Monday, January 10, 2011

"சொல்வாயோ...!? (அ) கொல்வாயோ...?!"


பூமி இழந்து புலம் பெயர்ந்தவன்
சாமி இகழ்ந்து சாபம் தரும்
கோபமுடன் கொந்தளிக்கும் மனம்
சபிக்கப் பட்ட வாழ்க்கைக்கு
துவைக்கப் படும் உடலை
ஆற்றுப்படுத்த மாற்றுவழியின்றி
அடர்வனத்து சதுப்பில் புதையும் கால்களின்
அழுத்தமுடன் கசங்கி நசுங்கி
சருகாகிறது.

மெல்லுடலியின் நீட்சியாய்,- வாழ்க்கை
நத்தைக் கூட்டுக்குள் நகர்கிறது,-கரை
ஒதுங்கும் சங்கின் மறைவிடங்களில்
தனித்திருக்கும் தவம் வாழ்க்கை.
உடைத்து விழுந்துடையும் பானையின்
சில்லுகளில் தேங்கும் நீர் குடித்து
உயிர் துறக்கும் சவத்தின் வாயில்
திறந்திருக்கும் வாழ்க்கை.
புகைத்து புகைத்து புகைக்குழியில்
எறிந்த உடலின் எச்சத்தை....
சாம்பல்கள் உதிர்த்து உதிர்த்து
சாம்பலாகும் மிச்சத்தை...
சவமாய் சுடலையில் கிடத்தி
சுருட்டுப் படையல்...!
பாடை மாற்றி பயணம் தொடரும்
பாதை மாறாமல்...!!
செத்துப் போகிறது மனம்.

செல்களின் அழிவு முடிவுக்கு வரும் வரை
செல்லரித்த நாட்களை செலுத்தும்
மண்ணரித்த சருகாய் மனம்
கரையான்களின் அரிக்கும் கேள்விகளில்
கரைந்து மரிக்கும் காலம்.
நினைவிருக்கும் வரை
உன்னை நினைத்திருப்பேனா...?
நின்னை நினைக்கும் வரை
உயிர்த்திருப்பேனா...?
வால் நட்சத்திரமாய்
நீளும் கேள்விகளில்
உணர்ச்சி சாம்பல்கள்.

உன் நினைவில் செத்துக் கொண்டிருக்கும்
சடலமாய் நானும், சடங்காய் வாழ்வும்,
நினைவுகளில் நீர்த் தெளித்து
உணர்வுகளுக்கு உயிர் ஊற்றுகிறது
காலமும் காதலும்.

மனம் கொன்று மணம் கொண்டு
காணும் சுகம் நன்றன்று
கடமைக்கு சந்ததி பெருக்கும்
விலங்கின் தன்மையில் மனிதம்
கொல்லும் மாயச் சமூகம்.
பசித்தாண்டா பின்னறிவு
பகுத்தறிவு பேசும் பேச்சில்
மலம் மணக்கும்.
பசி தாண்டும் முன்னறிவு
பக்குவத்தில் மனிதம்
மணக்கும்.


நெட்டுயிர்த்த ஒற்றை மரம்
நிழல் தராது உன் போல்...!!
படரும் கிளைகள் பரப்பும்
அடர்மர நிழலில் ஆயிரம் உயிர்கள்.
'இலை' யுதிர்க்கலாம் மரம்...!
"இல்லை" உதிர்க்கலாமோ நீ ...?

சொல்லடி...!
என்னை கொல்லடி.  
உன் கையில் மரணமென்றால்...
உயிர்த்திருக்கும் என் உணர்வுகள்.
********************************************


9 comments:

தினேஷ்குமார் said...

தனிமையின் உணர்வுகள் உயிர்பெற்று உம்முள் கவியாகிறது நண்பரே ஒவ்வொரு வரிகளும் அருமை தனித்த ஏக்கங்களின் ஆதங்கம் ... கீழே உள்ள படம் பல கவிதை வாசிக்கிறது

வினோ said...

மரணம் எல்லாம் வேண்டாம் தல... அங்க அந்த கரங்களில் உயிருடனே இருக்கட்டும்...

சுவடுகள் said...

# அடர்வனத்து சதுப்பில் புதையும் கால்களின்
அழுத்தமுடன் கசங்கி நசுங்கி
சருகாகிறது.


உங்கள் எழுத்துக்களுக்கு நிகர் நீங்கள்தான் எத்தனை நேர்த்தியான உவமை,'ஆழ் அன்பு' மென்மையானதுதான் ஆனால் அதன் வன்மையை நீங்கள் எடுத்தியம்பும் விதம் பிரமிக்க வைக்கிறது.

சதுப்பு நிலத்தில் நடப்பதென்றால்.. ??!! கால்கள் வேர் கொள்ள படும் பிரயர்த்தனத்தில் சிக்கித் தவிக்கும் உடலின் கதியை வாசிக்கும் முன்பே உயிர் பிழியும் வலி உணர முடிகிறது.

ஆரம்பம் முதலே உங்கள் கவிதைகளை வாசித்து வருகிறேன்....உயிர் குழைத்து எழுதுகிறீர்கள்.உங்கள் ஆன்மாவின் ,தேடல் கதறல், ஏக்கம் , இராகம் .....என எல்லாம் உணர முடிகிறது. மிக்க நன்று வேறென்ன சொல்லிவிட முடியும்.!!!!!

Chitra said...

சொல்லடி...!
என்னை கொல்லடி.
உன் கையில் மரணமென்றால்...
உயிர்த்திருக்கும் என் உணர்வுகள்.


.....உங்கள் கவிதைகளில், நல்ல உயிரோட்டம் உள்ளது.
வித்தியாசமான படமும் கூட.

'பரிவை' சே.குமார் said...

நண்பா... கவிதையிலும் அதன் வரிகளிலும் மனம் சொக்கி நிற்கிறது. நேற்றிரவே படித்தேன். எனக்கும் கணிப்பொறியில் பிரச்சினை. நண்பர்களின் பகிர்வை படித்தாலும் வாக்கிடவோ, பின்னூட்டமிடவோ முடியாத நிலை. அலுவலகத்திலும் அப்படித்தான் நேற்றுவரை. இன்று கொஞ்சம் பரவாயில்லை. சில நேரம் ஒர்க் ஆகிறது. பல நேரம் படுத்துகிறது. பிளாக்கர்தான் பிரச்சினை என்று நினைக்கிறேன். வாக்கு அளிக்க முடியவில்லை.

ஹேமா said...

ஒவ்வொரு கவிதையும் உணர்வோடு இருக்கு.அனுபவபூர்வமான கவிதையாகவே உணர்கிறேன்.

தினேஷ்குமார் said...

விருட்சமென்று நீ படர்ந்தாய்
நீயுதிர்க்கும் இலையின் சருகாக
நான் படர்ந்தேன் எனை
ஏன் படைத்தாய்

சருகாக நான் பிறந்தும்
எருகாக மாறிய கோலம்
உனை எரிக்கும் சாம்பலிலே
பிழைத்திருக்கும் பல்லுயிர்
என்றாய் பொறுத்திருந்தேன்

நினைத்திருந்தேன் உன்னை
நெஞ்சில் சுமந்திருந்தேன்
அழைத்திருந்தாய் அன்மையில்
பிழைத்திருந்தேன் குழி பறித்தாய்
குழிக்குள் எனை யமர்த்தி ..........

ஆர்வா said...

மிக ரசனையான கவிதை.. ஒவ்வொரு வரியிலும் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது

Meena said...

ஒவ்வொன்றும் அருமையான வரிகள். யாருக்கோ தூது கடைசியில்