Tuesday, June 21, 2011

"அரி...!"
அரிக்கு நரி பரியாகி அரிக்கு
அளித்த அரியது அறிய அரி
அரியொடு துணிய அரியின் திருவை
அளக்க அரிக்கு அறிவது குன்றி 


அரியின் ஆகாயம் ஆராய அரியும்
அரியை அறிய அரியன்றி ஆரறிவார் 
அரிக்குப் பணிதல் அறிவது மார்க்கம் 
அரி பூம்பாதம் புகப் புறப்பட


அரியின் திருவை அலங்கரித்த அலறொன்று
அவிழ்ந்து விழும் வழியில் அரியும்
ஆக்கிய பொய்யில் போய் விழும் 
அரியின் பாவப் பலன் அவ்வாறே.


அரிவைப் பெருமுனிக் குடில் தனிவனம்
நீர்ப் பிரித்த நிலமதில் தவத்திற்கு
கையதுப் பிசைந்த கரைமண் கலயம் 
கொள்வது கங்கை கொண்டது ஏகுதல்


அனுதினம் போல் ஒருதினம் அரிவை
கலயத்தொடு கங்கை புக்க நிற்க
அரி ஆகாயம் மேவியபடி அரிவையின் 
பொலிவில் அறிவது அகன்று ஆசை


ஆவியுள் புக அரிவைத் தேடி
அரி தன் மோகம் மோகிக்க
ஆட்படும் தருணம் ஆட்சேபிக்க அரியின் 
ஆசைக்கும் அரிவையின் பதிபக்திக்கும் சோதனை


அரியது நிலைமாறி உருமாறி பதியின் 
நகலாகி பழிநேர அரிவையை அடைந்த
அறிவின்மை காமம் கொண்ட கோலம்
அரியின் வினை முனியின் சாபம்.


அரியை உறுதுணை ஆக்கிய அரி 
அறிவது அழிந்து ஆக்கிய செயல் 
அரியின் சிரம் அவனி நோக்கிய 
அவமானம் அரியால் அரிக்கு நேர்ந்தது.


அரி அறி அறிவது அரி 
அறிய அரிய அரியை அறி
அறிவது அறிவென்பது அறி
அறநெறி அறிய அரியை அறி.

8 comments:

சங்கவி said...

நல்லாயிருக்கு...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

படிப்பதற்கு அழகாகவும்... அரிய நடையிலும்.. அமைந்துள்ள கவிதை இதற்கு.. விளக்கம் சொல்லும் அளவிற்கு... எனக்கு புரிய வில்லை..!!

வாழ்த்துக்கள்..!

தமிழ்க் காதலன். said...

வாங்க சங்கவி, முதன்முறை வருகைத் தரும் உங்களை வரவேற்கிறேன். தொடர்ந்து ஆதரவுத் தாருங்கள். கருத்துக்கு நன்றி.

தமிழ்க் காதலன். said...

வாங்க ஆனந்தி, வணக்கம். உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுகள். வரவுக்கு நன்றி.

coimbatorebalu said...

அரி

சுவடுகள் said...

அருமை...அருமை..அருமையான சொல்லாட்சி. முதலில் படித்தபோது தடுமாற்றம். இருந்த போதும்... வாசிக்க வாசிக்க கவியின் இனிமையும்...திறமையும்...என் சொல்ல.. என் அறிவிற்கு விளங்கிய வரை...இதோ இங்கே...

அரி அறி அறிவது அரி
அறிய அரிய அரியை அறி

அறிவது=அறிவு அது கொண்டு,அரி-க்கும் அறி- க்குமான பொருள் தெளிந்தால்...அரி - யை உணரலாம். என தங்ளின் கவிதையின் சூட்சுமம் விளக்கி இருக்கிறீர்கள்.

சுவடுகள் said...

அரிக்கு நரி பரியாகி அரிக்கு
அளித்த அரியது அறிய

காண்பதற்கும்,உணர்வதற்கும் அரியவரான அருமை பொருந்திய சிவபெருமான்(அரி),அடியாருக்காக நரியை,குதிரையாக்கி மன்னனுக்கு(அரிக்கு)அளித்தார்.

சுவடுகள் said...

அரி(பிரம்மா)
அரியொடு துணிய(திருமால்) அரியின்(சிவன்) திருவை
அளக்க அரிக்கு(பிரம்மா) அறிவது குன்றி...

இங்கே, பிரம்மாவும், திருமாலும் சிவபிரானின் அடி முடி தேடி புரப்பட்ட செய்தி... சொல் விளையாட்டால் மிளிர்ந்து..ஒளியொடு சுவை கூட்டுகிறது.

அரியின்(சிவன்) திருவை அலங்கரித்த அலறொன்று(மலர்-தாழம்பூ)
அவிழ்ந்து விழும் வழியில் அரியும்(பிரம்மா)
ஆக்கிய பொய்யில் போய் விழும்
அரியின் பாவப் பலன் அவ்வாறே

அரிவைப்(முனிவரின் பத்தினி) பெருமுனிக் குடில் தனிவனம்
நீர்ப் பிரித்த நிலமதில்(நிலத்தை கிழித்துக் கொண்டு ஓடும் ஆற்றங் கரையில்) தவத்திற்கு
கையதுப் பிசைந்த கரைமண் கலயம்(வெற்று மண்ணில் நீர் தெளித்து பிசைந்து செய்த கலையம்)
கொள்வது கங்கை கொண்டது ஏகுதல்(தன் கனவரின் தவத்திற்கான நீரை சேகரிக்க...

அரி(இந்திரன்) ஆகாயம் மேவியபடி அரிவையின்
பொலிவில் அறிவது அகன்று ஆசை...இந்திரன் சாபம் பெற்ற காட்ச்சி விரிகிறது...

அரி- எனும் ஒற்றை வார்த்தைக்கு சிவன், திருமால், பிரம்மா,இந்திரன்...எனும் பல பொருட்களை பொதித்து கவி செய்த கருத்து காணுதற்கு அரியது.

அரியின் பெருமைகள் யாவும் சொல்லி...அரியை உணர்தலே பிறவிப் பெருங் கடல் கடக்க வழி என ...உமக்கே உரிய சிறப்புடன்...படைத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்.