Monday, February 28, 2011

"பிறந்த நாள் வாழ்த்து"


அரியும் சிவனும் விரும்பி அரும்பிய
ஆரமுதே...! அழகே..! பனித்துளி பளிங்கழகே..!
முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..!
முன்னோர் உறை முதூராம் முள்ளுக்குறிச்சியில்

எம்குலத் துதித்த கொழுந்தே..! குலவிளக்கே..!!
எம்மனை செழிக்க எழுந்தப் பேரழகே..!!
எம்முன்னோர் செய்தவத்தின் எழிலார் கலைவடிவே..!
எமக்குவகை தந்த இளஞ்சுடரே...! குலமகளே..!!

இயற்கை எழிலாடும் நெல்லும் கரும்பும் 
இருபுறம் செழித்திருக்க வரப்பு வயலோடும்
வாய்க்கால் வழியோடும் வளம் கொழிக்கும்
நீர்வளம் நிறைந்த நாடெங்கும் காடு.



காலம் தந்த கருணையே..! களிப்பே..!!
கடவுள் சக்தி காத்து நிற்கும்
குறுஞ்சிரிப்பே..! நலன்கள் யாவும் மேவி
நாளும் செழிக்க நல்லன யாவும்

சிறக்க,- சீறும் சிறப்பும் பெற்று
பாரும் ஊரும் பாராட்டும் பண்புடன்
வீடும் குலமும் தழைக்கச் செழிப்பாய்..!
விருந்தோம்பி தமிழின் பெருமைக் காப்பாய்.

 

"அரிகரப்பிரியா...!" பதினாறு வகை பேறுடன் 
அரிகரன் புகழ் நிலைக்கும் வண்ணம்
ஆயுள் முழுதும் நிலைத்தப் பொருளோடும்
நீடித்த புகழோடும் வாழ வாழ்த்துகிறேன்.   



குறிப்பு : அண்ணன் மகள் "அரிகரப்பிரியா" வின் இரண்டாவது பிறந்த தின வாழ்த்து மடல். பிறந்த நாள் - 23.02.2009.      

Monday, February 21, 2011

"ஆதியும்... பாதியும்..."



உடலமாய் உழல்கிறேன் சடலமாய் திரிகிறேன்
நானாகிப்போன ஆவி சூடாகிப் போக
வாழும் வழியறியேன் சூழும் விதியறியேன்
பாழும் வினைப் படுத்தும் நிலையறியேன்.

சூளது சூழாது தாழாது வீழாது
மோகத்து மோகிக்கும் தேகத்துப் புகாது
விதியும் விதிர்க்க விக்கித்துப் போக
சத்தும் வித்தும் சாகா ரசமாகாது


 


கழுமுனை கழல சுழலும் கழல்
சுழுமுனை சுழல கழலும் தழல்
எரிதழல் எரிக்கும் தேகம் செரிக்கும்
கறிநிழல் காக்கும் கரும வினை



வைத்தப் பொறியுள் தைத்த புதையல்
வையத்துள் பொதியும் பதியம் படையல்
விதியின் பசிக்கும் வினையின் ருசிக்கும்
வடியும் உதிரம் வாழ்க்கைப் புசிக்கும்




சதி செய்த விதி தனை
மதி கொய்த சூது தனை
பதி பாசம் பற்றறுத்து வினை
முற்றும் மீள்வேன் எனை மீட்பேன்

Monday, February 14, 2011

"இல்லாள்"






என்னைத் தனதாக்கிக் கொண்ட மனைவிக்கு,
இன்னுயிரில் இழையோடும் பாசத்தீயின் பரவசத்தில் 
என்னை உன்னில் தேடும் இன்பத்துளிகளில்... 
இதோ,-


உயிர்க்கிறேன்...


இன்னும் 'இருக்கும்' இரகசியம் இதோ 
அவிழப்போகிற ஆனந்தப் பரவசம். 
வாழும் உணர்வினை எனக்கு ஊட்டி 
வாழ்க்கைக் காட்டியவள். 


மருகிக்கிடந்த உயிர்ப்பின் உணர்வுகளை 
உருகி ஓடச்செய்தவளே..! 
பனியாய் உருகிப் பாசம் நிறைக்கிறேன். 
உன் வழி எங்கும் என் நேசம் நிறைக்கிறேன்.     


