Sunday, October 03, 2010

" தலை மகன்....!!"


ஒத்தையா பெத்து ஊருக்கு விட்டு கொடுத்த
விருதுநகர் உத்தமி உனை நினைக்கின்றேன்.
தமிழகத்து தலையெழுத்தை திருத்தி எழுத
தங்கத்தை தாரைவார்த்த தாயே தொழுகின்றென்.

அன்றுமுதல் இன்றுவரை இன்னும் எந்த
தமிழச்சியும்.... உன் சிங்கம் போல் ஒன்றை
சூல் கொள்ளவில்லை ...!? தன் கருவறையில்.
தெருவில் நடந்த தெய்வம் .....எந்த

கர்ப்ப கிரகமும் காணாத "திராவிட தெய்வம்".
ஆரியனும் சூரியனும் அடிபணிந்த "தமிழ் வெளிச்சம்".
ஆச்சாரியையும் அதிர வைத்த "அரசியல் கோடாரி".
சிந்தனையில் தேள் கொட்டும், கண்களில்

கருணைத்தேன் சிந்தும் "கருப்பு சூரியன்".
திராவிட முதுகு நிமிர்த்திய "நெம்புகோல்".
சிந்தனையில் ஆயுதம் தாங்கிய "போராளி".
சிந்திக்காத சமூகத்தின் அவலம் நீக்கிய "துப்புரவாளி".

பெரியாரின் "போர்வாள்"...! சமூக அவலம்
சிந்தித்தே வழுக்கை "வாங்கிய வரம்"...!
சமூக சாக்கடையை சிந்தனையால் துடைத்த
தமிழ்த் தாயின் "தவப் புதல்வன்"..!!

டில்லியையும்..., அல்லியையும் அதிர வைத்த
"திராவிட அர்ச்சுனன்"... விழிகளில் வில்லேந்தியவன்.
சொடுக்கும் நேரத்தில் காரியம் முடிக்கும்
"அறிவு ஆயுதம்"..., பிற்போக்கை முற்போக்கால்

முறியடித்த "தமிழ் தந்திரவாதி"... திராவிடனுக்காய்
தன்னையே தந்து விட்ட "தியாகச்சுடர்".
கருமம் செய்தே காலம் நிறைத்த "கர்மவீரர்".
தமிழகத்தை தன் குடும்பமாய் எண்ணி.......

தனக்கொரு குடும்பம் தவிர்த்த "சத்தியசீலன்".
வாரிசு அரசியல் விரும்பாததால் தனக்கொரு
வாரிசையே விரும்பாத "சீர்த்திருத்த வாதி".
ஏழைப் பங்காளன்..., எளியோர் "நலன்விரும்பி"...!!.

தேச சுதந்திரம் தாண்டியும் சமூகம் படைத்த
பிரம்மா..!! குலக்கல்வி அழித்த சிவன்..!!.
திராவிடம் காத்த பெருமான்..!! காங்கிரசை
செதுக்கிய சிற்பி..!! கலப்படம் இல்லா

கொள்கை வேந்தன்.. கட்சிக்கு அப்பாலும்
மனிதம் நேசிக்கத் தெரிந்த "மாமனிதன்".
கல்வியை ஏழைக்கும் எட்ட வைத்த
தமிழகத்து "அறிவுச் சுடர்".

தான் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம் முதுமொழி மாற்றி....
தான் பெறாத இன்பமும் பெருக
என்சமூகம் எனத் தொண்டாற்றிய "பொதுநலம்".

விழிகளில் குளம் கட்டும் கண்ணீரை
காணிக்கையாக்குகிறேன்........, விருதுநகர்
கோமானே...."காம ராசரே".....கையெடுத்து
வணங்குகிறேன்.
******************************************************

4 comments:

பனித்துளி சங்கர் said...

////விழிகளில் குளம் கட்டும் கண்ணீரை
காணிக்கையாக்குகிறேன்........, //////

எதுவும் இல்லை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

தமிழ்க்காதலன் said...

இனிய சகோதர..., தங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டமிட்டமைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள் பனித்துளி சங்கர்.

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி .

தமிழ்க்காதலன் said...

வாங்க குமார்.., எப்படி இருக்கீங்க?
உங்கள் கருத்துக்கு நன்றிங்க.