Wednesday, December 10, 2014

நெற்கதிர்..!


கணினி வரையும் நெல்மணிக் கதிர்
கண்ணுக்கு விருந்தா கடும்பசிக்கு விருந்தா
புண்ணுக்கு மருந்து புனையலாம் கணினி
மண்ணுக்கு விருந்து விளைதல்

கணினித் திரையிலா..? எருது பூட்டும்
ஏர்முனைக் கிழிக்கும் நிலத்தின் மட்டும்
கூர்முனை அமிழ்ந்தும் குளம்படி பட்டும்
சேர்தனை அடிக்கும் உழவர்தம்

கூட்டம் எதிர்கொள் இயற்கைத் தாக்கம்
கூடுமோ ஒருவரி மேற்கோள் இட்டும்
காடும் கழனியும் கணினியில் போற்றி
ஆவதென்ன ஆனதென்ன நாட்டில்

உழவர் வர்க்கம் பிழைக்க வைக்கும்
உண்மை நிலைதான் உருவாகா வரைக்கும்
உனக்கும் எனக்கும் உயிர்நடுக்கம் பெருக்கம்
வயிற்றுச் சுருக்கம் காணா

வரைக்கும் வாழ்வின் அடிப்படை புரியா
நிலைக்கும் தாழ்மை அடைந்தே கற்கும்
கடைநிலை அறிவை கழற்றி வைப்போம்
உழவர் வாழ்க்கை உயர்த்துவோம்.

Thursday, March 13, 2014

”வெளிப்பயணம்...!”


நிலையான இருளின் மடியில் என்றும்
நிற்காத பயணம் நீளமாய் நீள்கிற
கோளமாய் கோணமாய் உருளும் காலமாய்
வழியற்ற வழியில் விரைதலே வாழ்வாய்

ஓடுதளம் இல்லா ஊர்திகள் என்றும்
ஊர்வதில் நில்லா நிலவுகள் தோன்றும்
அசைவதில் ஆயிரம் இசைகள் பிறக்கும்
கல்லும் கரும்பாறை மண்மணல் துகளும்

கருவறை சுமக்கும் ஊழிக்கால பிரசவம்
காலகால மாய்தொடரும் கவிதைப் பரவசம்
ஓலமிட்டு அழுதும் ஒயிலாக சிரித்தும்
மயிலாக நடனமிடும் மௌனப்புயல் வீசிடும்

ஒளிக்கோளம் வெடித்த ஒளித்துகள் விரைதலில்
வண்ணம் பிறந்து வாரிஅணைக்க மேனியெலாம்
எழில்கோலம் காந்தர்வ மணம் கொள்ள
காத்திருக்கும் உயிர்க்கோளம் பூத்திருக்கும் விடியலாய்

நிலமென நீண்ட பருவுடல் தாங்கும்
உயிரதன் உணர்வுகள் ஒளியுடன் தோன்றும்
உதிர்வன அதிர்வன ஒலியுடல் தாங்கும்
புதியன புகுவன இழைந்திட தோன்றும்

ஆதிவேக தாகம் அடங்கா பயணம்
பாழ்வெளி தாண்டும் ஊழியின் நடனம்
காரிருள் காட்டும் வழியில் தொடரும்
காந்தபுல கண்கள் இருளைப் பார்க்கும்

அடரொளிப் பிழம்பும் ஆழிருள் வெளியும்
சுடரொளி ஏந்தி சுழலும் கோளம்
அலைந்திட வளைந்திட ஆகிய களம்
கட்டுறை கலங்களில் பொதிந்த ஆற்றல்

விட்டன தொட்டன விழுந்தவை எழுந்தவை
முட்டியும் மோதியும் முகவரி மாற்றியும்
இருள்வரி ஒளிவரி இடையினில் மிளிர்ந்திடும்
விடியல்கள் ஒளிமோதும் ஒரு கோணம்

தத்துவ உயிர்ப்புகள் தனித்துவ முகிழ்ப்புகள்
தானாகி வேறாகி தம்முள்ளே மூன்றாகி
வானாகி வழியாகி விளங்கும் பொருளாகி
வந்ததுவே வான்பொருள் வீடாம்.

Tuesday, March 11, 2014

”எரிதல்...!”


எரிதழல் கனன்று எரிகிறது என்னுள்
எரிதலுக்கும் எரித்தலுக்கும் இடையேதான் இருக்கிறேன்
எரிவதில் எரிதலை இரசித்தபடி - என்னை
எறிகிறேன் எரிதலில் எரியவே...

எரிதல் எரித்தலை விழுங்கி எரிதலும்
எரித்தல் எரிதலை பிண்ணி அணைத்தலும்
கூடலின் சாட்சியாய் இருக்கும் இரகசியம்
வாடலில் தொடங்கி வதங்கலில்

தொடர்ந்து காய்தலில் புகுந்து எரிதல்
தழலாய் உருமாறி கனலாய் மெருகேறி
தன்னைப் பற்றியதும் தான் பற்றியதும்
முற்றி முடியும்வரை எரிதல்

பற்றின் பால்மேவும் பற்றினை எறிய
பற்றி எரிந்து காட்டும் யுத்தம்
பலகாலம் நிகழ்ந்தும் புரிதலில் பிழையாய்
புனிதம் மட்டும் பேசியபடி...

கண்முன்னே கரைத்துக் காட்டும் அற்புதம்
ஆதாரம் அடையாளம் தொலைதலும் தொலைத்தலும்
அணுவில் பிரிதலும் கலத்தலும் இயல்பாய்
எரிதல் புரியும் அழகு

மனதை கரைக்க கற்கிறேன் எரிந்து
மாயை பொசுக்க கற்கிறேன் எரித்து
மமதை நசுக்க எரிகிறேன் மரித்து
மண்ணில் கரைக்க விழைகிறேன்

கறைகள் இல்லாத காவியம் எரிதல்
கரைகள் இல்லாத ஓவியம் எரித்தல்
முறைகள் சொல்லாத சீவிதம் எரிதழல்
மூப்பும் பிணியும் சாக்காடும்

முற்றும் தவிர்க்கும் பேரின்பம் எரிதல்
பிழையே இல்லா பெருந்தீ கொள்ளல்
பிழைத்தல் செய்யா ஆன்மா செய்தல்
பிழம்பாய் பிறவி எடுத்தல்

புழக்கம் புழுக்கம் புறத்தே எறிந்து
பழக்கம் வழக்கம் அகத்தே எரித்து
நடுக்கம் ஒடுக்கம் சகத்தே துறந்து
பற்றி எரிகிறேன் பரம்பொருளாய்

பற்றிலா பற்றில் எரிதலும் எரித்தலும்
பருப்பொருள் கருப்பொருள் கலத்தலும் பிளத்தலும்
எரிப்பொருள் கொண்டே இயக்கமும் இருத்தலும்
எரிவதே வாழ்வு எரிப்பதே வாழ்க்கை.
 

”உயிரெழுத்து...!”


இளந்தளி ரெனத்துளிர் நுண்ணுணர் மென்மன
இளமையின் இதழ்களில் பனித்துளிக் காதல்
பளிங்கென அமர அழகான மோதல்
பரவசம் காட்டும் செல்களின் இயக்கம்

சிலைக்கு சிலிர்த்து மலைக்கு வியர்த்து
மழைக்கு குளிரும் மகத்தான உணர்வில்
இழையோடும் இன்பம்தான் எத்தனை எத்தனையோ..?
கனவெது? நினைவெது? கண்முன்னே சுழல்வது

தலைநிமிர் தனித்திமிர் துளிர்த்திடும் மனத்தினில்
முட்டிவெடிக்கும் எண்ணங்கள் முத்துச்சிரிக்கும் கன்னங்கள்
கட்டி அணைக்கத் தூண்டும் கரங்களில்
கவிதைப் பூக்கும் விரல்களில் - உயிர்

ததும்பும் இதழ்களில் புன்னகைப் பூக்கும்
கதம்ப உணர்வுகள் கவின்மிகு மாலையாய்
நிரம்ப வழியும் இதயத்துள்ளே எங்கும்
நிரம்பிக் கிடக்கும் இன்ப நுகர்வுகள்

மின்னல் பிடித்து ஊஞ்சல் ஆடும்
மின்மினி பூக்கள் வாழ்த்து பாடும்
கண்மணி அவளைக் கண்டு விட்டால்
காட்டாறு கட்டவிழ்ந்த நிலையில் மனம்

மூவாறு பருவத்து முகிழ்ப்பில் திளைக்கும்
இருநான்கோடு ஒன்றும் சேருணர்வு களிக்கும்
ஒருகூட்டில் இருகிளிகள் வசிக்குமென் உயிர்க்கூட்டில்
பெருவெளியில் என்வீடு பால்வெளியில் தேன்கூடு

ஒளிமழையில் ஓரியாடி ஒலிமுகையில் தலைதுவட்டும்
ஒய்யாரம் என்வாழ்வு மெய்யாரம் என்னழகு
கண்ணுக்கு விருந்தாக கண்ணாமூச்சி கோளாட்டம்
கைக்கெட்டும் தூரத்தில் அடர்பிழம்பு சுழன்றாடும்

எக்கால மிடுகிற இடியெல்லாம் என்னெழுத்து
முக்கால முமிருந்து  முடிசூடும் பொன்னெழுத்து
கற்கால மும்மனிதப் பொற்காலமும் வடிக்குமென் எழுத்து
புவியென்ற நூலில் புகுந்தேன் தலையெழுத்து.

