Friday, November 19, 2010

"நானும் கடவுளும்" - பாகம் 1


அன்பையும் அறிவையும் உண்மையில் உணர்ந்து கொடுத்தும், பெற்றும் வாழ்ந்து வரும் உலக மனிதர்காள் கேளீர், இதுகாறும் மானிட வாழ்வில் நிகழ்ந்து வந்த பாரம்பரிய விசயங்களில் மானுடத்தை தொற்றிக் கொண்டிருக்கும் "தொற்று வியாதி" களில் மிக முக்கியமான இடத்தை பிடித்துக் கொண்டு மனித சமூகத்தை அழித்துக் கொண்டிருக்கும் 
( வைரசு, பாக்டீரியா ) நச்சு நுண்ணுயிர்களாக இன்றும் இருந்து கொண்டிருப்பவை, சாதியும், மதமும்.
 
யோசித்துப் பார்க்குங்காள், இந்த உலகத்தின் போக்கை வேறுப் பக்கம் திருப்பும் அளவுக்கு சாதியும், மதமும் மனிதனை பிடித்து ஆட்டுகின்றன. நடுநிலையாய் நின்றுப் பார்க்க இந்த சமூகம் தலைப்படுவதில்லை. முயற்சிக்கும் சிலரையும் சொல்லொன்னா துயரம் தந்து "கொன்று" குவித்திருக்கிறது. இந்த உலகம் "பொய்யை போற்றி வந்த அளவுக்கு"உண்மையை புறந்தள்ளியே வந்திருக்கிறது.

இது இன்னதென இனம்காண முடியாத காலத்தில், மானிட சமூகம் அனுபவ ரீதியாக நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்  இவற்றின் பெரும் சக்திகளை கண்டு அஞ்சிய போது, அவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ள மனிதன் கற்றுக் கொண்ட காலத்தில்தான் வீடு தேவைப் பட்டது. அது போலவே தன்னால், மனதால் தாங்கிக் கொள்ள முடியாத "பயங்களை வாங்கிக் கொள்ளவும், தன்னம்பிக்கை தரவும்" மூன்றாம் ஊன்றுகோல் தேவைப்பட்டது. அப்போது பிறந்த கொள்கை, கோட்பாடுகளின் தொகுப்பே பிற்காலத்தில் "மதமாக" தோன்றியது. தொடர்ந்து வந்த மனித வாழ்வில் சமூக கட்டமைப்புகள் உருவாக ஆரம்பித்தது. சமூகத்தை ஒருங்கிணைக்க எடுத்துக் கொண்ட முயற்சியின் தொடர்ச்சியாய் தொழில் பிறந்தது. தொழில் பழகியதன் விளைவாய் சமூகத்தில் "சாதி" தொற்றியது.
 
ஒரு ஒழுங்கான சமூகக் கட்டமைப்பை உருவாக்கப் போய், பிற்காலத்தில் அது "கேவலமாக்கப் பட்டு விட்டது". சாதியும், மதமும் உண்மையில் மனிதனின் பிறப்புரிமைக் கிடையாது. மனிதனுக்கு முன்னால் மண்ணில் எந்த சாதியும், மதமும் கிடையாது. எப்போது சாதி, மதம் பிறப்புரிமையாக்கப் பட்டதோ அப்போதே மனிதன் சமூக ஒற்றுமைக்கு "உலை" வைத்து விட்டான். சாதியும், மதமும் பிறப்புரிமையாக்கப் பட்டப் பிறகு அதைக் காக்க வேண்டிய கட்டாயம் ஒரு சிலருக்கு (யாருக்கு அவை சௌகரியம் தந்ததோ அவர்களுக்கு) வந்தது. அவர்கள் "மதவாதிகள்", "மத குருமார்கள்" என மாறி விட்டார்கள். வில்லங்கம் எங்கே ஆரம்பித்தது..? என்றால்...மதமும், சாதியும் மனித வாழ்வை கட்டுப் படுத்த முயன்று அதில் வெற்றிப் பெற்ற போதுதான்.

மனிதன் பிரித்த சாதிவாரியாகவோ, மதவாரியாகவோ இயற்கையில் பிறப்பு நிகழவில்லை. "அறிவாளிகள்", "திறமைக்காரர்கள்", "ஓவியர்கள்", "புலமையாளர்கள்", "கவிஞர்கள்", "சிற்பிகள்", "தச்சர்கள்", "தீர்க்கதரிசிகள்", என பலதரப் பட்ட திறமையாளர்களும் ஒவ்வொரு சாதியிலும், மதத்திலும் பிறந்தார்கள். வளரும் மானிட இனத்தை இவர்களின் துணை இல்லாமல் "இறைவனாலும்" கட்டமைக்க முடியாது என்ற "கசப்பான உண்மை" புரிய ஆரம்பித்த காலத்தில்தான், "சடங்கு சம்பிரதாயங்கள்" ஆரம்பிக்கப் பட்டன. அதாவது "அறிவாளிகள், திறமையாளர்கள், மற்றும் மேற்சொன்னவர்கள்" அனைவரும் சமூகப் பொதுவில் வைக்கப்பட்டார்கள். இவர்களை எல்லாரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
ஆனால், அவை மத விசயங்களாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் வேலையை செய்து முடித்தப் பின் "மத குருமார்களால்" அவர்கள் வழித்தோன்றல்களால் "புனிதம்"செய்விக்கப் பட்டப் பிறகே, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற "சடங்கை" உருவாக்கியதில் தான் "மதவாதிகள் அல்லது குருமார்களின்"  சுயநலம் தெரிந்தது. தன் பிழைப்பில் மண் விழாமல் தற்காத்துக் கொள்ள முயன்ற சூழ்ச்சி புரிந்தது. தன் பிழைப்புக்கான செழுமைக்காக தொடர்ந்து பல "புதிய யுக்திகளை" கையாண்டு புதிய பல "சடங்கு சம்பிரதாயங்களை" உட்புகுத்தினார்கள். மக்கள் "மாக்கள்" ஆக்கப் பட்டார்கள். பழக்கப் படுத்தப் பட்டார்கள். பதில் தெரியாத கேள்விகளுக்கெல்லாம் "கடவுள்" பெயர் சொல்லி பயமுறுத்தப் பட்டார்கள். கண்மூடித் தனமாய் நம்பும்படி வற்புறுத்தப் பட்டார்கள்.
 
