Thursday, October 21, 2010

"அளவுக்கு மிஞ்சினால்..!" பாகம்-4



இறுகிக் கிடக்க பாறை...
இளகிக் கிடக்கும் நான்....
நெகிழ்ந்து கொடுக்க மணல்....
சிதறிக் கிடக்க கற்கள்...

என் தேகத்தின் உரோமங்கள் புற்கள்...!
நான் கையசைக்கும் விரல்கள் மரங்கள்...!
என் பெருமூச்சில் அலையும் மேகங்கள்...!
என் அசைவுகளில் மயங்கும் வான்காதலன்...!.

பலப்பல வடிவம் என்னில் யான்
பகல் இரவாய் பிறக்கும் பிறவி
திடங்களின் திடம் நான் கோள்களின்
கோலம் நான்...! காட்சி தரும் பிரபஞ்சம்...!.

சூனியத்தில் முளைத்த சூட்சுமம் நான்.
சூனியத்துள் விழுந்து எழுந்த விதை...!
சூரியக் கொதிகலனில் கொதித்து வந்த
பிரபஞ்ச பரிமாண கட்டுமானக் கலவை.

இருட்டு வெளியில் இறைந்து கிடக்கும்
துகள் கோள்களின் தூலம் நான்..!
பிரமாண்டங்களின் மூலம் பிரம்மன் படைத்த
ஞாலம்...! புரியாப் புதிரின் மையம் நான்.

கண்ணக் கடவுளுக்கு திண்ணக் கொடுத்த
திண்பண்டம் நான்...! கண்ணக் கடவுளைத்
திண்றவனும் நான்..! அவதாரங்கள் நிகழ
ஆதாரம், மூலங்களுக்கான பிரம்ம மூலம்.

மண்ணாகி... மண்ணே மற்றெல் லாமாகி
மலர்ந்து... மறைந்து நிற்கும் மாயா நான்.
புலர்ந்தப் பொழுதுகளின் காலக் கணக்கும்
புலராப் பொழுதுகளின் ஞாலப் பிணக்கும்

நானெனும் சூத்திரம் யாறரிவார்..? வாலன்
வகுத்த வரைவுக் கோளம் நான்.
வாய்ப் பிளக்க யாவும் மறையும்...!
கண்ணசைவில் கண்டங்கள் காணாமல் போகும்..!

நான்குவிதப் பூதங்கள் தாங்கும் என் பாதங்கள்.
நானில்லா நான்கில் ஞாலம் இல்லை...!
நாலிலும் பாவித்திருக்கும் நாதம் நான்.
நான் கருக்கொள்ள உயிர்க்கொள்ளும் உயிர்கள்..!!.

அறிவின் அமைவிடம் அன்பின் உறைவிடம்
ஆருயிர் வாழ்வேகும் ஆழிச்சூழுலகு நான்.
காற்றுக் கோள் வியாழன் என்கருதுகோள்..!
செவ்வாய் செம்மண் உயிர்ப்புணரா பொட்டல்வெளி..!!

உன்வதை நான் பொறுப்பேன்...! கோபத்தில்
என்வதை நீ பொறுப்பாயோ...! பிழைத்திருக்க
உன்பிழைப் பொறுக்கும் என் பெருமை
அறியா சிறுமைச் செயல் நிறுத்து.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
அறிவுப் பிழற்சியின் அடையாளம் நீ..!
ஐந்தறிவில் விளையா ஆபத்தை ஆறாவதறிவில்
விளைவிக்கும் விபரீதம் நிறுத்து..!

பிழைத்திருக்கும் மிச்சங்களை அழித்து விட்டு
பிழைத்திருப்ப தெப்படி? பிழை திருத்து.
பொல்லாக் கோபம் கொள்ளும் முன்..!!
பிரபஞ்சத்தில் நீ தூசென்ப துணர்..!

உருக்குலையும் மலை...!
கருக்குலையும் கடல்...!
சிதிலமாகும் மண் பரப்பு...!
சீற்றம் கொள்ளும் புறப்பரப்பு...!

என் கோபத்தில்...!?

நான் மண்...!
நீ....?

9 comments:

Chitra said...

பிழைத்திருக்கும் மிச்சங்களை அழித்து விட்டு
பிழைத்திருப்ப தெப்படி? பிழை திருத்து.
பொல்லாக் கோபம் கொள்ளும் முன்..!!
பிரபஞ்சத்தில் நீ தூசென்ப துணர்..!


......wow! நல்ல அறிவுரையுடன் ஒரு கவிதை. பாராட்டுக்கள்!

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...

அருமையான உணர்வு பூர்வமான வரிகள்

'பரிவை' சே.குமார் said...

nalla irukkunga...

kavithaikkul arivuraiyum irukku parunnga athithaan super.

R.Bhagyaraj said...

அருமை

வினோ said...

அருமை நண்பரே...

எஸ்.கே said...

முழுவதும் அருமை! வாழ்த்துக்கள்!

தமிழ்க்காதலன் said...

வாங்க... சித்ராக்கா.. வணக்கம். நலமா?. உங்கள் தொடர் வருகைக்கும், வாசிப்பிற்கும் கனிவான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்க்காதலன் said...

வாங்க தமிழ்த் தோட்டம், உங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழர் குமார்..

வாங்க தோழர் வினோ...

வாங்க எஸ்.கே...

வாங்க பாக்யராஜ்

உங்கள் அனைவரின் கருத்துக்கும்,
அன்புக்கும், வருகைக்கும் மிக்க நன்றி.