Monday, March 10, 2014

”புரிதல்...!”

வசந்தங்களை வாரிச்சுமந்து உன்னில்
வாரியிறைக்கும் இன்பச் சுரங்கம்
நானென்று இறுமாந்திருந்தேன்
இத்தனை காலமும்....

பொல்லாத பிள்ளையாய்
பொக்கிச புருசனாய் - என்
பெண்மைக்கு அரசனாய்
என்னகம் புகுந்தாய்....

இதயத்தின் உணர்வுகள் யாவுமூற்றி
இச்சைகள் தீர கச்சைகள் கலைந்து
மூச்சடைத்த வேளைகளில் - உன்
முத்துக் குளியல்களில்...

பொங்கும் இன்பக்கடல் உணர்வலைகள்
முத்தமாய் மாறிமாறி உன்மீதான - என்
முத்தமாரி பொழிந்தேன் வழிந்தேன்
மனதால் மொழிந்தேன்...

இடையூரும் உன் விரல்களில்தான்
இன்பத்தின் ஊற்றுகள் இருக்குமிடம்
அறிந்தேன் - என் பெண்மைக்குள்
பேரின்பம் கண்டவன் நீ...

எத்தனை நடந்தும் எத்தனைக் கடந்தும்
இத்தனை அரிய இரகசியம் உன்னில்
இருப்பது அறியாது போனேனே..!
இங்குதான் நான் மடந்தையோ...?!

நடந்த கொடுமைக்கு நான் உடந்தையோ...?
இதயம் சுமந்த சீவனின் இடம்தான் எனதோ..?!
இரண்டற கலந்தவளும் இரண்டாவதாய் கலந்தவளும்
இவளுக்கான சந்தர்ப்பமோ...?! சமூகத்தின் சடங்கில்

இழைக்கப்படும் கொடுமைக்கு நானும் இலக்கோ..?!
இதயம் கவருதல் இயற்கையா..? கலையா..?
இடவலம் அமர்ந்தவள்தான் நானா...?! - உன்
இதயம் அமர்ந்தவள் ஆவேனோ...?!

கடைவழித் தெருமுனைக் கடக்க முனைந்த
ஒருநொடிப் பொழுதுதான் உன்னில் உறைந்தவள்
என் கண்ணில் விழுந்தாள் எதேச்சையாய்...
என்னவன் சுமந்து திரியும் எழிலோவியம்..!

அன்பிலும் அழகிலும் பண்பிலும் பாசத்திலும்
இருவரும் பெண்கள்தான் அத்தான்... - உன்
ஆத்மாவை சுண்டி இழுத்தவள் அவளா...? நானா..?
பட்டிமன்றம் தவிர்க்கவே விரும்புகிறேன்

இத்தனைநாள் வாழ்க்கை சொல்லிக் கொடுத்த
இதமான உன்னிதயச் சுகமும்...
இன்னும் பிறவும் அனுபவித்தவள் ஆயிற்றே..?!
இறுக்கம் நெருக்கம் புரியாதவளா நான்...

மொட்டாய் அரும்பிய ஆசைகள்
கொத்தாய் எழும்பிய உணர்வுகள்
அவளின் சொத்தாய் சேமித்த உன் ”காதல்”
அறிந்தேன் என் அகமுடையவனே...

என்னை சுமந்தபடியே இதையும் சுமந்து
எத்தனை நாள் திரிந்தாயோ...? ஏக்கம் தளர்ந்தாயோ...?
பிள்ளைகள் பிறந்தாலும் நமக்கு - உன்
பிழியும் மனதின் ஆசைகளை என்ன செய்தாயோ...?

என் மன்னவா..! உன்னை உடுத்தினேனா...?
உன் உயிரைப் பிழிந்து படுத்தினேனா...?
என்றேனும் என் வாழ்வின் அர்த்தம் சொல்,
அன்றேனும் என்பாரம் இறங்கட்டும்...

அன்பில் அலைமோதும் இதயம் கண்டேன்
அவளும் உன்னைச் சுமந்தே அலைகிறாள்
இதயப்பிழை செய்யா இளம் பூங்கொடியாள்
இலையுதிர் காலத்து கொடியாய்...
என்செய்வேன்...! என்னிதயமே..!! சொல்.

அன்பனே எனக்காக உன்னாசைகள் துறந்தாயோ...?!
அன்புடன் எனக்கான ஆசைகள் சுமந்தாயா...?!
உன் விருப்பு வெறுப்பு விளம்புகிறாள்
விழிகள் விரிய வியக்கிறேன் நான்...

மொழிகள் கடந்த புரிதல் எங்களுக்குள்
மொழியும்போதே புரிய முடிந்தது
வழியே வந்தவள்தான் உன்வாழ்வாய்
வந்தவளென்று விழிகளால் வீசி மொழிந்தாள்...

உன் ஆண்மை ததும்பும் உணர்வுகள் அவளுள்
அவள் பெண்மை தழுவும் இன்பம் உன்னுள்
இவள் கண்டுகொண்ட உணர்வு வெடிப்பை
எப்படி எழுதுவேன் எனக்கானவனே...!

மனிதம் உரிமை கொண்டாடுதல் பிழையோ..?!
மனிதரை உரிமைக்கோரல் பெரும் பிழையோ...?!
உன் மனம் புரிந்த என் மனிதம் கேட்கிறது..?
மாமா..., என்ன செய்வேன் நான்...!

அன்பில் என்னை அணைத்து வென்றவனே..!
உனக்கான அன்பு இதோ துவளுகிறது...
வாழ்க்கை தொலைத்து வசந்தம் இழந்து
பிணம் போலும் நாட்கள் கழிக்கிறாள்...

பின்னும் யோசிக்கிறேன் அவளை பிரிந்த
பின்னும் யோசிக்கிறேன் இன்னும் இதயம்
இதற்கொரு விடைப்பகர வில்லையே...?
பெண்மை புரிந்தவன் நீ - பெண்ணாய்

உன்னை பெற்றவள் நான்....
கேட்கிறேன் என் கம்பீரமே...! ஒப்புவாயா..?
என்ன செய்யப் போகிறாய்...?
என்னையும் அவளையும்...?

வாழ்தல் என்பது என்ன மாமா...?
வாழ்ந்தவள் கேட்கிறேன் உன்னை
என்னை என்சுகங்களை இத்தனை பத்திரமாய்
என்றும் காத்தவன் என் காதலனே...!

உன்னை உன்சுகங்களை நான் என்ன செய்தேன்...?
ஒப்புக்கும் ஊருக்கும் உன்னோடு ஒட்டிக்கொண்டேனா...?
ஒரு பழக்க வழக்கமாய் உன்னைக் கட்டிக்கொண்டேனா?
உன்னில் என்னைக் கலந்தவள் கேட்கிறேன்...

உன் சுகங்கள் விரும்பும் நான்
உன்னில் வாழ்தலும் உன்னால் வாழ்தலும்
உன்னோடு வாழ்தலும் உனக்காக வாழ்தலும்
உனக்காக செய்தேனா...? எனக்காக செய்தேனா...?

என்னால் நீ எங்கேனும் வாழ்ந்தாயா சொல்
என் சுவாசங்களில் குடியிருப்பவனே..!
என் நலன்களில் உன்சுகங்கள் கண்டவன் நீ
என்னை சுகப்படுத்தி தன்னை முறைப்படுத்தியவன்

உன்னை சிறைப்படுத்தி விட்டேனோ என்னில்...?!
உன் சிறகுகள் வெட்டிய கரங்களில் என்கரங்களுமா..?!
எத்தனை மென்மையானவன் நீ...! உன்னை
இத்தனை வன்மையாய் காலம் தண்டித்ததோ...?!

இல்லை உன்காதல் துண்டித்த
இரும்புச் சூழல் எதுவாயினும்
உடைத்தெறியும் பேராண்மை உண்டேடா உனக்கு..
அன்பில் இடப்பட்ட அணையில் சிறைப்பட்டாயோ..?!

