Thursday, February 13, 2014

”இருத்தலில் இளைத்தல்..?”

மிகுவன மொடுமலை பாயும்நதி சூழும்
பரந்த நிலம் கரடும் முரடும் திருத்தி
கதிர் விளைந்து குதிர் நிரம்பும்
பணிசெய் பைந்தமிழ் பாட்டன் பூமி

நெடுநெல் வெண்கரும்பொடு செங்கரும்பு சிறுதானியம்
பயிர்த்தொழில் உயிர்த்தொழி லாம்நமக்கு - ஆவியில்
விளைந்த அருந்தாகம் மேவிநின்ற வாழ்வினில்
அலைந்து திரிந்து அல்லும் பகலும்

ஆக்கிய நல்வினைகள் நமக்காய் இன்னும்
ஆறாய் குளமாய் ஏரியாய் குட்டையாய்
கோயிலாய் சத்திரமாய் சரித்திரமாய் யாவும்
நிகழ்காலம் காட்டி நீளும் சாட்சியாய்

ஆயினு மென்ன அறியா நமக்கு
நாயினு மிழிந்த நிலை யறியா
வாழ்வினை பிடித்து தொங்கும் வௌவால்கள்
நல்லதும் நன்றியும் மறந்து திரிய

அல்லதை கட்டி அடுத்த தலைமுறைக்கும்
அதையே காட்டி ஊட்டி வளர்க்கும்
சதை விற்கும் சமூகத்தின் அடர்நிழலில்
கதை கொண்டு எழுவாத அனுமன்கள்

உழுத நிலம் உண்ட வீடு
பழுதாய் விட்டு - கண்டம் பாயும்
அண்டத் துகளாய் பிண்டம் மாய்தல்
அறிவியல் என்றே இயம்புதல் நன்றோ...?!

குன்றின்மணி குணம் மனிதரில் ஒரு
குன்றின்மணி அளவேனும் இன்றேல் நமக்கு
குன்றும் ஊணும் உயிரும் இழிந்தே
குறித்த நல்வழி குறித்தே.



No comments: