Wednesday, January 19, 2011

"விழிகளின் தவம்...!"

ஓ... என் மலரே...!
உன் வருகைக்கான என் தவங்கள்
உயிர் பெரும் நாளிது...!
வரமளிக்கும் தவமே
வாழ்வளித்த சுகம் எனக்கு..!
காம்புகளில் குலுங்கும் மலர்களுக்காய்
காத்திருக்கும் செடியாய்...!
தவிப்புகள் அடங்கிய காத்திருப்புகள்...

ஓ.. என் செவ்வானமே...!

எப்போது வருவாய்...?
என்கிற ஏக்கங்களுடன்,- இரவின்
இருள் கிழிக்கும் உன் வருகைக்காய்
வினாடிகளை மரிக்கச் செய்து
விழிகளில் உயிர்த்திருந்தேன்...! உன்
விடியல்கள் காண...

ஓ.. என் மந்தகாசமே...!

மருக்கொழுந்தும் மல்லிகையும்
மணக்காத காரணத்தால் உன்
நினைவுகள் சுவாசித்து என்
நெஞ்சம் நிரப்புகிறேன்....
வழிகிறது வாசம்...!!

ஓ.. என் பிரியசகி..!

சீவனுக்குள் தீ மூட்டி
எண்ணங்களை சிதையிட்டேன்...!
எழும் புகையிலேனும்
என் நேசம் காண்பாயோ...?!
கலங்கும் கண்களில்
காதல்...

ஓ.. என் புனர்சென்மமே...

விழியிழந்தவன் பெற்ற
விழிகளின் இன்பம் எழுதுவேன்...!
யான் பெற்ற இன்பம் எப்படி எழுத...?
சொல்லுக்கும் தமிழ்ப் பள்ளுக்கும்
அடங்காத ஆனந்தத்தை
சொற்குறிகளில் சொல்லமுடியாமல்
திணறுருகிறேன்...!
உன்னை உணருகிறேன். 

ஓ என் நம்பிக்கையே...

விண்வெளியில் ஒளிந்திருக்கும்
விண்மீன்களில் ஒளிரும்
என் நம்பிக்கைகள்...!
உனக்கான என் தவங்கள்
ஒற்றை சூரியனாய்...!  
சுழல்கிறேன் நிதம் உன்னை
சுற்றியே..!,-என் நினைப்புகள்
யாவும் உன்னைப் பற்றியே..!
***************************************






8 comments:

Chitra said...

விண்வெளியில் ஒளிந்திருக்கும்
விண்மீன்களில் ஒளிரும்
என் நம்பிக்கைகள்...!
உனக்கான என் தவங்கள்
ஒற்றை சூரியனாய்...!
சுழல்கிறேன் நிதம் உன்னை
சுற்றியே..!,-என் நினைப்புகள்
யாவும் உன்னைப் பற்றியே..!


....Super!!!

svramani08 said...

சொற்கள் சொக்க வைக்கின்றன.தொடர வாழ்த்துக்கள்

Meena said...

விழிகள் தவம் செய்து பின்னர் விழித்துக் கொண்டதோ
பேரானந்தத்துடன்?

'பரிவை' சே.குமார் said...

மலர்...
செவ்வானம்...
மந்தகாசம்...
என வரிசையாக வந்தால் இடையில் பிரியசகியையும் பிரியமாய் இணைத்துவிட்டீர்.
நம்பிக்கையில் வரிகள் நம்பிக்கை ஊட்டுகின்றன.
அருமை நண்பா.

என்னைக் கவர்ந்த வரிகள் சில...

//விழியிழந்தவன் பெற்ற
விழிகளின் இன்பம் எழுதுவேன்...!//

//வினாடிகளை மரிக்கச் செய்து
விழிகளில் உயிர்த்திருந்தேன்//

//நினைவுகள் சுவாசித்து என்
நெஞ்சம் நிரப்புகிறேன்....//

உங்கள் மூளைக் கிணற்றில் ஊறும் வரிகளெல்லாம் வெல்லமாய்... (வெள்ளமாய் அல்ல)

சக்தி கல்வி மையம் said...

nice kavithai..தொடர வாழ்த்துக்கள்

சுவடுகள் said...

வரமளிக்கும் தவமே
வாழ்வளித்த சுகம் எனக்கு..!

வாவ்...அருமை அருமை . வராங்களே வாழ்வென மலரட்டும்

சுவடுகள் said...

# இரவின்
இருள் கிழிக்கும் உன் வருகைக்காய்
வினாடிகளை மரிக்கச் செய்து
விழிகளில் உயிர்த்திருந்தேன்

அசத்துறீங்க, இந்த வரிகளில்தான் எத்தனை எத்தனை உணர்வுகளின் வெளிப்பாடு.' இரவின்
இருள் கிழிக்கும் உன் வருகை, - இங்கே மின்னலை போன்ற ஒளி பொருந்தியவள்,மற்றும் அத்தனை துரிதமாக வந்து செல்பவள், புனிதமானவள்... என்னும் பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன.

மேலும் காத்திருத்தலின் ஏக்கத்தையும், தவிப்பையும் ,உள்ள வலியையும் இயம்பும் விதம் அருமை கவிஞரே

சுவடுகள் said...

"சொற்குறிகளில்"

உங்கள் தமிழில் புதிய புதிய வார்த்தைகளின் உபயோகம் வியக்க வைக்கிறது.

"சொற்குறிகளில்" ..(சொல்லும் குறியும்...)

அதாவது சொற்களாலும், சங்கேத மொழிகளாலும் ,முக பாவங்களினாலும் விளக்க இயலவில்லை என்பதை ஒற்றை சொல்லில் கையாண்டுள்ள விதம் அருமை.