உன்காதல் வாழவிரும்பும் பேதைதான் நான்...!
ஏனென்றால் நான் உன்னைக் காதலிக்கிறேன்
என்னைச் செம்மையாக்கி செழுமையாக்கி
உண்மையாய் வாழ்வித்தவன் நீ வாழணும்டா...

என்றும் காதலுடன்,
இல்லாள்.

Sunday, March 09, 2014

”இதயத் தூறல்...!”


இனியென்ன இரவையும் - என்
இனிய கனவையும் துரத்தி விட்டாய்
எந்த நொடியும் இரத்தப் பிரவாகம்
எனக்குள்ளே நின்று போகலாம்...

அந்த நொடிவரை இன்பம் பாய்ச்சும்
ஆனந்தம் தந்து கொண்டிரு...
ஆலாபனைகள் செய்யும் என்
ஆசைகளுக்கு எப்போதும்...

என்னை இயக்கும் இசையாயிரு
எப்போதும் உள் இரசிக்கும்
இதய கானங்களை என்னருகே
பாடிக்கொண்டிரு....

உணர்வுகள் குவித்த இதழ்களில்
உன்னை கொடுத்து என்னை
உனக்குள் இட்டு நிரப்ப இதயம் தா..!
இதழ்களின் வழியே....

புவியென்ன கவியென்ன
இதயமாற்ற தேடலுக்கு
அனிச்சையான ஆரம்பம்
அச்சாணியாகி கிடக்கிறது....

சில்லுகள் எத்தி விளையாடுகிறாய்
என் இதயத் தடாகத்தில்
உணர்ச்சி அலைகளில்
உயிர்த் தெறிக்கும் அழகை இரசிக்கிறாய்...

பிம்பங்கள் காட்டி நிசங்களை
மறைத்து கண்ணாமூச்சி காட்டுகிறாய்
கண்களும் மனமும் ஒருகாட்சி காண
கதவுகள் திறந்து காத்திருக்கிறேன்...

இமைகளில் வழங்கப்படும்
முத்தமாய் கண்களை அறியாமல்
கனவுகள் காட்டும் இரவினை
கவிதையின் காதலியாக்குகிறேன்...

இந்த இரவுகளிலும் - எனக்கான
இந்த கனவுகளிலும் எழுதப்படும்
உணர்வுக் குவியல்களை
உனக்கென்றே எழுதி வைக்கிறேன்...

இதுவும் கவிதை என்று...
இரசித்துவிட்டு போகாதே.

Friday, March 07, 2014

”நினைவுச் சுருக்கு....!”

வேறென்ன....
நீயும் நானும் வேறு வேறு
என்றானபின்.........

வேறென்ன......
நீரும் நிலமும் ஒட்டாது
என்ற உன் நியாயங்களுக்கு முன்...

வேறென்ன....
நிழலும் நிசமும்
முரண்பாடான உன் வாதங்களில்...

வேறென்ன....
விருப்பும் வெறுப்பும்
விடாப்பிடியாய் துரத்துகையில்....

வேறென்ன....
இருப்பு கொள்ளா உன்
நினைவுகள் சுமந்து திரிகையில்....

வேறென்ன....
தாயும் நீயும் எனக்கு
வேறில்லை என்றானபின்....

வேறென்ன....
தனித்தனியான எண்ணங்கள்
தவிடிபொடியான வாழ்வில்....

வேறென்ன.....
பிரிதொரு நாளில் - ஏன்
பிரிந்தோமென நினைக்ககூடுமெனில்...

வேறென்ன.....
இலைமறை காயாய்
உன்னாலும் இருக்க முடியுமெனில்...

வேறென்ன....
மனதில் மதில்சுவர் எழுப்பும்
மகத்தான உன் சிந்தனைகளில்....

வேறென்ன....
ஒட்டும் உறவும்
ஒட்டியும் ஒட்டாத உறவுக்குள்...

வேறென்ன.....
எங்கோ வெறிக்கும் பார்வைகள்
நிலம் நோக்காது எனில்....

வேறென்ன....
நீயேனும் நலமாக
நானற்று போவதில்.....

வேறென்ன....
பெரிதாய் இங்கே
நினைவுகள் தாண்டி......

Thursday, March 06, 2014

”தகிப்பு....”

கொந்தளிக்கும் உணர்வுகளில்
கொப்பளிக்கும் நினைவுகள்
சப்தமிட்டு வெடிக்கின்றன
குமிழ்களாய்.....

இறப்புக்கும் பிறப்புக்குமான
நீண்ட இடைவெளியை
இட்டு நிரப்பத் தெரியாமல்
மனத் தடுமாற்றம்....

குண்டும் குழியுமான
மனித உறவுகளில்
மடிந்து போகிறது என்னிடம்
மிச்சமிருக்கும் மனிதம்.....

புத்திக்கும் தேடலுக்குமான
நீண்ட போராட்டத்தில்
ஆறாய் பெருக்கெடுத்து
ஓடுகிறது அனுபவம்....

நிகழ்வுகளின் நிசங்களில்
கோரைப்பற்கள் ஈட்டிகளாய்
கிழித்து எறிகிறது
உள்ளிருக்கும் துணிச்சலை....

பரிசுத்தமான மனதில்
பலகார பட்டிமன்றம்
நடத்துகிற காலம்
சிலந்தி வலையாய்....

ஆயுதம் பிடித்தக்கைகள்
அமைதியின் அடையாளம்
பெருவெளி வெடிப்பாய்
சிரிக்கிற மனசாட்சி....

கொலையும் புனிதம்
கொல்வதும் புனிதம்
சத்தமாய் இல்லாமல்
சாட்சியும் இல்லாமல்....

சைவவிரத அரிமாக்கள்
சதைதின்ன காத்திருக்கும்
சந்தர்ப்ப அவகாசத்தில்
இழுபறியாய் வாழ்தல்....

துப்பாக்கியை முத்தமிட
இதழ்களை பழக்கப்படுத்த
ஈரமும் இரத்தமும்
காய்ந்த மனங்களில்....

கண்ணீர் ஆவியாகும்
கன்னத்தின் தகிப்பில்
எண்ணமும் எரிகிறது
ஏக்கப் பெருமூச்சாய்....

Sunday, March 02, 2014

”முழங்கு தமிழ்...!”

எட்டுக எட்டுக வையகம் எட்டுக
கொட்டுக கொட்டுக வானுர கொட்டுக
மானுடம் பிறந்த மண்கதை கொட்டுக
மாந்தர் குழாம் காதில் உறைக்கவே

தட்டுக தட்டுக பண்ணிசை தட்டுக
பைந்தமிழ் பாடியே நல்லிசை தட்டுக
வாய்மொழி யாம்தமிழ் வையகத் துதித்த
தொன்மொழி யாம்புகழ் கொண்டிட கொட்டுக

இலக்கண மரபுகள் பிறந்ததும் தமிழிலே
இசையியல் மரபதன் ஊற்றாம் தமிழ்
இன்பத்தை பகிரவே இயல் இசைத்தமிழ்
உணர்வெலாம் ஊற்றாக பொங்கிடும் தமிழ்

பன்னெடுங் காலமாய் பாடிய தமிழ்
தன்னெடுங் காவியம் மேவிய தமிழ்
பொன்னேடு பொதிந்த பொக்கிசத் தமிழ்
என்னாடு தந்த உயருயிர் தமிழ்

பன்னாடுங் கடந்தே பல்கிய தமிழ்
பன்னாடும் கலந்தே ஒல்கிய தமிழ்
உள்ளாடும் உணர்வென ஓதிய தமிழ்
உன்னுள்ளே ஊணிலே ஊறிய தமிழ்

கசையடி பட்டும் இசையடி சொட்டும்
கவின்மிகு கவிதைகள் இதழ்வழி கொட்டும்
புவின்மிகு காதலும் புண்ணிய சாதலும்
தன்னுடன் பிறந்த காப்பென கொட்டும்

வானிசை வயலிசை வயங்கு கொல்லிசை
தேனிசை பூவிசை புயலிசைப் பூட்டியே
பொற்சபை சிற்சபை பொன்னொளி வீசியே
எண்ணருங் காப்பியம் தன்னுலே கொண்டிடும்

தமிழ்மறை ஓங்கிய தனித்தமிழ் நாடே
தமிழரை சுமந்தே தமிழை வளர்த்த
தமிழர்தம் பூமியில் அமிழ்தம் தமிழே
தான்சென்ற திசையெங்கும் தழைத்திடு தமிழே

Saturday, March 01, 2014

”தமிழின் தாகம்...!”

என்னை நீ கொன்றதும்
என்னுடல் சதை நீ தின்றதும்
எலும்புகள் உடைத்து மென்றதும்

புத்தியில் உறைந்தே கிடக்கிறது
புழுக்களென எண்ணி நசுக்கியதும்
புன்னகை வீசி மறைத்ததும்

புதைந்தா போய்விடும் பூமியில்....