சென்ற தலைமுறையினரின் பழக்கம், அடுத்த தலைமுறையில் வழக்கமாகி, மூன்றாம் தலைமுறையில் சடங்காகி, சம்பிரதாயமாகி, நான்காம் தலைமுறைக்குப்பின் அதுவே "வாழ்க்கை" என்றாகிவிட்டது. ஐந்தாம் தலைமுறைக்கு அது பற்றிய எவ்விதமான சுய அறிவும் இல்லாமல், தொடர்ந்து ....இன்று நம் வரை வந்து நிற்கிறது.
 
மதங்களில் மதம் பற்றி ஆராயும் உரிமை மறுக்கப் படுகிறது. ஐயம் வரக்கூடாது என புத்தியை கட்டிப் போடுகிறது. குருட்டுத்தனமாய் "நம்பு" என்கிறது. சுயமாய் யோசிப்பவன் "ஆபத்தானவனாக" மதம், சாதி சார்ந்தவர்களுக்கு தெரியக் காரணம், அவர்களின் பிழைப்புக்கான ஆதாரம் அடிபட்டுப் போய்விடுமே என்கிற பயம்தான்.

மதம் தோன்றிய காலம் தொட்டே,அதன் குறைபாடு காரணமாய் அதை எதிர்ப்பவர்கள் இருந்திருக்கிறார்கள். உலக இயக்கத் தத்துவத்தில் "அணு" தன்னை சரியாக, அதாவது "முழுமையடைந்த நிலையில்" வைத்துக் கொள்ள முயலும் போது மனிதன் தன் "அறிவை" முழுமை நோக்கி நகர விடாமல் நங்கூரம் இடுவது என்ன "நியாயமாக" இருக்க முடியும்?. நம்முடைய மதங்களில் மதங்களுக்கு எதிராக சிந்திப்பவன் குற்றவாளியாக்கப் படுகிறான். கொடுந்தண்டனை வழங்கப் படுகிறது. உண்மையில் அவன் செய்த தவறு என்ன? இந்த உலகில் யோசிப்பது குற்றமா? சிந்திக்க கூடாதா? சுயமாய் சிந்திக்க உரிமை தராத சமூகம் எப்படி ஒரு ஆரோக்கியமான சமூகமாக இருக்க முடியும்..?.
( தொடரும்................)
************************************************************************************* 

7 comments:

பவள சங்கரி said...

கடவுளோடு இணைந்த பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே.

அருண் பிரசாத் said...

நல்ல அலசல் தொடருங்கள்...

'பரிவை' சே.குமார் said...

//மனிதன் பிரித்த சாதிவாரியாகவோ, மதவாரியாகவோ இயற்கையில் பிறப்பு நிகழவில்லை. "அறிவாளிகள்", "திறமைக்காரர்கள்", "ஓவியர்கள்", "புலமையாளர்கள்", "கவிஞர்கள்", "சிற்பிகள்", "தச்சர்கள்", "தீர்க்கதரிசிகள்", என பலதரப் பட்ட திறமையாளர்களும் ஒவ்வொரு சாதியிலும், மதத்திலும் பிறந்தார்கள்.//


நிதர்சனம்.... நாம் சாதியை கட்டிக் கொண்டு அலைகிறோம்.... எத்தனை பிறப்பெடுத்தாலும் நாம் திருந்தப் போவதில்லை. நல்ல தொடக்கம்... தொடருங்கள்

செல்வா said...

//மதங்களுக்கு எதிராக சிந்திப்பவன் குற்றவாளியாக்கப் படுகிறான். கொடுந்தண்டனை வழங்கப் படுகிறது. //

சாதி , மாதங்கள் தேவையில்லை என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா ., ஆனா மதங்களில் தண்டனை கொடுக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரிந்து அதுகமாகதெரியல ..!!

எஸ்.கே said...

தொடரை நன்றாக ஆரம்பித்துள்ளீர்கள்!

Kousalya Raj said...

மனிதனை சாதி கொஞ்சம் பிரித்தது, மதம் கொஞ்சம் பிரித்தது, இருந்தும் மனிதம் கொஞ்சம் மீதம் இருக்கிறது. கால ஓட்டத்தில் மாறும் எல்லாம் மாறும்....இல்லை மாற்றுவோம்....!

நல்ல ஓட்டத்தை ஓடி முடிப்போம்....!

அருமையான தொடக்கம்....தொடருங்கள் யார் மனமும் பாதிக்காத வண்ணம். மனிதம் காப்பாற்ற படவேண்டும். வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

சாதி மதம்
சாணக்கியர்கள்
என்ற சங்கடவாதிகள்
வித்திட்ட தொற்றுநோய்
சாதி மதம் உண்மை
என்றிருந்தால் மனித
குருதியின் நிறமும்
மாறியிருக்க வேண்டுமல்லவா
நண்பரே ......

தொடருங்கள் தோள் கொடுப்பேன் .........