Tuesday, November 23, 2010

"நானும் கடவுளும்" - பாகம் 4


            உலகின் அனைத்து மதங்களின் உள்கட்டமைப்பு சாராம்சம் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும். அன்பு, கருணை, இரக்கம், "சீவகாருண்யம்", என இவற்றைத்தான் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு இடங்களில் போதிக்கிறது. ஆனால், நம்முடைய மானிட சமூகம் என்ன செய்து கொண்டிருக்கிறது...??? அன்பின் வழியிலா உலகம் உய்கிறது. "ஆயுதத்தின்" வழியில் தானே அமைதியை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறோம். இதில் பெரிய கூத்து என்னவென்றால், தீவிரவாதத்தை வளர்த்தவனும் அவனே, அழிப்பவனும் அவனே, சூழ்ச்சி செய்து, சூழ்ச்சி செய்து தன்னைதானே சூழ்ச்சியின் பிடியில் சிக்க வைத்துக் கொள்ளும் கொடுமையெல்லாம் நடந்தேருவது வேறு கதை. "கெடுவான் கேடு நினைப்பான்".
 
            எல்லா நாடுகளும் மதங்களை வைத்திருக்கிறது, ஆனால் மதக் கொள்கைகள் மட்டும் நடைமுறைக்கு வராது. எந்த குருமாரும், எந்த விதியும், எந்த நெறியும் தனி மனித வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது. அவர்களுக்கு எட்டாத உயரத்தில் வாழ்க்கை இருக்கிறது என்பது தெளிவாக தெரியும் போது இவை யெல்லாம் கேளிக்கூத்தாக இருப்பது தானாக தெரியும். எல்லா நாடுகளிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் எந்த அரசியல்வாதியிடமும் கொள்கைகள் கிடையாது. 

சூழ்நிலைகளுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் வளைந்துப் போகிற வரைக்கும் எந்த மனிதனாலும், எந்த கொள்கையையும், எந்த நெறியையும், காப்பாற்ற முடியாது. பின்பற்றவும் முடியாது. கூட்டம் சேர்த்துக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியாது. 

           ஒரே ஒரு புரட்சியாளன், ஒரே ஒரு சிந்தனையாளன், இந்த ஆட்டுமந்தையை திசை திருப்பிவிட முடியும், போதும்.

           மதம் விற்றுப் பிழைப்போரே, மதம் சார்ந்து பிழைப்போரே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் .....இந்த உலகில்.... உங்களைவிட, தன் தசை விற்றுப் பிழைக்கும் விலைமகள் வணங்கத்தக்கவள்.

           குறிப்பிடுகிறேன் தெரிந்துகொள்ளுங்கள். பிரார்த்தனை செய்த எந்த மகானும் கூட்டம் சேர்த்துக் கொண்டு பிரார்த்தனை செய்தது கிடையாது. அப்படி பிரார்த்தனை செய்யவும் முடியாது. அப்படி செய்வது பிரார்த்தனையும் ஆகாது.

           பத்து மாடுகள் ஒரே புல்லைத் தின்னமுடியும். ஒன்றாக மேய முடியும். ஆனால் ஒன்றாக அசைபோட முடியாது. தனித்த நிலையில் படுத்துக் கொண்டுதான் அசைப் போட முடியும். அது போன்றதுதான் "தன்னையறிதல்" என்பதும். எல்லா மதங்களின் முடிந்த முடிவு, இறுதி நிலை "தன்னையறிதல்" மட்டுமே.
 
           பத்து பேர் சேர்ந்து ஒரு வேதம் படிக்கலாம், ஓதலாம், பிறரிடம் அது பற்றி பேசலாம். விவாதிக்கலாம். இதற்கு வேதம் தெரிந்திருந்தால் போதும். புரிய வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட உணர்ந்திருக்க வேண்டிய அவசியமோ, கட்டாயமோ இல்லை. ஒரு சினிமாவை பார்ப்பவனுக்கும், அதை எடுப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் இது. பார்ப்பவனால் எடுத்தவனின் நிலையில் நின்று கடினம் உணர முடியாது. எடுத்தவனால் எடுக்கும்போது பார்ப்பவன் அடையும் மகிழ்ச்சியை அடைய முடியாது. ஆனால், படம் எடுத்தவனால் பார்த்தவனாக முடியும். பார்த்தவனால் படம் எடுத்தவன் நிலையைத் தொட முடியாது.
 
           அது போல்தான் ஆன்மீகம். உணர்வது வேறு, அது பற்றி பேசுவது வேறு. அரைகுறை ஆன்மீகவாதியும், அரசியல்வாதியும், அறிவியல்வாதியும் இந்த உலகிற்கு கேடு விளைவிப்பவர்கள். அதிக கெடுதலானவர்கள்.

            புரிந்துகொள்ளுங்கள்........மேய்தல் வேறு, அசைபோடுதல் வேறு.
உனக்குள் இருக்கும் ஒரு விசயத்தை நீயாக உணர, உணர்ந்த ஒருவர் வழி காட்ட முடியும். பதர்கள் விழிப் பிதுங்கத்தான் முடியும்.

            அமைப்பல்ல ஆன்மீகம். அமைப்பதுமல்ல ஆன்மீகம். அமைவது...!!!

            இயேசுவோ, புத்தனோ, காந்தியோ, மகாவீரரோ, நபியோ, கூட்டம் சேர்த்து தியானித்ததில்லை. கூட்டம் சேர்த்து கும்மியடித்ததில்லை. கூட்டத்தால் காசுப் பார்த்ததில்லை.