உன் தாகத்துக்கு
என் கண்ணீரை குடித்தாய்
உன் தேகச்சத்துக்கு

என் குருதி உறிஞ்சினாய்
எத்தனை அவலம் உண்டோ
அத்தனையும் நிகழ்த்தி காட்டியது

நிழற்படமாய் இருக்கிறது
நினைவுகளில் என்றும் அழியாது...
நீ என்னை கொன்றது

உன் விழிகளின் இமைகளில்
உறுத்தும் சிறுதூசு நான்
உன் உள்மனம் எழுப்பும்

கேள்விகளில் என் வேள்விகள்...

பிணம் தின்ன நீ
பழகிய நாட்களில் தான்
சதை இழந்தேன் என்பதை மறவாதே...

பின்னிய சதிவலைகளில் தான்
பின்னும் உயிர் இழந்தேன்
பிழைகளின் பிறப்பிடமே - என்

வரலாற்று பிழைகளின்
பிறப்பிடமாய் நீ மாறிப்போவாய்
தகப்பன் கறிதின்று உயிர்வாழும்

பிள்ளை நீயென்று அறியாது போனேனே...

தவறாது உன் தவறுகள்
தப்பாது என் வரலாற்றில்
தடங்கள் பதிக்கும் மறவாதே....

இதழ்களில் முத்தமிட்டு
இடையில் கத்தி சொருக கற்றதெங்கே...?
இன்னும் பிழை செய்....

குற்றுயிராய் இருந்த என்னை
குலைநடுங்க கொல்லும் வித்தை
குழிகளில் போட்டு புதைத்து

விளம்பரங்களில் அமைதியை
வீசி சென்ற புதிய யுக்தி
பூசிமறைக்க முடியாத உண்மைகளை...

நாசிமுழுக்க சுமந்து திரிகிறேன்
நாடு நாடாய் அலைந்து கழிகிறேன்
நாற்நாறாய் கிழிந்து மடிகிறேன்

விழுந்து கிடக்கிறேன் விடியலுக்காய்...

பிறந்த மேனியாய்
பிணம் தின்ன விரும்பிய
தினங்களில் தான் புதைக்குழிகள்

பிறந்தன என்பதை மறவாதே..!
பிழைகளில் எழுதிய பிழையான
உன் வரலாறுகள் திருத்துவேன்

ஆணிவேரிலா ஆலமரம் நீ...
ஆழ்மனம் கொன்ற மானுடம் நீ...
பாழும் உலகில் பழிசுமக்க போகிறாய்

கற்பை சூறையாடி உனக்கொரு
கல்லறை கட்டிக்கொண்டாய்
கடவுளை கொன்று விட்டு...

Thursday, February 27, 2014

”வாழ்தல்...!”

இங்கே பிறந்தோம் இங்கே வாழ்ந்தோம்
இன்பம் துன்பம் இரட்டைகள் யாவும்
இங்கே கடந்தோம் காலம் தோறும்
இங்கே தவமாய் கிடந்தோம்

துடிப்பும் நடிப்பும் அறிவும் ஆற்றலும்
திரிதலும் நிலைத்தலும் தேடலும் நாடலும்
தேவைகள் மாறியும் ஓடிய காலங்கள்
தேன்கூட்டு சேமிப்பாய் தேகத்தில்

வான்கூட்டு வகைதனில் வந்ததிந்த பிடிமானம்
வான்கூட வகையாய் பிரிந்ததே பரிணாமம்
நாட்கூட நாட்கூட பிரிவினில் உறவுகள்
பிறந்து பிறந்து செரித்தது

வலிந்து கட்டி வரிந்து கட்டி
வலிமை கூட்டி புலமை காட்டி
இனிமை தேடி இருத்தல் தேடி
இங்கே கிடந்தோம் - மிகுதியின்

மிச்சமாய் பாலினப் பகுப்பில் படைப்பென
நிகழ்த்திய பருப்பொருள் கடத்தல் வெளிவர
விழுமிய உடற்பொருள் நுணுப்புகள் திமிரிய
வெதும்பலில் விழுந்து கிடந்தோம்

தன்னால் ஆவது தானொன்று மில்லை
தன்மையுள் தன்னை அறியாத தொல்லை
திண்மையாய் உரைத்தும் பன்மையாய் கேள்வி
கேட்பது நாம்செய்யும் வேள்வியாய்


பிறையின் பிறழ்தல் பிழையென பிறழ்தல்
பிறையது சுழலச் சுழலும் முழுமை
குன்றல் குன்றென நிற்றல் யாவும்
இயக்க நிலை மாற்றம்.

”பண்பிலது பார்...!”

செறிவடர் செங்கீற்று சுடரொளி
சிதறிய புறவெளி சிந்திய பொன்னொளி
பதறிய ஆழியின் ஆர்த்தெழு அலையொலி
ஒளியருவி ஊடறுத்த கண்ணொளி

கவினுரு புலநுகர்வு புத்தியில் அழுந்திய
கழிமுக வண்டல் வளமென் கவிதை
சுழிமுகத் தென்றல் சுகமென தழுவல்
சுழுமுனை அடிபொதிந்த கருப்புதையல்

எழுவன எண்ணங் கள்ளென என்னுள்
ஏழ்கடல் கொதிப்பு ஆழ்மடல் விரிப்பு
தாழ்மடல் திறப்பு பாழுடல் தகிப்பு
ஆழ்மனச் சிரிப்பில் அடங்குதல்

வாள்முனை விழியில் கூர்முனை காட்டிய
வன்மம் துணிந்த உள்மனக் குவியல்
ஆற்றல் பொழிதல் அனுபவ குளியல்
வீரிய விதைகளின் முளைப்பில்

கண்டும் விண்டும் கவிதையில் முகர்ந்தும்
பண்டும் தொண்டும் புவியினில் விழைந்தும்
பண்பும் அன்பும் பரணில் ஏறிய
கண்டம் கண்டதும் தகுமோ...?

”பொன்னியம்மா..!”

 
குடகு முதல் கடைமடை வரை
குறுகியும் விரிந்தும் குடத்துள் நுழைந்தும்
இருபக்க கரைகளில் பரவிய தூரம்
இயற்கையை பசுமையாய் இருக்க செய்ய

தன்னை விரவிய தயாள குணமும்
தண்ணீராய் உருமாறி தரையெலாம் கழுவிய
தன்கடன் ஆற்றும் காரணமே - ஆறாய்
அதுவே உனக்கு பேராய் விளங்கிற்றோ..!

வாழ்வியல் வரலாறுகள் உன்காலடி கீழ்
சுவடிகளிள் பொதிந்திருக்கும் காரணமோ - உன்னை
பொன்னி என்றனறோ..?! முன்னோர் செய்த
நற்பயன் யாவும் நெற்பயிராய் ஆக்கியதால்

தாயோ எங்கள் சேய்களின் தலைமுறைகள்
தாங்கிப் பிடித்து காக்கும் காவல்
புரிந்த காரணமோ - காளி ஆனபின்னும்
புவியில் காலியாகா காவிரி கருணையே

குறுதி சுமந்து குறுகி நடந்து
கரைகள் உடைத்து கறைகள் துடைத்து
மறைகள் திகழ மண்ணில் வளர
எண்ணிலா காலம் வரமாகிய வாழ்வே..!

இருகரை யெங்கும் கருவறை தாங்கும்
திருக்கோயில் நிறுத்தி திருமறை வளர்த்து
தலைமுறை சிறக்க தமிழ்மறை செழிக்க
தமிழனாய் மடியில் கிடந்த நாங்கள்

வாழ்விழந்து வறுமை யடைந்து இன்றும்
தாழ்வடைந்து தன்னிலை மறந்த தறுதலையாய்
பாழடைந்த சமூகம் சிலதலை முறையாய்
பழுவேது மிலாதொரு கொழுவேறு நிலையடைய

பாய்ந்துவா எங்கள் பொன்னி யம்மா
தடைகள் கடந்துவா எங்கள் காவிரி
தரணியில் தமிழனை உயர்த்தும் நீர்விரி
கரைகள் உயர்த்தும் எங்கள் கறைகள்

கலைந்து கழநி காடு வயல்வெளி
திரிந்து மண்மணம் நுகரும் சுகம்தா..!
படிகள் படைகள் எதுவும் உனக்கு
தடைகள் ஆகா செந்தமிழ் நாடே..!

Wednesday, February 26, 2014

”சிவம்...!”

சிலை என்ற ஒன்றில் நின்றது
சிவம் என்ற ஒன்றாய் சுழன்றது
சவம் என்ற பலவாய் கிடந்தது
சகம் என்ற நிலையாய் திரிந்தது

சுகம் என்ற சூத்திரம் பிறந்தது
அகம் என்ற சூட்சுமம் வளர்ந்தது
முகம் என்ற பாத்திரம் பிரிந்தது
இகம் என்ற பானையில்.