மூழ்கும் பிறவியின் மயக்கம் மூளும் 
மீளாநேசம் மாளாத் தீயில் தினம் கருகும்
ஊழ்வினைப் பாழ்வெளிப் பயணம் தொடர
உன்னைத் துணையாக்கத் துடிக்கிறது.


அத்தனையாயிரம் நியூரான்களிலும் நீயே நிறைகிறாய்...
ஆதிமுதல் நீ என் சொந்தமாய் 
ஆன்மாவின் பந்தமாய் தொடர்கிறாய்,- தொடரும்
பிரபஞ்சப் பெருவெளிப் பயணத்தில் நாம்.


பால்வெளியில் நமக்கு குடில் அமைக்கிறேன்.
வீதியெங்கும் விண்மீன்களில் விளக்குகள் தோரணமாய்
காற்றின் திசைமாற்றி கூற்றின் முறைசெய்கிறேன்.
நெபுலாக்களில் நம் நேசம் எதிரொலிக்கிறது.


கதிரின் ஒளியில் நம் காதல் வழிகிறது 
சிந்தும் சிதறலில் சந்திரன் மிளிர்கிறது 
சகத்தியே...! உன்பாசத்தில் தான் என்வாசம்...
சத்தியமே..! நீ என் சத்+சித்+ஆனந்தம். (சச்சிதானந்தம்)




பிண்டம் பிரிந்த பிறவி இது 
அண்டம் அளந்த நேசம் இது 
கண்டம் கடந்த காதல் இது 
குண்டம் உடைக்கும் காலம் இது


நம் சந்ததிக்காய் ஒரு பூமி 
தமிழ்ச் செழிக்க ஒரு பூமி 
தங்கமே நீ சிரிக்க, சிந்திக்க 
அங்க மெல்லாம் ஆவித் தரிக்கிறேன்.


வாழ்வென்றால் 'நீ' என்று பொருள் 
வாழ வா...! நான் வாழவா...?
திரும்பும் திசைகளில் அரும்பும் இசைகளில் 
யாவிலும் நீ மட்டுமே சிரிக்கிறாய்.


உன்னை இரசித்தலே பிறவியின் பயன் 
என் இரகசிய சகியே...! இரசிக்கிறேன்.
விண்ணுக்கும் மண்ணுக்குமாய் உயிர் நிறைக்கிறேன்.
வரும் வழியில் எண்ணங்களாய் மணக்கிறேன்.


சொல்........


எப்போது வருவாய்...?  




குறிப்பு:            
எப்போதும் மனைவியைக் காதலியுங்கள்.... இதுவரை இல்லையென்றால் இப்போதேனும்... இந்த "காதலர் தினத்திலிருந்தேனும்" காதலிக்கத் தொடங்குங்கள்..., "மனைவி" வாழ்வின் 'பொருள்". "வாழ்க்கை" மனைவியின் "அருள்".    

Tuesday, February 08, 2011

"ஊழ்வினை...."







முந்நொரு சென்மம் சேர்ந்திருந்த வாசம்
முப்பாழ் வினையில் முளைத்த நேசம்
இப்பாழ்ப் பிறவியின் மயக்கம் பேசும்
தாழ்த்திறக்கும் திறவுகோல் தடம் பார்த்து...


மாயத்திரை கிழித்து மயக்கம் அறுத்து
வாழும் முறை வகுக்கும் வலியன்
தீரும் வரை விடாது விதியின்
தீயில் வதங்கும் பயிராய் உயிர்.


நடுங்கும் மனம் நாளது போக
ஒடுங்கும் உயிர் வானது போக
கடிந்தும் நலிந்தும் மனம் வாட
காணாக் கிழவி கண்ணாட வரும்


கனவும் நினைவும் சுயம் மாற்ற
மாயப் பிறப்பின் மர்மம் மாதவள்
முடிச்சவிழ மூன்றின் வினையவிழ நேசம்
நெக்குருகும் பாசவலை விரித்த விதி.


யாரடி நீ..? நான் பெற்ற சீரடி நீ..!
கூறடி உன் ஒற்றைக் கூற்றுக்கு
காலம் காத்திருக்கும்...
காதல் பூத்திருக்கும்...
ஞாலம் நனிசிறக்கும் வாழ்வே வா...!!


