Monday, November 22, 2010

"நானும் கடவுளும்" - பாகம் 3


உண்மையில் மதம் மனிதனிடம் வளர்த்திருக்க வேண்டிய "மனித நேயம்", இன்னமும் விதைக்கப் படாத விதையாகவே இருக்கிறது. மனிதநேயம் இல்லாத மனிதர்களை கொண்டு "இலாபம்" பார்ப்பது மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிற மத அமைப்புகள், தங்களின் இலாபங்களுக்காகவே மக்களை "மாக்களாக" வைத்திருக்கிறார்கள். எல்லா பாவங்களுக்கும் தண்டணை "மன்னிப்பது" என்பதுதான் என்றால், தவறு செய்பவன் தானாக திருந்தும்வரை அவனுக்கு "மன்னிப்பு" ஒன்றையே மருந்தாக கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மதம், எப்படி நல்ல மதமாக இருக்க முடியும்? "மன்னிப்பு" என்பதும் கூட, எவன் பாதிக்கப் பட்டானோ அவனால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல் பாதிக்கப் பட்டவன் ஒருவன், மன்னிப்பு வழங்குபவன் ஒருவன் என்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.?? அதுவும் பாதிக்கப் பட்டவனுக்கு தெரியாமலே..!! தவறிழைத்தவனுக்கு மன்னிப்பு வழங்கும் அந்த மாபெரும் அதிகாரத்தை இவனுக்கு கொடுத்த "கடவுள்" யார்..?. இதை எப்படி இந்த சமூகம் சகித்துக் கொள்கிறது.

ஒருவகையில் பார்த்தால் ஒரு தனி மனிதனை பாவம் செய்யத் தூண்டும் அமைப்பாக அல்லவா மதம் செயல்படுகிறது. அந்த வகையில் மதம் "சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது". தப்புக்கு துணைப் போனவனுக்குதான் அதிக தண்டனை என்று சட்டம் சொல்கிறது. அப்படி பார்த்தால், "பாவ மன்னிப்பு" என்கிற பெயரில் திரும்ப திரும்ப தவறு செய்யலாம் என தட்டிக் கொடுக்கும் ஒரு அமைப்பை, எப்படி நல்ல மதம் என்பது..? அப்படி மன்னிப்பு கொடுப்பவனை எப்படி நல்லவன் என்பது...? இதற்கு எதற்கு ஒரு மதம்..? முன்பின் தெரியாதவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதை விட, எவனுக்கு தவறு இழைக்கப் பட்டதோ அவனிடத்தில், அல்லது தன்னைப் பெற்றவனிடத்தில் மன்னிப்புக் கேட்பது எவ்வளவு மேல்..?!.
 

தான் மனிதன் என்று உணர்ந்து, தன் வாழ்வியலை மானுட வாழ்வியலாக எவன் அமைத்துக் கொள்ளத் தெரிந்தவனோ, அவனுக்கு எந்த மதமும் தேவையில்லை. எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணரவில்லையோ, அவனுக்கு எத்தனை மதம் வந்தாலும் மாற்றம் வராது. ஆக எப்படிப் பார்த்தாலும் இந்த மதத்தாலும், சாதியாலும் விளைந்த நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றுமில்லை என்றால், இவற்றை தூக்கி எறிவதில் என்ன சிக்கலிருக்க முடியும்...!!!??

தனக்கு தேவையில்லாத ஒன்றை மனிதன் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன வந்தது..?? தன்னையும், தன்னை சார்ந்தவனையும் அழிக்கும் சக்தி இன்று உலகில் எது என்று பார்த்தால்..?? அது மதமும், சாதியுமாகத்தான் இருக்கும். இதைவிட கொடுமை, மதம் என்ன சொல்கிறது என்பது தனக்கே தெரியாத போது, தான் சார்ந்த மதத்தின் விதிகளை தன்னாலேயே பின்பற்ற முடியாத போது, அல்லது தன் வாழ்க்கையோடு ஒத்துப் போகாத முரண்பாடுடைய மதத்திற்கு ஆள் பிடிக்கும் "கோமான்கள் கூட்டம்" இருக்கிறதே.... அப்பப்பா..?? அது சக மனிதனை படுத்தும்பாடு...சொல்லி மாளாது.
இவர்கள்  முதலைக்கு ஒப்பானவர்கள். இவர்களிடம் மக்கள் படும் பாட்டிற்கு விடிவுகாலம் எப்போதுதான் வருமோ..?

