Saturday, November 20, 2010

"நானும் கடவுளும்" - பாகம் 2

நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு கூட தண்டனையிலிருந்து தப்பிக்க முடிகிறது. மதம் பற்றி பேசுபவன், சிந்திப்பவன் தப்பிக்க முடியவில்லை. மத குருமார்களே தண்டனை வழங்கி விடுவார்கள். குற்றவாளிகளைப் பற்றி கவலைப் படாத மதம் எப்படி நல்ல மதமாக இருக்க முடியும்?. மதம் சார்ந்த எதிர்ப்புகள் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் "பாவ மன்னிப்பு" வழங்கும் மதம் எப்படி ஒரு நல்ல மதமாக இருக்க முடியும்?. அப்படி பாவங்களுக்கு மன்னிப்பு வழங்க முடியும் என்றால், அத்தனைப் பாவங்களோடு சேர்த்து "சுயசிந்தனையையும்" ஒரு பாவம் என்று மன்னிப்பு வழங்காமல், அவர்களை கொல்ல வேண்டிய அவசியம் என்ன..???

தன்னையும், தன் பிழைப்பையும் பாதிக்காத மற்ற பாவங்கள் பாவங்களாய் தெரிவதில்லை மதம் சார்ந்தவனுக்கு. தான் பாதிக்கப் படக் கூடாது என்கிற கவலை, அவ்வளவு கீழ்த்தரமாய் செயல்பட வைக்கிறது. சராசரி மனிதன் செய்யும் பாவத்திற்கு தரப்படும் தண்டனைப் போல் நூறு மடங்கு அதிகமாக "மதகுருமார்களுக்கு" தண்டனை வழங்கப் பட வேண்டும்.

சமூகச் சட்டம் இயற்றப் பட்ட சென்ற நூற்றாண்டிலிருந்துதான் மதகுருமார்கள் சற்று விலகி இருக்கிறார்கள். அதற்கு முன் அவர்கள் சட்டத்தை கையில் வைத்திருந்தார்கள், அல்லது சட்டத்தை கையில் எடுக்கும் அளவுக்கு "அதிகாரத்தை" வைத்திருந்தார்கள். இன்றும் சட்டத்தில் மதம் தலையிட முடியும். ஆனால், மதத்தில் சட்டம் தலையிடமுடியாது. என்ன ஒரு சமூக கட்டமைப்பு...??
 
பூமி உருண்டை என்று சொன்ன "கலிலியோ"....
எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விக் கேட்க சொல்லி, அறிவைப் புகட்டிய "சாக்ரடீஸ்"....... 
போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கதி என்னாயிற்று?.
ஒப்பற்ற தங்களின் இன்னுயிர் ஈந்தல்லவா உண்மையை காப்பாற்றினார்கள். அவர்களுக்கு சமூகம் தந்த பரிசுகள் நம்மை நாகரீகம் அடைந்த மக்களாய் காட்டவில்லை. எவனாவது சொல்வதை அப்படியே நம்பும் நம்முடைய அப்பாவித்தனத்தையும், உயிர் பயத்தையும், கோழைத் தனத்தையும், அறியாமையையும் தான் காட்டுகிறது.

"புரட்சி" யின் விதையை எவனாவது விதைக்கட்டும், புரட்சி பிழைத்தால் நானும் "புரட்சியாளனாகிறேன்" எனும் நம்முடைய "புறம்போக்குத்தனத்தைத்தான்" காட்டுகிறது.

எல்லா மதங்களின் பின்னனிகளையும் கவனித்தால் ஒன்று புரியும். பெரும்பாலும் யாராவது ஒரு தனிப்பட்ட மனிதனின் "அனுபவக் கோட்பாடாகவோ, அறிவுக் கோட்பாடாகவோதான்" இருக்கும். மனிதன் தான் வாழ்ந்த காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப சிந்திக்கும் சுபாவம் உடையவன் என்பதால், மத கோட்பாட்டை உருவாக்கியவன் அவன் வாழ்ந்த காலத்திற்கும், அவன் அனுபவத்திற்கும், அறிவிற்கும் ஏற்றவாறு அவற்றை உருவாக்கியிருக்கிறான். அந்த பழைய கோட்பாடுகளையே 3000 ஆண்டுகளுக்கு பிறகும் பொருத்தமானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அறிவார்ந்த செயலாக, நடைமுறைக்கு ஏற்றதாக தெரியவில்லை. அதைவிட கொடுமை இதை நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் கொடுப்பதுதான்.
 
சீரணிக்க முடியாத உண்மை என்னவென்றால், காலத்துக்குப் பொருத்தமில்லாதது என்று தெரிந்தும், அதை அப்படியே பின்பற்றுகிற நம்முடைய அறியாமை. மதம் என்கிற விசயம் எப்போது ஒரு அமைப்பாக உருமாறியதோ, அப்போதே அது எல்லாவிதமான "தகிடுத் தத்தங்கள்", "தில்லுமுல்லுகள்", "களவானித்தனங்கள்" அத்தனையும் தன்னுள் உள்ளடக்கிக் கொண்டு மிக மிடுக்கான "வியாபாரியாகி", "சுய இலாபம்" பார்க்க ஆரம்பித்து விட்டது. ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு, "எந்த மதமும்" சொந்தமாக இருக்க கூடாது. இருக்க முடியாது. பொதுவான விசயம் அல்ல ஆன்மீகம். தனிமனிதன் தனிப்பட்ட விதமாய் உணர வேண்டிய விசயம். அதை ஒரு அமைப்பு தந்துவிட முடியாது. அப்படி அதனால் தரமுடியாமல் தோற்றுப்போய்க் கொண்டிருக்கிறது என்பதே எக்கால உண்மையாகவும் இருந்து வருகிறது.