            கடைசிக் கட்ட தியானத்தில், இயேசு தன் நண்பர்களைப் பார்த்து, நீங்கள் இங்கேயே இருங்கள், நான் பிரார்த்தனை செய்துவிட்டு வருகிறேன் எனக் கூறி, தனியாக நின்றுதான் தியானிப்பார். கடைசியாக உச்சரித்த வார்த்தைகளாக பைபிள் கூறுவது, என் தந்தையே..!! ஏன் என்னை கைவிட்டீர்..?! இதோ என்னுடைய ஆவியை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன் என்பதுதான். இந்த வாக்கியத்தை நன்றாக கவனியுங்கள். இயேசுவின் மனவலிப் புரியும். அவருக்கே அந்த கதி என்றால், வெறும் மதவியாபாரிகளின் நிலை இன்னும் எவ்வளவு மோசம்...!
 
           இன்று எந்த இனம் இயேசுவை தூக்கிப் பிடித்து விற்கிறதோ, அதே இனம்தான் அவரைக் கொன்றது. அவர்களைப் பொருத்தவரை இயேசு என்பவர் "யானை", இருந்தாலும், இறந்தாலும் "ஆயிரம் பொன்" அவர்கள் குறி.

           இவர்கள் சொன்ன கோட்பாடுகள் நம்மிடம் வந்து சேரவில்லை, நாமும் அதை எடுத்துக் கொள்ளவில்லை. நமக்கு அவை தேவையும் இல்லை. நமக்கு தெரிந்தது எல்லாம் "உருவ வழிபாடு", பிறகு "உன்பாடு" என மனதைத் தேற்றும் மாபெரும் முயற்சியே நம்முடைய வழிபாடு.
 
           இது எதைக் காட்டுகிறது தெரியுமா? நம்முடைய "நோகாமல் நொங்கு தின்னும் ஆசையை". நமக்கு மனிதனாய் இருக்கவே தெரியாத போது, இறைப் பற்றி தெரிந்து என்ன ஆகப் போகிறது...??!!  இரைத் தேடும் நமக்கு.......இறை எதற்கு....??!!
 
           மனிதம் விடத் தெரிந்த நமக்கு, மதம் விடத் தெரியவில்லையே..!! சகமனிதனை மதிக்கத் தெரியாத நமக்கு, சாதியை மிதிக்கத் தெரியவில்லையே..?? விட்டு விடுவோமே...மனிதனாய் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்ப்போமே. கூட்டம் குறைத்து, ...கூச்சல் குறைத்து....!!.

            சக மனிதனிடம் நேசம் கொடுப்போம், எடுப்போம். இன்னொருவன் இரத்தம் கண்டால், உங்கள் கண்கள் கண்ணீர் சிந்தட்டுமே..!! குருதி சிந்தா குவளையம் படைப்போம், குரோதம், விரோதம் விடுவோம். இதை செய்ய எதற்கு மதம்..?

            அடுத்த தலைமுறையாவது.........மனிதனாய்.........மனிதத் தன்மையோடு .........பிறந்து, மனிதனாய் வாழ அனுமதிப்போம். இனி பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த சாமிப் பெயரும் வேண்டாம். எந்த மதமும் குறிக்கப் பட வேண்டாம். சாதி சொல்ல வேண்டாம்..............இவை சம்பந்தபட்ட சான்றிதழும் வேண்டாம்.   
          
என் அடுத்த தலைமுறை............."மனிதன்"........"மனிதன்"............."அவன் மனித நேயம் மட்டும் தெரிந்த மனிதன்". வெறும் மனிதனாக மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும்.  
**********************************************************************
( முற்றிற்று...)    

6 comments:

NADESAN said...

மதம் விற்றுப் பிழைப்போரே, மதம் சார்ந்து பிழைப்போரே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் .....இந்த உலகில்.... உங்களைவிட, தன் தசை விற்றுப் பிழைக்கும் விலைமகள் வணங்கத்தக்கவள்---

மதவாதிகளுக்கு நல்ல சாட்டை அடி பதிவு
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்

'பரிவை' சே.குமார் said...

மற்ற பதிவுகளையும் படித்தேன்... அருமையானபகிர்வு...
//அரைகுறை ஆன்மீகவாதியும், அரசியல்வாதியும், அறிவியல்வாதியும் இந்த உலகிற்கு கேடு விளைவிப்பவர்கள். அதிக கெடுதலானவர்கள்.//
நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
நிறைய விவரங்களை பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.

சிவாஜி சங்கர் said...

வாழ்த்துகள் 50.
தொடர்க எழுத்துப்பயணம்..... :)

தினேஷ்குமார் said...

பிறப்பு சான்றிதழலிலும்
கல்வி சான்றிதழலிலும்
பதியப்படவேண்டும்
இனம் : மனிதம்
சாதி : ஆண்/பெண்/திருநங்கை
மதம் : மானிடம்

இவை பதியப்பட்டால் திருந்தும் நம் சமுதாயம் முதல் தவறு நடக்குமிடம் பிஞ்சுகளும் சுமக்கின்றன சாதிய பெயரை மாறவேண்டும் மாறுமா மாற்றுவோமா

எஸ்.கே said...

மிக நன்றாக சென்றது தொடர்! அருமை!
எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கட்டும்!

நிலாமகள் said...

மேய்தல் வேறு; அசை போடுதல் வேறு... அழகான விளக்கம்.