”தாய்...!”

இசையருவி கொட்டும் மலையருவி திட்டும்
தாளகதி மாற்றி மாற்றி தகதிமித்தோம்
தழுவலும் துள்ளலும் பாவம் மாற்றி
தன்னடை மாற்றி பண்நடை மாற்றும்

காட்டாறு கரையோரம் இன்பத்தை கொட்டும்
சின்னஞ்சிறு புள்ளினம் உற்சாக துருதுருப்பில்
எண்ணமுறு மனமோ இன்பக் குறுகுறுப்பில்
வண்ணம் பலகாட்டி வாரியிரைக்கும் நீரலையில்

கவின்மிகு கவிதைகள் கொட்டி இறைத்து
கரைபுரண்டு அலைதிரண்டு கட்டி அணைத்து
கவிபாடி புவியோடி வாழ்வின் வேர்கள்
கணந்தோறும் உயிர்பித்த கருணை வடிவம்

மண்ணில் பொன்னை வாரி இறைக்கும்
தண்ணீர் பந்தல் இராகம் அமைக்கும்
உயிரின் இசையாய் மையல் கொள்ளும்
இயற்கை நதியாம் எங்கள் தாய்.

மின்மினிகள்....!



மின்மினிகள் கலைந்து கலைந்து அலைந்து
மின்னல் கோடுகள் வரைந்து காட்டும்
இரவின் ஒளி கோலங்கள் சிரிக்கின்றன
உதிராத விண்மீன்கள் உறைந்து கிடக்க

பறந்து பறந்து ஆசை மூட்டும்
பரந்து விரிந்த வான்மீன் பார்த்து
திறந்த வெளியில் சுதந்திரமாய் திரிந்து
கண் சிமிட்டி சிரிக்கும் ஒளிச்சுடர்..!

அடர் இருளை ஒளிவீசி கிழிக்கும்
ஆனந்த பயணம் ஆர்பரித்து எழும்ப
ஒளிவீசும் ஒங்கி உயர்ந்த மரங்களில்
கைவீசி நடக்கும் கண்மணிகள் மின்மினிகள்

இடமும் தடமும் பெயரா ஒளிமீன்கள்
இந்த காட்சி கண்டு நாணி
விழுந்து இறக்கும் விடியல்கள் ஏராளம்
விடிந்த பின்னே இரண்டுமே...!!

Tuesday, February 25, 2014

”சுயநல பிழை..?”

எனக்கென்ன எதுஎது எக்கேடு கெட்டாலும்
தனக்கென்ன தன்வரையில் எல்லாம் சரியாயிருக்க
உனக்கென்ன வந்தது இப்படி உரைக்கிறாய்..?
உனக்கான போராட்டம் உனக்கானது - அதில்

எனக்கேதும் பங்கில்லை ஏனென்றால் நீயும்
நானும் நாமில்லை - பிறகென்ன கேள்வி
பிரிந்து நின்றே நம் வேள்வி
பிளவுற்றே பிரிவுற்றோம் பிரதேச பிரதிநிதிகளாய்

வந்தவன் ஆளட்டும் - இங்கு வாழ்ந்தவன்
மாளட்டும் மண்ணில் தஞ்சம் பிழைக்க
வந்தவன் ஆளட்டும் - தரிசு திருத்தி
தரணி ஆண்டவன் தொலையட்டும் - நமக்கென்ன..?

வெட்கமா...? மானமா...? இரண்டும் கெட்டான்
பெற்ற பிள்ளைகள் நாங்கள் - பிறவியால்
மண்ணில் விளைந்த தொல்லைகள் நாங்கள்
ஒருபிடி சோற்றுக்கும் ஒருகுவளை நீருக்கும்

பஞ்சம் பிழைக்கும் அடிவயிற்றுக் கோழைகள்
எங்கள் தேசத்துத் திண்ணை தூங்கிகள்
அயலான் வீட்டு வெண்ணை நக்கிகள்
நாங்கள் உயர்ந்த மானுடத்தின் அடிமைகள்

எங்களை “தமிழன்” என்கிறது உலகம்.
எங்களை “திராவிடன்” என்கிறோம் நாங்கள்
எங்களில் எங்களை பிரித்து ஆளும்
எங்களுக்கான தலைமைகளின் சதியாட்டம்.

Monday, February 24, 2014

"கற்பி...!”


சிறுசிறு தூறலில் சிதறிய மணலில்
சிதறிக் கிடக்கிற சிந்தனைத் துளிகள்
உதறி எழுந்த உதறலில் தெறித்த
சிறுசிறு மண்துகள் மனதின் நினைவுகள்

ஊணுறை உயிர்வரி வரைந்திட துடிக்கும்
உளிகளாய் விழுந்திடும் துளிகளின் வீச்சும்
செதுக்கவே சிதைத்திடும் சிறுகல் தெறிப்பும்
உள்வெளி திருத்தம் உள்ளொளி பெருக்கம்

கண்ணுறா பொலிவு மனமது கண்டு
கல்லுற்ற கடினத்தில் சொல்லற்ற வடிவத்தை
தன்னுற்ற கரத்தாலே தன்சிந்தை திறத்தாலே
எண்ணற்ற எழிலார்ந்த சிற்பங்கள் முடித்தானே.

"தலை..மை...!”

ஒருகை யகல நிலம் ஆள
இருகை கூப்பி தலை வணங்க
வருகை தரும் தலைகள் பாரடா..!

உவகை கொள்ள ஏதுமிலா
உயர்ந்த குறிக் கோளுமிலா
தளர்நடை தலைவரை காணடா..!

மாறுகை ஓங்கி மண்ணில்
மாறுகால் வாங்கா நிலையில்
நூறுகால் நடுவதை தடுப்பதாரடா..!

தாரகை கள்விற்கும் தந்திரமும்
தாரை வார்த்த கண்ணீரும்
தமிழனை அழிப்பது கேளடா...!

மனிதம் கொன்று மண்ணை
ஆளும் மிருகம் நமக்கு
தலைமை கொள்ளல் ஏனடா..?

Thursday, February 20, 2014

”நிலா முள்...!”

கருதிய கருத்தும் மனதில் இடைச்செருகிய
எண்ணம் உள்ளெழு சிந்தனை வாய்மொழிந்த
சொல்லும் கல்லென விழும் கவிதையோ..?
புல்லென எறிந்த பூவோ..?! - அறியேன்

நில்லென நிற்றலும் செல்லென ஏவலும்
வாவென்ற ழைத்தலும் வாடிக்கை தானுனக்கு
வெதும்பும் மனதில் வேடிக்கை தானெனக்கு
ததும்பும் விழிகள் கதம்பம் கோர்க்கும்

கண்ணீர் மாலைகள் கழுத்தில் விழுந்தும்
கனத்த மார்பில் நனைத்து பரவும்
அடர்ந்த நினைவுகள் அழிக்கும் முயற்சியோ..?
அறியேன் - சூதென்ற உன் வாதமும்

சுள்ளென்ற சொல்லும் கொல்லென்று சொல்லும்
கருகிய கட்டையில் உருகிடும் நெய்யது
உதவாது உயிர்க்கு - பேதமிலா பெருந்தீ
நின்றெறி தலைமுதல் கால்வரை கோபத்தீ

சென்றெறி உந்தன் உளவழுக்கும் வழக்கும்
கண்டறி காணுதல் மெய்யதும் மெய்யற்ற
மேன்மை தன்னில் போய்நின்ற பொய்யழகே...!
கையற்ற வாழ்வினுக்கே கடைக்கண்.

”முரண்தொடை...!”

நுனியில் பற்றியத் தீயின் நாக்குகள்
கசியும் புகையை நுகரும் மனிதம்
இசையின் சுரங்களை உணர்தல் இயலுமா..?
எரியும் புல்லாங்குழல் கேட்கிறது...

விளக்கின் ஒளியில் விழுந்து இறக்கும்
இரவு வாழ்க்கை வாழ்ந்து முடிக்கும்
விடியலில் எழும் கதிரவன் ஒளியால்
கவரப்படாத விட்டில் பூச்சிகள்...

பூக்களைத் தின்று இலைகளில் கூடுகட்டும்
புழுக்களின் பசியினில் அழிந்திடும் செடிதனில்
அழகிய தலைமுறை பிறந்திட வேண்டியே
ஆழமாய் வேர்களின் பயணம்...

புழுக்களை கொன்று புரதம் எடுக்கும்
வன்மம் காட்டும் வனச்செடி இன்னும்
வண்டுகள் தின்று வாழ்ந்திருக்க கூடுமெனில்
வேர்களின் வேலைதான் என்ன...?

ஒட்டகம் குடித்த நீரைக் குடிக்க
ஒட்டகம் கொல்லல் புனிதம் என்னும்
பாலையின் தர்மம் பரவிய உலகம்
ஒட்டகம் கடிக்க ஒவ்வுமா...?