உதாரணம் வேண்டுமா?? இந்த உலகில் தன்னை உணர்ந்து கொண்டவர்கள் என்று நாம் சொல்லிக்கொள்கிறவர்கள் எல்லாரையும் உற்றுப் பாருங்கள். அவர்கள் தன்னை உணரும் முன் எந்த இறுப்பில், எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலையிலிருந்து தன்னை உணர்ந்தபின் புலம்பெயர்ந்து வேறு நிலைக்கு, வேறு இறுப்புக்கு தன்னை மாற்றிக் கொண்டிருப்பார்கள். அப்படி பட்டவர்கள் அமைதியானவர்கள். தான் வாழும் காலத்தே தான் உணர்ந்த படி வாழ்ந்தார்கள்.
 
அதைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று ஒருவன் கிளம்பும் போதுதான் "மனிதனுக்கு அறிவுப் பிறழ்ச்சி" ஏற்படுகிறது.
இந்த உலகில் ஒருவனாலும் இன்னொருவனைப் போல் வாழ முடியாது. அப்படி வாழ இயற்கை அனுமதிப்பதுமில்லை. அப்படியிருக்க "மத குருமார்கள்" தாங்கள் "அவர்களின் ஆசிப் பெற்றவர்கள்", "இவர்களின் சீடன்" என்று சொல்லிக் கொண்டு "தங்களின் மத வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டு" சமூகத்தில் ஒரு குழப்பத்தை விளைவிக்கும் கூட்டமாகத்தான் இருக்கிறார்கள். தானாக எதையும் உணராத எந்த மனிதனும் தன்னை " மதத் தலைவன்" எனச் சொல்லிக் கொள்ள தகுதி இல்லாதவன். அவனால் இந்த சமூகத்துக்கோ, தனி மனிதனுக்கோ ஒரு சிறிதும் பயனில்லை.
 
இன்னும் தெளிவாக சொல்லப் போனால், இங்கே எந்த காலத்திலும், மனிதனிடத்தில் மதம் வளர்க்கப் படவில்லை என்பதுதான் உண்மை. மாறாக, சடங்குகள், சம்பிரதாயங்கள் வளர்க்கப் பட்டிருக்கின்றன. அதாவது எது மத தலைவனுக்கு இலாபம் தருமோ அது மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எது மனிதனை நெறிப்படுத்துமோ  அது வளர்க்கப் படவில்லை என்பதே சரித்திரம் கண்ட சாட்சியாய் இருக்கிறது.
( தொடரும்....)
****************************************************

10 comments:

வினோ said...

தொடருங்கள் நண்பரே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ மங்குனி அமைச்சரு சூனியம் வெச்ச மொத ப்ளாக்கு இதுதானா?

எஸ்.கே said...

//எது மனிதனை நெறிப்படுத்துமோ அது வளர்க்கப் படவில்லை// உண்மைதான்!
மிக நன்றாக செல்கிறது கட்டுரை! தொடருங்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

தொடருங்கள் நண்பரே...

தினேஷ்குமார் said...

அவ்வளவும் உண்மையே நண்பா......

அருகில் இருப்பவனும்
ஆண்டியாகிறான்
இருள் என்ற
ஈட்டி பதம்பார்த்ததால்
உரு தெரியாதவருக்கு
ஊரெல்லாம் ஓர் உருவம்
எத்துனை முகங்கள்
ஏனிந்த சூழ்ச்சுமம்
ஐயா என்று காலில் விழ
ஒய்யாரமாய்
ஓடும் மக்கள் அறியும் வரை......

Thoduvanam said...

மிக்கவும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிற தொடர்...தொடர என் வாழ்த்துக்கள்.

ஜெயசீலன் said...

நானும் உடன்படுகிறேன் நண்பா.... அருமையான பதிவு... தொடருங்கள்...

பவள சங்கரி said...

நல்ல பதிவு. நல்ல சிந்தனை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உங்கள் பின்னூட்டங்களில் தெரியும் ரசனையும் தெளிவும் படைப்பை அணுகும்போது குறைவாய்த் தெரிகிறது.இருந்தாலும் உங்கள் கவிதைகளை விட உரைநடை குறிப்பிடும்படி இருக்கிறது.முடிந்தவரை சொல்லவருவது என்ன என்பதைத் தீர்மானித்தபின் மொழி குறுகினால்தான் எழுத்தின் வாசனை சிறப்பாக இருக்கும் என்பது என் யோசனை.அடிக்கடி சந்திப்போம் தமிழ்க்காதலன்.

ஹேமா said...

சாட்டையால் அடித்துச் சொல்வதுபோல ஒரு உணர்வு.தொடருங்கள் !