday, August 18, 2009

விதி பழித்தல் !


விதி.,
எத்தனை முறை
என்னை வீழ்த்தினாலும்
மண்ணோடு மண்ணாய்
மக்கிபோவதற்கு
மரமல்ல நான்...!
விதை! -
நான் விதை..!
வேரூன்றி வெடித்தெழுவேன்...!
வினை கிழித்து முளைத்தெழுவேன்..!
விதியையே கொம்பாக்கி அதை சுற்றிப் படர்வேன்..!
என் விளைவுகளால் விதியை மூடுவேன்..!
என் எண்ணங்களையே
வண்ண மலர்களாக்கி ,
வான் நோக்கி பூத்து சிரிப்பேன் ..!
நான் தரும் நிழலில்
விதியே வந்து இளைப்பாறு
என்பேன்.

குட்டி தேவதை

என் சிந்தனையை கூட
நிறுத்தி வைக்கும்
உன் சின்ன விழிப்பார்வை..!!!
சீறிபாயும் மின்னலை
சிறைபிடிக்கும் கலையை
எங்கே கற்றன உன் கண்கள் ?..!
**********************
கடவுளுக்கும், கருணைக்கும்
உன் கண்களே சாட்சி.
எரிமலையும் குளிர்ந்துவிடும்
எழில் கோலம் நீ..!!
எந்த நந்தவனமும்
பிரசவிக்காத மலர் நீ…!
*************************
அணுசக்தி அமைதிகொள்ளும்
உயிர்சக்தி நீ…!
ஆற்றல்கள் ஒளிந்துகொள்ளும் ஆழி இருள் …
உன் கருவிழி...!!
**********************************
பேதமுற்று கிடக்கும்
பெரிய மனிதருக்கு
அமைதி போதிக்க வந்த
அழகு நீ..!
**********************************
அல்பிரேட் நோபெலுக்கு-
நீ பிறந்திருந்தால் …
இந்த உலகம் அழிந்திருக்காது …!
நியூட்டன் உனைக்கண்டிருந்தால்
ஆப்பிள் கண்டு அதிசயித்திருக்கமாட்டான் ...!
அலெக்ஸ்சாண்டர் உன்னை பார்த்திருந்தால்
அமைதி கொடி ஏந்தியிருப்பான்...!
**********************************