இழுபறி நிலையில் இருக்கும் இறைச்சியில்
ஊசலாடும் உயிரின் வேதனை உணர்தல்
கோரைப்பல் கொண்டு கிழிக்கும் பசிக்கு
காலம் காலமாய் இரையாமோ...?

கொல்லலும் வெல்லலும் துள்ளிய துள்ளலும்
ஒருகோடியில் மறைந்த அதிசயம் கண்டும்
ஆயிரம் காரணம் அடுக்கியே காட்டும்
ஆறாம் அறிவை என்சொல்ல..?

Monday, February 17, 2014

”அங்குசம்...!”




அங்குச பயம் அழியாத களிரின்
அறியாமை பிளிறல் வான் கிழிக்க
அங்குசம் ஏந்திய கைகளில் நடுக்கம்
அறிந்தால் நடக்கும் ஆபத்து அறிந்தே

சுருங்கலும் விரிதலும் அறிவுக்கும் மனதுக்கும்
சூட்சும புரிதலில் அடங்கும் தேடலில்
சுருங்கும் ஒன்றே வாழ்வில் அடங்கும்
சூழ்நிலை வகுக்கவோ கடக்கவோ இயன்றது

வாழ்நிலை வகுக்கும் தொகுக்கும் பகுக்கும்
வாழ்தலை அனுபவம் ஆக்கித் தெளியும்
நூதன வழிகள் நுணுக்க முறைகள்
நன்னறிவில் ஏற்றி வைத்து நடமிடும்

அற்புத குவிதல் அழகிய விரிதல்
சொற்பதம் தொகுத்து கற்பத நூலில்
கைவினை ஆக்கும் முற்பத நாளில்
மாமரம் மறைத்த மதயானை தன்னில்

பூமர நிழலில் சாமரம் வீசிடும்
பாமரச் சாயலில் காய்மரம் ஏசிடும்
கனியா அறிவின் சுவடில் காயும்
தனியா தாகம் வாழ்வின் மோகம்

வெஞ்சன சுகமும் வெஞ்சின பகையும்
மிஞ்சின அளவில் அஞ்சுக அஞ்சற்க
வேழம் கொள்மதம் மனம் கொள்க
ஆயிரம் அங்குசம் அடக்கும் நம்மை

தோளுரம் நெஞ்சுரம் நீங்கா இனமடா
தோழமையே..! போர்த்திக் கிடக்கும் சோம்பல்
முறித்தே பூமகள் புதல்வன் நாமென
முழங்கு மனமே முழங்கு.

Saturday, February 15, 2014

சுடும் சுகம்...!

கிண்ணத்தில் எடுத்த முதம்தனை ஊட்ட
கன்னத்தில் வாங்கி கடையிதழ் சிந்தி
குழைத்து குழைத்து வழித்து திணிக்கும்
குழைந்த அமுதம் தாங்கும் குமுதம்

இளைத்து மெலியா திருக்க காட்டும்
நகைத்து நடித்து சுவையை ஊட்டும்
குழலென நெளித்து குவளைவாய் இசைக்கும்
மழலையின் யாழென குரலின் மயக்கம்

தவழல் தழுவல் இரண்டும் கலந்தே
தானே நடக்கும் உணர்வின் கலத்தல்
மானே..! மயிலே..! ஊணே...! உயிரே...!
தேனே..! தென்னவ செல்வமே..! அன்னமே..!

அஞ்சிக் கொஞ்சி ஆசையில் மிஞ்சி
இலவம் பஞ்சாய் இருகை ஏந்தும்
அழகின் ஊற்றில் அருந்தவ தேற்றல்
கலைய கஞ்சியில் காணும் சுகமாய்

இருந்த சுகம் இழந்த சுகம்
ஈடுசெய் பேறாய் ஈன்ற சேயாம்
இருதலை கொள்ளிக்கும் இருதலை கொல்லிக்கும்
இருத்தலை சொல்லியே இயம்புதல் வாழ்வாம்.

Thursday, February 13, 2014

”இருத்தலில் இளைத்தல்..?”

மிகுவன மொடுமலை பாயும்நதி சூழும்
பரந்த நிலம் கரடும் முரடும் திருத்தி
கதிர் விளைந்து குதிர் நிரம்பும்
பணிசெய் பைந்தமிழ் பாட்டன் பூமி

நெடுநெல் வெண்கரும்பொடு செங்கரும்பு சிறுதானியம்
பயிர்த்தொழில் உயிர்த்தொழி லாம்நமக்கு - ஆவியில்
விளைந்த அருந்தாகம் மேவிநின்ற வாழ்வினில்
அலைந்து திரிந்து அல்லும் பகலும்

ஆக்கிய நல்வினைகள் நமக்காய் இன்னும்
ஆறாய் குளமாய் ஏரியாய் குட்டையாய்
கோயிலாய் சத்திரமாய் சரித்திரமாய் யாவும்
நிகழ்காலம் காட்டி நீளும் சாட்சியாய்

ஆயினு மென்ன அறியா நமக்கு
நாயினு மிழிந்த நிலை யறியா
வாழ்வினை பிடித்து தொங்கும் வௌவால்கள்
நல்லதும் நன்றியும் மறந்து திரிய

அல்லதை கட்டி அடுத்த தலைமுறைக்கும்
அதையே காட்டி ஊட்டி வளர்க்கும்
சதை விற்கும் சமூகத்தின் அடர்நிழலில்
கதை கொண்டு எழுவாத அனுமன்கள்

உழுத நிலம் உண்ட வீடு
பழுதாய் விட்டு - கண்டம் பாயும்
அண்டத் துகளாய் பிண்டம் மாய்தல்
அறிவியல் என்றே இயம்புதல் நன்றோ...?!

குன்றின்மணி குணம் மனிதரில் ஒரு
குன்றின்மணி அளவேனும் இன்றேல் நமக்கு
குன்றும் ஊணும் உயிரும் இழிந்தே
குறித்த நல்வழி குறித்தே.



Friday, January 31, 2014

நிலவின் நிழல்...!

பிறைமதியே யாயினும் குறைமதி ஆயினள்
பிறைநுதல் பெறினும் கரைமீற நேர்ந்தனள்
கவின்வடி வாயினும் கவியே வடிப்பினும்
கொள்குறி கொள்ளல் தள்ளல் குறைபடின்

நிறைகுறி கொள்ளல் நிலைகுறி கொள்ளல்
நிறைமன நிற்றலில் நிற்பதறியா மென்தளிர்
நின்மலர் மணமெலாம் என்மன வாசமடி
நுண்மதி காண்பது நொங்கும் நுரையும்

வளர்மதி யாயினும் வான்பிறை யாயினும்
வன்மை காட்டின் சிதறும் சிந்தை
மென்மை ஊட்டின் குளிரும் உள்ளம்
தன்மை அறியா தகைமை தானாநீ

நல்மன வெளியில் போய் விழுந்த
நல்விதை முளைத்த வாயிலை எழுந்த
நன்னில மதுவோ என்னில் கொழுந்தாய்
நாளும் மூளும் நாட்ட மறியாயோ..?!

கதிர்மறை கருந்திரள் அலைவினில் உறையொளி
காணுதல் கண்மறை யாயினும் கதிர்வெளி
மீளுதல் பெண்மதி காணுமோ..? - சுடரொளி
சூழ்ந்திட இடர்தனை தாவுதல் நன்றே

தெளிநீர் கலங்கி தெளிந்த பின்னும்
தெளிவது வெள்ளம் - உள்ளம் துள்ளும்
வெள்ளிமலை மீதினில் படரும் ஒளியாய்
விழும் உயிர்தனில் ஓர்துளி அன்பினால்.

Saturday, January 18, 2014

கவி....”தை”..!

