Monday, June 27, 2011

"மதிமயக்கம்"




பானையில் பொங்கும் பாலில் புரிகிறது 
மனம் எங்கும் வழியும் இன்பம் 
மண்பானை வாய் வழியும் நுரையாய்
கடைக்கண் வழிக் கசிகிறது காதல். 


இதழ்கடை ஒழுகும் குறுநகை மகரந்தம் 
தாங்கும் மலரென விரிகிறது விழும் 
குழியில் விழுந்து கிடக்கும் இதயம் 
எழுந்து நடக்க எத்தனைக் காலமோ..?


கண்மணி சுவாசம் சுடும் சூட்டில் 
மழுங்கும் மதி மயங்கும் காலம் 
விழுங்கும் பாவைப் பாவைப் பார்த்து
முயங்கும் மனம் முனங்கி கிடக்க


கதிர் வந்துப் போகும் காலை
மாலை மாலைக் கேங்கும் மனம் 
அன்றிலைப் பார்த்த அன்றி லிருந்து
குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிரும்


வதனம் வாடிக் கிடக்க விம்மும் 
விம்மல் மூடி மறைத்த தும்மலாய்
வந்து வந்து தலைக் காட்டும்
நொந்துக் கொள்ள நோகும் மனம்.


இன்பத்துள் வைத்த துன்பம் இனிக்கிறது
இன்னும் இன்னும் மனம் கேட்கிறது 
தொடரும் பிறவிகள் தொடரட்டும் உனைத்
தொட்டபடி "மனையாள் நீ" என்றால்...  

1 comment:

நிரூபன் said...

மதி மயக்கம்: காதலியின் நினைவோடு மெய் மறந்திருக்கும் காதலனின் உணர்வுகளை இங்கே கவிதையாகத் தாங்கி வந்திருக்கிறது.