Sunday, January 02, 2011

"வலைப்பூவுலகுக்கு நன்றி'.... (150 வது பதிவு)

பதிவுலக வலைப்பூ எழுத்தாளர்களுக்கும், வலைப்பூ வாசகர்களுக்கும் தமிழ்க்காதலனின் வணக்கம். உங்களில் ஒருவனாய் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பகிர்கிறேன்.... நாளும் நலமோடு வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்களையும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மானிட சமூகத்தின் நிகழ்கால மதிப்பீட்டாளனாகவும், இறந்த கால பதிப்பீட்டாளனாகாவும், எதிர்கால சிற்பியாகவும் ஒரு எழுத்தாளன் இருக்கிறான். இருக்க வேண்டும். இருப்பவர்கள்தான் எழுத்தாளர்கள். அப்படிப்பட்ட அரும்பெரும் பணியை தனக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கும் மிகப் பெரும் சாதனையாளர்களான உங்களுக்கு நன்றி சொல்லாமல் போனால் அது நம் தமிழ்க் கூறும் நல்லுலகத்துக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.

ஒவ்வொரு எழுத்தாளனும், எழுத்தாளினியும்  அவர்களுடைய மொழியை சிறப்படைய செய்கிறார்கள். மொழியை வடிவமைக்கும் தொழில்நுட்பவாதியாகிறார்கள். மொழியை புணரமைக்கும் சீர்திருத்தவாதியாகிறார்கள். நாளைய சந்ததிக்கு நம் சரித்திரம் சொல்லும் வரலாற்றை சமைக்கிறார்கள். அப்படிப்பட்ட பணியை செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு தமிழ்க்காதலனின் மனமார்ந்த நன்றிகளை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

அறம், பொருள், இன்பம்

வாழ்வாதாரமான இந்த தலைப்புகளை மையப்படுத்தி கதை, கவிதை, கட்டுரை, எழுதும் அத்தனை பேருக்கும் என் பாராட்டுக்களும் நன்றிகளும்.

வீடு, பேறு

மனித வாழ்வை நெறிப்படுத்தும் வழிமுறைகளை மையமாய்க் கொண்டு எழுதும் அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.

கவிஞர்களுக்கு

தம் சிந்தனையை மொழிவளத்தோடு குழைத்தெடுத்து, இனிமையும், தமிழ்ச் சுவையும் சேர்த்து கவிதைப் படைக்கும் தமிழார்வ கவிஞர்களுக்கு எமது பெருமைக்குரிய நன்றிகள்.

கட்டுரையாளர்களுக்கு

தான் வாழும் சமூகத்தின் கண்ணாடியாக விளங்கும் கட்டுரையாளர்களுக்கு மிகுந்த மகிழ்வான நன்றிகள்.

கதாசிரியர்களுக்கு

தம் எண்ணங்களையும், கற்பனைகளையும் எழுத்தாக்கும் சமூகச் சிற்பிகளுக்கு வாழ்த்துகளுடன் நன்றிகள்.

கலைத்துறையினருக்கு

தாம் சார்ந்த கலையைப் பற்றி எழுதி மற்றவரும் அந்த கலையை பயில ஆர்வத்தை தூண்டி கலை வளர்க்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் தமிழ்க்காதலனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தொழில்நுட்பவாதிகளுக்கு

தான் தெரிந்திருக்கும் தொழில் நுட்பத்தை மிகச் சரியான விளக்கமுடன், வழிகாட்டலுடன், படங்களும் தந்துதவி இன்றைய தலைமுறையை அடுத்த தொழில்நுட்ப பரிமாணத்துக்கு அழைத்து செல்லும் மிகப் பெரும் சமூகத் தொண்டு செய்து கொண்டிருக்கும் அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் உங்களின் கரங்களை என் கண்ணொற்றி, முத்தங்களுடன் நன்றிகள்.

( நீங்கள்தான் நாளையத் தமிழுலகத்தையும், நம் தமிழன்னையையும் உண்மையாய் வாழ வைக்கும் மண்ணின் மைந்தர்கள் என்கிற சிறப்பை பெறுகிறீர்கள்... )
எழுத்தாளர்களின் சாதனை

நம்முடைய தமிழக அரசு சமீபத்திய சாதனையாக சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளும் "செந்தமிழ் மாநாடு" சுமார் 300  கோடி ரூபாயில் என்ன சாதனை நிகழ்த்தி இருக்கிறதோ அதை விட அதிகமாகவே நம்முடைய வலைப்பூ உலகில் அரும் பெரும் சாதனைகள் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி மிகச் சிறப்பாய் நடந்தேறி வருகிறது.

முன்பெல்லாம் எழுத்தாளர்கள் குறைவு.... வாசகர்கள் அதிகம். ஆனால் இன்று....
ஒரு வலைப்பூவுக்கு சொந்தமான ஒவ்வொருத்தரும் எழுத்தாளன்.....
ஒவ்வொரு வலைப்பூ எழுத்தாளனும் ஒரு வாசகன்....