உள்ளத்து பள்ளங்களில் இட்டு நிரப்புகிறேன் உன்னை - உள்ளே
உணர்வுக் குவியல் தொட்டுச் செல்கிறது உன்னை - வெளியே
உந்தித் தள்ளும் உணர்வு முகிழ்ப்புகளை விழுங்க - தனியே
உட்கார இடம்தேடி தவிக்கும் உள்மன ஒழுகலில் - சகியே

உன்னை என்னுள் செதுக்கச் செய்கிறேன் நினைவே - சிலை
தன்னை கலை அன்னை காணுதல் போலே - மலை
தன்னில் மறையும் கதிரவன் பாய்தலாய் உள்மன நிலை
என்னில் கரையும் என்னை நானே தேற்றத் தோற்கிறேன்

மின்னல் வீச்சில் ஊடுறுவல் செய்து மனதை சாய்க்கும்
கன்னல் மொழியில் கண்கள் கொய்து கயல் விழிகள்
பின்னல் அளந்து பின்னால் காட்டும் கார்குழல் - நடையில்
அன்னம் கலந்த அழகு காட்டும் ஒய்யார இடையில்

அருவி கொட்டும் நீராய் பெருகி வரும் தமிழால்
அறிவு மடை திறந்த கவிவயல் நிரம்பும் எழிலால்
செறிவு ஓடை கலந்து உளவியல் ததும்பும் பொழிலால்
குருவி கூடாய் ஆடும் சித்தம் உன்னால் நித்தம்

சமர் புரிய சரிசம அமர் நிலை ஆய்ந்து
சடுதியில் புரிந்த முத்தப் போரில் ஆழ்ந்து - விடுகையில்
சத்தமின்றி வீழ்ந்தே வாழ்ந்த நிலை நினைவுத் தொடுகையில்
சாமரம் வீசிடும் நிகழ்கால நிமிடங்கள் கரைந்தே - நிசத்தில்

பாமர சிந்தனை பாய்மர ஓட்டம் எடுக்க - அலை
பாயும் மனதின் நிந்தனை வாட்டம் கொடுக்க - நிலை
மாயும் குணத்தை நிறுத்த பாட்டும் தொடுக்க - கலை
வாயும் சுவைத்தமிழ் சிந்தும் சந்தம் கனிவாய் - உலை

இட்ட அரிசியும் உணவிட்ட அரசியும் கலந்திட்ட வேளை
முட்ட முட்டும் தலையில் தொட்டும் கையொடு - கண்கள்
பட்டும் எட்டும் நிலையில் கிட்டியும் கிட்டா இன்பம்
தொட்டு தொடரும் இலையில் பரிமாறல் இதமாய் - வாழ்தல்

வகுத்தல் பெருக்கி தொகுத்த குறுநகை செல்வம் - ஈதல்
பகுத்து இன்புற செழித்து வளர திருமுகம் - காணல்
களித்தல் திளைத்தல் கானக மானும் மயிலும் ஒத்தல்
பொத்தல் பையில் சேமித்த சில்லரை தொலைந்த பிதற்றல்

தொகுத்து மொழிதல் மொழிந்த மொழியில் புரிதல் புகுதல்
புகுத்த விழைந்த அழைத்தல் மிகுந்த அன்பில் அமிழ்தல்
முகத்து முகத்தில் நெகிழ்தல் சிமிட்டும் கண்கள் உயிர்த்தல்
அகத்துள் அகத்தை ஆழ்த்தி கிட்டும் ஆனந்த உலகம்.

இங்கே பிறந்து இங்கே இறக்க....

இங்கே பிறந்து இங்கே இறக்க....

முடியும் வாழ்நாள் கழித்தல் ”வாழ்வு”
பெரும் பொருள் சொல்லும் பொருள்
பேதை மனம் விட்டு பொருள்
தேடுதல் தொழிலாம் உயிர்க்கு

நாடுதல் வாடுதல் ஓடுதல் முடியும்
நாடியும் நரம்பும் ஓயும் ஓர்பொழுதில்
மாயும் உயிர் தவிக்கும் புரிதலில்
வாழாதுபோன வாழ்வை எண்ணி

நல்லதை நாடாது நாடாகாது யாதும்
நல்லதை தேடாது வளராது நல்லது
நல்லதை ஓதாது உயராது மானுடம்
நல்லதை வாழாது நல்லதும் புரியாது

அல்லவை பெருக்க அல்லவை செய்தல்
அல்லவே அல்லவை போக்கல் வழியாம்
அல்லவை நீக்கல் நல்லவை ஆக்கல்
அல்லவோ அல்லவை அழிக்கும்

மோகத்துள் மூழ்குதல் வேகத்தில் விழுதல்
தாகத்தில் தழுவுதல் யாவும் நிலையா..?
தேகத்துள் புத்தி திரிந்து முடிந்து
திருந்துங்கால் வாழ்வில் வருந்துங்கால்

ஒன்றே முடிந்த செயலாம் செயலற்ற
உயிர்க்கு அழுதலும் தொழுதலும் ஆற்றாமை
இறைபெருக்கு நிறுத்தி இரைப்பெருக்க நீந்தி
குறைபெருக்கும் குற்றம் பெருகுதல்

முற்றும் ஒழிதல் வேண்டி முயலுதல்
முன்னம் செய்த பிழைகள் அகலுதல்
பின்னும் தழைக்கும் தலைமுறை நிலைத்தல்
என்னும் எண்ணம் வேண்டுகிறோம்.

Friday, January 17, 2014

”குயிலும் கவியும்...!”



அந்த வனத்துக் குயில் மௌனிக்கிறது
கிளைகளில் நம்பிக்கை இல்லா தீர்மானமோ..?!
அமர்ந்து அமர்ந்து எழுந்த அலுப்போ..?
அங்கும் இங்கும் திரிந்த சலிப்போ...?!

கவிஞன் திசை நோக்கி தியானிக்கிறான்
இசையின் பிறப்பிடமே ஏனிந்த தயக்கம்..?
அசையும் உன்னசை விலன்றோ எனக்கான
அரங்கேற்ற ஒத்திகை நிகழ்ந்து விட்டது

விழிகளின் வீச்சில் காட்டும் அச்சம்
மொழிகளை ஊமையாய் மாற்றிப் போட்டதோ
கழுத்து அசைவில் சுழலும் உலகம்
நின்றதோ எனக்கு..? முன்னும் பின்னும்

தேடலில் விரியும் தேகத்துள் மனம்
கூடலில் சொரியும் மேகத்து துகளாய்
மிதக்க மிதக்க கனத்து பொழிகிறது
இணக்கம் சுணக்கம் இருத்தல் பிரிதல்

கலைந்து கலத்தல் கவிதையாம் வாழ்வில்
அலைந்து வளைந்து நெலிந்து மெலிந்து
சலைத்த மனம் ஆட்டம் நிறுத்தி
இலயித்து கிடக்கும் ஆடலரசன் அழகில்

ஓங்கி ஒலிக்கும் உயிர்க்குரல் சிலிர்ப்பில்
வாங்கி எழுதும் கவிதை குயிலின்
ஏக்கம் தெறிக்கும் முகிலின் தென்றல்
தாங்கி சிரிக்கிறது கவிஞனின் மனம்.

Thursday, January 16, 2014

”பொங்கல்”

தமிழா.............!
 

உள்ளே உறங்கி கிடக்கும் உணர்வு பொங்குக
தனியே பிரிந்து கிடக்கும் இனமே பொங்குக
கனியான மொழியாம் தமிழில் பொங்குக
காலத்தில் மூத்தவனே உண்மை பொங்குக

நீர்த்த கதைகளை களைந்து பொங்குக
நீரும் நிலமும் நமக்கென்றே பொங்குக
வீரமும் மானமும் இருகண்ணில் பொங்குக
ஈரமும் ஈகையும் நாமென்று பொங்குக

அறிவும் அனுபவம் அனுதினம் பொங்குக
துணிவுடன் தூய்மை போற்ற பொங்குக
நனித்தமிழ் சுழலும் நாவென பொங்குக
மனம் புரிந்த மரபில் வந்தோமென பொங்குக

பெண்மையை உண்மையாய் மதித்தோமென்றே பொங்குக
பொய்மையை முதலாய் மிதித்தோமென பொங்குக
வாய்மையை வாழுங்கால் போற்றியே பொங்குக
தாய்மையை தெய்வமாய் தொழுதே பொங்குக

இறந்தும் இறவா புகழாய் பொங்குக
இன்னும் இருக்கும் தமிழாய் பொங்குக
வாழ்ந்த தமிழன் வரலாற்றை பொங்குக
வழிகள் வகுத்த இனமாய் பொங்குக

இழிவுகள் களையும் கண்கள் பொங்குக
இயல்பில் அன்பில் உயர்வாய் பொங்குக
இசையாய் உயிரில் கலந்தே பொங்குக
இனிக்கும் தமிழில் இனிதே பொங்குக

சுவடிகள் தொட்டே சுவடுகள் பொங்குக
சுகமும் நலமும் சுகமாய் பொங்குக
அகமும் புறமும் அறமே பொங்குக
ஆயுள்வரை யாவரும் நலமே பொங்குக

அடைந்த அவமானம் அகற்ற பொங்குக
அவனியில் அரசன் நீயென பொங்குக
நினைவிலும் அடிமை நீங்கிட பொங்குக
நீ நீயென வாழ்ந்திட பொங்குக

இல்லம் எங்கும் இன்பம் பொங்குக
இனமான சொந்தமே எழுந்தே பொங்குக
அடங்கா திமிரில் ஆர்பரித்தே பொங்குக
அறிவுநெறி ஆண்மக்கள் நாமென்றே பொங்குக

வண்ணம் இழைத்தே வாசலில் பொங்குக
எண்ணம் கலந்தே என்றும் பொங்குக
திண்ணம் கொள்ளும் தினமெல்லாம் பொங்குக
கன்னமெல்லாம் கனிய கனிய பொங்குக

நற்றமிழ் நாளும் செழிக்க பொங்குக
நம்மாடுகள் ஆடுகள் சிறக்க பொங்குக
நம்மாழ்வார் நினைவே நம்மில் பொங்குக
நாமே ஆழ்வாரென்றே ஆழ்ந்து பொங்குக

வையகம் புசிக்க வாழ்வில் பொங்குக
வாழ்ந்திட வரலாறு நம்மில் பொங்குக
பசியும் பிணியும் பறந்துபோக பொங்குக
அன்பும் அறமும் நாமென்றே பொங்குக


எழுவாய் தமிழாய்........கருவாய் தொட்டே....!

