Monday, January 03, 2011

"விடுதலை தமிழன்"

தமிழர் நாகரிக வேரில்
வெடித்தெழுந்த எங்கள் வேங்கையே..!
சுதந்திர காற்றை சுவாசிக்க
சூழ்ச்சிகள் வென்ற மறத்தமிழ..!
மானமும் வீரமும் கண்ணென
காப்பாற்றி மனிதம் காத்த மாருதமே...!!

இனமான உணர்வை இறுதிவரை
இன்முகத்தோடு காத்தவரே..!
கோட்டையில் கொடி பறக்க
குலதெய்வம் காவல் காக்க
மருதுபாண்டிய நட்பு நோக்க
மண் காத்த மறக்கூட்டத் தலைவ..!!

செந்தமிழ் சிறக்க நல்லாட்சி தந்து
குடிகளைப் போற்றிய கோவே..!
புலவரும் பாணரும் பாடிய பழந்தமிழே..!
அந்நியனை மீசையில் மிரட்டிய அதிசயமே...!!
அண்டியவரை கருணையில் காத்தவரே.

 

செழுங்கழனி செந்நெல்லும் செங்கரும்பும்
உழுத வயல் ஊடுருவும் பயிர்வகையும்
பக்குவமாய் காத்த பசுமை புரட்சியே...!
பகை என்று வந்திட்டால் பாயும் புலியே...!
நகைமுகம் மாறாத நறுந்தமிழே...!!

காட்டிக்கொடுத்ததாலேயே...
"கௌரவம்" குனிந்த எங்கள் கட்டபொம்ம...
'எட்டப்பன்கள்' இருக்கிறார்கள் இன்னுமிங்கே..
உம்போல் கட்டபொம்முவைதான்...
காணமுடியவில்லை....!

விடுதலைக்கு வித்திட்ட வீரமே...!
விழியில் வாள் சுழற்றும் சிங்கமே...!!
கயத்தாறு கயிற்றை முத்தமிட்ட கடைத்தமிழே...!!!
தூக்குமேடை அல்ல நம் தோல்விக்கு காரணம்
துரோகக் கூட்டம்தான்.

அந்த கூட்டம் மட்டுமே இன்று பல்கிப்பெருகி
பாரெங்கும் திரிகிறது பார்...!
மீண்டும் நீர் பிறந்திட வேண்டும்.
இம்முறை தோற்பது நாமல்ல அவர்கள்.
குலம் கெடுத்த கோடரிகளின் வேரறுப்போம்.
கும்பிட்டு கைஎடுத்தால் குலம் காப்போம்.

நல்ல தமிழ் சமூகம் படைப்போம்...
பாஞ்சாலங்குறிச்சி மட்டுமல்ல...!
பாரதமெங்கும்....!!
அஞ்சாசிங்கமென இங்கொரு
ஆண் கூட்டம்....
உன் வரவுக்காய்...

மீண்டும் பிறந்திடு எங்கள் கட்டபொம்ம...!!

வாழ்க தாயகம்..! வாழ்க தமிழ்..!! வாழ்க நின் புகழ்...!!! 
குறிப்பு : இன்று பிறந்த நாள் காணும் எங்கள் "தமிழ் கோ" "வீர பாண்டிய கட்டபொம்மு"வுக்கு தமிழ்க்காதலனின் பிறந்த நாள் வாழ்த்தாக இந்த கவிதை சமர்ப்பணம்.          

6 comments:

சுவடுகள் said...

செழுங்கழனி செந்நெல்லும் செங்கரும்பும்
உழுத வயல் ஊடுருவும் பயிர்வகையும்
பக்குவமாய் காத்த பசுமை புரட்சியே...!

'எட்டப்பன்கள்' இருக்கிறார்கள் இன்னுமிங்கே..
உம்போல் கட்டபொம்முவைதான்...
காணமுடியவில்லை....!

மீண்டும் பிறந்திடு எங்கள் கட்டபொம்ம...!!
வாழ்க தாயகம்..! வாழ்க தமிழ்..!! வாழ்க நின் புகழ்..!!!

வைர வரிகளை விதைத் திருக்கிறீர்கள். தமிழனின் வீரமும் மானமும் வினாக்களாகிக் கொண்டிருக்கும் வேளையில்......,தங்களின் சமர்ப்பன வாழ்த்துக்கள்....எழுச்சியை தூண்டுகிறது. இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து விதைத்திடுங்கள்..வாழ்த்துக்களுடன்வந்தனங்களும்.

Unknown said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

//'எட்டப்பன்கள்' இருக்கிறார்கள் இன்னுமிங்கே..
உம்போல் கட்டபொம்முவைதான்...
காணமுடியவில்லை....!//

தமிழர் குல மாவீரனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

Ramesh said...

அருமையா எழுதி இருக்கிறீர்கள் நண்பரே...

ஹேமா said...

தலைமுறைகள் இன்னும் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.நல்ல கவிதை.

Meena said...

வாழ்க உங்கள் தமிழ் பற்று