நிலையைப் பாருங்கள்... வாசகனை எழுத்தாளனாய், எழுத்தாளனை வாசகனாய் வைத்திருக்கும் இது மிகப் பெரும் சாதனை. இந்த ஈடு இணையற்ற சாதனையை நம் பதிவுலகம் மிகச் சிறப்பாய்  செய்து கொண்டு வருகிறது. இது நல்லதொரு தொடக்கம். அறிவு மிக எளிதாய் எல்லோரையும் சென்று சேரும்.

இப்படி நம்மையும் நம் மொழியையும் கட்டமைக்க, அடுத்த தலைமுறையின் கணினி வாழ்க்கைக்கு நம் மொழியைக் கொண்டு சேர்த்து அவர்களுக்கும் உதவி, மொழியையும் வளர்த்து, காக்கும் சீரியப் பணியை எந்த மாநாடும் செய்துவிட முடியாது என்பது திண்ணம். அந்தப் பணியை சத்தமில்லாமல் வலைப்பூவுலகம் செய்து வருகிறது.

உலக நாகரீகங்களில் தமிழர் நாகரீகம் தலை சிறந்தது..... மறவாதீர். அதை எப்போதும் தலை சிறந்ததாய் வைத்திருக்க பாடுபடுவோம்.

வேண்டுகோள்

நம்முடைய ஒவ்வொரு கணினியும் ஒரு நூலகம், ஒவ்வொரு பதிவும் தமிழை இணையத்தில் இறக்கி வைக்கும் மொழியாக்கம். அதை மிகச் சரியாய் பயன்படுத்துவோம்.

முடிந்தவரை தனித்தமிழில் எழுதுங்கள். எழுதிப் பழகுங்கள். எந்த மொழியானாலும் அந்த மொழியில் எழுதும் போது அந்த மொழியை மட்டும் கையாளுவதுதான் அந்த எழுத்தாளனின் திறமை. மொழியை கலந்து எழுதுவது என்பது நம்முடைய மொழியறிவு குறைவையே வெளிக்காட்டுகின்றன. எல்லா மொழியும் சிறப்பே. ஒரு ஆங்கிலேயனோ, பிரஞ்சுக்காரனோ, அரேபியர்களோ அவர்கள் மொழியில் எழுதும் போது தமிழை மேற்கோள் காட்டி எழுதுவது கிடையாது. அவர்களுக்கு தமிழ்த் தெரியாது. அப்படி எழுத அவசியமும் கிடையாது.

தமிழர்களுக்கு மட்டும் என் இந்த தலை விதி.... இனி இவ்விதி மாற்றுவோம். பிற மொழிக் கலப்பு தவிர்ப்போம். அது நம்முடைய அடையாளம் அல்ல. அது நம்முடைய கௌரவம் அல்ல.

புரிந்து கொள்ளுங்கள்.....

ஒரு பழையத் துணியிலோ, புதுத் துணியிலோ கிழிசல் என்றால்... அங்கே நாம் பழையதில் புதியதையும், புதியதில் பழைய துணியையோ ஓட்டுப போட்டு தைத்தால் முடிவில்... கிழிசலும், ஒட்டுத்துணியும், தையலும் அப்படியே தெரியும் அசிங்கமாய்....

அது போலதான் ஒரு மொழியில் பிற மொழிக் கலந்து எழுதுவதும் ..... அசிங்கமாய்.........

தவிர்ப்போம். புதிய தமிழ் வார்த்தைகளை கண்டு பிடிப்போம். இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவோம். வளர்வோம் நாமும், நம் மொழியும், நம்முடைய நாகரீகத்தொடு.

நன்றி... வணக்கம்.                                                       
குறிப்பு : இந்த சாதனைக்கு பேருதவி செய்து கொண்டிருக்கும் நம்முடைய "கூகுள்" வலை முகவரிக்கு ஒட்டுமொத்த வலைப்பூவுலகத்தின் சார்பாக தமிழ்க்காதலன் நெகிழ்ச்சியுடன் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்... நன்றி கூகுள்.

5 comments:

'பரிவை' சே.குமார் said...

தமிழ்...
150க்கு முதலில் வாழ்த்துக்கள்...
இது ஆயிரக்கணக்கில் பல்கிப் பெருக வேண்டும்.
அருமையானதொரு நன்றியறிவித்தல் பதிவு.
உங்கள் கருத்து முற்றிலும் ஏற்க்கக்கூடியதே...
வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் said...

மென்மேலும் சிறந்த படைப்புகள் படைக்க இச்சிறுவனின் வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்

Meena said...

//நம்முடைய தமிழக அரசு சமீபத்திய சாதனையாக சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளும் "செந்தமிழ் மாநாடு" சுமார் 300 கோடி ரூபாயில் என்ன சாதனை நிகழ்த்தி இருக்கிறதோ அதை விட அதிகமாகவே நம்முடைய வலைப்பூ உலகில் அரும் பெரும் சாதனைகள் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி மிகச் சிறப்பாய் நடந்தேறி வருகிறது.//

நீங்கள் சொல்லுவது மிகவும் சரி

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

ஹேமா said...

நன்றியோடு அத்தனைபேருக்கும் நன்றி சொல்லியிருக்கிறீர்கள்.உங்க நல்ல மனதிற்கு என் வாழ்த்துகள்.