குடிசைக்குள் ஒண்டிக்...
குடித்தனம் நடத்த...
எத்தனிக்கும் குடியானவன்...!
பக்க சுவரில்லா குடிசைப்
பற்றி கொண்டு வாழ்க்கை....
பனை ஓலை சுற்றி...!
குளிரும் மழையும்
குடித்தனம் நடத்தும்
குடிசையில் ...!
வெயில் மட்டும்
வெளிநடப்பு செய்யும்.
இழுத்து போர்த்த
இருந்த கோணி போதவில்லை.
அன்னவளைஅணைத்துக் கொள்வது
அத்தியாவசிய தவமாகிறது...!
உடற்சூட்டில் அவன் குளிர்காயல்...!
இருட்டுக்குள் இன்ப விளையாட்டுக்கு
இடையூறாய் இங்குமங்கும்
பெருச்சாளி பெருந்தொல்லை...!
தானியம் திருடும்...
கொடித்துணி கந்தலாக்கும்.
இலவச இணைப்பாய்
வளைந்து நெளியும்
கண்ணாடி விரியன்...!
கருகிய திரியுடன்
மண்ணெண்ணை விளக்கு
இருட்டுக்குள் ஒளிந்துகொள்ளும்.
பெயருக்குத் தனிக்குடித்தனம்.
பெரும்படையாய் சிற்றுயிர்...!
வௌவ்வாள் தலைகீழ் தொங்கி
வாய்வழி கக்கும் மலம்...
வெற்றுடம்பில் சந்தனம்...!
சில சமயம் பல்லிகளின்
சிறுநீர் பன்னீர்...!
வருவாய்க்கும்...
வெறும் வாய்க்கும் இடையில்
வாழ்க்கை நகர்வு...!
அதிகாலைத் துவங்கி
அந்திசாயும் மாலை வரை
இடுப்பொடிக்கும் வேலை...!
அதன்பிறகு அரிசி வாங்கி
அடுப்படியில் வேலை....!
இருட்டு வந்து "இரவுவிடை" பகர
"பெரும் பொழுது" பசியாறும்.
பசிமறுத்த வயிறு
ருசி மறக்கும்...தாமத
உணவு மறுக்கும்.
எரிக்கும் புகையில்...
எரியும் கண்களின்...
பசி அறியா பத்தினியாள்...!
இதோ "இப்ப புடிச்சிக்கும்" எனத்
தேற்றும் தேற்றலில்...
தேம்பும் நெஞ்சம்...!
அவள் அடிவயிறு ஒட்டி
அவிழத் துடிக்கும் இடைக்கச்சை...!
பசிப் போக்க பறப்பவன்...அவள்
மெலிந்த தேகம் கண்டு
நலிந்தவன்...!
வாய்விட்டு அழ முடியா
வறுமை...! சுதந்திரத்தின்
முதலாளி...!!
சகத்தியின் மேனிச்
சுருக்கம் அவன் கண்
சுருக்கும்...!
இத்தனை இடர்களிலும்
எத்தனை நம்பிக்கை...!!
நாளை விடியும் என்று...!!!
*****************************
6 comments:
//குளிரும் மழையும்
குடித்தனம் நடத்தும்
குடிசையில் ...!
வெயில் மட்டும்
வெளிநடப்பு செய்யும்.//
இத்தனை இடர்களிலும்
எத்தனை நம்பிக்கை...!!
நாளை விடியும் என்று...
கவிதை சிறு கீற்றுகுடிசையின் காவியமாக இருக்கு நண்பரே நல்லாருக்கு தொடருகள்
நாம் அன்றாடம் கடந்து போகிற குடிசைவாசிகளை பற்றிய தீர்க்கமான பார்வை .. பாராட்டுக்கள் சகோதரா...
//வருவாய்க்கும்...
வெறும் வாய்க்கும் இடையில்
வாழ்க்கை நகர்வு...!
அதிகாலைத் துவங்கி
அந்திசாயும் மாலை வரை
இடுப்பொடிக்கும் வேலை...!
அதன்பிறகு அரிசி வாங்கி
அடுப்படியில் வேலை....!
இருட்டு வந்து "இரவுவிடை" பகர
"பெரும் பொழுது" பசியாறும்.//
அருமையான வரிகள்.
உங்களிடம் இருந்து சற்றே வித்தியாசமான கவி வரிகள்.
குடிசைவாசிகளின் நலிந்து போன வாழ்க்கையின் ஆதங்கம் உங்கள் கவிதையில் ஆழமாக சித்தரிக்கப்பட்டுள்ளது......நன்று நண்பரே.
///வருவாய்க்கும்...
வெறும் வாய்க்கும் இடையில்
வாழ்க்கை நகர்வு...!/// மிக எளிமையாக நறுக்கென்று சொல்லப்பட்ட வரிகள்... அற்புதம் தோழா!!! முழுக்கவிதையும் அருமை...
Post a Comment