Sunday, December 25, 2016

எழுதலே வாழ்தல்..!


இன்னும் எத்தனை நீதிமான்கள் வேண்டும்?
இன்னும் எத்தனை நீதிக்கதைகள் வேண்டும்?
இன்னும் எத்தனை தீர்க்கதரிசிகள் வேண்டும்?
இன்னும் எத்தனை தீர்க்கதரிசனங்கள் வேண்டும்?

அனுபவத் தொகுப்பை ஆதாரமாக்கித் தந்தால்
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தழைத்திருக்க
ஆயிரமா யிரம்பேர் தம்முயிர் இழந்து
ஆனவை யாவும் ஆக்கித் தந்தாலும்

கொள்ளும் தன்மை யற்ற குலமே..!
அல்லும் பகலும் உழைத்து உழைத்து
இந்நிலம் இப்பயிர் இப்பருவ மென்றாய்ந்து
இந்நில மாந்தரெலாம் பசியின்றி புசித்திருக்க

பலகாலம் படாதபாடுப் பட்டுத்தந்த மாநிலம்
பல்லுயிர் பெருக்கம் பண்பாட்டுத் தளம்
நல்லுயிர் வளர்க்க நாளும் உழைத்த
தொல்லுயிர் தொன்மை மறந்தீர் – மாந்தர்

நிலமளந்து நீரளந்து வரம்புக்குள் வைக்க
வாய்க்கால் உயர்ந்து வரப்பும் அணைந்து
நன்செய் புன்செய் விளைவித்து நாளும்
மண்ணுயிர் தழைக்க இன்னுயிர் தந்தார்

காட்டிய வழியெலாம் மறந்தீர்..! அவர்
கட்டிய கனவுக் கோட்டைகள் உடைத்தீர்
ஊட்டிய உணர்வும் அழிந்தீர் – வீணில்
உதறித்தள்ளி பல்வழி பலகாலம் நடந்தீர்

இழிந்தீர் ஈராயிரம் ஆண்டாய் இங்கே
புரண்டு போனது வாழ்க்கை - வந்தார்
மிரட்ட மிரண்டு அரண்டுப் புரண்டு
அடிமைத் தன்மை கலந்துப் பிறழ்ந்தீர்

பிரிந்துப் பிரிந்து வாழ்ந்து வந்தீர்
பிரிவால் உறவின் மூலம் மறந்தீர்
இனம் மானம் மொழி வீரம்
இன்னும் பிறவும் அழியா அடையாளம்

காணீர்..! காணீர்…!! எடுத்துச் சொல்லும்
எவரையும் பழித்தும் இழித்தும் துரத்தும்
பழக்கம் விலக்கி துலங்கும் வாழ்வுக்கு
தோள்கொடு..! போராடும் தலைவன் ஒருவன்

பிறப்பான் பிறப்பான் என்றே ஓய்ந்து
உம்கடமை செய்யாது ஒழிந்து நாளும்
பிறரிடம் கையேந்தும் வாழ்க்கை துறப்பீர்  
தன்மானம் தற்சார்பு நிலைக்கட்டும்.