தூலமும் ஞானமும் துயிலும் சூட்சுமமும்
வாலனறிவால் வந்திங்கு சேர்ந்த வரம்.
தொங்கும் உயிர்த் தூங்கா இரகசியத்
தொடர்பின் முடிச்சில் தொடரும் உறவே...!!

விழிகளின் ஈரம் விழுதுகளாய் இறங்க
கன்னத்தில் பதியும் நினைவு வேர்கள்
ஒற்றைத் தடம் பதிக்கும் உயிரின்
இரகசியப்பாதை நீ மட்டும் வாராயோ..!?








தத்தளிக்கும் உணர்வுகளில்... தவிக்கும் சீவன் ..!
முத்தெடுக்க மூழ்கும் முக்கடல் சங்கமம் 
மூச்சடைக்க காற்றுக் கதவடைக்கும் காலன்
வழியடைக்க விழிப் பிதுங்கும் விதி.







Monday, February 07, 2011

"பசித்திருக்கிறேன்......!"


"பசித்திருக்கிறேன்......!"

பசித்திருக்கிறேன் .......
உன் தொண்டைக்குள் இறங்கும்
ஒவ்வொரு கவளத்துக்கும்........
உன் பசித்தீர்க்கும்
ஒவ்வொரு பருக்கைக்கும்........
உன் கைப் பிடிக்கும்
ஒவ்வொரு பிடி சாதத்துக்கும்.....

பசித்திருக்கேன்.........

உன் மேலண்ணம் நனைக்கும்
ஒவ்வொரு துளி நீரிலும்.......
உணவுக்குழல் ஏறி இறங்கும்
ஏற்றத்துக்கு தக்கப்படி
என் பார்வையின் நகர்வுகள்.......
மெதுவாய் அசையும் உன் தாடைகளில்
மெல்ல மெல்ல மனம் சரிகிறேன்.
அத்தனை அழகாய்.....!
எப்படித்தான் சாப்பிடுகிறாயோ...?
அந்த அழகுக்காய்.......

பசித்திருக்கிறேன்...........

ஒவ்வொரு நாள் உணவு இடைவெளியிலும்
உன்னையே நினைத்து.......
ஒத்துக்கொள்ளாமலே உணவருந்துகிறேன்.....
நீ இல்லாமல் சாப்பிட
மனம் கூசுகிறது......
உன் பசியடங்கும் வேளைகளில் என்
உயிர் சிலிர்க்கிறேன்......
நீ தாகம் தணிந்தால் நான்
தண்ணீர்க் குடிக்கிறேன்.....
உன் நினைவில்........

பசித்திருக்கிறேன்.............

என்னோடு உயிர்த்திருக்கிறாய்...
எங்கேயோ பசித்திருக்கிறாய்...?
உன் சீவன் வளர்க்கும்...
ஒவ்வொரு பருக்கையிலும்
என் பெயர் எழுதுகிறேன்.......!!
என்னவளே...!
நீ வரும் வரை நான்......

பசித்திருக்கிறேன்........

உன்னைத் தண்டிக்க முடியா தருணங்களில்
என்னைத் தண்டிக்கிறேன்....
என் உணர்வுகளால் உன் உயிருக்கு
உணவூட்டுகிறேன்........
உனக்கெப்படிப் புரியும்...?
பசித்திருக்கும் உன் பசிக்காக.......

பசித்திருக்கிறேன்......

 

ஒரு நாள் உன் பசிக்கு.....
நானே உணவாவேன்....!
ஒரு நாள் உன் தாகத்திற்கு
நானே தண்ணீராவேன்...!
ஒரு நாள் உன் உயிருக்கு
நானே விருந்தாவேன்....!
ஒரு நாள் உனக்கு
நானே வாழ்வாவேன்....!
அதுவரை.....

பசித்திருக்கிறேன்.....

Thursday, February 03, 2011

"காதல் கவசம்...!"

என்ன தவம் செய்தனரோ ஏந்திழையே..!
நின்னை பெண்ணாய் பெற்றிடவே பெற்றோர்
அன்னைத் தமிழும் அரவணைக்கும் நின்னை
ஆயுள் முழுதும் பார்த்திருப்பேன் உன்னை...

