Sunday, November 14, 2010

"ஊஞ்சல்...!"



நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்....
இன்னும் மறக்க முடியா..அந்த
இனிய நினைவுகளில்...!

இன்பத்தின் எல்லை நீ...!
யான் பெற்ற இன்பம் நீ...!
வலியின் முடிவில்...உன்
வாழ்க்கைத் தொடக்கம்...!
இன்னும் அந்த நினைவில்....
நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

நீயும் நின் தாயும்...
நினைவிழந்த தருணமது...!
பாசத்தின் பிடியில்...
மனம் மரணித்த...
நொடி யுகங்களில்....!
மௌனத்தில் என்...
உணர்ச்சித் தகனம்...!
பந்தயக்குதிரையாய்....
பரபரப்பில்...... நிகழ்காலத்தில்
நான் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறேன்.

உள்ளும் வெளியும்....
ஒவ்வொரு முறையும்....
உயிர்பிரியும் வலி புரியா
செவிலித்தாயின்...பிரவேசம்...!
விழிப்பிதுங்க தொண்டை
அடைக்கும் ஆர்வம்...
வார்த்தைப் பிசிறலாய்...!
வந்து விழுந்த "குவா....குவா...!"
கண்களில் மடைதிறந்த
காவிரியில் இன்றும் நனைந்தபடி...
நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

"தாயும் சேயும் நலம்"....சொன்னத் (செவிலித்) தாய்க்கு
தங்கத்தில் சங்கிலிப் பரிசு
தர விழைந்த மனம்.
அனிச்சையாய்...கைகள்
ஐம்பது ரூபாயுடன்...
இனிப்புகள் வழங்கியது....
அத் தாய்க்கு..!

சந்தோசம் பிசைந்த மனதோடு
சம்சாரம் நோக்கிப் பார்வை...
"சிங்கம்" பிறந்திட்டான்...!
சிதறிய வார்த்தைக்கிடை
சிந்திய கண்ணீ ர்....விழுந்தது
அவள் கன்னத்தில்...!
அந்த எண்ணத்தில்...
நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

பிள்ளைப் பருவத்து...
பள்ளித் துவக்கம்...
இன்று உனக்கு.....!
அழைத்து செல்லும்
பள்ளி வாகனம்....
புகைவிட்டபடி....புறப்பட
காலத்தின் வேகத்தில்
கையசைக்கும் என் விரல்களில்....
கலைந்தோடும் நினைவுகளில்...
நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

நிகழ்காலத்தில் நிற்கத்தான்
எத்தனிக்கிறேன்...!
இறந்தகால உந்தம்
இன்னும் இருப்பதால்...
எதிர்காலம் நோக்கியே
என் பயணம்...!
நிற்காத காலத்தில்....
நான் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

என் குழந்தைப் பருவத்துக்கும்...
என் "குழந்தைப்" பருவத்துக்கும்....
இடையில்...!!

( அனைத்து குழந்தைகளுக்கும் உங்கள் தின வாழ்த்துக்கள்...)
அன்புடன் .... "தமிழ்க்காதலன்".

5 comments:

எல் கே said...

குழந்தைப் பருவ கவிதை அருமை தமிழ் காதலரே

Admin said...

//என் குழந்தைப் பருவத்துக்கும்...
என் "குழந்தைப்" பருவத்துக்கும்....
இடையில்...!!//

அருமை நண்பரே.. தொடர்ந்து எழுதுங்கள்.. தமிழ்க்கதலரே

தினேஷ்குமார் said...

"வலியின் முடிவில்...உன்
வாழ்க்கைத் தொடக்கம்...!"

அருமையான கவிதை தோழரே

தொடருங்கள் அணைத்து குழந்தைகளுக்கும் இனிய குசந்தைகள் தின நல்வாழ்த்துகள்

அழகி said...

குழந்​தைகள் தினத்து கவி​தை அரு​மை நண்ப​ரே.

ஹேமா said...

இன்றுவரையான வாழ்வையே கோர்த்தெடுத்து ஊஞ்சலாட விட்டிருக்கிறீர்கள்.அற்புதம் !