Wednesday, November 03, 2010

"அளவுக்கு மிஞ்சினால்...!" - பாகம் 5.

கட்புல னாகும் கற்கோள் சுற்றி
கட்புல னாகா புறப்பொருள் பற்றி
அண்டப் பேரண்ட பிண்டம் சுமந்தே
ஆனந்தத் தாண்டவம் அரங்கேறும் அம்பலம்.

பஞ்சப் பூதத்தொரு பஞ்சம் வாராதிருக்க
பிரபஞ்சம் வளர்க்கும் பூதத்தொரு பூதம்.
வாதம் வளரும்  தேயு ஒளிரும்
வாதப் பிரதி வாதத்துக் கப்பால்.

தொலைத்தல் தொலைதல் பின் தேடி
அலைதல் அலைகழிதல் வாழ்க்கை புதிரின்
புனிதம் மறைத்த சூட்சுமத்தில் இருளும்
புரளும் பகலும் மலரும் மைதானம்.

கூடிப் பெருகி... கூட்டம் சேர்த்து
பொருளால் நிறையால் நிழலால்  ஒளியால்
நிறைத்தும் நிறையா வெற்றி இடம்
முழுமை முழுமையாக முதன்மை நான்.

ஆதிமூல அர்த்தநாரி ஆடும் அம்பலம்
கீழ்மேல் இடவல திரும்பும் பக்கம்
தில்லைக் கூத்தன் கூத்தென் தெருவில்
திண்ணைக் கூத்து தெவிட்டாத தேரோட்டம்.

எல்லை யில்லா என்பால் இல்லை
என்பதெ துவும் இல்லை யென்பார்.
சூனியத்துள் சுருக்கம் நான் சுருங்கிப்
பெருக சூனியத்தின் ஒடுக்கம் நான்.

காலன் கால் பதிக்கும் கருவி
காலன் கால விதி முடிக்கும்
கோலம் காணும் என் விழிக்கோளம்
சூரிய அடுப்பில் சுட்ட நெய்யுருண்டை

கோள்களில் என் கால் பந்தாட்டம்.
என்னை எட்டா எரிச்சல் முட்ட
தன்னைத் எரிக்கும் தற்கொலை முயற்சி
சூரிய ஒளிக்கதிர் சிந்தும் இரத்தம்.

துகள் வெடிப்பும் தூலக் கோள்
வெடிப்பும் பிரபஞ்ச வெடிப்பும் தாங்கும்
நான் வெடிக்கத் தாங்கும் தளம் இல்லை.
என் கரைத் தொடும் குளம் இல்லை.

இசைய அசையும் இப்பாழ் வெளி
அசைக்க அசையும் உன் பால்வெளி
பூதக் கரும்பூதத் துகள் துப்பும்
என் வாய்க்குத் தப்பும் அணுவில்லை.

அறிவுத் தந்த மயக்கம் அன்பை
அழிக்க ஆணவம் தந்த தாக்கம்
இருக்கும் இருப்பை அழிக்க யாவும்
பொருத்துப் பார்த்து பின்னழிப்பேன் நான்...

பிறழாது தப்பாது தப்பில்லா தழிப்பேன்
எக்காலமிடும் உன் முக்காலம் முடிப்பேன்
பிற்காலத் தொருப் பொற்காலம் சமைப்பேன்
பிரியமிக்க சீவன்கள் பிறக்க வைப்பேன்.

எனதான்ம நிழல் தர்மம் காக்கும்...!

நான் "வெளி....!"

நீ...?

**********************************************

7 comments:

Chitra said...

அறிவுத் தந்த மயக்கம் அன்பை
அழிக்க ஆணவம் தந்த தாக்கம்
இருக்கும் இருப்பை அழிக்க யாவும்
பொருத்துப் பார்த்து பின்னழிப்பேன் நான்...


......சான்சே இல்லை.... சூப்பர்!

'பரிவை' சே.குமார் said...

//தொலைத்தல் தொலைதல் பின் தேடி
அலைதல் அலைகழிதல் வாழ்க்கை புதிரின்
புனிதம் மறைத்த சூட்சுமத்தில் இருளும்
புரளும் பகலும் மலரும் மைதானம்.//

அருமை...

மரபுக் கவி வரிகள் கலக்கல்.

நிலாமகள் said...

//சூனியத்துள் சுருக்கம் நான் சுருங்கிப்
பெருக சூனியத்தின் ஒடுக்கம் நான்.
நான் "வெளி....!"
நீ...?//

பிரமாதம் சார். வாழ்த்துகிறேன்.

தமிழ்க்காதலன் said...

சித்ரா அக்கா வாங்க, உங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றிக்கா. தொடருங்கள் உங்கள் பேராதரவை.

தமிழ்க்காதலன் said...

இனிய தோழர் குமார் வாங்க.., எப்படி இருக்கீங்க? உடல் நலமா? இனிப்பான உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க போளூர் தயாநிதி.. வணக்கம். உங்களின் அன்பிற்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க நிலாமகள்..., வணக்கம். உங்களின் நீண்ட இடைவெளிக்குப் பின்னான வருகை சந்தோசமுங்க. கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.