யாண்டும் யான்பெற்ற பெரும் பேறு...
யார் பெற்றார் உன் உற்றார்..?
யௌவனத்து எழிலார் கலைவடிவே..! கரும்பே..!
யாதொரு தவம் செய்தேன்..? இன்னெழிலே..!

முற்றும் தமிழ் மணக்கும் முறுவளே...!
பற்றும் பைந்தமிழ் பரவசப் பூங்குழலே...!
நிற்றல் நடத்தல் கற்றேன் நின்தமிழில்
சாற்றும் தமிழ் போற்றும் ஆரணங்கே...!

காற்றும் கடலும் நிலமும் பேசும்
காதல் மொழி ஊற்றுப் பெருக்கெடுத்து
உணர்வுக் குடமுடைத்து வானூற்றும்
மழைபோல் வந்தடையும் நின் வாசல்...

ஆறுகாலம் உனக்கு என்காதல் குடமுழுக்கு...!
ஆற்றுநீறாய் அன்பு பெருக்கு ஆருயிரே..!
தோற்றுப்போகும் என்றெண்ணி துவண்டு விடாதே...!
தொல்லைகள் தீர்ந்தெம் எல்லைகள் சேர்வாய்.

அறுபத்து மூவரின் தமிழையும் தத்தெடுப்பேன்..!
ஆருயிரே..! தனியொருவனாய் முத்தெடுப்பேன்,- தயங்காதே..!
கம்பனையும் விஞ்சும் என்காதல் காவியம்...!
காரணம் நீ என் எழிலோவியம்...!!
 
பெற்றார் நின்னைப் பெற்றார் பெற்றோர்
பெரும் பேறு பெற்றார் பேருவகை
உற்றார் காட்டும் அன்பில் கற்றார்
கற்றார் களிப்பை பெற்றார் காண்.

முந்திச் சரிந்த தோற்பை முடிச்சவிழ..!
பாங்காய் பதமாய் இதமாய் இடுப்பவிழ..!
ஈரைந்தின் பாரம் இறக்கி வைத்தார்..! 
என்னவளே இன்னும் சுமக்கிறேன் நான்...

நின்னை நெஞ்சில், நிலமகளே வா..!
அன்னை போல் அரவணைப்பேன் ஆரமுதே..!
ஆழிப் பேரலையாய் அன்பிறைப்பேன் வா..!
சூழும் வினையும் அறுத்தெறிவேன் - அன்பில்

வாழும் கலையும் விதி மாற்றும்
நிலையும் எடுத்துரைப்பேன் என்னவளே வா..!
காரும் நீரும் கதிரவன் கரங்களில்
தோற்றப்பிழை திருத்த பெருங்கடல் தோன்றும்..!!

 

தூயவளே..! உனக்கென்ன...? 
அன்புகடல் நீ...!
ஆர்ப்பரிக்கும் அருட்சுடர் நான்... வா,
இன்பக்கடல் சமைப்போம்,- இனியவளே 
இனி இல்லை தயக்கம்...!, 
இன்னுமென்ன மயக்கம்...?         

Wednesday, February 02, 2011

"மீனவ நண்பனும்.. தமிழக அரசும்.." (புதிய திட்டங்களுடன்....)

மீனவன்........

கட்சத் தீவைக் கைக்கழுவி இலங்கையின்
எச்சில் வாழ்க்கைத் தந்த இந்திய அரசே....!
கொச்சைப் படுத்தப்படும் எங்கள் வாழ்வில்
இந்திய மானம் இருக்கவில்லையோ...?!

ஒவ்வொரு படகிலும் நாங்கள்
இதுநாள் வரை பறக்க விட்டது
இந்த தேசத்துக் கொடி என்றே நினைத்திருந்தோம்.
இப்போது புரிகிறது....
இலங்கை தேசத்து கொடி தேவையென்று....
தப்பிப் பிழைக்க ஒரு அவகாசமாவது கிடைக்குமே...

 

கடலை நம்பி பிறந்தவர்கள் நாங்கள்
"கவர்"மெண்டை நம்பி என்ன பயன்..?
கடலும் கட்டுமரமும் காக்கும் எங்களை
கைத்துப்பாக்கி குறிப் பார்க்கிறது...?!

சிங்களவன் பயிற்சிக்கு இலக்கு நாங்கள்...
சிந்தும் உதிரம் இந்துமாக்கடலையும் சிவப்பாக்கும்...
சந்தேகமிருப்பின்....
வள்ளுவ சிலைப் பார். 
***************************************************


தமிழக அரசு.............

