Saturday, January 18, 2014

கவி....”தை”..!

உள்ளத்து பள்ளங்களில் இட்டு நிரப்புகிறேன் உன்னை - உள்ளே
உணர்வுக் குவியல் தொட்டுச் செல்கிறது உன்னை - வெளியே
உந்தித் தள்ளும் உணர்வு முகிழ்ப்புகளை விழுங்க - தனியே
உட்கார இடம்தேடி தவிக்கும் உள்மன ஒழுகலில் - சகியே

உன்னை என்னுள் செதுக்கச் செய்கிறேன் நினைவே - சிலை
தன்னை கலை அன்னை காணுதல் போலே - மலை
தன்னில் மறையும் கதிரவன் பாய்தலாய் உள்மன நிலை
என்னில் கரையும் என்னை நானே தேற்றத் தோற்கிறேன்

மின்னல் வீச்சில் ஊடுறுவல் செய்து மனதை சாய்க்கும்
கன்னல் மொழியில் கண்கள் கொய்து கயல் விழிகள்
பின்னல் அளந்து பின்னால் காட்டும் கார்குழல் - நடையில்
அன்னம் கலந்த அழகு காட்டும் ஒய்யார இடையில்

அருவி கொட்டும் நீராய் பெருகி வரும் தமிழால்
அறிவு மடை திறந்த கவிவயல் நிரம்பும் எழிலால்
செறிவு ஓடை கலந்து உளவியல் ததும்பும் பொழிலால்
குருவி கூடாய் ஆடும் சித்தம் உன்னால் நித்தம்

சமர் புரிய சரிசம அமர் நிலை ஆய்ந்து
சடுதியில் புரிந்த முத்தப் போரில் ஆழ்ந்து - விடுகையில்
சத்தமின்றி வீழ்ந்தே வாழ்ந்த நிலை நினைவுத் தொடுகையில்
சாமரம் வீசிடும் நிகழ்கால நிமிடங்கள் கரைந்தே - நிசத்தில்

பாமர சிந்தனை பாய்மர ஓட்டம் எடுக்க - அலை
பாயும் மனதின் நிந்தனை வாட்டம் கொடுக்க - நிலை
மாயும் குணத்தை நிறுத்த பாட்டும் தொடுக்க - கலை
வாயும் சுவைத்தமிழ் சிந்தும் சந்தம் கனிவாய் - உலை

இட்ட அரிசியும் உணவிட்ட அரசியும் கலந்திட்ட வேளை
முட்ட முட்டும் தலையில் தொட்டும் கையொடு - கண்கள்
பட்டும் எட்டும் நிலையில் கிட்டியும் கிட்டா இன்பம்
தொட்டு தொடரும் இலையில் பரிமாறல் இதமாய் - வாழ்தல்

வகுத்தல் பெருக்கி தொகுத்த குறுநகை செல்வம் - ஈதல்
பகுத்து இன்புற செழித்து வளர திருமுகம் - காணல்
களித்தல் திளைத்தல் கானக மானும் மயிலும் ஒத்தல்
பொத்தல் பையில் சேமித்த சில்லரை தொலைந்த பிதற்றல்

தொகுத்து மொழிதல் மொழிந்த மொழியில் புரிதல் புகுதல்
புகுத்த விழைந்த அழைத்தல் மிகுந்த அன்பில் அமிழ்தல்
முகத்து முகத்தில் நெகிழ்தல் சிமிட்டும் கண்கள் உயிர்த்தல்
அகத்துள் அகத்தை ஆழ்த்தி கிட்டும் ஆனந்த உலகம்.

3 comments:

'பரிவை' சே.குமார் said...

வகுத்தல் பெருக்கி தொகுத்த குறுநகை செல்வம் - ஈதல்
பகுத்து இன்புற செழித்து வளர திருமுகம் - காணல்
களித்தல் திளைத்தல் கானக மானும் மயிலும் ஒத்தல்
பொத்தல் பையில் சேமித்த சில்லரை தொலைந்த பிதற்றல்

கவிதை அருமை...

காயத்ரி வைத்தியநாதன் said...

//வெளியே
உந்தித் தள்ளும் உணர்வு முகிழ்ப்புகளை விழுங்க - தனியே
உட்கார இடம்தேடி தவிக்கும் உள்மன ஒழுகலில் // மிகவும் சிறப்பான கவிதை..:)

காயத்ரி வைத்தியநாதன் said...

கவிஞன் விதைத்திருக்கும் கவி...” தை” அழகிய விருட்சமாய் காட்சியளிக்கிறது..:)