Wednesday, October 27, 2010

" நினைவுச் சுமை...!".

உதிர்ந்துப் போன உணர்வுகள்...!
கலைந்து போன கனவுகள்...!
மறந்துபோன ஞாபகங்கள்...!
யாவும் சுமந்த படி...
தனியொருவனாய்....!
தத்தளிக்கிறேன்...
தனித்த இரவில்...!.

உறக்கத்தில் வழிந்த
உதிரமாய்...!
திட்டாய்...!
திவளையாய்..!! ஆங்காங்கே...
உறைந்துக் கிடக்கும் நினைவுகள்...!

நீண்ட இரவின் இரகசியம் தேடி....
நெடியதொருப் பயணம்.
உணர்வற்றுப் போவதை விட
உயிரற்றுப் போவது மேல்...!

எண்ணங்களின் எச்சங்கள்...!
யதார்த்தத்தின் மிச்சங்கள்...!
இரண்டுமே என் வாழ்வில்...
உச்சங்கள்..!?
ஒன்று அகடாய்...!
மற்றொன்று முகடாய்...!
உயிர் விரும்ப வில்லை.
மனம் இரசிக்கவில்லை... என்றாலும்
நினைவின் பயணம் நிற்கவில்லை...!

இந்த இரவா...?
என் நினைவா...?
எது நீளம்...?
எது நீளும்...?
எனக்குள் ஒரு பட்டிமன்றம்.

நிறைமாத கர்ப்பிணியாய்,- என்
நெஞ்சம் கனக்கிறது.
உடலோடு ஒப்பிடுகையில் ...
உள்ளங்கை அளவுதான் என்றாலும்...
கனக்கும் சமயத்தில்....!
களிரின் எடை...!!

மிதக்கும் ஒன்றும்...
கனக்கும் ஒன்றும்...
மிகச் சமமாய் இருக்க முடியாது.
முரண்பட்ட அதிசயம் நிகழ்த்த
முடிகிறது என்னால்.

மிதக்கும் என் நினைவுகளும்....
கனக்கும் என் இதயமும்....
மிகச் சரியாய்.....
சமமாய்...!!

*********************************

6 comments:

வினோ said...

/ நிறைமாத கர்ப்பிணியாய்,- என்
நெஞ்சம் கனக்கிறது.
உடலோடு ஒப்பிடுகையில் ...
உள்ளங்கை அளவுதான் என்றாலும்...
கனக்கும் சமயத்தில்....!
களிரின் எடை...!! /

அருமை...

Chitra said...

நிறைமாத கர்ப்பிணியாய்,- என்
நெஞ்சம் கனக்கிறது.
உடலோடு ஒப்பிடுகையில் ...
உள்ளங்கை அளவுதான் என்றாலும்...
கனக்கும் சமயத்தில்....!
களிரின் எடை...!!


..... உவமைகள்..... எழுதும் விதம் எல்லாம் அருமையாக இருக்குதுங்க... பாராட்டுக்கள்!

'பரிவை' சே.குமார் said...

கவிதைகள் அருமை நண்பரே... வேலைப்பளு மற்றும் உடல் நலமின்மையால் வலைப்பக்கம் அதிகம் வரவில்லை.

எண்ணங்களின் எச்சங்கள்...!
யதார்த்தத்தின் மிச்சங்கள்...!

அருமையான அழகான வரிகள் நண்பரே...

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழர் வினோ, உங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க சித்ராக்கா, தங்களின் வருகையில் உளம் மகிழ்ந்தேன். கருத்துகளுக்கு மிக்க நன்றி. தொடருங்கள்.

தமிழ்க்காதலன் said...

தோழர் குமாருக்கு மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.