"தமிழர்களே...! தமிழர்களே...!!
நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன்...!
அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்....
கவிழ்ந்து விட மாட்டேன்....."

இந்த சூத்திரம் தெரியா ஒரு இனம் தினம்
சுடப்பட்டு சாவது என்ன விந்தை...!!
 
மீனவர்களே....
நீங்கள் இப்போது ஏறுவது எந்த மரம்....?
உங்களிடமிருப்பது கட்டுமரம் இல்லையோ..?
 

உங்களின் தலைக்கு விலை வைக்கப் பட்டிருக்கிறது.
உங்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் ரொக்கம் (உயிருக்கு)
இலவச சுனாமி வீடு..... ( உயிரோடிருந்தால் )
இலவச வேட்டி சேலை... ( மானம் போன பின் )
ஒரு ரூபாய்க்கு அரிசி .... ( வாய்க்கரிசி )
இலவச கலர் டீ.வி ....( செத்தவன் வீட்டில் கருமாதிக்கு காட்ட )

இப்படி நீளும் திட்டங்கள் இருக்க ........!!!
உங்களுக்கு என்ன கவலை.......???
என்கிறது நமது மாநில அரசு.

நீங்கள் ஏன் மீன் பிடிக்கிறீர்கள்....?
நீங்கள் மான் பிடியுங்கள்....
நாங்களே உங்களை சுட்டுப் போடுகிறோம்....
சட்ட விரோதச் செயல் என்று
சாட்சி சொல்லி....

இப்படியும் பேசுவார்கள்...?!

இனியும் வலை விரிக்க வேண்டியது.......
கடலிலா...?
யோசியுங்கள்.....

மானமுள்ள தமிழனாய் வாழும் வழிக் கேட்டால்...
இலவசங்களை பொறுக்கிப் போட்டு
இன்னும் இழிவுப் படுத்தும் ஒரு அரசு...

இங்கே இருப்பவன் பிழைக்க வழி இல்லை....
இங்கிலாந்துகாரனும்... சப்பான்காரனும்....
இங்கு வந்து ஆலை அமைக்க
இன்னொருவர் தூது................
"வரதப்பா..... வரதப்பா.... கஞ்சி வருதப்பா........
கஞ்சிக் கலையம் தாங்கி அரசாங்க வண்டி வருதப்பா...."


இனி எல்லோருக்கும் இலவசமாய் "கஞ்சித் திட்டம்"
இதன் மூலம் இலவச கேஸ் செலவு (இத்தனையாயிரம் கோடி)
தமிழக அரசுக்கு மிச்சம்.... அமைச்சர் அறிக்கை.

நீங்கள் பொங்கலுக்கு "பொங்கலும்"
தீபாவளிக்கு "வெடியும்"
அரசாங்க செலவில் பெறலாம்.

இந்த முறையும் எனக்கே ஓட்டளித்தால்............

மக்களே..... மறவாதீர்கள்.......

( மீனாவை காப்பாற்ற )
மன்னிக்க ( டங் ஸ்லிப் )

மீனவர்களை காப்பாற்ற
எங்களால் மட்டுமே முடியும்.........

"கடலில் செல்லாமல் மீன் பிடிப்பது எப்படி...?"
என்பதை ஆராய வல்லுநர் குழு அமைக்கப் படும்.


வாய்க்கால் வெட்டி கடலை நமது மாநிலத்தின் 
உள் கிராமங்களுக்கு இணைப்பு கொடுத்து
எல்லோரையும் மீன் பிடிக்க செய்யும்
திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.           
  
அதற்கான செலவை நம்முடைய
மத்திய அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்று
உபரித் தொகையை மாநில அரசுப் போட்டு
வாய்க்கால் வெட்டப் படும் என்பதை...

இதன் மூலம் தெரிவிக்கிறேன்..............

மீனவர்களின் வாயில் மீன் (மண்) விழ செய்வதே
எங்கள் நோக்கம்.

நன்றி.      

*****************************************************

தமிழ்க்காதலனின் மீனவர்களின் துயர்ப் பேசும் இன்னுமொரு பதிவைப் படிக்க....
http://thamizhththenral.blogspot.com/2011/01/blog-post_9799.html