அப்படி ஒருவனை "கட்டாயமாக மத மாற்றம்" செய்து ஆகப் போவது என்ன..?? இந்த கூட்டத்தை பொறுத்தவரை மதமாற்றம் என்பது "வெறும் பெயர் மாற்றம் தானே" தவிர, வேறொன்றில்லை. இவர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் கைக்கூலிகளாகத்தான் இருப்பார்கள். பணம் பார்க்கும் வழி. அவ்வளவுதான். "மனமாற்றம் தராத மத மாற்றம் எதற்கு..?"

அப்துல்காதராக இருக்கும்போது ஒருவன் கொலை செய்து விட்டு, பின்பு அந்தோணிசாமியாகி பாவமன்னிப்புக் கேட்டால் அவன் "மன்னிக்கப் படுவதால்" அவன் பாவங்கள் எப்படி தொலைந்து போகும்..??? அப்துல்காதருக்கு மதம் சொல்வது "மரண தண்டனை". அந்தோணிக்கு மதம் சொல்வது "பாவ மன்னிப்பு" என்றால், அந்த நபருக்கு எந்த தண்டனையைக் கொடுப்பது...??? சட்டம் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா..?? மதத்தின் படி தீர்ப்பென்றால் எந்த மதத்தின் தண்டனையை நிறைவேற்றுவது. யோசியுங்கள். இந்த குழப்பத்திற்கு காரணம் மதமும், மத மாற்றமும்தான். தேவையா..?! யோசியுங்கள்..??

இதுவரை வாழ்ந்து வந்த மனிதச் சமூகம், எவன் சொன்னதையும் முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்துக் கொள்ளவும் முடியாது..? மனித வாழ்க்கை அப்படி.!!? தனக்கு சாதகமானவற்றை மட்டும் எடுத்துக் கொள்கிற புத்தி மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது. பாதகம் என்றால் எவன் சொன்னாலும் கேட்கமாட்டோம். அப்படியென்றால் பொருள் என்ன??? சுயநலம் சார்ந்தே வாழ்ந்து பழக்கப் பட்டிருக்கிறோம்....அல்லது அப்படி வாழப் பழக்கப் படுத்த பட்டிருக்கிறோம்.....என்றால் இதற்கு நமக்கு மதம் எதற்கு..?? அவற்றிற்கு "நன்மார்க்கம்" என பெயர் எதற்கு..??
 

தனி மனிதனிடம் அவனாக உணராத வரை, ஒரு சிறு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத எந்த அமைப்பும் எந்த பெயரிலும் தேவையில்லை என்பது தெளிவாகிறது.

5 comments:

Unknown said...

நான் மதங்களில் இருந்து விலகியிருப்பவன்... மனிதனுக்கு" மதம்" பிடித்தால் என்ன ஆகும் என தெரியும்..

என் தொடர்புக்கு: krpsenthil@gmail.com

அருண் பிரசாத் said...

நல்லாவே போகுது.. வாழ்த்துக்கள்

Unknown said...

//முன்பின் தெரியாதவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதை விட, எவனுக்கு தவறு இழைக்கப் பட்டதோ அவனிடத்தில், அல்லது தன்னைப் பெற்றவனிடத்தில் மன்னிப்புக் கேட்பது எவ்வளவு மேல்..?!. //

மிக யதார்த்தம்..
ஆனால் மனிதர்கள் மதங்களின் காலில் விழத் தயாராக இருக்கிறார்கள். சக மனிதனிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதில்லை.
அருமையான பதிவு. ஆனால் சில இடங்களில் எனக்கு முரண்பாடு உண்டு..

Thoduvanam said...

எல்லோரும் உணரவேண்டிய உண்மை ..ஆழமான கருத்துக்கள்..தொடர என் வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

மன்னிப்பு
மனதளவில்
தவறுக்கு
நெடுங்கோடு
தவறு செய்தவன்
தன்னை மனமுவந்து
வருத்தினால்
தண்டனை
தழைக்கும் பூமி.............