Thursday, September 22, 2011

"தோற்றச் சலனம்"




ஊற்றுக் கண்வழி உருக்கொண்டு பெருக்கெடுத்து
உச்சிமலை வழிந்து விழுந்து சரிந்து 
ஊர்மெச்ச வளைந்து நெளிந்து சுழித்தோடும்
உள்ளக் களிப்பில் நுரைக்காட்டிச் சிரிக்கும்


நதியும் பாயும் பாய்ந்தபின் ஓயும்
ஓய்ந்த பின்காயும் காய்ந்த பின்
மணல்வெளி காட்டிச் சிரிக்கும் கண்ணாடி
தணல் கூட்டும் தகிக்கும் எரிக்கும்


குளிர்ந்து கிடந்த ஒன்றே நிலைமாறி
திசைமாறி தீப்பற்றும் அனல் ஏறி
புனலும் கனலாகும் கனலும் அனலாகும்
புரிய வொட்டா அதிசயம் காண்


எரிதழல் எரிகிறதா..? எரிக்கிறதா..? தான்பற்றிய 
விறகில் தன்னைக் கரைக்கிறதா..? கொழிக்கிறதா..?
விடும்வரை விடாமல் வீழ்தழல் சிரிக்கிறதா..?
விறகில் எரிவது நீரா..? நெருப்பா..?




லனம் சலனப்பட மௌனம் தாங்கும்
மையம் சலனப்பட சலனம் சபலப்படும்
சலனத்தின் சபலத்தில் சஞ்சலம் புறப்படும்
சஞ்சலத்தின் மையத்தில் மௌனம் மையமிடும்


சலனம் தாங்கும் மௌனம் சஞ்சலப்பட
சஞ்சலத்தின் சலனத்தில் சபலத்தின் தோற்றம்
மௌனத்தை ஆளும் சபலம் சலனத்திற்கு
சலனத்தில் சதிராட மௌனத்தின் சபலம்


மிகும் மிக சஞ்சலம் ஆளும்
சடலம் சாக்காடு போக்கா வேக்காடு
உடலம் தாங்க சபலத்தின் ஊர்வலம்
மௌனத்தின் மையத்தில் உயிரின் தேர்வலம்.


1 comment:

rajamelaiyur said...

//
குளிர்ந்து கிடந்த ஒன்றே நிலைமாறி
திசைமாறி தீப்பற்றும் அனல் ஏறி
புனலும் கனலாகும் கனலும் அனலாகும்
புரிய வொட்டா அதிசயம் காண்
//

அருமையான வரிகள்