.... எனதன்பு தமிழினத்துக்கு இனிய புத்தாண்டு மற்றும் இயற்கையை போற்றும் பொங்கல் நல்வாழ்த்து.

Tuesday, January 14, 2014

கோலாட்ட பாடல் 2

தோட்டத்தில என்ன இருக்கு சின்னபுள்ள
தோட்டக்காரன கேட்டுப்பாரு கன்னிபுள்ள
வெள்ளரி விளைஞ்சிருக்கு சின்னபுள்ள - அதுல
வேலியும் போட்டிருக்கு கன்னிபுள்ள

சின்ன சின்ன மீனுங்க குளத்துல
துள்ளி விளையாடுது சின்னபுள்ள
காரமடையான் காத்திருக்கு கரையில
காரணம் என்ன கேளுடி கன்னிபுள்ள

கோழியும் மேயுது சின்னபுள்ள - அதுக
குஞ்சியும் மேயுது கூட்டத்துல
வட்ட மடிக்குது வானத்தில் பருந்து
வாட்ட மெடுக்குது கன்னிபுள்ள

பொந்தில பாருடி அணில் பிள்ளை
அணில் குட்டி இருக்கு உள்ளுக்குள்ள
கத்தியும் பேசாத கன்னிபுள்ள
கருடனும் இருக்கு கிளையில

விட்டத்து பூனையும் தெருவுல வந்து
விளையாடும் விதிய பாருபுள்ள
வேட்டை நாய்களும் வெறியோடு அங்கே
நோட்ட மடிக்குது கன்னிபுள்ள

அல்லியும் பூத்திருக்கு ஐய்யனாரு குளத்தில
சொல்லியும் விடாதே ஊருக்குள்ள
ஒருசோட்டு பயலுக புகுந்து அழிப்பான்
ஓரியாடி குளத்துல கன்னிபுள்ள

காடைகள் அடைஞ்சிருக்கு காட்டுக்குள்ள
காட்டியும் கொடுக்காத சின்னபுள்ள
முட்டையும் காடையும் பத்திரமா காட்டுல
மூடர்தம் கண்படாம கன்னிபுள்ள

மயிலும் குயிலும் மாந்தோப்பில் ஆடுதுடி - என்
மனசேனோ பின்னால ஓடுதுடி
வண்ண மயிலும் கானக் குயிலும்
வாழட்டும் வாடி கானகத்துல

குள்ளநரி கூட்டமொன்னு சுத்துது பாரு
முந்திரி கொல்லை மூலையில
கள்ளர் பயமும் காட்டுநரித் தனமும்
கண்டு மிரளாதே கன்னிபுள்ள

பனங்காட்டு பக்கத்துல பதுங்கும் நரிகளை
பார்த்தாலே பயம்வருது சின்னபுள்ள
பணம் காட்டும் நரிகளை விடவா
பயமின்றி வாடி கன்னிபுள்ள

கிணத்து மேட்டில் குமரிக் கூட்டம்
நீரிரைக்கும் அழகுல நிதம்
மூச்சி ரைக்கும் காளையர் கூட்டம்
சேதிய கேளுடி சின்னபுள்ள

வேலிய தாண்டாத கன்னிபுள்ள இது
வெள்ளாம திருடும் கூட்டம்புள்ள
குடத்து தண்ணி குமரிப் பொண்ணு
ரெண்டும் ஊர்சேரணும் சின்னபுள்ள

காலமும் இடமும் புரியணும் உலகில
வாழ்தலும் இருக்கு அதுக்குள்ள
வாட்டமும் வேண்டாம் வாடிபுள்ள – நாம
வாழும்பூமி பாட்டன் வீடுதானே.

Wednesday, January 08, 2014

கோலாட்ட பாடல்


அலைய அலைய அலை யடிக்குது
வலைய வலைய வாருங்கடி
வளையல் சத்தம் வானம் பிளக்கணும்
குலுங்கி குலுங்கி ஆடுங்கடி

பாட்டனும் பாட்டியும் கூடிக் களிச்ச
வாழ்க்கையை பாடுவோம் வாருங்கடி
காட்டுல மேட்டுல வீட்டில எல்லாம்
கல்லில் வடிச்சத பாடுங்கடி

இட்டதும் தொட்டதும் பொன்னானது இங்கே
பொட்டல் வெளியான பூமியில
இடுப்பு வளைஞ்சி மடிப்பு விழவே
உழைச்ச உழைப்ப பாடுங்கடி

ஆனமட்டும் இங்கே ஆணான ஆளெல்லாம்
ஆறு குளம்வெட்டி யானதிங்கே
நீரு நிலமெல்லாம் பாய்ஞ்சி வரவே
நித்த முழைச்சத பாடுங்கடி

உச்சி வெயிலுல சேத்து நிலத்துல
நாத்து நடுங்கதை பாடுங்கடி
கட்டு நெல்லுக்கட்டி களத்து மேட்டுல
கட்டி அடிச்சத பாடுங்கடி

மாட்டு வண்டியும் கூண்டு வண்டியும்
மண்ணில் பறந்தத பாடுங்கடி
மாமன்னன் ஆண்ட மண்ணும் இதுவென
மார்தட்டி குலுங்கி ஆடுங்கடி

சோழனும் சேரனும் பாண்டியனும் வந்து
சொக்கிப் போகவே ஆடுங்கடி
புலியும் வில்லும் மீனும் பறந்த
புண்ணிய பூமிய போற்றுங்கடி

விளைஞ்ச நெல்லில் விதை எடுத்து
விளைய வச்சத பாடுங்கடி
இன்று விளைஞ்சதுல விதையும் இல்லை
விதிய நொந்து ஆடுங்கடி

பூத்து குலுங்கிய பூமியில இன்று
வாட்டி வதைக்குது வறுமையடி
நம்ம வாட்டம் தீர்க்கவே வழியிருக்கா
பாட்டனை கூப்பிட்டு கேளுங்கடி

காட்டை அழிச்சோம் மாட்டை அழிச்சோம்
கருவ காட்டை பாருங்கடி
ஒருநாதி யில்லா இந்த தேசத்துல
வந்து நாம பொறந்தோம் பாடுங்கடி

கலைகள் வளர்ந்த காலமும் உண்டு
சிலைகள் காட்டியே ஆடுங்கடி
அள்ள முடியா வெள்ள மதிலே
அணைய கட்டினோம் பாருங்கடி

குள்ள நரிகளும் கூடி இங்குஒரு
கூட்டாட்சி  நடத்த வாருதிங்கே
கள்ளர் எல்லாம் கலந்து பேசி 
கட்சி நடத்துது பாருங்கடி

குறிஞ்சி முல்லை மருதம் எல்லாம்
காணாம போனத பாடுங்கடி
கரும்பு காய்ச்சி வெல்லம் எடுத்த
காலமும் இப்போ போனதெங்கே..?

இரும்பும் ஈயமும் உறுதி இழந்த
இந்த காலத்தை பாடுங்கடி
அடுக்கு மாடி கட்டிமுடிச்சு
ஆனது என்ன கேளுங்கடி...?

சொத்து சுகத்தை கட்டிக் காக்கவே
சொந்தங்கள் வெறுத்து போனதிப்போ
பெத்த தாயிக்கே காப்பகம் இங்கே
கட்டிக் கிடக்குது பாருங்கடி

கவரு மெண்டு காசு கொடுத்து
காப்பாத்தும் கதைய கேளுங்கடி
நேத்து இருந்த பண்பாடு எல்லாம்
காற்றில் பறக்குது பாருங்கடி

பூத்து உதிரும் பிஞ்சுகளே இங்கு
வேர்களை வெறுத்த நியாயமென்ன...?
காத்து வளர்த்த நன்றியும் நமக்கு
மனசில் நிக்காம போனதென்ன...?

தமிழன் தனித்த குணமும் இழந்த
தரித் திரத்த பாடுங்கடி
தலைநிமிரும் காலமும் எப்போ...?
தலை முறையை கேளுங்கடி.