Wednesday, June 15, 2011

"அம்மா" (200 வது பதிவு)ஊழிக்கூத்தின் ஊற்றுக்கண்
ஆழிக்காலத்தின் ஆணிவேர்
அண்டத்தை பிண்டமாக்கிய
அருட்பெருஞ்சோதி....!.

காற்றைக் கலனில்
கட்டிவைக்கும் கடவுள்..!
பிரபஞ்சப் படைப்பின்
தோற்றப்பெருக்கம்.

சூனியத்தின் உயிர்த்துளி
ஊடுருவும் சூற்பை.
சூட்சமங்கள் சூழ்ந்து நிற்கும்
சுத்தப் பெருவெளி...!.

பிரபஞ்சக் கோட்டையின்
பிறப்பு வாயில்..!
விதியின் விலாசம் சொல்லும்
தொப்புள் கொடி...!!

தத்துவங்களின் தான்தோன்றி..!
தருமங்களின் மருதோன்றி..!!
உதிரத்தில் உயிர்சமைக்கும்
உன்னதப் பரம்பொருள்...!

காலடியில் உலகம் காட்டும்
காலக் கண்ணாடி.
காலத்தை விஞ்சி நிற்கும்
ஞாலத் தோற்றம்.

ஓசைகளின் உறைவிடம்
உயிர்களின் மறைவிடம்
பாசத்தின் முதலிடம்
பகைமையின் ஒழிவிடம்.

நீளும் வெளியெங்கும் நீளும் சுடரின்
மூலப் பொருளாம் நீ,- மூளும்
தீயாம் நீ வாழுமுயிர்க்கு, ஒலமிட்ட
தொடக்கம் ஓய்வில்லாத இயக்கம்.

காணும் பொருளும் காணா இருளும்
காட்டுவித்து ஆட்டுவிக்கும் காட்சிப் பிரம்மம்
மாயும் உடலும் மாயா உயிரும்
ஊட்டுவித்து உயிர்ப்பித்து காட்டும் காலதர்மம்.

அன்பு பெருவெள்ளம் அறிவணைத்து ஆளும்
பதிக்கு பதிலாகி விதிக்கு சதியாகி
வினைத் துரத்தும் விடியல்கள் விருந்தாகும்
வினையறுத்த வாழ்வின் மருந்தாகும்.

கும்பிட்ட தெய்வமும் கும்பிட்ட தெய்வம்..!
கூப்பிட்டக் கரத்திற்கு காப்பிட்ட கருணை..!!
வாழ்விட்ட வள்ளல் இடர்தீர்த்த செம்மல்
இன்னுயிர்க்கு இன்னோருயிர் ஈந்த

ஆழ்ந்தப் பெருங்கருணை அளவற்ற பேரன்பு
தீராத் தியாகம் வேரறுத்த தன்னலம்
மாளாப் பாசத்தில் மீளாது கட்டி
மீண்டும் உயிர்த்திருக்கும் இயற்கை.

பாதத்தில் பணிந்து கண்ணீரை பன்னீராக்கி
கழுவுகிறேன்,- என் கவிதை மலர்த்தூவி
தழுவுகிறேன்..! கிடைக்காத பெரும்பேறாய் கிடைத்த
தாயே..!! கிடக்கிறேன் காலமெல்லாம்.....

நின் காலடியில்.
    

11 comments:

சே.குமார் said...

Kalakittey nanba...
200kku muththappiai oru kavithai...
vazhththukkal...

thodarattum un kavi...

பலே பிரபு said...

கவிதையில் சொற்களின் விளையாட்டு அருமை. நண்பரே இது 200? ஆ 199? ஆ. உங்கள் Blog Archive இல் 199 தான் வருகிறது.

மென்மேலும் எழுத வாழ்த்துகள்.

அரசன் said...

200 க்கு vaazhthukkal ...

வரிகளில் நெகிழ்ந்து போனேன் ..

சிறப்பான கவிதை

Kayathri said...

விதியின் விலாசம் சொல்லும்
தொப்புள் கொடி...!!marukka mudiyatha unmai..


காலடியில் உலகம் காட்டும்
காலக் கண்ணாடி..........Andhakkannadiyai udiakamal padhu kaakka vendum naam...

கும்பிட்ட தெய்வமும் கும்பிட்ட தெய்வம்..!

பாதத்தில் பணிந்து கண்ணீரை பன்னீராக்கி
கழுவுகிறேன்,- என் கவிதை மலர்த்தூவி
தழுவுகிறேன்..! கிடைக்காத பெரும்பேறாய் கிடைத்த
தாயே..!! கிடக்கிறேன் காலமெல்லாம்.....

-------Ungal thaayarin paripoorna aasiyum andha thamizhthaayin arulum kidaithu vaazhvil menmelum padaipugal thandu engalai magivikka andha annai arul puriyattum...........

தமிழ்க் காதலன். said...

வாங்க என் அன்பு நண்பா, இந்த அன்புக்கும், ஆதரவுக்கும் என் அன்பு என்றும் உனக்கு.

தினேஷ்குமார் said...

இருநூறு பலநூறாக வாழ்த்துக்கள் தல ....

சூட்சமங்கள் சுற்றி நிற்க
சூழ்நிலை அறிந்து நம்மை
என்றும் காக்கும் நேர்
காணும் கலியுக தெய்வம் அம்மா ...

அம்மா கண்கொண்டேன்
நினை காண்பதற்கே
கரம் கொண்டேன்
நினை தொழுவதர்க்கே
நா கொண்டேன்
நினைப் போற்றி கவிப்பாட
பொற்பாதம் பணிந்தேன்
எம்மை வழி நடத்து தாயே
என்றும் காப்பவளே ....

அம்மா என்றவுடன் தண்ணீரும் இனிக்குதையா ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்படியும் எழுத முடியுமா? தமிழ் உங்களிடம் விளையாடுகிறாள் நண்பா.... நீங்கள்தான் தமிழ்காதலராச்சே.....?
இன்னும் பலப்பல சாதனைகள் படைத்து மென்மேலும் உயர வாழ்த்துக்கள்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணத்தில் வாக்களிக்க இயலவில்லையே? பிறகு வருகிறேன்!

vidivelli said...

vaalththukkal........
supper....
aththanaiyum atputham.....


can you come my said?

சி.பி.செந்தில்குமார் said...

அம்மா கவிதை அம்மாவைப்போலவே

அழகி said...

kavithai arumai nanbarae..