Monday, January 24, 2011

"சுடுசொல்...?"

கொல்லன் பட்டறையில்
கொழுந்து விட்டெரியும்
இரும்புத் துண்டங்களை
இதயத்தில் சொருகிவிட்ட
சுடுசொற்கள்....!

எறும்புகளின் வளையில்
எறியப்பட்ட நெருப்புத் துண்டங்களாய்
எரித்துக் கொண்டிருக்கும்
கடுஞ்சொற்கள்...!

கருகும் இதயம்
புகையும் புகையில்
நரம்புகளில் மூச்சு திணறல்..!

குயவன் கை மண்ணாய்
குமையும் மனம்
அழுந்தப் பிசையும் நினைவுகளில்
ஆழப்புதைந்து கண்ணீர் கசிகிறது...!

தாய் திணிக்கும் இரையை
துப்பும் மழலையாய்....
மனம் காதுக்குள் விழுந்ததை
வெளியேற்ற எத்தனிக்கிறது.

சீரணிக்காத உணவும்
சீரணிக்க முடியா சொல்லும்
உடல் மன நலம் கெடுக்கும்.

எரியும் சூரியனுக்குள் நுழைந்து
எரிக்கும் வார்த்தையை தகிக்க
எண்ணம் கொண்ட மனம்
சூரியச் சூட்டினை தணலாய் ஏற்றது.

சூடுவிழுந்த இதயம் வடுக்களில்
வாழ்க்கையை துடிக்க செய்கிறது..!
இறுப்பும் இறப்பும் ஒருங்கே
தற்கொலை செய்துகொண்ட தருணமது.
 

எண்ணங்களில் எழும் சாம்பலில்
நினைவுத் தூசுகள் மிதக்கின்றன.
வற்றிய உணர்வுகளில் வற்றிப் போய்
கண்களில் உலர்ந்துபோன நிகழ்காலம்..!
கண்ணீராய் உறைந்திருக்கும் இறந்தகாலம்..!!

வற்றிய குளத்தில் படியும் சேறாய்
வாடிய மனதில் படியும் சுடுசொல்.

*****************************************

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சொற்கள்தான் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது...
இங்கு பேசும் ஒவ்வோறு வார்த்தைக்கும் நாமே பொறுப்பு என்று உணர்ந்தவன் நான் நன்றி...

Chitra said...

எண்ணங்களில் எழும் சாம்பலில்
நினைவுத் தூசுகள் மிதக்கின்றன.
வற்றிய உணர்வுகளில் வற்றிப் போய்
கண்களில் உலர்ந்துபோன நிகழ்காலம்..!
கண்ணீராய் உறைந்திருக்கும் இறந்தகாலம்..!!



.....உணர்வுகள் - கவிதைகளில் அருமையாக காட்டப்பட்டு இருக்கிறது. நல்லா எழுதி இருக்கீங்க.

Philosophy Prabhakaran said...

உணர்ச்சிமயமான கவிதை நண்பா... சூப்பர்...

'பரிவை' சே.குமார் said...

உணர்ச்சிமயமான கவிதை.

Thoduvanam said...

பாலைவெளியும்,உலைக்கலன் உருகும் செந்தழல் அன்ன குழம்பு காட்டியும் சுடுசொல்லின் தாக்கம் காட்டினீர்.சிறப்பா எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்....