Thursday, September 05, 2019

”வ.உ.சி எனும் வங்கச்சிங்கம்..!”



ஏன் பெற்றோம்..? எதற்காக பெற்றோம்..?
எதை எதிர்த்தோம்..? எதற்காக எதிர்த்தோம்…?
ஊரார் வதைப்பட்டு காலால் மிதிப்பட்டு
தீராத் துன்பம் துய்த்து மாய்ந்து

மீளா நிலைக்கு குடிகள் வீழ்ந்தும்
பெற்றது விடுதலையா…? அச்சமும் ஐய்யமும்
வந்தேகும் நிலைதான் யதார்த்தம் என்றாலும்
இருநூறாண்டு உயிரீகை செந்தீயில் எழுந்த

நாட்டின் உயர்வுக்கு உழைத்த உத்தமர்கள்
பாட்டில் அடங்கா அளவுக்கு ஆயிரமாயிரம்
தோன்றின் புகழோடு தோன்றி தன்னை
தாயக எழுச்சிக்கு தத்துக்கொடுத்து வீழ்ந்த

பெருமகனார்..! செல்வவளம் செறிந்த நற்குடும்பம்
விட்டேகி சிறைச்சாலை சொந்த வீடாக்கி
சிறையோர்க்கு உணவிட உடல் வருத்தி
சேராத செக்கை மாடாக இழுத்து

தம்கைப் பொருள் இழந்து நமக்கு
கப்பல் விட்டு அயலார்க்கு கப்பம்
கட்டாமல் தவிர்க்க – சொந்தமான யாவும்
இழந்து பிற்காலம் தனித்து விடப்பட்ட

பெருந்தகை வாழ்வு பெருமை பேச
அருந்தவப் புதல்வனாய் அவதரித்த திருநாள்
இந்நாள் நன்னாள் அவர்தம் பெற்றோர்
பெரிதுவந்த திருநாள் “முத்துநகர் முத்து”

கலம் ஓட்டிய தமிழர்தம் கடலில்
கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி
வங்கம் வாங்கி வங்கத்தில் ஓட்டிய
சிங்கம் தமிழினத் தங்கம் அவர்தாம்

ஓயா உழைப்பும் ஒய்யார சிந்தனையும்
மாறா மனமும் தீராத்தாய் மண்பற்றும்
மக்கள் பற்றும் வாழ்நாள் பணியாய்
வைத்திருந்த யாவும் மற்றவர்க்கு கொடையாய்

தந்தேகி சிறையில் சிந்திய குருதியில்
விடுதலை கவிதை எழுதிய கோமகனார்
சிவாவும் பண்பாளர் சிலரும் பக்கத்
துணையாக விடுதலை யானார் - மண்ணில்

வாழ்வாங்கு வாழப்பிறந் தவர்தம் வாழ்வே
ஈகையர் யாவர்க்கும் முற்பாடம் காண்பீர்
நாடுகாத்தல் எளிதன்று நல்லோரே கேளீர்..!
அடிமைகளுக்கு அது புரியாது பாரீர்..!!

(தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் அவர்களின் 148 வது பிறந்தநாள் கவிதை)

No comments: